Friday, April 23, 2010

ஸ்பீட் ப்ரேக் ...

அங்காங்கே தகரக்கூரையின் ஓட்டை வழியே வீட்டுக்குள் வழிந்த தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தகர ஓட்டைகள் ஒவ்வொன்றும் நட்சத்திரங்களாயின,ஒவ்வொரு நட்சத்திர ஓட்டையும் பார்த்திபனுக்கு பாரதியின் ஒற்றைகல் மூக்குத்தியின் ஞாபகத்தை கிளறி விடுவனவாய் ;

வெள்ளை ஜார்ஜெட் தாவணியில் ரோஸ் நிறப் பெரிய பெரிய பூக்களிட்ட பாவாடையும் அதே நிற ரவிக்கையும் அணிந்து வெள்ளை ரிப்பனில் தூக்கிக் கட்டிய ஒற்றை சடையுமாய் அவள் புத்தகக் கூடையுடன் நடக்கையில் தூர வரும் போதே பார்த்திபனின் சைக்கிள் தள்ளாடத் தொடங்கி விடும்.படிப்பது பிளஸ் டூ தான்.மேலே படிக்க நினைப்பாளோ என்னவோ!

இப்போது பெண்ணைக் கேட்டால் கொடுப்பார்களா? அதிலும் நாட்டாமைக்காரர் பேத்தியை பஸ் டிரைவர் பெண் கேட்டால் ஒன்றும் பேசாமல் தூக்கிக் கொடுத்து இந்தாப்பா கட்டிக்கோ என்பார்களோ!நினைக்கையில் அவனுக்கு உள்ளே எதுவோ உடைந்து நொறுங்கிப் போவதாய் சின்னதாய் ஒரு பயம் ,இருந்தாலும் தான் அவளைப் பார்க்கையில் எல்லாம் அவளும் தன்னைப் பாராமல் பார்ப்பதால் உண்டான நிச்சயம் உள்ளே சில்லென்று மழையடிக்க வைத்தது.

ஒரு வார்த்தை பேசியதில்லை ,இன்று வரையிலும் குளிரக் குளிர பார்வைகள் தான் இடம்பெயர்ந்து மீண்டு கொண்டிருந்தன.

பிளஸ் டூ வகுப்பின் அழிக்கம்பியிட்ட ஜன்னல் அருகே நின்று கொண்டு வெளியே பார்த்தால் எதிர்த்தார் போல் முத்தப்பாவின் பெட்டிக் கடை ,ஒரு ஆள் உட்கார மட்டுமே இடமிருக்கும்,அங்கே தான் டியூட்டிக்குப் போகும் போதும் வரும் போதும் பாரதி தரிசனம் காண பார்த்திபன் தவமிருப்பான்.

உள்ளுக்குள் என்ன நினைப்பு ஓடுமோ அவனைப் பார்த்த மாத்திரத்தில் ஜிவ்வென்று பறக்கும் உணர்வில் அவளுக்குப் பித்துப் பிடிக்காத குறை தான்.

"நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னா புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா "

எங்கிருந்து இந்தப் பாட்டைக் கேட்டாலும் பொன்னுமணி படத்து கார்த்திக் சௌந்தர்யாவாக பாரதி தன்னையும் பார்த்திபனையும் கற்பனை செய்து கொள்வாள்.கண்ணை மூடினால் அவன்முகம் தான் .

பார்த்திபன் கருப்பன் தான் ,பெரிய அழகனில்லை,ஆனால் சிரிக்கையில் கன்னம் விரிந்து பளீர் வெளுப்பில் சீராய் வரிசைப் பற்கள் பளீரிட கண்கள் மின்னுவது கொள்ளை அழகாய் இருக்கும்,விட்டால் பாரதி இன்றைக்கெல்லாம் கூட பார்த்துக் கொண்டிருப்பாள். தன்னை அவனுக்கு கட்டி வைப்பார்களா என்றெல்லாம் யோசிக்கத் தோன்றியதில்லை அவளுக்கு,ஆறடி உயரத்தில் உறவில் அத்தை மகனாய் அவனிருக்க,அவனுக்கில்லாத உரிமையா எனும் கிராமத்து மெத்தனமோ என்னவோ! அவனே தன் கணவன் என வரித்துக் கொண்டு நிம்மதியாய் இருந்தாள்.

