Wednesday, December 16, 2009

மோகனவள்ளியின் புன்னகை...

பாட்டியை சிவகாசிக்கு பஸ் ஏத்தி விடத்தான் நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போனது .பத்துமணி தேனீ டு சிவகாசி பஸ்ல ஒன்பதே முக்காலுக்கே கூட்டம் நெறியும்.ஒத்தை சீட் கிடைச்சாக் கூடப் போதும்னு வேக வேகமா ஓடிப் போய் பார்த்தா கண்டக்டர் உட்கார்ற சீட் மட்டும் தான் சும்மாக் கெடக்கு ,மித்ததெல்லாம் கசகசன்னு வகைக்கொரு முகறையா நிறைஞ்சிருச்சு ,

அடச்சே வயசாளியாச்சே !எம்மாந்தொலவு நின்னுக்கிட்டே போவும் பாட்டி!

சுத்துமுத்தும் தெரிஞ்ச மூஞ்சி எதுனா தட்டுப்படுதான்னு துலாவுனா எதுவும் ஆப்படல (அகப்படவில்லை)

மூணு மூன்ற மணி நேரம் நின்டுகிட்டே போற வயசில்லை பாட்டி உனக்கு ...எறங்கு நாளைக்கிப் போலாம்னு சொன்னா கேட்குதா பாட்டி?!

அடியே உம்மாமன் மஞ்சக் காமல கண்டு மதுர லா காலேஜுல இருந்து வந்து வீட்ல கிடக்கான்னு போனு மேல போனு போடுதா உன் சித்தி ,இன்னியும் இங்கன தங்குமா எம்மனசு? உசிலம்பட்டி..பேரையூறு...கல்லுப்பட்டின்னு யாராச்சும் இறங்காமயாப் போயிருவாக ?போய்த்தான் ஆகணும் இன்னைக்கு ,போயி பத்தியக் கஞ்சி வச்சிக் கொடுத்து அவனுக்குப் பண்டுதம் பார்த்தாதேன் எம்மனசு ஆறும் !

கிழவி ரவுசு தாங்கலடா சாமி ...சொன்னாக் கேட்குதா பாரேன் ,ஒருநா பிந்திப் போனா உம்மவனுக்கு சித்தி பத்தியக் கஞ்சி காய்ச்சி ஊத்திக்கிட மாட்டாளா? தொண்டைக் குழி வரைக்கும் வந்த எடக்க (இடக்குப் பேச்சு) மடக்குன்னு முழுங்கிட்டு ;

இங்கன நில்லு பாட்டி ஒத்தை சீட் கெடைக்குமான்னு பார்த்திட்டு வரேன்னு முன்னாலயும் பின்னாலயும் பஸ்சுக்குள்ள அலசுனேன்.

அப்பதேன் "ஏ தமிழு ...தமிழு தான நீங்கன்னு ஒரு பொம்பளக் குரலு காதுல வந்து மோதுச்சு" படக்குன்னு நிமுந்து பார்த்தா அட நம்ம மோகினிப் பிசாசு மோகன வள்ளி .

கைல அவள மாறியே (மாதிரி) கன்னங்கரேர்னு ஒன்னரை...ரெண்டு வயசிருக்கும் ஆம்பளப் புள்ள ஒன்னத் தூக்கிகிட்டு நிக்கறா.கலரு கருப்புத்தேன்னாலும் கிழங்காட்டம் இருப்பா மோகனள்ளி ...இப்பயும் அப்பிடித்தேன் இருக்கா ; அதே மங்குணித்தனமாட்டம் சிரிப்பும் கூட ,மங்குணிதனமாப் பட்டாலும் அவ சிரிக்கிறது நல்லாத்தேன் இருக்கும் அந்தச் சிரிப்புக்குப் பேரு புன்னகையாம்.தமிழ் வாத்தியாரு சொல்லுவாரு.நெனப்ப உதறிட்டு ....

வாய்க்கொள்ளாச் சிரிப்போட "ஆமாண்டி...ஆமாண்டி ...நான் தமிழுதேன்...இதாரு உம்மவனா?எத்தனையாவது? உம்மாறியே இருக்காம்பாரு.சொல்லிகிட்டே அவன் கன்னத்தைக் கிள்ளுனேன் .

ரொம்பநாள் ...இல்ல..இல்ல...ரொம்ப வருஷம் செண்டு மொத மொதோ இன்னைக்கித்தேன் பார்த்துக்குறோம் நாங்க .

என்னடி ...எப்படி இருக்க ?எங்கன வாக்கப் பட்ட?எத்தினி பிள்ளைக ? உங்கம்மை ..தங்கச்சிலாம் எங்கன இருக்காக ?நீ எங்கன இருக்க,உம்புருஷன் என்ன செய்றாரு? இம்புட்டும் கேட்கறதுக்குள்ள டிரைவர்ரு சீட்ல ஏறி உட்கார்ந்துகிட்டு "டுர்றூ..டுர்றூங்க" ஆரம்பிச்சிட்டார்.

பொறவு என்ன செய்வ நீ ?!

மோகனள்ளி( மோகன வள்ளி தான் ...பள்ளிக்கொடத்துல இப்பிடித்தேன் கூப்புடுவோம் அவள) புண்ணியத்துல பாட்டிக்கு அவ கூட வந்த ஆம்பள (புருஷனாத்தேன் இருக்கணும்னு நானாவும் நெனச்சிக்கிட்டேன்!)சீட் கெடைக்கவும் உட்கார வச்சிட்டு பத்திரமா ஊருக்குப் போயிட்டு போனு போடு பாட்டின்னு எறங்கி நின்னு கையாட்டிட்டு வீட்டுக்கு பொறப்டுட்டேன் .

ஆட்டோவுல வீட்டுக்குப் போகையில அவள நினைச்சுக்கிட்டே உட்கார்ந்திருந்தேனா ஒன்னொன்னா நெனப்புக்கு வருது .எம்புட்டு நாளாச்சு அவளக் கண்டு ! ம்...எட்டாப்பு வரைக்கும் எங்கூடப் படிச்சவ...என்ன விட அஞ்சாறு வயசு மூத்தவளும் கூட ,பெயிலாகி பெயிலாகி என்கூட வந்து சேர்ந்துகிட்டா எட்டாப்புல.

மோகனள்ளிய நெனச்சஒடனே கூடவே ரகுபதி வாத்தியாரையும் நெனக்காம இருக்க முடியுமா?

மோகனள்ளி அம்மாதேன் அப்பம் எங்க வீட்டு வண்ணாத்தி ...அழுக்குத் துணி எடுக்க அவளும் வருவா...செல நாலு மவளுகளையும் அனுப்புவா.மோகனள்ளி அழுக்குத் துணி எடுக்க வாரயில அழுக்குக்கு வந்த சீலை எதுனாச்சும் பிடிச்சிப் போச்சுன்னா தொவச்சி அத உடுத்திக் கிட்டு வருவா.ரெண்டொரு தடவ அந்த சீலைக் காரவுகளுக்கு தெரியாம இப்பிடிக் கட்டிப் பார்த்துட்டு மறுக்கா துவச்சு கொடுத்துர்றது தான்.

ரகுபதி வாத்தியாரு பொண்டாட்டியும் எங்கூரு பள்ளிக்கூடத்துல டீச்சருதேன் ,அந்தம்மா அஞ்சாப்பு டீச்சர் ,சாரு எட்டாப்பு வாத்தியாரு. டீச்சர் சீலைய அப்பிடி மோகனள்ளி கட்டிட்டு கண்டமனூர் தியேட்டர்ல ராத்திரி மொதோ ஷோ எம்.ஜி.ஆரூ நடிச்ச "தேடி வந்த மாப்பிள்ளை " படம் பாக்கப் போயிருக்கா ஒருக்கா .

எங்கூருக்கும் கண்டமனூருக்கும் நடுல வைகையாத்துப் பாலம் ,பாலத்த ஒட்டி அம்புட்டும் ரகுபதி வாத்தியாரு தோட்டந்தேன்...ராத்திரி தோட்டத்துக்குப் போயிட்டு புல்லட்டுல வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டிருந்த வாத்தியாரு கண்ணுல "தம் பொண்டாட்டி சீலையைக் கட்டுன மோகனள்ளி பட்ருக்க கூடாது... விதி...அந்நேரம் நல்லாவே கண்ல பட்டுட்டா...

வைகை ஆத்துப் பாலம் ...மேல நிலா

சிலு சிலுண்டு காத்து...,கீழ சல..சலண்டு ஆத்துத் தண்ணீ ...வாத்தியாருக்கு நெனப்பு என்னமோ பண்ணித் தொலைக்க; புல்லட்ட "உர்ரு..உர்ருன்னு உறும விட்டுட்டு வீட்டுக்குப் போய் சேந்தார்.

மறுநா வாத்தியாரு வகுப்புல சயன்சு வீட்டுப் பாடம் பண்ணாம வந்தவுக எல்லாம் எந்திரிச்சு நின்னாக,மோகனள்ளியுந்தேன்...

வாத்தியாருக்கு முன்னால எந்திரிச்சு நிக்கிறதுக்குன்னு ஒரு முறைமை இருந்துச்சு அப்போ .ரெண்டு கையையும் முன்னால கட்டிக்கிட்டுதேன் நிக்கணும்.ரெண்டு கையையும் தொங்கப் போட்டு நின்னா அது மரியாதைக் குறைச்சல் ,ஒத்தக் கைய தொங்க வுட்டு ஒத்தக் கைய மடிச்சு நின்னாக்க அது திமுர்ருனு நெனைச்சிக்கிட்டு கம்பால விளாசிருவாக .

ஒவ்வொருத்தரா ஏன் வீட்டுப் பாடம் செய்யலன்னு கேட்டுக்கிட்டே காதப் பிடிச்சு திருகறது...கைய நீட்டச் சொல்லி பிரம்பால சுளீர்னு ரெண்டு போடறதுன்னு மோகனள்ளி கிட்ட வந்த வாத்தியாரு. என்ன நெனச்சாரோ?

என்னம்மா மோகனவள்ளி உனக்கு நேத்தெல்லாம் எம்.ஜி.ஆரூ படம் பார்க்கப் போகத்தான நேரமிருந்திருக்கும் ..சொல்லிக்கிட்டே மடிச்சிக் கட்டுன அவ ரெண்டு கையையும் எடது கையாள முன்னால தள்ளிப் பிடிச்சிக்கிட்டு ,வலது கை பிரம்பை கீழ போட்டுட்டு வினயமா சிரிச்சாரு.

அவள அடிக்க மாட்டாரு போலன்னு நாங்கள்லாம் பார்த்துக்கிட்டு இருக்கோம்.

அவள அடிக்கல தான் .ஆனாக்க என்ன செஞ்சாரு தெரியுமா? அவ கைய மடிச்சிக் கட்டினத முன்னால இழுத்தாருன்னு சொன்னேன்ல அந்த இடைவெளில வலது கையாள அவ வயித்தப் பிடிச்சு கிள்ளர மாதிரி எங்கனயோ கிள்ளுனாறு.பாவம் மோகனள்ளி நெளிஞ்சிகிட்டு இருந்தா.

என்ன செய்வா அவ?!

அன்னைக்கு மட்டும் இல்ல? அதுலருந்து வீட்டுப் பாடம் முடிக்காம வாற எல்லா நாளுமே வாத்தியாரு அவள மட்டும் அப்பிடித்தேன் கிள்ளுவாரு.அவ ஒரு வாய் செத்தவ ,வீட்ல போயி அம்மை அப்பன்கிட்டல்லாம் எதுவும் சொல்லலை போலருக்கு .