அவனுக்கு மதுரைக்கு மாற்றல் ஆகும் வரை எல்லாம் சலனமின்றி .

அவளுக்கு பிளஸ் டூ பெயில் ஆகும் வரை எல்லாம் சலனமின்றி .


அன்றொரு நாள் விடுமுறை நாளில் ஊருக்கு வந்த பார்த்திபன் அதே பெட்டிக் கடையில் நின்று கொண்டிருக்கையில் தான் அவனை கடந்து ஊருக்குள் போனது ஒரு மெட்டாடர் வேன் ,டிரைவர் சீட்டிற்கு பக்கத்தில் ஜம்மென்று உடம்பெல்லாம் நகைகள் பளபளக்க தந்த நிறத்தில் மெழுகு பொம்மை போல உட்கார்ந்து கொண்டு ராஜம்மா அந்த ஊருக்குள் வந்தாள்.ராஜம்மாளின் மூத்த மகன் பார்த்திபனைக் காட்டிலும் மூத்தவன் .இளையவனுக்கு பார்த்திபன் வயதிருக்கும்,அவள் கணவன் இந்த ஊர் மிராசு ,நாட்டமைக்காரருக்கு அண்ணன் மகன்.

அப்பா இருந்தவரை பிறந்த வீட்டு சீராடலில் இருந்த ராஜம்மா ஒரு வழியாக அவர் இறந்த பின் இப்போது தான் புகுந்த வீட்டுக்கு வாழவே வந்திருக்கிறாள்.அதுவரை ஊர் திருவிழாக்காலங்கள் தவிர வேறெப்போதும் அவள் இங்கு வந்ததில்லை ;

ராஜம்மாள் மிக்க அழகி,அவள் கணவரும் ஜம்மென்று இருப்பார்.என்ன பிணக்கோ அந்த மனிதர் இந்தம்மாளைக் கட்டின ஐந்து வருடங்களில் நான்கு பிள்ளைகள் பெற்று . ஆமாம் ...இல்லை என்பதைத் தவிர பெரும்பாலும் பேச்சிழந்து போனார்.

மெட்டாடர் வேனில் இருந்து குதித்து இறங்கிக் கொண்ட ராஜம்மாள் நேரே நுழைந்தது தன் கணவன் வீட்டில் அல்ல ;பாரதியின் தாத்தா வீட்டில் தான்.சின்ன மாமனார் என்ற மரியாதையில் அல்ல ,தனக்கு இணையான பணம் படைத்த ஒரே வீடு இது...இது மட்டும் தான் எனும் தீர்மானத்தில் நுழைந்தாள்.

அதே சமயம் எந்நேரமும் தோப்பே கதி என்றிருக்கும் ராஜம்மாளின் கணவர் வராத மனைவி வந்து விட்டாள் என்று துள்ளிக் குதித்துக் கொண்டு அவளைப் பார்க்க வந்து விடவில்லை ,போய் சேதி சொன்னவர்களிடம் வீட்டுச் சாவி கொடுத்தனுப்பி

"என்ன திடீர்னு வந்து எறங்கிட்டா! ...சரி...சாயந்திரம் வரேன்..." என்று முடித்துக் கொண்டார்.

அதென்னவோ முதல் பார்வையிலேயே பாரதிக்கு ராஜம்மாளை பார்த்ததும் பகீரென்று ஆகிப் போனது.ஏதோ இனம் காண முடியாத அச்சம் அவளைப் பார்க்கையில் எல்லாம் பெரும் இம்சையாய் அவளுக்குள்.

ப்ளஸ் டூ பெயில் ஆனதும் சும்மா வீட்டில் இருப்பானேன் என தையல் கிளாஸ் போக ஆரம்பித்தாள் பாரதி ; தாத்தா டுடோரியலில் படிக்க சொன்னதற்கு மாட்டேன் என்று விட்டாள்.அதிகம் படித்து விட்டாள் எங்கே பார்த்திபனுக்கு தன்னை தர மாட்டேன் என்று விடுவார்களோ என்று அதிபுத்திசாலியாக தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

மதுரைக்கு பார்த்திபன் மாற்றலாகி போனதிலிருந்து முன்னைப் போல அவனைக் கண் குளிர காண முடியவில்லையே என்ற ஏக்கம் ஒரு பக்கமிருந்தாலும் ஒவ்வொரு வெள்ளியும் மாலை அவன் ஊருக்கு வரும் நேரம் பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் கோயிலுக்கு விளக்குப் போட கிளம்புவது அவளளவில் அவளுக்கு கோலாகலத் திருவிழா.

வெள்ளிக்கிழமைக்காக ஞாயிறு மாலையில் இருந்தே ஏங்க ஆரம்பித்து விடுவாள்.ஞாயிறு மாலை பார்த்திபன் மதுரைக்கு பஸ் ஏறும் வரை எதையேனும் சாக்கிட்டுக் கொண்டு பஸ் ஸ்டாண்டில் இருக்க வேண்டுமென்று ரொம்பவே பிரயத்தனப்படுவாள்,முடியாத பட்சத்தில் அகப்பட்டவர்கள் பாடு திண்டாட்டம் தான் எண்ணெயில் போட்ட கடுகாக முகத்தை வைத்துக் கொள்வாள்.

இத்தனைக்கும் அவனும் அவளும் பேசிக்கொண்டதில்லை ஒருநாளும் .

யாருக்கும் தெரியவும் தெரியாது.அவனை அவளுக்குப் பிடிக்கும் என்று .

ராஜம்மாள் ஊருக்கு வந்த ஒரே வருடத்தில் அந்த ஊரின் அதிசயப் பொம்பளை ஆகிப் போனாள்,அவளளவு நாகரிகமான பெண் எவளும் அங்கில்லை என்பதாய் இருந்தது அவளது நடவடிக்கைகள் ,ஊர் பெண்கள் எல்லாம் அவரவர் தோட்டத்தில் குளிக்க துவைக்க என ஒதுங்க இவள் நீலப் பளிங்கில் வீட்டுக்குள் பாத் ரூம் கட்டிக் கொண்டாள்.பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாள்,அரங்கு வீட்டு மகாராணி என்பது அவளுக்கே பொருந்தும்.

அந்தம்மாளின் புருஷன் அப்படியே தான் இருந்தார்.தோப்பில் தான் சாப்பாடு தூக்கம் எல்லாம் ,எப்போது வீட்டுக்கு வருவார் எப்போது போவார் ஊருக்கு மர்மமாகத் தான் இருந்தது பேசிச் சிரித்து மென்று கொள்ள அவல் கிடைத்த கதை தான் .

போதாக்குறைக்கு நாட்டாமைக்காரர் தலை அடிக்கடியும் அவள் வீட்டு வாசலில் தென்பட உறவில் மாமானார் தானே எனும் சௌகரியத்தையும் மீறி புகைய ஆரம்பித்தது விஷயம்.சொந்த கணவர் எதுவும் பேசாதிருக்கையில் ஊருக்கு என்ன வந்தது?!,அவரெதிரில் துண்டை கக்கத்தில் இடுக்கிக் கொண்டாலும் புறத்தில் நக்கலாய் சிரித்துக் கொண்டனர்.

வெள்ளி செவ்வாய்களில் காசிப்பட்டு சர சரக்க காசுமாலை கனமாய்த் தொங்க கழுத்தொட்டி கல் அட்டிகை புரள வட்டக் கொண்டையிட்டு மொட்டு மொட்டாய் குண்டு மல்லி வாசம் பரப்ப நடுவில் வெள்ளைக் கல் பிச்சோடா டாலடிக்க கரு நெளிக் கூந்தல் முன்நெற்றியில் பிசிராட ராஜம்மா பஸ் ஸ்டாண்ட் பிள்ளையார் கோயிலுக்குப் போய் வருவாள் .கண் கொள்ளாக் காட்சி தான் அந்நேரம் கோயிலில் இருக்க நேர்ந்தவர்களுக்கு.