எங்க செட்டுப் பிள்ளைகளும் ...பயலுகளும் மாத்திரம் வாத்தியாரு மோகனள்ளிய இப்பிடிக் கிள்ளுராருன்னு அவங்கவங்க வீட்ல போயி தோணும் போதெல்லாம் சொல்லிட்டு இருந்தோம்,அரசல் புரசலா டீச்சருக்கும் எல்லாருமே தெரிஞ்சி தான் இருக்கும் போல.

ஊர்க்காரவுக வாத்தியாரு அங்கிட்டு இங்கிட்டுப் போகையில ஒரு மாதிரி குசு குசுன்னு பேசி அவகளுக்குள்ள சிரிச்சாகளே தவிர வாத்தியாரே...என்னனு ஒரு கேள்வி இல்ல,ஒரே சாதி சனம்ன்னு ஒத்துமையாத்தேன் இருந்தாக

வாத்தியாரை யாரும் எதுவும் கேட்ட மாதிரி தெரில.

வாத்தியாருக்கு ஒத்தைப் பொண்ணும் மூணு ஆம்பளைப் புள்ளங்களும் இருந்தாங்க,ஆம்பளைப் புள்ளைங்களை விட ஒத்தைக்கு ஒத்தைப் பொம்பளைப் புள்ளைன்னு பொண்ணு மேல டீச்சருக்கும் வாத்தியாருக்கும் அம்பூட்டுப் பாசம் .

வாத்தியாரு மக நிர்மலாக்காவும் ரொம்ப நல்ல மாதிரித்தேன்.

திருழா (திருவிழா) சமயத்துல ஊருப் பிள்ளைகளுக்கெல்லாம் டான்ஸு சொல்லிக் கொடுத்து மேடைல ஆடலும் பாடலும் ஆட விடறதெல்லாம் நிர்மலாக்கதேன். "பொன்னுமணி படத்துல வர சௌந்தர்யா மாதிரி "நிர்மலாக்கா அழகாவும் இருப்பா பதவிசாவும் இருப்பா.

அவ அதிர்ந்து பேசி கண்டதில்லை நாங்க.

பூப்போல பொண்ணுன்னு நிர்மலாக்காவைப் பார்த்து சொல்லலாம் .

வாத்தியாரு தம்பொண்ணு மேல உசுரையே வச்சிருந்தாரு. அப்பைக்கு நூறு பவுனு போட்டு ஒரு லட்சம் ரொக்கம் கொடுத்து மெட்ராஸ்ல கவருமெண்டு இஞ்சினியருக்கு நிர்மலாக்காவக் கல்யாணம் கட்டி வச்சாருன்னா பார்த்துக்கோங்க மக மேல பாசத்தை.

நிர்மலாக்க புருஷன் ஆளு பாக்க நடிகர் கார்த்திக் மாதிரி (பொன்னுமணி படத்தப் பார்த்த பாதிப்பு ஊர்க்காரவுகளுக்கு) ஜம்முன்னு இருப்பாராம் பாட்டி சொல்லக் கேட்ருக்கேன்.

அக்காவக் கட்டிக் கொடுத்தப்புறம் எட்டாப்பு முடிஞ்சு ஒன்பதாப்புக்கு நான் தேனி டவுன் ஸ்கூல் போயிட்டேன். அப்புறம் மோகனள்ளி ..வாத்தியாரு கதை என்னாச்சுன்னு விவரமேதும் தெரியலை.

இன்னைக்குதேன் பாட்டிய பஸ் ஏத்தி விடப் போகைல பார்க்குறேன் அவள.

ம்...பெருமூச்சோட ஆட்டோவுக்கு காச கொடுத்துட்டு வீட்டுக்குள்ள நுழையறேன்.

அப்பா அவசர அவசரமா எங்கனயோ கெளம்பி கிட்டு இருந்தவரு என்னப்பார்த்த ஒடனே ;

நல்ல வேலை வந்தியா ...வா..வா...

சிலிண்டருக்குப் போன் பண்ணிச் சொல்லி பத்து நாளாச்சு ,இப்ப சிலிண்டர்காரன் வாற நேரம் தான்.பணம் கடுகு டப்பாவுல இருக்கு எடுத்துக் கொடுத்துட்டு வாங்கி வை. உங்கம்மா நம்மூருக்குப் போயிருக்கா சாயந்திரந்தேன் வருவா.

ஏன் என்னாச்சுப்பா திடீர்னு இன்னைக்கு நம்மூருக்குப் போயிருக்காங்க அம்மா?

ஓ ...ஒனக்கு விஷயம் தெரியாதில்ல ...

நம்ம ரகுபதி வாத்தியாரு மருமகனுக்கு ஆக்சிடென்ட் ,ஸ்பாட்லயே உசுரு போயிடுச்சாம்...

பாவம் மெட்ராஸ்ல இருந்து லீவுக்கு ஊருக்கு வந்த மனுஷன் மாமனாரு புல்லட்டை எடுத்துக் கிட்டு பொண்டாட்டியை படத்துக்கு கூட்டிட்டுப் போனானாம். பொணமாதேன் திரும்பி வந்திருக்கான்.

ஒரே ஊரு..சொந்தக் காரவுக வேற...அதான் உங்கம்மா தகவல் சொல்ல வந்த உங்கத்தை கூட முன்னால பஸ்ல போறா.நானும் ஒரு எட்டுப் போயிட்டு வந்துறேன். நம்ம கடைல தான் பலசரக்கு வாங்குவாரு வாத்தியாரு. ரெண்டு பேரும் போகலன்னா தப்பாப் போயிடும் .

ஒரு நிமிஷம் திக்குன்னு ஆயிருச்சு எனக்கு.

கண்ல நிர்மலாக்கா ஊர்ப் பிள்ளைகளுக்கு டான்ஸு சொல்லிக் கொடுத்தது...அவ பேசுனது..சிரிச்சது...திருழாக்கு சுட்ட முறுக்கு எடுத்து பிள்ளைகளுக்கு கொடுத்து திங்கச் சொன்னது எல்லாம் படமா ஓடுது.

பாவம்ப்பா நிர்மலாக்கா ...

ம்...பாவந்தேன் ...அந்தப் புள்ளைக்கும் நல்ல அடியாம் வண்டில இருந்து கீழ விழுந்ததுல.

நல்ல வேலை பிள்ளைய டீச்சர் கிட்ட விட்டுட்டு புருஷனும் ..பொண்டாட்டியுமாதேன் வண்டில சினிமாக்குப் போனாகளாம்,அந்த மட்டுக்கும் அந்தச் சின்ன உசுரு தப்பிசுச்சு. அப்பா நெடுமூச்சாய் சொன்னார்.

ச்சை ...மனசுக்கு ரொம்பவும் பாரமா போயிருச்சு.

அப்பா கெளம்பிப் போன ஒடனே கொஞ்ச நேரம் டி.வியப் போட்டுக்கிட்டு உட்கார்ந்தேன் .

கொஞ்ச நேரத்துல பக்கத்து வீட்டு மணிமேகலை வந்தா ...தயிருக்கு உரை குத்த தயிர் கேட்டு ...

இங்க அவ எனக்கு நல்ல பிரெண்டு ...அவ கிட்ட மோகனள்ளி கதைய ..ரகுபதி வாத்தியாரு கதைய ...நிர்மலாக்க புருஷன் ஆக்சிடெண்ட்ல செத்த கதைய சொல்லிக்கிட்டு இருந்தேன் மறுக்கா ...

அவதேன் திடீர்னு சொன்னா "அந்தப் பொண்ணுக்கு செஞ்ச பாவம் தான் வாத்தியார் மகளுக்கு இப்பிடி ஆகி போச்சோ !?

எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.

என்ன மணி இப்பிடிச் சொல்லிட்ட நீ ?

என்னவோ தோனுச்சு சொன்னேன் .சரி நான் வரேன் அண்ணன் சாப்பாட்டுக்கு வர நேரம். எந்திரிச்சுப் போயிட்டா அவ.

மணி ஒன்னு ..ஒன்னரை சாப்ட்டு ஒரு தூக்கம் போடலாம்னு பார்த்தா போனு அடிச்சது .

போயி எடுத்தா பாட்டி கொரலு கேட்குது

தமிழு நான் பாட்டி பேசுறேன்.

பஸ்சு பிரேக் டவுனு ஆயிருச்சு சீலுத்தூர் (ஸ்ரீவில்லி புத்தூர் ) கிட்ட மல்லி (இதுவும் ஊர் பேர் தான்)ரோடுல ...வேற பஸ்சுல ஏத்தி விடறேன்னு சொல்லிருக்கா உம் பிரெண்டு மோகன வள்ளி,இங்கன அவ சொந்தகாரவுக வீடு இருக்குன்னு கூட்டிட்டுப் போயி காப்பித் தண்ணீ வச்சிக் கொடுத்தா,அவுக வீட்டுப் போனுல இருந்து தான் பேசுறேன்.

இதென்ன கூத்து ?! என்று பயந்து போய் ...நான் தான் நாளைக்குப் போலாம்னு சொன்னேன்ல பாட்டி ,கேட்டியா நீ ? இப்பம் பாரு என்னாச்சுன்னு ... நான் பதற .

அடி நீ இருடி ...சும்மாப் பதறாத அதான் இந்தப் புள்ள மோகனவள்ளி இருக்கா இல்ல ? அவ திருத்தங்கல் போறவ ..அங்கன தான் புருஷன் வீடாம். என்னைக் கொண்டு சிவகாசி பஸ் ஸ்டாண்டுல இறக்கி விட்டுட்டு அப்புறம் அவ வீட்டுக்குப் போறேன்னு சொல்லியிருக்கா .நீ பயப்படாத. பாட்டி சொல்லச் சொல்ல ...

மோகனவள்ளி கிட்ட போனக் கொடு நான் பேசறேன்னேன் .

அவ புள்ளக்கி கால் கழுவி விடப் போயிருக்கா ,பஸ்சு வருதாம் நான் அப்புறம் பேசறேன் .'டொக்' போனை வச்சிட்டுப் பாட்டி போயிருச்சு.

அப்புறம் அன்னைக்குச் சாயந்திரம் வரை பாட்டி எப்படா...ஊருக்குப் போய் சேர்ந்து "நல்ல படியா வந்து சேந்துட்டேன்னு போனப் போடுமோ நு காத்துக் கிட்டிருந்தேன் நான்.

ஒரு வழியா அஞ்சு அஞ்சரை இருக்கும் போனு அடிச்சுச்சு. எடுத்தேன்

பாட்டிதேன்...

தான் பஸ்சுல ஏறினதுல இருந்து பிரேக் டவுன் ஆன கதை ,கூட வந்த ஆளுங்க கதை ...ஊருக்குப் போயி சேர்ந்த கதைய எல்லாம் சொல்லி முடிச்சிட்டு கடைசில எதோ உம் பிரெண்டு கூட வந்தாளே நல்லதா போச்சு. இல்லாட்டி நடு ரோட்டுல வாய்க்கு ருசியா காப்பி கிடைக்குமா?

பொண்ணுன்னாலும் பொண்ணு இவ தான் பொண்ணு ,எம்புட்டு பொறுமை !ஐயோ அவ மகன் பாவம் படுத்தி எடுத்துட்டான் பஸ்சுல ,எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு மூஞ்சி கூட சுளிக்காம அவ பாட்டுக்கு சிரிப்பு மாறாம வாரா...



சிரிச்சாளா !?



எல்லாத்துக்கும் சிரிப்பு மாறாம இருக்காளா ...இருப்பாளே ...அவ இருப்பா ?!



ரகுபதி வாத்தியார் மருமகன் ஆக்சிடெண்ட்ல செத்ததைக் கேட்டாலும் சிரிப்பு மாறாமத் தான் இருப்பாளோ!