ராஜம்மாள் அதிர்ந்து பேசி எவரும் கண்டதில்லை,அத்தனை மென்மையாய் எப்படித் தான் பேச முடியும்? சம்சாரி வீட்டுப் பெண்கள் குசு குசுப்பாய் கேட்டுக் கொள்வார்கள் தத்தம் புருஷர்களிடம்.அவர்களெல்லாம் மஞ்சள் தேய்த்து தேய்த்து மேனி பள பளக்க எதையோ செய்து பார்க்க ராஜம்மாளின் சருமம் மஞ்சள் காணா தந்த நிறம்.எங்கருந்து இப்படி இருக்கா மகராசி! தமக்குள் முணங்கிக் கொள்வார்கள் .

நாற்பது கடந்த பெண்ணொருத்தி அழகிலும் இளமையிலும் இளம் பெண்களுக்குப் போட்டியாக இருக்க முடியுமென்றால் ராஜம்மா எத்தனை அழகென்று சொல்லத் தேவையில்லை.அந்த ஊரில் எதற்கும் அவளைக் கேட்பாரில்லை யாரும்.

எத்தனை அழகிருந்தும் திருஷ்டி என்று ஒன்றிருக்கத் தானே வேணும் எங்கேயும் எப்படியும்?!

இருந்தது ராஜம்மாளின் மூத்த மகனுக்கு அவள் வைத்த பெயர் என்னவோ ராஜேந்திரன் தான் ,ஊர் வைத்த பெயரோ கிறுக்கு ராஜேந்திரன் .அவன் அழகில் அம்மாவையோ அப்பாவையோ கொண்டிருக்கவில்லை.மாநிறம் ஒற்றை நாடி தேகம்,தூக்கலான முன் பற்கள் என்பதால் சதா திறந்த வாய்.தலை அனிச்சையாய் அவன் கட்டுப்பாடின்றி ஆடிக் கொண்டே இருக்கும்,இப்படி ஒரு மகன் ராஜம்மாவுக்கு உண்டு என்று புதிதாய் ஊருக்கு வருபவர்களிடம் சொன்னால் எளிதில் நம்ப மாட்டார்கள்.

இளையவன் பிரபாகரன் சாயலில் அம்மாவைக் கொண்டிருந்தான்.சும்மா தான் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான் ஆனாலும் அவன் மீது ஊருக்குள் ஏழெட்டு ஜோடிக்கண்கள்.கிறுக்கனுக்கு யார் பெண் தரப் போகிறார்கள்?! ,பிரபாகரனைக் கட்டியவளுக்கு தான் ராஜம்மாள் வீட்டுச் சொத்தின் ஏக போக உரிமை எனும் பேராசை அந்த ஊரில் நிறைய பேருக்கு இருந்ததென்னவோ வாஸ்தவமே.

பார்த்திபன் கனவில் இருந்த பாரதிக்கு வாரங்கள் துவங்குவதும் சட்டென முடிவதும் சில மாதங்களில் அலுத்துப் போக ஆரம்பித்தன.அவன் எப்போது அவன் அம்மாவோடு தன்னைப் பெண் கேட்டு வீட்டுப் படியேறி வருவான் என நொடிக்கு நொடி பைத்தியமாகிக் கொண்டிருந்தாள்.

தையலும் கற்று முடிந்தாகி விட்டது,

மதுரையில் பாரதியின் தாய்மாமன் ராமனுஜம் பிரபல கண் டாக்டர் ;

மாமன் வீட்டிலிருந்து மேலே வேறு எதுவும் படிக்கிறாயா பாரதி ? தாத்தா பேத்திக்கு ஏதாவது வகை செய்ய வேண்டும் என்ற பாசத்தோடு தான் கேட்டார்.சரி என்று உடனே ஒத்துக் கொண்டாள் .