நெனப்ப விரட்டி விட்டுட்டு துஷ்டி கேட்டுட்டு வாரவுகளுக்கு தலை முழுக வெந்நி வைக்க சமயக்கட்டுக்குப் போனேன் நான்.

அவுக வாற நேரமாச்சே.

இன்னிக்குப் பொழுது இப்பிடி முடிஞ்சதாக்கும்.

பிஞ்சுகள் ...

மாய மாயா லோகங்களின்
மடிப்புக் கலையா பிரதியாக
மருட்டும் மிரட்டும் மகோன்னத பூமிப் பந்து
பச்சைக் கிளிகளின் பிய்த்து எறியப்பட்ட
சிறகுகளின் கனமேந்தி உருளுகையில்
துடைத்தெடுத்த பளிங்குத் தரை,
ஏடு படிந்து போன பாசாங்காய்
ஏசுநாதரின் சிலுவையில் தோய்ந்துறைந்த
செம்பட்டை ரத்தம்
நிஜக்குளிர் அலுத்துப் போய்
வெம்மை தேடி அலைகையிலே
இன்னுமொரு பிஞ்சு
சர்ப்ப பிசாசின்
இச்சைகளின் வடிகாலாகுமோ!

Monday, December 14, 2009

சிவசங்கரியின் "தகப்பன்சாமி " குறுநாவல் ஒரு பார்வை

தகப்பன் சாமி படித்து முடித்ததும் இன்னது தான் என்றில்லாமல் ஒரு அனாமத்தான பயமும் கதை முடிவைக் கண்டு சின்னதாய் ஒரு சந்தோஷமும் பூத்து எண்ணங்களை கலவையான முரண்கள் ஆக்கிரமித்தன.

சதானந்தம் ஏன் இறக்க வேண்டும்?

மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நேசமும் ...பரிவுமான ஒரு கணவன் ,ஒரு தகப்பன் ஏன் சாலை விபத்தில் சடாரென்று இடைவழியில் சாக வேண்டும்?!

"பசித்து பாலருந்தும் ஒரு குழந்தையின் வாயிலிருந்து பால் பாட்டிலை எதிர் பாராமல் வெடுக்கென்று பறிப்பதைப் போல் ஆகாதா இந்த இழப்பு !!!"

"பிள்ளையை பள்ளியில் கொண்டு விட்டான் ,பக்கத்தில் உட்கார்ந்து பொறுமையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தான்,அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் பெண்ணை மடியில் வைத்துக் கொஞ்சினான் ,நாள் தப்பாமல் மனைவிக்குப் பூவும் குழந்தைகளுக்கு தின்பண்டமும் வாங்கிவந்தான் .

ஒருநாள் கொதிக்க கொதிக்க மங்களூர் போண்டா '

அடுத்தநாள் லாலா கடை அல்வா

இன்னும் ஒருநாள் அய்யர் ஓட்டல் தூள் பக்கவடாம்

ஆப்பிள் மலிவா வித்துக்கிட்டு இருந்தான் பசங்களுக்கு வாங்கினேன் '

ரஸ்தாளி இருந்துச்சு குழந்தைகளுக்கு கொடு

மிட்டாய் கடைல சூடா மிக்சர் போட்டுக்கிட்டு இருந்தான் ,சிவாக்கு தயிர் சாதத்துக்கு தொட்டுக்கிடப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்,பாட்டில்ல கொட்டி வைச்சுகிட்டு தினம் கொஞ்சமா போடு..."

இப்படிப் பட்ட தகப்பனின் பாசத்தில் வளரும் சிவா தகப்பனை இழந்ததும் பெரியப்பா வீட்டில் அனுபவிப்பது ரணம்.வாழ்வின் சில முடிச்சுகளில் சிக்கிக் கொண்டு கனகமும் அவளது சின்னஞ்சிறு குழந்தைகளும் படும் பாடு சாந்தமூர்த்தி மற்றும் தெய்வ நாயகியின் மீது கடும் துவேஷத்தை நாவலைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் .

கொண்டவன் துணையற்ற ஒரு பெண்ணை "அடிமையாக்கி "தங்களுக்கொரு சம்பளமில்லாத வேலைக்காரி ஆக்கிக் கொள்ளவே பெரும்பாலும் உறவுகள் முயலும் என்பதற்கு கனகமும் அவளது பிள்ளைகளுமே உதாரணம்.இத்தனைக்கும் கனகம் பலகாரம் செய்வதிலும் தையல் கலையிலும் தேர்ந்தவள் ,அப்படி இருந்தும் மூத்தார் குடும்பம் படுத்தி வைக்கும் பாடுகளுக்கு அவள் வாய் மூடி கண்ணீருடன் கரைவது உள்ளதும் போய் விடக் கூடாதே எனும் உள்ளார்ந்த பயத்தினால் தான்.

பெண்கள் தைரியசாலிகளாக முடிவெடுக்க வேண்டுமெனில் அதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் முக்கியமே. துள்ளத் துடிக்க இறந்து போன தம்பிக்காக வருந்தாத சாந்த மூர்த்தியா தனக்கொரு நன்மை செய்து விடப் போகிறார்? என கனகத்தால் உணர முடியாமல் போனது அவளது துரதிர்ஷ்டமே!

தாய் தகப்பனை இழந்து அண்ணனின் பரிவில் வளர்ந்து பிறகு அண்ணி வந்ததும் அந்தப் பரிவிற்கும் பங்கம் வர மனைவிக்கு தன் தங்கை வேலைக்காரி ஆவதிலிருந்து அவளை மீட்கவே "பார்வைக்கு அத்தனை லட்சணமாக இல்லாவிட்டாலும்" பரவாயில்லை மாதச் சம்பளம் வாங்கும் மணமகன் பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் என்று தான் அழகும் பாந்தமுமான தன் தங்கையை மாதவன் சதனந்ததுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதற்கும் இப்படி ஒரு பங்கம் வரக்கூடும் என அவன் கண்டானா?

எளியோருக்கு வலியோர் இரங்குதல் என்பதெல்லாம் சினிமாவில் காணலாம் என்பதைப் போல இங்கே கனகத்தை அநியாயமாக ஏமாற்றுகிறார்கள் தெய்வ நாயகியும் சாந்தமூர்த்தியும்.கணவனின் மரணத்திற்கு பின் அவனுக்கு கிடைத்த இன்சூரன்ஸ் இழப்பீட்டுப் பணம் முழுவதையும் சாந்த மூர்த்தி ஏதேதோ கணக்குகள் காட்டி கழித்துக் கொள்ளும் போது கனகத்தின் கேள்விகளற்ற பரிதவிப்பு அவள் மீதே"முதுகெலும்பில்லாத கோழைப் பெண்ணே "எனும் கோபமாகவே வெடிக்கக் கூடும் வாசகர்களுக்கு.


அதனால் தானோ என்னவோ அவள் பெற்ற மகனே அம்மாவையும் தங்கையையும் விட்டு விட்டு பெரியப்பா குடும்பத்தின் அடாவடியைப் பொறுக்க முடியாமல் அடிவாங்கிச் சாக வலுவின்றி வீட்டை விட்டு ஓடிப் போகிறான்.

பஸ்ஸில் காப்பி டீ விற்கும் சிறுவர்களில் ஒருவனாகிறான்.

சாந்தமூர்த்திக்கும் தெய்வ நாயகிக்கும் பத்தோடு பதினொன்றாய் கூட ஒரு காரணம் கிடைத்தது கனகத்தையும் சிவாவையும் ஊசியால் குத்துவதைப் போல வார்த்தைகளால் குத்திக் கிழிக்க,கனகத்தின் மௌனமான கதறலையும் ஆற்றாமையையும் சொல்லில் விளக்கி விட முடியாது தான்...

ஆனாலும் அவள் எங்கெங்கோ விசாரித்து யார் யாரிடமோ தகவல் சொல்லி கடைசியில் மகன் இருக்கும் இடம் தெரிந்து மூத்தாரை நம்பிப் பயனில்லை என இவளே நேரில் போய் அழைத்தும் அவன் திரும்பி வர மறுக்கிறான்.

தன் பிள்ளையை மூத்தார் மகன் வீணில் பலி சுமத்தி அடிவாங்க வைக்கும் போதும் சரி ...அவனை அந்த மனிதர் ஈவு இரக்கமே இன்றி பெல்ட்டால் விளாசும் போது பேச வகையின்றி கண்ணீரில் உருகும் போதும் சரி கனகத்தின் சிவாவுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்து போகிறது.தன் அம்மாவை நம்பினால் இனியெப்போதும் அடிமை வாழ்க்கை தான் என அந்த பிஞ்சு மனம் நினைத்திருக்கக் கூடும் !

கனகத்தின் அழைப்பை மறுத்து அவன் சொல்லும் பதில் குழந்தை அப்பாவையோ ..அம்மாவையோ செல்லமாக பெல்ட்டால் அடித்து விளையாடுமே அப்படி ஒரு சாட்டையடி.சிவா தகப்பன்சாமி தான் இங்கே .

"தைரியமா நாம இருக்க முயற்சிக்கலாம்மா ,இந்த உலகத்துல நிமிர்ந்து வாழ நமக்கு உரிமை இருக்கு,யாருக்கும் காரணம் இல்லாம நாம அடங்கி வாழத் தேவை இல்லை,பெரியப்பா கிட்ட தயங்காம உண்மையைச் சொல்லுங்க மீறிக்கிட்டு குடும்பம் மானம்னு கத்தினார்னா சும்மா கேட்டுக்கிட்டு இருக்காதிங்க,நம்ம வாழ்க்கையை நாம தான் வாழனும் எனக்கொரு பெரியவர் இங்க வந்த புதுசுல சொல்லிக் கொடுத்தார் ,நீங்களும் அதை நினைவுல வச்சிக்கோங்க"

இரண்டும்கெட்டான் வயதில் அந்தப் பையனால் எடுக்க முடிந்த ஸ்திரமான திடமான முடிவை இத்தனை வயதில் கனகத்தால் எடுக்க முடியாமல் போனதை விளக்கத் தான் இந்த குறுநாவலுக்கு இப்படி ஒரு தலைப்பு என்றால் அது மிகையில்லை.

சிவசங்கரியின் இந்தக் குறுநாவல் முன்பு தூர்தர்சனில் "செவ்வாய் தோறும் இரவு ஒளிபரப்பப் படும்" ஒருமணி நேர நாடகங்களில் ஒன்றாக மாஸ்டர் கணேஷ் நடிப்பில் பார்த்த ஞாபகம் .மாஸ்டர்
கணேஷ் தான் சிவா.

இதுமட்டுமா பாலகுமாரனின் "தாயுமானவன்" கூட தொடராக வந்து கொண்டிருந்தது அப்போது .

இப்போது மெகா சீரியல்கள் பல வந்து குழப்பக் கும்மி அடித்தாலும் வெகு சொற்பமானவை தவிர நெஞ்சில் நிற்கவில்லை எதுவும். ஏன் கதைகளுக்கா பஞ்சம்? ஏதாவது ஒரு
வெற்றி பெற்ற நாவலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே!!! என்ன ஒரு கஷ்டம் எனில் கதையின் கருப்பொருளை சிதைத்து தோரணம் கட்டி விடுவார்கள் டி.ஆர்.பி ரேட்டிங் என்ற பெயரில் அப்படி நல்ல நாவல்கள் சிதைந்து திரிந்து போய் மக்கள் மனதில் பதிவதை விட நாவலாகவே வாசிப்பதே உசிதம்.