மதுரைக்குப் போனால் தினமும் பார்த்திபனை பார்க்கலாம் என்ற வெகுளித் தனம் அவளுக்கு ,முட்டாள் பெண் மதுரை என்ன அவள் பிறந்த கிராமமா?! ஒரே ஒரு பஸ் ஸ்டாண்ட் தான் இருக்குமா அங்கே அதெல்லாம் யோசிக்காமல் மதுரைக்குப் போனவள் டுடோரியலில் பிளஸ் டூ தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தாள்.பாஸ் பண்ணி விடடால் ஏதாவதொரு பெண்கள் கல்லூரியில் டிகிரி சேர்த்து விடலாம் என்று அத்தை வற்புறுத்த மறுக்க வேறு வழி இல்லாமல் தான் போய் வந்து கொண்டிருந்தாள்.
மாமா வீட்டிலிருந்து படித்த ஒரு வருடம் முழுதும் அவளால் பார்த்திபனை பார்க்கவே முடியவில்லை,உள்ளே நொந்து நூலானாலும் எப்படியோ பிளஸ் டூ பரீட்சை எழுதி முடித்து விடுமுறைக்கு ஊருக்கு பஸ் ஏறினாள் .

ஐஸ் மழை கொட்டாத குறை தான் ; அந்த பஸ்சின் டிரைவர் பார்த்திபனாய் இருக்கக் கூடும் என்று அவள் சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. இவளை கண்ட மாத்திரத்தில் அவனுக்கும் அப்படித்தான்.
திடீர் சந்தோசத்தில் பிரகாசித்த கண்களில் கண்டு கொள்ள முடிந்தது

காரோடு இவளை பஸ் ஏற்றி விட வந்த மாமா பார்த்திபனை பார்த்ததும் அகலமாய் புன்னகைத்து ;

நம்ம ஊர் டிரைவரா ...எப்படி இருக்கீங்க தம்பி? என்று ஒப்புக்கு கேட்டு விட்டு பாரதி தனியா ஊருக்குப் போறா தேனி பஸ் ஸ்டாண்ட்ல பார்த்து எறக்கி விட்ருங்க தம்பி, சின்னக் கை குலுக்கலோடு டிரைவர் சீட்டுக்கு பக்கவாட்டில் இருந்த ஜன்னலோர ஒற்றை சீட்டில் அவளை உட்கார வைத்து விட்டு அவர் போய் விட்டார் .

முழுதாய் ஒரு வருடம் கழித்து அவனைப் பார்க்கும் அவஸ்தையில் அவளுக்கு முகம் சிவந்து கண்கள் கலங்கி விட சன்னமான நிம்மதியில் குனிந்த தலை நிமிர மாட்டாமல் உல்லாச அலையடிப்பில் மனம் லேசாகிப் பறந்தது.

அவளையே காணாததைக் கண்டவனாய் பிரயாணம் முழுக்க பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ன ! டிரைவர் ஆயிற்றே !உதடுகளில் உறைந்து விட்ட புன்னகையோடு நிதானமாகவே வண்டியை எடுத்தான்.அவனது நிதானம் கண்டு ;

உடனிருந்த டியூட்டி கண்டக்டர் " மாப்ள என்னப்பா முகமே சுவிட்ச் போட்டாப்புல பள பளக்குது,வண்டி ஏறும் போது சாதாரணமாத் தான இருந்தா! " இப்பிடி நீ வண்டி ஓட்டிகிட்டு போனா கட்ட வண்டி முந்திட்டு போயிடும்.என்ன சங்கதி! வீட்ல பொண்ணு கிண்ணு ரெடியா பார்த்து வச்சிட்டாங்களா?

கண்சிமிட்டலோடு பார்த்திபனின் தோளில் தட்டி கண்டக்டர் சிரிப்போடு கேட்க ;

கன்னத்தில் அடக்கிய சிரிப்போடு கண்ணோரம் குருவிக்கால் ரேகை விரிக்க அடக்க மாட்டாமல் சிரித்த பார்த்திபன் ,கண்டக்டருக்கு காதில் விழும் படி "ம்ம்...பொண்ணே இந்த வண்டில தான் வருதாம்...! எனக் கூறிக் கொண்டே சடக்கென்று எதிரே வந்த மணல் லாரிக்காக பிரேக்கை ஒடித்தான்.

என்னது ...பொண்ணு வருதா! இந்த வண்டியிலையா ...ஆராய்வது போல எல்லா சீட்டுகளிலும் பார்வையை நழுவ விட்ட கண்டக்டரின் கண்கள் பாரதியை முன் சீட்டில் கண்டதும் பிரேக்கடித்து நின்றது.

ஒத்த வயதேன்பதாலோ என்னவோ ...மாப்ள ...அப்படியா சங்கதி ..நடத்து...நடத்து உன் ராஜ்யத்தை நான் பேக் சீட்ல உட்கார்ந்துகறேன் இன்னைக்கு மட்டும் என்று சிரிப்புடன் விலகி நடந்தான் .

பாரதிக்கு பார்த்திபனை நிமிர்ந்து பார்க்க வேண்டும் போலவும் இருந்தது ...ஆனால் தன்னால் வெட்கமின்றி அப்படி பார்த்து விட முடியாது என்பதைப் போலவும் இருந்தது , என்ன செய்வதென்று அறியாத ஏதோ ஒரு உணர்வில் இருந்தாள்.சில நிமிடங்களில் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதே போதும் என்ற நிலைக்கு ஆளாகிப் போனாள்.

கடைசி சீட்டில் போய் உட்காரும் முன்பாக அந்த கண்டக்டர் வேறு பஸ்ஸில் இருந்த டி.வி யில் ராஜாவின் மெலடி மெட்டுகளை கசிய விட்டுப் போயிருந்தார்.அந்த ஒன்றரை மணி நேர பஸ் பயணம் ஒரு ஜென்மம் வாழ்ந்த உணர்வைத் தரக்கூடுமா என்ன? பஸ்சுக்குள் கசிந்த பாடல்களில் வாழ்ந்து கொண்டிருந்தனர் பார்த்திபனும் பாரதியும்.


ஊர் வந்தது...

பாரதியை கூட்டிப் போக ராஜம்மாளின் காரும் வந்தது.

இந்த கார் எதற்கு தன்னை அழைத்துப் போக வந்தது?! புரியாத பாவனையில் பஸ்ஸில் இருந்து இறங்கிய பாரதி பார்த்திபனை யோசனையாய் நோக்க ;

"வா பாரதி ...கார்ல உட்கார்,உன்ன கூட்டிட்டுப் போகத் தான் வந்தேன்"

ராஜம்மாளின் குரல் காருக்குள் இருந்து கேட்கவே ;

"இல்ல நான் பஸ்ல வரேங்க "...பாரதி மிக மிக மெல்ல மறுத்தாள் .

"அட ஏம்மா பொண்ணு காரே இன்னும் ஒரு வாரத்துல உன்னோடதாகப் போகுது சும்மாத்தான் ஏறி உட்காரேன்."

ராஜம்மாள் வீட்டு மேல்வேலைக்காரி சண்முகமணி உரத்த குரலில் சிரிப்புடன் சொல்ல,பாரதிக்கு விசுக்கென்று கோபம் வரப் பார்த்தது.

ச்சே..இருந்திருந்து ஒரு முழு வருசத்துக்குப் பின் இன்றைக்கு தான் பார்த்திபனை கண்ணால் காண முடிந்திருக்கிறது ,இதேதடா இந்த பொம்பிளைகளுடன் பெரிய வம்பாய் போய் கொண்டிருக்கிறதே! சுள்ளென்று வெடித்த கோபத்தில் பார்த்திபன் அங்கு நிற்பதையும் மறந்து போனவளாய்,

"நான் வரலை நீங்க போங்க ,"என்றாள் வெடுக்கென்று.

ராஜம்மாளுக்கு சுருக்கென்று தைத்ததோ என்னவோ !

"சின்னப் பொண்ணு தானே அதான் இவ்ளோ துடுக்குத் தனம் .எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்தா தானா சரி ஆயிடும் " மெத்து மெத்தென்ற குரலில் தனக்குள் சொல்லிக் கொண்டு அவள் சாலையின் மறுபுறம் பார்க்க பாரதியின் தாத்தா வந்து கொண்டிருந்தார்.

நள்ளிரவில் குடு குடுப்பையின் உடுக்கை சத்தம் கேட்டால் உள்ளுக்குள் பயம் உருளுமே அப்படி ஒரு பயம் பாரதிக்கும் ;என்னவோ சரியாய் படவில்லை அவளுக்கு

தாத்தா ஏன் ராஜம்மாளின் காரில்!