பாலிமர் டி.வி யில் ஆர்.கே.நாராயணின் "சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ் " மால்குடி டேஸ் ஆக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.மதியத்திற்கு மேல் என்று ஞாபகம்,சுவாமியின் அப்பாவாக கிரீஸ் கர்னாட் நடிப்பில் சுவாமியாக நடிக்கும் சிறுவன் பெயர் தெரியவில்லை .பார்க்கலாம் ஆனால் புத்தகமே அபாரமானது நம் கற்பனைகள் சிறகடிக்க. காட்சி ஊடகம் திறக்க முடியாத பலப் பல கதவுகளை திறக்க வல்லது நாவல்கள் என்பதை "தில்லான மோகனாம்பாளையும்" மலைக்கள்ளனையும் " வாசித்தல் தெள்ளத் தெளிய ஒப்புக் கொள்வீர்கள்.

கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனாம்பாள் திரையில் ஒரு வகை விருந்து எனில் நாவலாக வாசித்தவர்களை கேளுங்கள் இதை விட அதன் சுவை அளப்பரியது ,அதே தான் நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன் " நாவலுக்கும். அப்பப்பா அதை படமாக எம்.ஜி.ஆர்...பானுமதி நடிப்பில் காண்பதை விட நாவலாக வாசித்துப் பாருங்கள் .புரியும் எப்பேர்ப்பட்ட புனைவு!

வாசகர்களின் பக்தியை சோதிக்க ஒரு எளிதான கேள்வி

தகப்பன் சாமி யார்?

அ) சிவன் ஆ)திருமால் இ) விநாயகர் ஈ) முருகன்

சரியான விடை சொல்பவர்களுக்கு அந்தக் கடவுளின் பிரசாதம் அனுப்பி வைக்கப் படும் :))))

Sunday, December 13, 2009

சிலேட்டுக் குச்சியும் ...கோபால் பல்பொடியும்...




சிலேட்டுக் குச்சி (பல்பம்) தின்னும் பழக்கம் ஆரம்பப் பள்ளியில் வாசிக்கும் போது என்னையும் சேர்த்து என் நண்பர்கள் பலருக்கும் இருந்தது.அதுமட்டுமா பழனி கந்த விலாஸ் விபூதி என்றாலும் பலருக்கு அதீத இஷ்டம் தான் அப்போது. ஆட்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்து அமுக்கிக் கொள்ள சிட்டிகை சிட்டிகையாய் தின்பவர்கள் ஒரு சிலர்,என்னவோ ஜீனி தின்பது போல அள்ளி அள்ளி வாயிலிட்டுக் கொள்பவர்கள் சிலர்,நான் முதலாம் வகை.அள்ளித்தின்பது நாகரீகமில்லை என்று அப்போதே தெரிந்திருக்கிறது பாருங்கள்!!! என்னே என் நாகரீகம்!?

இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதைப் பற்றி அப்போது சிந்தனை ஏதும் இல்லை.ஒரு வேலை அப்பா வழிப் பாட்டி செங்கல் பொடி கொண்டு பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! இல்லையேல் இட்லிக் கடை அன்னம்மா பாட்டி இட்லி அவித்து முடித்ததும் மூன்று கல் கொண்ட விறகடுப்புச் சாம்பலை நீர் தெளித்து அவித்தபின் அதிலுள்ள சாம்பலை இளஞ்சூடாக எடுத்து பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! அடுத்தவரைக் கண்டு பழகுவதென்றால்... தாத்தா வேப்பங்குச்சியால் பல் விளக்குவதைக் கண்டு அதையல்லவா நான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?!முதல் காரணம் அது மகா கசப்பு ,எந்தப் பிள்ளைகள் தான் கசப்பை விரும்பக் கூடும்?!

திருநீறும் ...சாம்பலும் ஏன் சிலேட்டுக் குச்சியும் கூட வாயிலிட்டதும் நடு நாக்கில் சில்லென்று ஒரு விறு விறுப்பைத் தரும் பாருங்கள் கரைவதற்கு முன்பு அதற்க்கு ஈடாகுமோ கசப்பு!அம்மா வழிப் பாட்டி "பயோரியா பல்பொடி வைத்து பல் விளக்குவார் அன்றைய நாட்களில்..." நாட்டு மருந்து போல அந்தப் பல்பொடியும் பிடிக்காது அதன் லேசான கசப்பும் பிடிக்காது ,சுறு சுறுவென எரியும் நாக்கு ,அதே ரோஸும் வெள்ளையும் கலந்த நிறத்தில் "கோபால் பல்பொடி" சின்னப் பிள்ளைகள் எல்லோருக்கும் பிடித்த ஒன்று ,ஏனெனில் அதைக் கொண்டு பல்விலக்குவதா முக்கியம் ? அதன் இனிப்புச் சுவைக்காக அதை தின்று விடும் பல நல்ல பால்ய நண்பர்களை நானறிவேன்.நான் கூட தின்றிருக்கக் கூடும் ..இப்போது ஞாபகமில்லை.

சிலேட்டுக் குச்சியில் இருந்து பிறகு சிலர் சாக்பீசுக்கு மாறி விட்டார்கள் ,என்ன இருந்தாலும் குச்சி போல வராது தான்,குச்சியில் கூட இரண்டு வெரைட்டி உண்டு அப்போது. கல் குச்சி ,இது ஒல்லியாக நீண்டு கருப்பாக இருக்கும் ,இரண்டாவது மாவுக் குச்சி இது நல்ல வெள்ளை நிறத்தில் கொஞ்சம் தடிமனாக இருக்கும் ,இதில் மாவுக் குச்சி தான் பள்ளிப் பிள்ளைகள் எல்லோராலும் விரும்பப் பட்டது. என்ன தான் சொல்லுங்கள் மாவுக் குச்சிக்கு சாக்பீசெல்லாம் ஈடாகவே ஆகாது என்று தான் சொல்வேன் நான்.சப்பென்று இருக்கும் சாக்பீஸ் தூள்.

மண் வெறும் மண் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது ...தெள்ளு மண் என்பார்கள் கிராமப் புறங்களில் அப்படிப் பட்ட நுண்ணிய மண்ணை தின்னும் பழக்கம் கூட சிலருக்கு அப்போது இருந்தது.

எறும்பு சாப்பிட்டால் கண் நன்றாகத் தெரியும் என்று ஒரு பழம் நம்பிக்கை...யார் சொல்லக் கேள்வியென்று இப்போது நினைவில்லை,அப்படி எறும்புத் தின்னி பிள்ளைகளும் சிலர் இருக்கத் தான் செய்தார்கள்.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நிஜமாகவே எறும்பைப் பிடித்து தின்றால் கண் பளிச்சென்று தெரியுமா என்ன?!( சுரீர்னு கடிக்கிற எறும்பை சும்மா விட முடியுமா? )

மேலே சொன்ன பழக்கங்களைக் காட்டிலும் "அரிசி " சமைக்காமல் அப்படியே வெறும் அரிசியை வாயிலிட்டு சதா மெல்லும் அபாரப் பழக்கம் அன்றைக்குப் பலரிடமும் இருந்தது.பெண் குழந்தைகள் அப்படி எந்நேரமும் அரிசி மென்றால் அத்தைமார்கள் சொல்வார்கள் "ரொம்ப அரிசி திங்காத உன் கல்யாணத்தன்னைக்கு விடாம மழை வரும் பார் " என்று ,இதென்ன நம்பிக்கையோ?!

சிலருக்கு புளியை சதா நேரமும் வாயிலிட்டு சப்பிக் கொண்டே இருக்கப் பிடிக்கும்,இல்லையேல் புகையிலை போல கன்னங்களுக்கிடையில் அதக்கிக் கொள்வார்கள் ,உமிழ் நீரில் லேசான இனிப்பும் மிகையான புளிப்புமாய் புளி மெல்ல மெல்லக் கரைந்து வர அதை முழுங்கும் ஒவ்வொரு முறையும் அலாதி ஆனந்தமாய் இருக்கும். என்ன ஒரு பொல்லாத பிரச்சினை என்றால் இப்படி புளி தின்றால் நாக்கின் ஓரங்கள் நாளடைவில் கொதித்துப் போய் கொப்புளித்து புண் வரும்.இதற்க்கெல்லாம் அஞ்சினால் எப்படி?!

சொல்ல மறந்து விட்டேன் ...இப்போது தான் ஸ்கூல் பேக் வித விதமாய் வருகிறதே தவிர இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலும் நகைக் கடை ,துணிக் கடைகளில் இலவசமாகத் தரும் மஞ்சள் பை தான் ஸ்கூல் பெக் ,சவாலாகவே சொல்கிறேன் ..அதன் காதுகளையோ அல்லது ஓரங்களையோ அல்லது அடி நுனிகளையோ பற்களால் கடித்து மேல்லாத குழந்தைகள் சொற்பமே.அது ஒரு விநோதப் பழக்கம் ...லேசான உப்புச் சுவையோடு அப்படி மென்று விழுங்குவதை இப்போது நினைத்தால் குமட்டக் கூடும்,அன்றென்னவோ அது பிடித்தமானதாகவே இருந்தது எல்லாக் குழந்தைகளுக்கும்.

இப்பத்திய குழந்தைகள் மட்டும் இளப்பமா என்ன? டூத் பேஸ்ட் திங்காத குழந்தைகள் அரிது. நல்ல வேலை இப்போது சிலேட்டுகள் இல்லை நேரடியாக பென்சிலுக்குப் போய் விடுகிறார்கள் எல்.கே.ஜி யிலேயே.மேஜிக் சிலேடு வந்து விட்டது. அதனால் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குச்சி தின்று விடக் கூடுமோ என்ற அபாயம் குறைவே.

மண் தரை இருந்தால் அல்லவா இப்போதைய குழந்தைகள் அதெல்லாம் முயன்று பார்க்க ! எங்கெங்கு காணினும் சிமெண்டுக் காடுகள் தான். அப்படியாக அந்தப் பழக்கமும் இருக்க வாய்ப்பில்லை.திருநீர் கூட அப்படி ஒன்றும் இந்தக் கால குழந்தைகள் சாப்பிட முயல்வதில்லை என்றே நினைக்கிறேன். சாம்பல் சொல்லவே தேவையில்லை ... விறகு அடுப்பு உபயோகித்தால் அல்லவா சாம்பலை குழந்தைகள் கண்ணால் பார்க்க முடியும்?!

இப்படி எல்லாம் பெற்றோர்கள் நிம்மதிப் பட்டுக் கொள்ள முடியாது.இதெல்லாம் என்ன பெரிய சாதனைகள்?!

பிரீசரைத் திறந்து அதில் உறைந்திருக்கும் ஐஸ் துகள்களை சுரண்டித் தின்பது ;

கோரைப் பாயோ ...பிளாஸ்டிக் பாயோ அதன் ஓரங்களை உருவி மென்று துப்புவது .

பென்சில் கரையும் வரை அதை விட்டேனா பார் என துருவோ துருவென்று துருவுவது.

முன்னமே சொன்னபடி டூத் பேஸ்ட் தின்பது.

இப்படி சில மாறாத பழக்கங்கள் இருக்கின்றன தான்.

ஆனாலும் அன்றைய குழந்தைகளை விடவும் இன்றைய குழந்தைகளுக்கு கவனிப்பு கூடுதல் என்பதால் பல விநோதப் பழக்கங்கள் இன்றைக்கு மட்டுப் படுத்தப் பட்டு விட்டன குழந்தைகளிடையே என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளாய் வளர்வதால் எந்நேரமும் பெற்றோரின் கவனிப்பு வளையத்திலே தான் இருக்க நேர்கிறது.அதனால் தேவையற்ற பல பழக்கங்கள் தடுக்கப் பட்டு விட்டன என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.
நோட்:-
சிலேட்டுப் படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது இங்கிருந்து- nallasudar.blogspot.com/2008_10_01_archive, நன்றி நண்பரே.