அவள் மிரண்ட மான் குட்டியாய் பார்த்திபனை திரும்பித் திரும்பி பார்த்த வண்ணம் ஏதேனும் செய்து தன்னை அங்கிருந்து கூட்டிப் போய் விட மாட்டானா என்பதாய் கண்கள் கெஞ்ச தன் கை பற்றி கூட்டிப் போனா தாத்தாவின் கரத்தை விலக்கத் தோன்றாமல் ஜடம் போல காரில் ஏறினாள் .

தாத்தா பாரதியை ராஜம்மாளின் மகன் ராஜேந்திரனுக்கு நிச்சயம் பண்ணி விட்டார் .

இளையவன் பிரபாகரனுக்கு தான் பாரதியைக் கொடுப்பதாய் முதலில் பேச்சு ஆரம்பித்ததாம் கடைசியில் ராஜம்மாளின் கண்ணீர் கசிவில் கைகேயி நாடகத்தில் அவள் மேல் இரக்கப்பட்டு அவள் மீது வைத்த மீளாக் காதலில் தன் பேத்தியை அந்த கிறுக்கு ராஜேந்திரனுக்கு தாரை வார்த்தார் தாத்தா.

பார்த்திபன் !!!

இருக்கிறான் கல்யாணமாகி விட்டது அவனுக்கும்.

திருவிழா தவிர வேறு எதற்கும் அவன் தன் ஊருக்கு வருவதில்லை இப்போதெல்லாம்.அப்படி வரும் போதும் அகஸ்மாத்தாய் பாரதியின் கண்களில் விழ நேர்ந்தால் தடுமாறத்தான் செய்கிறது விவஸ்தை கெட்ட நெஞ்சம்.

சொல்ல மறந்து விட்டேன் கிறுக்கு ராஜேந்திரனுக்கும் பாரதிக்கும் ஒரு மகளிருக்கிறாள்.இப்போது அவள் பிளஸ் டூ .

Thursday, April 22, 2010

கதை கதையாம் காரணமாம் ...

ஒரு ஜாமத்தின் பின்னான கதைகளைக் கேட்க
கனவுகளின் குவியலுக்குள் களைக்காது புரண்டு
கனகாம்பரப் போர்வை தேடி
சிருங்காரம் காட்டும் என் சின்ன மயிலே
மைனாக் குஞ்சே எங்கிருக்கிறாய் நீ!
பெய்யாது ஓய்ந்த மழைக்காய் அல்ல
பூசணிப் பழங்களாய் காணும் முகமெலாம் சூடாக்கி
ஓயாது வெடித்துப் பிளந்திட்ட வெயிலுக்காயும் அல்ல ;
மாம்பிஞ்சே மரகத பூஞ்சிட்டே ;
தலை சரித்து நோக்குங்கால்
என் நெஞ்சகத்துக் கனமெல்லாம்
காணாதடிப்பாயடி...
சித்திரைப் பூவே ...
சில நேரம் கண்ணுறங்காய் ...
காலிலே கட்டிய சக்கரங்கள் தூங்கட்டும்
கார் கால மேகம் போல்
இமை கவிய கண் துயிலாய்;
எனக்குத் தூக்கம் வருதுடி ...
சுட்டிப் பொண்ணே ...அடிக்கரும்பே
சீனி சர்க்கரையே
அம்முக்குட்டி பொம்முக்குட்டி
அம்மாவோட தங்கக் கட்டி
தூங்கிடேன் ப்ளீஸ் ...

ஒரு அப்பாவி அம்மாவுக்கும் சுட்டி மகளுக்குமான தினப்படி தூக்கத்துக்கு முந்தைய உரையாடல் கவிதை.

Tuesday, April 6, 2010

ஆக்ஸிடன்ட் ...

மங்கா சிணுக்கட்டமாய் சிரித்துக் கொண்டே தீப்பெட்டி ஆபிஸின் மருந்து முக்கும் அறையில் இருந்து ஓடி வந்தாள்.முகம் கேந்திப் பூவாய் விகசிக்க, நீளப்பின்னல் தோளில் புரண்டு அவள் ஓடிவந்த வேகத்தில் பின்னால் விசிறித் துள்ளி விழ வாகாய் அதைப் பிடித்துக் கொண்டு அவளைத் தொடர்ந்து அதே அறையில் இருந்து வெளியில் வந்தான் ரவி என்ற ரவிச்சந்திரன.

" விடுங்க ரவி...யாராச்சும் பார்த்துடப் போறாங்க " மங்கா கொஞ்சலாய் சிணுங்கி நழுவ ...அவளை விட்டு விட்டு ரவி வாயில் புறமாய் நகர்ந்தான் .

சீனி வந்திருப்பான்.கழுகுமலையில் கட்டிக் கொடுத்திருந்த அக்காவைப் பார்க்கப் போனவன் ,இன்று தானே வருவதாகச் சொன்னான்.சீனியைப் பார்த்து மூன்று நாட்களாகின்றன.போனால் பயல் சிரிக்கச் சிரிக்க ஏதாவது இடக்கு மடக்காகப் பேசிக் கொண்டிருப்பான்.

மணி பத்து...சாப்பிட வீட்டில் என்ன இருக்கிறதோ? அம்மா தொடக்கப் பள்ளி டீச்சர்,அரைகுறைச் சமையலில் அவள் பள்ளிக்கு ஓடி விட தங்கை தான் மீதி சமையல்,அவள் அத்தனை கெட்டிக்காரி அல்ல சமையலில்,என்ன இருக்கிறதோ இருப்பதை உள்ளே தள்ள வேண்டியது தான்,முக்கியமாய் அப்பா திண்ணையில் உட்காராத நேரமாய் இருந்தால் நல்லது.

ரவி நல்ல உயரம் ,வடமலாபுரம் டீச்சர்ஸ் ட்ரெயினிங் கல்லூரியில் 85 இல் ஓவிய ஆசிரியர் பயிற்சியை முடித்தவன்.இன்றைக்கு காலை வருடம் 1998 நவம்பர் 20௦ தேதி காலை நேரம் 10 .15 வரையிலும் வேலை கிடைத்தபாடில்லை.அப்பாவுக்கும் அவனுக்கும் எதிர்படும் நேரமெல்லாம் கர்..புர் தான்.

இதற்கெல்லாம் ரவி சலிப்படைந்து விடுவானா?!

அவன் தன்னிஷ்டத்துக்கு இருந்து கொண்டான்."ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே" சாப்பிட்டு விட்டு வாயிலைக் கடக்கையில் வேண்டுமென்றே இந்தப் பாட்டை முணு முணுத்தான் .திண்ணையில் அப்பா இருக்கிறாரே...சும்மா போவதா!
சப்பாத்தியும் கடலைப்பருப்பு குருமாவையும் சாப்பிட்டதாய் பேர் பண்ணி விட்டு ஊர் பஞ்சாயத்து போர்டை நோக்கி நடையைக் கட்டினான்.அங்கே தான் உள்ளூர் இளவட்டங்கள் எல்லாம் ஜமா சேர்வார்கள்.மேட்ச் இருக்கும் காலங்களில் பஞ்சாயத்து ஆபிஸ் ரூமை பூட்டி வைத்துக் கொண்டு உள்ளே கவர்மென்ட் டி.வி யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அந்தக் கூட்டத்தில் ரவி இல்லாமலா?!

பஞ்சாயத்து போர்டை ஒட்டி கொஞ்ச தூரத்தில் தான் கண்ணன் கோயில் அதற்கப்பால் ஆலங்குலத்து நாயக்கர் தோட்டம் ,கமலாக்கா அவர் தோட்டத்தில் தான் மிளகாய்ப் பழம் பொறுக்கிக் கொண்டிருப்பதாகவோ ,வெண்டைக்காய் பிடுங்கிக் கொண்டிருப்பதாகவோ கோழி கோபாலிடம் அவ்வப்போது தாக்கல் சொல்லி விடுவாள்.கமலாக்காவுக்கு ஆண் இரண்டும் பெண் இரண்டுமாக நாலு குழந்தைகள் புருஷன் காலராவில் போய் விட்டான்.அப்புறமென்ன செய்வாள் பாவம்!!!பிறந்த வீட்டோடு வந்து விட்டாள்.உதிரிப் பூக்கள் அஸ்வினி சாயலில் இருந்தாலும் இவள் கொஞ்சம் சிடுமூஞ்சி ;

தொடரும் ...