Thursday, December 10, 2009

ஹரிணி(பாப்பு) கலெக்சன்ஸ் ...


கணேஷ ஸ்துதி இல்லாமலா ?! முதல் வணக்கம் அவருக்கு தானே...ஜூனியர் சந்தமாமா பாப்புவுக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நேற்று அதைப் பார்த்து இரண்டே நிமிடத்தில் இந்த பென்சில் டிராயிங் ...பிள்ளையார் கூட என் பொண்ணு கைபட்டு எப்படி ஜொலிக்கிறார் பாருங்க!(தற்பெருமை கொஞ்சம் ஓவராத் தான் போச்சு இல்ல!!!)




மயிலுக்கு வண்ணம் கொடுக்க பாப்புவுக்கு நேரமில்லையாம் ...பரீட்சை நேரமாச்சே ...லீவு விட்டதும் கலர் கொடுக்கலாம் என்றாள் ,அதற்குள் வலையேற்றி விட்டேன் ..கலர் இருந்தாலும் இல்லா விட்டாலும் மயில் அழகு தான் ...ஏன்னா எம் பொண்ணு வரைஞ்சதாச்சே!!! இப்படி சொல்லி சமாளிக்க வேண்டியது தான்.:))



மேலே ஹெலி ஹாப்டர் பறக்கிறதாம்..கீழே சாலையில் ஸ்கூல் வேன்..ஆட்டோ ...பஸ் இப்படி சில ட்ரான்ஸ்போர்ட் வரைந்திருக்கிறாள். பாப்பு ட்ரான்ஸ்போர்ட் லெசன் படிப்பதால் விளைந்த படம் இது. நல்லா தான் இருக்கு இல்ல?!




இது உருளைக் கிழங்கை பாதியாகக் கட் செய்து அதில் வண்ணங்களை ஒற்றி அச்சுப் பதித்து உருவான அழகான மலர்.தண்டு கூட அச்சடித்தது தான். பிரஸ் அல்லது பென்சில் பயன்படுத்தப் படவில்லை. பாப்புவுக்கு இப்படி அச்சுப் பதிப்பது ரொம்பவும் பிடித்திருக்கிறது சும்மா சொன்னதால் இப்படி முயற்சித்துப் பார்க்கச் சொன்னேன். இல்லா விட்டால் வீட்டுச் சுவர் முழுக்க தண்ணீரில் அல்லது எண்ணெயில் கையை முக்கி எடுத்து அச்சுப் பதிப்பதை யார் தான் சகித்துக் கொள்ள முடியும்?! :):(:):( சொல்லுங்கள்!!!!



பாப்பு வரைந்த போட்டோ பிரேம் படம்...உள்ளே படத்தில் இருப்பது செர்ரி மரக் கிளையாம்.இதற்கான செயற்கை இலைகள் மற்றும் சிவப்பு நிற குந்தன் கற்களை வாங்கித் தரச் சொல்லி அதை ஆங்காங்கே ஒட்டி முடித்ததும் படம் அழகாகி விட்டது பாருங்கள்...

Friday, December 4, 2009

உச்சிக்குடுமி முட்டாசுக் கடை







விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போய் சில பல நாட்கள் சீராடுவதெல்லாம் கல்யாணம் ஆன கையோடு கனவு போலத்தான் ஆகி விட்டது ,இப்போதெல்லாம் அப்படிப் போனாலும் கூட எங்கே தங்க முடிகிறது?குழந்தைக்குப் பள்ளி,கணவருக்கு லீவு இல்லை, ஆள் இல்லாம வீட்டைப் போட்டுட்டு அத்தனை நாள் தங்க முடியுமா?இப்படிப் பல காரணங்களைக் காட்டி பாட்டி வீட்டு செல்லச் சீராடல் எல்லாம் கானல் நீரானது தான் மிச்சம் .


அதை ஏன் இங்கே புலம்புவானேன்!,சொல்ல வந்த விஷயம் வேறு ...பாட்டி வீடு என்றதும் சில விஷயங்கள் சட்டென்று நினைவை நிரப்பும் அப்படி ஒரு விஷயம் தான் உச்சிக்குடுமி முட்டாசுக் கடை ,இந்த மனிதருக்கு ஏன் இப்படிப் பெயர் வந்ததென்பது இன்னும் கூட எனக்குப் புரியாத விஷயம் தான்.பெயரா முக்கியம்? தினம் தினம் மாலையானால் போதும் அவர் கடையில் சுடச் சுட போடப் படும் கருப்பட்டி முட்டாசின் சுவை அல்லவோ !(ம்...ம்...ஹூம்)

உச்சிக்குடுமி கடையில் இன்னும் சில பலகாரங்கள் கூட செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள்,ஆனாலும் இந்தக் கருப்பட்டி முட்டாசுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை ,

அதுவும் மாலை சரியாக ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு பெரிய நார் தட்டின் மீது பழைய (பெரும்பாலும் எண்ணெய்க் கரை படிந்த ஒரே அழுக்குத் துண்டு தான்) துண்டை விரித்து அதன் மேல் பழைய தினசரிப் பேப்பரைப் போட்டு அதற்கும் மேல் பொன்னிறமான கருப்பட்டி முட்டாசுகளை அடுக்கி அதற்கும் மேலே இன்னொரு தினசரியை வைத்து மூடி உச்சிகுடுமியின் மகள் பாண்டீஸ்வரி இடுக்கில் இடுக்கிக் கொண்டு வருவாள்,கூட ஒரு பொடியன் காசு வாங்கிப் போடா சுருக்குப் பையுடன் வருவான்.

அவர்கள் தலையை கண்டாலே போதும் தெருவில் மொய்த்துக் கொண்டு கூட்டம் கூடும்.தினம் தினம் வருவதால் எல்லோரும் நூறு கிராம்,இருநூறு கிராம் என்று வாங்கி அங்கேயே தின்றும் விடுவார்கள் ,மாலையானால் தான் கிராமப் புறங்களில் அப்போதெல்லாம் ஒவ்வொரு திண்ணையிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதை பேசுவது வாடிக்கை ஆயிற்றே.முட்டாசோடு ஊர்க் கதைகளை உலக விசயங்களை(!!!) மெல்வதும் கூட சுகம் தான் போலும்.

என்னவோ தெரியவில்லை சென்ற விடுமுறையில் அம்மா வீடு...மாமியார் வீடு ,சித்தி வீடு அத்தை வீடு என்று சுற்றி விட்டு பாட்டி வீட்டில் எட்டிப் பார்க்கும் போது சேர்ந்தார் போல இரண்டு நாட்கள் தங்கினால் தான் என்ன? என்று தோன்றி விட ...தங்கினோம். வழக்கம் போல உறவுகள் ...நட்புகள் ...தெரிந்தவர் தெரியாதவர் என்று திண்ணையில் ஜமா சேர்ந்ததில் மெல்ல மெல்லப் பேச்சு கருப்பட்டி முட்டாசுக்குப் போய் விட்டது.

மொறு மொறுன்னு பங்காரம் போல (பங்காரம்னா தெலுங்குல தங்கம்) என்னமா இருக்கும் உச்சிக் குடுமி கடை முட்டாசு !

இப்ப ஒருத்தன் முட்டாசு போட்டு விக்கறான் மதினி ,வாயில போட்டா என்னமோ இனிப்பாத்தான் இருக்கு,ஆனாங்காட்டி ஒரு மொறு மொறுப்பு இல்ல ஒண்ணுமில்ல,சும்மா சவ சவன்னு என்னமோ பச்சைப் புல்லைக் காய்ச்சி சீனி போட்டு மென்டாப்புல(மெல்லுதல்) இருக்கு ,அம்புட்டுக்கு ஒன்னும் நல்லா இல்லை. ஹூம்... ஓட்டு வீட்டு தனக்கா சொல்லி அங்கலாய்க்க ,

பாட்டி உச்சிக்குடுமி பெருமையை கொஞ்ச நேரம் சிலாகித்தார்.

எனக்கோ இந்த முட்டாசெல்லாம் சென்னையில் எங்கே கிடைக்கப் போகிறது ,இப்போது யாராவது விற்று வந்தால் சூடாக வாங்கி ஒரு விள்ளல் வாயில் போட்டால் தேவலாம் என்று இருந்தது அந்த மாலை நேரக் கூதல் காற்றுக்கும் கிராமங்களுக்கே உரிய ஒரு வித இதமான வாசனைக்கும் .

அதென்னவோ அன்றைக்கெல்லாம் எதிர்பார்த்தும் முட்டாசு விற்பவனைக் காணோம்.

சிவகாசியில் வேலாயுத நாடார் கடையில் சீனி..கருப்பட்டி முட்டாசு ரெண்டுமே பேமஸ் என்று ஊருக்கு கிளம்பும் போது சித்தியும் பாட்டியும் ஆளுக்கு ஒரு கிலோ வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள்,அங்கே பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள் கேட்டால். அது ஒரு பாரம்பரிய சுவை என்றால் மிக்கி இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப் படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை எனக்கு.

இதே போல வாழை இலையில் வைத்து சூடாகக் கட்டித் தரும் சாத்தூர் லாலாக் கடை ஹல்வாவையும் சொல்லாம் .பால்யத்துடன் கலந்து விட்ட இனிமையான நினைவுகள் அவை.இங்கே இனிப்பானவை முட்டசும் ...ஹல்வாவுமா இல்லை பால்ய நினைவுகளா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் பகுத்துப் பார்த்து விட முடியாது போலும்.

ம்...என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்...ஆமாம் வேலாயுத நாடார் கடை முட்டாசும் கூட எனக்கென்னவோ உச்சிக்குடுமி கடை கருப்பட்டி முட்டாசுக்கு ஈடாகத் தோன்றவில்லை என்பது தான்.

உச்சிக்குடுமியோடு போய் விட்டது அவரது மொறு மொறுப்பான முட்டாசுகளும் .

அவர் இறந்து விட்டார்.

Thursday, December 3, 2009

கல்கி வெறும் கவர்ச்சி

நேற்றைய ஜூனியர் விகடனில் வெளியான செய்தி ஒன்று "கல்கி பகவானும் அவரது மகன் கிருஷ்ணா ஜியும் பிரிகிறார்கள் " கிருஷ்ணா ஜி கல்கி மற்றும் அம்மா பகவானின் (!!!)அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து தனியானதொரு அமைப்பு தொடங்கவிருக்கிறார் என்பது. மிகவும்

கசப்பான உணர்வைத் தந்த செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும் .
தந்தையின் "ஒன்னெஸ் " அமைப்பு மூலம் திரட்டிய மக்கள் நிதி பற்றாக் குறை ஆகி விட்டதா என்ன ?என்ற ஆயாசமே மிகுதியானது. விஸ்வநாத் என்பவர் கல்கியின் (விஜயகுமார்) நண்பர் இவர் இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே கல்கி மீது குற்றச் சாட்டை எழுப்பியே வருகிறார்,ஆனால் நமது மீடியாக்கள் பரபரப்பிற்காக ஓரிரு நாட்கள் செய்திகளைப் பிரசுரிப்பதோடு ஓய்ந்து விடுகின்றன. காரணம் கல்கியை நம்பும் மிகுதியான வி.ஐ.பி பக்தர்களாகக் கூட இருக்கலாம். சந்திர பாபு நாயுடு ஆந்திராவில் கல்கியை ஆதரித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.

குங்குமம் மற்றும் அவள் விகடனில் கல்கி பகவானின் அற்புதங்கள் குறித்து விளம்பரம் கூட வெளியாகிறது ,யோசியாமல் நம்புவதற்கு தான் ஏராளம் பேர் இருக்கிறார்களே. அனுபவ ரீதியாக எனக்குத் தெரிந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியதால் தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.

மனிதர்களுக்குப் பட்டால் தான் புத்தி வரும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ?! ஐந்தாயிரம் ரூபாய்கள் செலவழித்து கல்கி பகவன் மற்றும் அவரது மனைவியான அம்மா பகவான் தரிசனம் செய்து வந்தவர்களில் நாங்களும் உண்டு என்பதால் அனுபவ சான்றுகளுடன் தெரிய வந்த விஷயம் .
அங்கே பணமே பிரதானம்.
வரயக்யம் என்று ஒரு பூஜை
மகா வரயக்யம்
முக்தி யக்யம்
யூத் வரயக்யம்
கலச பூஜை
அம்மா பகவான் திருக்கல்யாணம்

நானறிந்த வரையில் இப்படிப் பல பூஜைகள் நடத்துவார்கள் .இதற்க்கு தேவைப் படும் நிதி எல்லாம் அங்கே "கல்கி டிவோட்டிகள் "(கல்கி பக்தர்கள்) தலையில் சுமத்தப் படும். பூஜைக்குத் தேவையான அழைப்பிதழ்கள் அச்சிடுவது வாகனச் செலவுகள்,பூக்கள்,பழங்கள் முதற்கொண்டு இன்ன பிற எல்லா செலவுகளையும் இன்னின்னவர் என்று ஸ்பான்சர் பிடித்து சாதிக்க வேண்டும்,இந்த பூஜைகளை நடத்துவதற்கென்று "தாசா ஜிக்கள் "(கல்கி அடியார்கள்) இருப்பார்கள் ,அவர்கள் இப்படி இப்படி செய்யுங்கள் என்று ஆணை இடுவதோன் சரி பணம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே பக்தர்கள் தான் திரட்டித் தந்தாக வேண்டும்.

சத்சங்கம் செய்வது ...எனக்கு இன்ன குறை என்று மனம் விட்டுப் பேச விரும்பும் பக்தர்களுக்கு தனக்குத் தெரிந்த வகையில் சில தத்துவங்களைக் கூறி அவர்களது மனம் சமாதானம் அடைய வைப்பது ,திரட்டிய நிதிகளை பகவானிடம் கொண்டு சேர்ப்பது இது மட்டுமே கல்கி தாசாக்களின் வேலை.

இப்படி தமிழகம் முழுக்கவே இவர்கள் பரவி இருந்தனர் 2000 ஆம் ஆண்டு வாக்கில் ,இப்படி திரட்டிய நிதிகளை இவர்கள் எப்படிப் பயன் படுத்தினார்கள் என்பதற்கு கல்கிக்கே வெளிச்சம்.அவரது மகனின் நிர்வாகத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றும் ,காஸ்மிக் எனும் ஆடியோ நிறுவனம் ஒன்றும் இருப்பது பக்தர்களுக்கு தெரியும் .

கல்கி என்ன பரம்பரை பணக்காரரா? படி நிலை வளர்ச்சி என்பது அம்பானியில் இருந்து லக்ஷ்மி மிட்டல் வரை கண் கூடாக செய்திகள் மூலம் நமக்குத் தெரிந்தவை,ஒன்னெஸ் மையம் என்ற பெயரில் சகல நவீன வசதிகளுடன் வெளி நாட்டினரை ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய வழிபாட்டு தியான மண்டபம் கட்டி இருக்கிறார்கள்.

கொசுறு :

அம்மா பகவான் தரிசனம் செய்ய ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 5000 வாங்கினார்கள் ,நேற்று ஜூ.வி யில் 50 ,000 என்று படித்த ஞாபகம் ,அடடா...என்ன ஒரு படி நிலை வளர்ச்சி .

பிரபலங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு இவர்கள் எல்லாம் எங்கள் பக்தர்கள் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்கிறார்கள். உதாரணம்...மனீஷா கொய்ராலா,ஷில்பா ஷெட்டி,எஸ்.ஏ .சந்திர சேகர் தம்பதி,தாமு,எழுத்தாளர் இந்துமதி( இவர் நான் கல்கி பக்தை இல்லை என்று முன்பே பேட்டி கொடுத்து விட்டார்.) இப்படிப் பலர் உண்டு.

சில வருடங்களுக்கு முன் தேனிக்கு அருகில் வீரபாண்டித் திருவிழாவுக்கு வருகை தந்த நகைசுவை நடிகர் தாமு "கல்கி தர்மம் (!!!) பரப்ப என்று போடப் பட்டிருந்த ஒரு ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் அ.தி.மு. கா வுக்கு ஓட்டுப் போடுமாறு ஸ்டாலுக்கு வந்தவர்களிடம் கேட்டுக் கொண்டாராம். அ.தி.மு.கா என்றால் இனி "அம்மா தர்ம முன்னேற்றக் கழகமாம் " அங்கிருந்த பக்தர்கள் சொல்லக் கேள்வி .

இந்த ஸ்டாலும் வீர பாண்டித் திருவிழா காலங்களில் பக்தர்களின் நிதியால் மட்டுமே போடப் படும் ,ஏறத்தாழ எல்லா ஆன்மீக இயக்கங்களும் இப்படித் தான் என்றாலும் இது கொஞ்சம் அதிகப் படி என்று தோன்றக் காரணம் நானும் சில வருடங்கள் நேரில் கண்ட பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் சில உண்டு என்பதால் மட்டுமே .

கல்கி பகவான் ரூரல் சர்வீஸ் என்ற பெயரில் பக்தர்களே அரிசி பருப்பு எல்லாம் சேகரம் செய்து கொண்டு பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று அவர்களே சமையல் செய்து கிராமத்தோரை அன்போடு அழைத்து இலை போட்டு உணவிட்டு அவர்கள் சாப்பிட்டு முடித்த் பின் அந்த எச்சில் இலைகளையும் எடுக்க வேண்டும் அப்போது தான் பகவானின் முழு பலன் கிட்டுமாம். நிஜம் என்றே ஒத்துக் கொள்ளத் தோன்றினாலும் கல்கி அடியார்கள் ஒரு போதும் என்றேனும் ஒருநாள் மட்டும் கூட அப்படி இலை எடுத்து நான் கண்டதில்லை. இதுவல்லவோ பக்திப் பெருக்கு!!!

முக்தி யக்யம்
என்ற பெயரில் வலுக்கட்டாயமாக பணம் கட்டி சென்னைக்கு அருகில் நேமத்தில் நடக்கும் ஒரு பூஜைக்கு பக்தர்களை போகச் சொன்னதை பல முறை நான் கண்டிருக்கிறேன்,மறுக்கும் பக்தர்கள் நாளடைவில் பூஜை நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப் படுவார்கள்.ஆனால் அவர்கள் நடத்தும் ..நடத்தப் போகும் பூஜைகளில் பணம் செலுத்தி கலந்து கொள்ள மட்டும் மறக்காமல் அழைப்பு மீண்டும் மீண்டும் அனுப்பப் படும்.

இதை விட பக்தர்களின் வாரிசுகளை தாசாஜிக்கலாக அனுப்பச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?! எனும் கேள்வி அடியார்களால் கேட்கப் பட்டதும் அங்கே உண்டு.அதில் மிரண்டு வெளியேறிய பல பக்தர்களை நான் அறிவேன்.

எதற்கு நீட்டி முழக்குவானேன். "கல்கி வெறும் கவர்ச்சி மட்டுமே " அவர் தெய்வம் கடவுள் விஷ்ணுவின் பத்தாது அவதாரம் என்பதெல்லாம் வெறும் கப்ஸா என் போன்றவர்களுக்கு,இன்னும் கல்கியை நம்பக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை .

ஆன்மீகம் வியாபாரம் தான் என்பதை யாராவது தெள்ளத் தெளிவாக அறிய விரும்பினால் கல்கி பூஜைகளில் தொடர்ந்து பங்கெடுத்துப் பாருங்கள்.பிறகே உங்களுக்கே தெரியும் எல்லாம்.

Monday, November 30, 2009

மையல்

சமையல் இந்த வார்த்தையை இந்தக் கட்டுரைக்குத் தோதாக என் வசதிக்கு பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முயற்சித்ததில் ;

சமையல்= ச+மையல் - என்று ஆனது .

ச என்ற ஒற்றை எழுத்துக்கு "சகி" என்றி நாமாக அர்த்தப் படுத்திக் கொள்வோம்

மையல் -இதற்க்கு பொருள் தெரியாதோர் தமிழ் கூறும் நல்லுலகில் எவரேனும் உண்டோ ?

இப்போது பாருங்கள் சமையல் என்ற சொல்லுக்கு "சகியின் மீது மையல்" என்று அழகான பொருளை நாமாகக் கற்பனை செய்து கொள்ளலாம் தானே.

சகி யார் "சகித்துக் கொள்பவர்களை சகிஎன்று விளிக்கலாம் ,சகி என்ற சொல்லுக்கு "மனைவி" என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம் ,பிரிய சகி- பிரியமான மனைவி .

சரி இனி சமையலுக்கு வருவோம் ...

சகியான மனைவியின் மீது அன்பான பண்பான கணவருக்கு (நோட் திஸ் பாயிண்ட் )மையலை ஏற்படுத்தும் வண்ணம் உதவும் ஒரு காரியம் சமையல் என்று பொருள் படுத்திக் கொள்ளலாம் இல்லையா?

சமையல் அருமையாக அமைந்து விட்டால் அந்தத் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகளின் வீரியம் பெருமளவு குறையக் கூடும். கூடவே "சமைத்த கைக்கு தங்கக் காப்பு" எனும் வார்த்தை ஜாலம் மூலம் மையலின் சதவிகிதமும் கூடும் .ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் தாம்பத்யம் சிறக்க "மையல்" எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் சமையலும் தான்.

கற்பனை வளம் குறைஞ்சு காணாம போயிடக் கூடாதில்லையா ?!

அதான் அப்பப்போ இப்படி ஏதாச்சும் எழுதிப் போட்டுடறது .

Thursday, November 26, 2009

பாப்பு செய்த மணிமாலை



பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .

நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.

தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )
மாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு (கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில் கிடைக்கும்)

நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும்

இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :

மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2
கேங்கிங் கூக் - 2

இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .

இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.

எனக்கும் ஐயோ டி.வி எந்நேரமும் பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .

Saturday, November 21, 2009

சரோஜினி டீச்சரின் விரல் காலண்டர்

அஷ்வியின் கணவர் இந்த மாத டூர் ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருந்தவர் தன் போக்கில் கேட்டார். இந்த மாசம் முப்பது நாளா ...முப்பத்தியொரு நாளா? காலண்டர் பார்த்து சொல்லேன். அஷ்வி எழுந்து போய் காலண்டர் எல்லாம் பார்க்கவில்லை கை மடக்கி விரல் முட்டிகளை எண்ணிப் பார்த்து விட்டு சொன்னாள் .

முப்பது நாள்

ஹே ...என்ன நீ கலண்டர் பார்க்காமயே சொல்ற...தப்பா சொல்லிடப் போற...நான் தப்பா ரிப்போர்ட் அனுப்பிறப் போறேன்..என் செல்லுல காலண்டர் இருக்கும் பார்த்து சொல்லேன்.

இல்லங்க சரியாத் தான் இருக்கும் ...தப்பாக வாய்ப்பே இல்லை.

இங்க பாருங்களேன் ...இப்படி கையை மடக்கிகிட்டு பார்த்தா விரல் முட்டி தெரியுதா? சுட்டு விரல் முட்டியில இருந்து கவுண்டிங் ஸ்டார்ட் பண்ணலாம் ...ஜனவரி ..பிப்ரவரி...மார்ச்...ஏப்ரல்...

மேடெல்லாம் முப்பத்தியொரு நாட்கள் ...

பள்ளமெல்லாம் முப்பது நாட்கள்...

மூணாம் கிளாஸ்ல "சரோஜினி " டீச்சர் சொல்லிக் கொடுத்தது .அவ்ளோ சீக்கிரம் மறக்குமா என்ன?

கொஞ்சமே கொஞ்சம் ஆச்சரியமாய் பார்த்து விட்டு ... ஹே எனக்கும் தான் சொல்லிக் கொடுத்தாங்க ..சட்டுன்னு மறந்திட்டேன் பார்...அஷ்வியின் கணவர் வேக வேகமாய்ச் சொல்ல ...

ஆமாமாம் ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லிக் கொடுத்திருப்பாங்க ...சொல்லி விட்டு அவள் சிரிக்க ...ஆமாமில்ல என்று கூடச் சிரித்தாலும் ... தலை வலிக்குது ரிப்போர்ட் எழுதி போய் ஸ்ட்ராங்கா ஒரு காபி எடுத்துட்டு வாயேன் என்றார் .

ஹூம் ...அப்பாவானாலும் ...கணவரானாலும் ஆண்கள் ...ஆண்கள் தான்...தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் அஷ்வி !!!

Friday, November 20, 2009

வாங்க...வாங்க சைக்கிள் விடலாம்.

இப்படி யோசித்து பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது ...கூடவே சுவாரஸ்யமும் கூட...அப்புறம் ஒரு சின்ன திருப்தி கூட உண்டு .

வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்,எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது ,பாட்டி அதை அமைதியாக சின்னச் சிரிப்புடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.

அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளப் போவதைப் போல நிற்பதாக கற்பனை செய்யலாம் தான்...ஏன் பாட்டிகள் சும்மா...அட சும்மா விளையாட்டுக்கு கால் பந்து விளையாடக் கூடாதென்று ஒன்றும் சட்டமில்லையே!!!

நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் ...ஏதோ ஒரு கணத்தில் அத்தையோ ...அம்மாவோ முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடி பேச அமர்ந்தால் அதை நம்மால் ரசிக்க முடியாமலா போய் விடும்?!

பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஒட்டு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா ...அதை ரசிப்பதோடு கூட ஆடும் பாட்டி.

மழை வந்ததும் ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள் ...அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள் .

வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் அதை வலிந்து மறந்து விட்டு செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு ஏதோ ஒரு நாளேனும் விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்...மாமாக்களும் ...

கண்ணா மூச்சோ ...கொலை கொலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள் ஒரே ஒரு நாள் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு ...பிரியம் சமைக்கிற கூடு.

வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.

நம்புங்கள் ...

நம்பலாம் .

சில திரைப்பட உதாரணங்கள் :

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் குடும்பத்தோடு எல்லோரும் கொலை கொலையாம் (குலை குலையாம்..)முந்திரிக்காய் விளையாட்டை ஒரு பாடலில் ஆடுவதைப் போல காட்சி இருக்கும்.

மீரா ஜாஸ்மின் தோன்றும் ஒரு டீ விளம்பரத்தில் தாத்தா எம்.ஜி.ஆர் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்.

ரெயின் டான்ஸ் பல படங்களில் குழந்தைகளோடு பெரியவர்களும் ஆடுவதைப் போல பல படங்களிலும் பார்க்கிறோம் தானே?!(ரிதம்...)

எல்லாவற்றையும் விட எனக்கு மிகப் பிடித்த விஷயம் ஒன்றே ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.

வேகம் கூட...கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது.அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.

வீட்டில் நீளமான பலகை ஊஞ்சல் வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள் ... டென்சன் குறையும்.

அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம் ...அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்...சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ நிரடல் இல்லா தார்ச் சாலை ,எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்...எல்லாம் கிடைத்தால் எண்பது (80)வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் தான்!!!

இன்னும் நிறைய சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை தான்.

இப்போதைக்கு இது போதும்.

அடிக்கடி ...எந்நேரமும் ...அட...சதா எல்லா நேரமும் இல்லா விட்டாலும் கூட எப்போதேனும் ஒரு நாள்..ஒரே ஒரு நாள் மட்டுமேனும் வயதை மறக்கலாம் தவறில்லை.

Thursday, November 19, 2009

நிசப்தம் ...(வெறுமே ஒரு கற்பனை வரையறை)



தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் லயமில்லா லயத்துடன் லஜ்ஜையின்றி ஒரு பறவையின் அலட்டல் அல்லாத வெது வெதுப்பான மிதமான சிறகசைப்பின் லாவகம் தப்பாமல் பறப்பதே தெரியாமல் பறப்பதைப் போல ரசிப்பில்லா ரசனையுடன் ஆளற்ற குளக்கரையின் அசட்டையான படித்துறையின் அசைந்தும் அசையா ஆலமரத்துக் கிளை நுனியின் கட்டக் கடைசி நிழல் தொட்டும் தொடாமல் உச்சந்தலையில் பட்டும் படாமல் அசைந்தும் அசையாமல் தொட்டுத் தடவ தலைக்கு மேலே மேகங்கள் மிதப்பதே அறியாமல் மிதந்து கடக்க அறிந்தும் அறியா பாவனையற்ற பார்வையுடன் ................


இது வெறுமே ஒரு கற்பனை வரையறையே ...நிசப்தம் இந்த சொல்லை எப்படி வரையறுக்க இயலும் ?!,அது புரிதல் சார்ந்ததே.எனக்குத் தோன்றியதை வெறுமே பதியத் தோன்றியது .

அவியல் செய்முறை




தேவையான பொருட்கள் :

அவரைக்காய்- நூறு கிராம்
கத்தரிக்காய் -நூறு கிராம்
பீன்ஸ் -நூறு கிராம்
சேப்பங்கிழங்கு -நூறு கிராம்
உருளைக் கிழங்கு - ஒன்று
முருங்கை காய் -ஒன்று
வாழைக்காய் -ஒன்று
புடலங்காய் - நூறு கிராம்
தேங்காய்- அரை மூடி
கெட்டித் தயிர் -ஒரு கப்
பச்சை மிளகாய் - பத்து
சீரகம்- இரண்டு டீ ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
தேங்காய் எண்ணெய் - கால் கப்

அவிக்க :

முதலில் சொல்லப் பட்ட காய்கறிகளையும்,கிழங்கு வகைகளையும் அளவில் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ,பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தேவையான உப்பு சேர்த்து காய்கள் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும் .வேக வைக்கப் பட்ட காய்கறிகளை எடுத்து அதிலிருக்கும் நீரை வடிகட்டி பிரிக்கவும்.

அரைக்க :

அரை மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கி அதனோடு இரண்டு டீ ஸ்பூன் சீரகம் பத்துப் பச்சை மிளகாய்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்து ஒரு கப் கெட்டித் தயிரில் கலந்து வைத்துக் கொள்ளவும் .

அவியல்:

அரைத்து எடுத்த தேங்காய் தயிர் கலவையில் முன்பே வேக வைத்து எடுத்துக் கொண்ட காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறுதியாக தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு கைப்பிடி கருவேப்பிலையும் தூவி கிளறி விட்டு இறக்கிப் பரிமாறலாம் .இதற்க்கு தாளிதம் அவசியமில்லை.

அடைக்கு மிகப் பிரமாதமான சைடு டிஷ் அவியல் தான்,முன்பே அடை பதிவு போடும்போதே அவியல் செய்முறையும் போட்டிருக்கலாம்,ஆனால் அப்போது அவியல் செய்து பார்த்திராத காரணத்தால் எழுதவில்லை. அருமையான காலை டிபனுக்கு அடை அட்டகாசமாய்
பொருந்தும்,நிறையகாய்கறிகளும் பருப்புகளும் கலப்பதால் நல்ல சத்து மிக்க உணவும் கூட.

குறிப்பு :-

இன்னும் நிறைய காய்கள் சேர்த்துச் செய்ய விரும்பினால் அப்படியும் சேர்க்கலாம். என்னென்ன காய்கள் சேர்க்க வேண்டும் என்பது சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

நன்றிகள்:

அவியலுக்கான பொருத்தமான படத்தை கூகிளில் தேடியதில் இந்தப் படம் நன்றாக இருந்தது, படம் உதவிக்கு நன்றி mykitchenpitch

Tuesday, November 3, 2009

இலந்தைப் பழமும் இன்ன பிறவும்...

ஜல்லிக் கட்டு,ஒற்றை மாட்டு ரேக்ளா வண்டி,ரெட்டை மாடு பூட்டிய வில் வண்டி,வாய்க்கூடு கட்டிய குதிரை வண்டிகள்,சிவகாசி..சாத்தூர்ப் பக்கம் பனை ஓலைப் பெட்டியில் வைத்துக் கட்டித் தரப் படும் காராச் சேவு... வெல்ல முட்டாசு வகையறா (இதை மிட்டாய் என்றும் சொல்கிறார்கள் ) ,இதை எல்லாம் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறோம் என்ற உணர்வு வந்ததும் சுதாரிக்க வேண்டியிருக்கிறது .

ஆமாம் வயதாகிறது தானே...நமக்கு முன்னே சில பழகிய பொருட்கள் காட்சியில் இருந்து மறைகின்றன என்றால் காலம் நம் கண்முன்னே மருட்டிக் கொண்டு நகர்கிறது என்று தானே அர்த்தம்!!!அப்போதிருந்த சில பல ...இப்போதில்லை ...காலம் மாறிப் போச்சு ...வசதிகளும் கூடிப் போச்சு ஆனாலும் அந்தக் காலம் அது ஒரு சுகம் தான்.இப்படி பழசில் உருகுதல் சரியோ தவறோ மலரும் நினைவுகள் ருசிக்கவே செய்கின்றன.

முன்பெல்லாம் வெள்ளியில்,எவர்சில்வரில், ஈயத்தில் அழகழகான பால் ஊட்டும் சங்குகள் வீட்டுக்கு வீடு இருக்கும். இப்போதெல்லாம் பாட்டில்கள் மட்டுமே,பயணத்திற்கு பாட்டில்கள் வசதி என்றாலும் கூட சங்குக் கின்ணிகள் அழகானவை. அவற்றை எல்லாம் சேகரித்து வைத்தால் இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பழம் பொருட்கள் என்று கண்காட்சியில் வைக்கலாம்.

முன்பெல்லாம் வீட்டு நிலைப்படிக்கு அருகில் தரையில் கோலிக்குண்டோ ,கிளிஞ்சலோ,அல்லது வெண் சங்கோ எதோ ஒன்றை மேலோட்டமாக புதைத்து அதன் மீது அழுத்தமாக சிமென்ட் பூசி இருப்பார்கள் ,வீட்டுக்குள் நுழைந்தவுடன் குழந்தைகள் அதைக் கவனிக்கத் தவற மாட்டார்கள் .அதற்கான காரணம் புரியாவிட்டாலும் பார்த்ததில் மனதில் பதிந்ததில் இதுவும் ஒன்று ,இப்போதெல்லாம் இப்படி யார் வீட்டிலும் நிலை படிக்கு அருகில் புதைப்பதில்லை போலும்.

அடர் நீல நிறப் பூக்கள் அச்சிடப் பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள் ...என் தம்பி குழந்தையாய் இருக்கையில் வாங்கியது இப்போது அப்படிப் பட்ட வடிவங்களில் வண்ணத்தில் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் கிடைப்பதில்லை ,இன்னும் கூட ஞாபகத்திற்காக பரணில் கிடக்கிறது ஒன்றிரண்டு .

இலந்தைப் பழம் ...இப்போது எந்தக் குழந்தைக்காவது இப்படி ஒரு பழம் இருப்பது தெரியுமோ என்னவோ?கொடிக்காய் இதெல்லாம் வெறும் தின்பண்டங்கள் மட்டும் தானா என்ன? பால்யத்தில் தின்பண்டங்களோடு சட்டென நினைவில் நெருடக் கூடியவர்கள் அப்போதைய நண்பர்களும் அல்லவோ?!

கொய்யாப் பழமும் ,மாங்காய்ப் பத்தையும் இப்போதும் இருக்கின்றன ஆனாலும் இப்போதைய குழந்தைகள் குர் குரேவுக்கும் ...லேய்சுக்கும்...மில்க்கி பார்களுக்கும்,கிட் கேட்டுக்கும் தானே ஏங்குகின்றன.

பாண்டி ஆட்டம் எல்லாம் பரணுக்குப் போய் விட்டது ,பல்லாங்குழிகள் புதைந்து போய் விட்டன,தாயக் கட்டைகள் திசை மாறி விழுந்ததில் வீடியோ கேம்கள் இடத்தை நிரப்பிக் கொண்டு எழ மாட்டாமல் அடம் பிடிக்கின்றன. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...ஆனால் எனக்கே சோர்வாகத் தான் இருக்கிறது இப்படி அடுக்கிக் கொண்டே போக.

எல்லாம் மாறினாலும் இது ஒன்று மட்டும் மாறப் போவதில்லை.இன்னும் முப்பது வருடங்களுக்குப் பின் என் மகளோ மகனோ என்னைப் போலவே இப்படி சலித்துக் கொள்ளலாம் அப்போதைய புதிய மாற்றங்களைக் கண்டு .அது மட்டும் மாறப் போவதில்லை.

Monday, November 2, 2009

ராசி இல்லாத வீடு



ராசி இல்லாத வீடு

மூடநம்பிக்கை ...மூடநம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது?வெறும் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கையில் சேர்த்தி இல்லையா ?இன்னும் சிலர் செய்வினை என்கிறார்கள் ...செயப்பாட்டு வினை தான் தெரியும் என்று அதை புறம் தள்ளவே பெரும் தைரியம் வேண்டும் போலிருக்கிறது,இதில் எங்கிருந்து அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று ஒதுக்கித் தள்ள !!!

மனித இனம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதெல்லாம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கக் கூடும் போல?! வேறு வேறு ரூபங்களிலும் நம்பிக்கைகளிலும்,இதில் வாஸ்து வேறு சேர்ந்து கொள்ள அதற்கென்று கருத்து யுத்தம் நடத்தி பார்க்கும் வரை நாம் முன்னேறி இருக்கிறோம் ,சிலர் வலுக்கட்டாயாமாகவேனும் சில மூட நம்பிக்கைகளை அறவே ஒதுக்கித் தள்ளத் தான் பார்க்கிறார்கள் ,அவர்களின் பிரயத்தனம் விழலுக்கு இறைத்த நீராய் வீட்டிலுள்ள மனைவி மக்கள் மற்றுமுள்ள இன்னோரன்ன சொந்த பந்தங்களால் மீறப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது .

கடந்த மாதம் நண்பர் ஒருவர் புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்தார். கிட்டத் தட்ட நாற்ப்பது லகரத்தை தொடக் கூடிய அளவில் நவீன வசதிகள் கொண்ட பிளாட் இரண்டே இரண்டு சயன அறைகள் ,சின்னதாக அடக்கமான சமையலறை ,கொஞ்சம் பரவாயில்லை எனும்படியான அளவில் இரண்டு குளியல் அறைகள்,படுக்கை அறையை விட கொஞ்சமே கொஞ்சம் பெரிய அளவில் ஒரு ஹால் ,இவ்வளவு தான்.சின்னதோ பெரியதோ சென்னையில் சொந்த வீடு என்பது சாமான்யர்களுக்கு சாமான்ய காரியமில்லையே!!! அப்படிப் பார்த்தால் நண்பர் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம்.

இங்கே நாம் குறித்துக் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் இது தான் .அதிர்ஷ்டம் என்று சொல்லிக் கொள்வதும் மூடநம்பிக்கையில் சேர்த்தியா இல்லையா? இது மட்டுமில்லை.

ஒரு வீட்டில் குடி இருக்கிறோம் விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏதேனும் அந்த வீட்டில் குடி இருக்கையில் நிகழ்ந்தால் அது மனிதச் செயல் அல்லவென்றே நம்பத் தொடங்குகிறோம்.வீடு ராசி இல்லை ...வாஸ்து சரி இல்லை.இதெல்லாம் தான் காரணம் என்று சொல்லிக் கொள்கிறோம். அப்படியா ?அது நிஜம் தானா?

வாய் பேசாப் பொருள் ...ஜடப் பொருள் சொல்லப் போனால் வீட்டைக் குறித்து நாம் தான் நமது ஞாபகங்களை வளர்த்துக் கொண்டு என் வீடு ...என் தோட்டம்...என் சமையல் அறை,என் படுக்கை அறை என்றெல்லாம் பேசிப் பகிர்கிரோமே அன்றி வீடு எப்போதேனும் பேசி இருக்கக் கூடுமோ !!! என்னுள் குடி இருக்கும் மனிதர்களை எனக்குப் பிடித்தம் இல்லை ,இதோ இன்று அவர்கள் பயணம் செய்கையில் வண்டியில் இருந்து அவர்களைப் பிடித்து கீழே தள்ளி விடப் போகிறேன், அதில் தப்பி விட்டானா சரி அடுத்த இலக்கு அவர்களது மகனோ மகளோ பள்ளி இறுதி தேர்வு எழுதப் போகிறார்களா நல்ல சான்ஸ் அவர்களை என் ராசியைக் கொண்டு ஃபெயில் ஆக்குகிறேன் பார் என்று வீடு சங்கல்பம் ஏதும் செய்து கொள்ளக் கூடுமா??! இந்த ராசி சென்டிமென்ட் மனிதர்களின் பிரத்யேகக் கண்டுபிடிப்பேயன்றி வீடென்ன செய்யக் கூடும்?!புரியத் தான் இல்லை .

செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் கண்ணேறு (திருஷ்டி) கழிக்கிறோம் என்று எதையாவது செய்கிறோம் ,அமாவாசை ...பௌர்ணமிகளில் பூசணிக்காய் உடைகிறது எல்லாக் கடை வாசல்களிலும்...அகஸ்மாத்தாக கவனிக்காமல் யாரேனும் அதன் மேல் தங்கள் இருசக்கர வாகனங்களை ஏற்றித் தொலைத்தால் அவர்களது மண்டைகளும் தான் உடைகிறது சில அமாவாசை பௌர்ணமிகளில்,இதற்கென்ன சொல்ல?ஒருவருக்கு நல்லதை தரும் எனும் நம்பிக்கையில் செய்யப் படும் சடங்கு சம்பிரதாயங்கள் அடுத்தவருக்கு கெடுதல் இழைப்பதில் முடிகிறது.

ஒரு மாமி தன் பெண்ணின் திருமணத்தை முன்னிட்டு தன் வீட்டை ஒட்டி இருந்த அவரது காலி மனையை விற்று விட்டார் ,அதை விலைக்கு வாங்கியவர் அங்கே அடுக்கு மாடி வீடு கட்டி வாடகைக்கு விட்டு நல்ல வருமானம் பார்க்க ஆரம்பித்தார்,மாமிக்கு ஏற்ப்பட்ட மன வருத்தத்தை சொல்லி மாளாது,இதற்குள் எந்த கடமைக்காக மனையை விற்றாரோ அந்தப் பெண்ணும் கணவன் சரியில்லை என்று வாழவெட்டியாக பிறந்தகம் வந்து விடவே மாமியின் வயிற்றெரிச்சலை சொல்லில் விளக்கி விட இயலாது .

தன் கண்முன்னே தனது காலி மனை அடுக்குமாடி வீடாக மாறி அங்கே கலகலவென்று மனிதர்கள் புழங்குவதைக் கண்டு மாமி புழுங்கித் தவித்தார் ...ஐயோ இடம் போச்சே ...போச்சே என்று , மாமி இப்படிப் புலம்புபதைக் காதால் கேட்ட சிலர் தங்களுக்குத் தெரிந்த கதைகளை இட்டுக் கட்ட சமயம் பார்த்தனர்.

காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்த கதை போல அடுக்கு மாடி வீட்டில் குடி இருந்த ஒரு குடித்தனக்காரருக்கு எதிர் பாராமல் தொழிலில் நஷ்டம் வர அவர் தொழிலை ஏறக் கட்டி விட்டு விற்றது போக மிச்சம் மீதி இருந்த பணத்தில் எளிமையாக ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு வாடகை வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்.

அடுத்து அந்த வீட்டுக்கு குடி வந்த மற்றொரு குடும்பத்தில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் எண்பது வயதிலும் ஆரோக்கியமாக இருந்தவர் இந்த வீட்டுக்கு வந்ததும் சில மாதங்களில் உடல் நலக் குறைவால் இறந்தார். இதையும் முன்னதையும் சம்பந்தப் படுத்தி பேச நல்ல சந்தர்பம் அமையவே பேசும் நாக்குகள் வேலையை ஆரம்பித்தன.

வீடு ராசி இல்லாத வீடு

மாமி வயித்தெரிச்சல் தான் அங்க குடி இருக்கறவங்களை இந்தப் பாடு படுத்துது .

வேற வீடே இல்லையா என்ன?

இந்த வீட்டுக்கு போய் குடி போகனுமா?

அதென்னவோ முந்தியெல்லாம் காட இருந்த இடம் தானே இதெல்லாம் அங்க காத்து கருப்பு நடமாட்டம் இருந்துச்சோ என்னவோ ?இல்லனா குடி இருக்கறவங்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்தக் கூடுமா? என்னவோ இருக்கு அந்த இடத்துல?!!!!

அந்த இடத்தை வித்து தான் மாமி தம் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சா...என்ன ஆச்சு சுவத்துல அடிச்சா பந்தாட்டம் மறு மாசமே பொண்ணு திரும்பி வந்துட்டா...என்னமோ இருக்குடீ அங்க..அம்புட்டு தான் ...கதை முடிஞ்சது .

வீடு ராசி இல்லாத வீடு .

இதில் குறிப்பிடத் தகுந்த சங்கதி ஒன்றை கட்டாயம் சொல்லித் தான் ஆகா வேண்டும் ,மனையை விற்ற மாமிக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை ,நல்ல விலைக்கு தான் விற்று பனம் வாங்கிக் கொண்டார்.விலைக்கு வாங்கியவருக்கும் நஷ்டமே இல்லை கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு நல்ல லாபம் பார்க்கிறார் அவரும். குடி இருப்பவர்களை மாட்டும் வீட்டு ராசி பாடாய்ப் படுத்துகிறதாம். என்னய்யா கொடுமை இதென்றால்?

கொடுத்தவங்களும் வாங்கினவங்களும் அந்த இடத்துல குடி இருக்கலை இல்ல ? அந்த இடத்தை அனுபவிக்கிறவங்களுக்குத் தானே அதோட பலன் .அப்படிப் பார்த்தா குடி இருக்கிறவங்களைத் தானேப்பா பாதிக்கும்!!!

இதைப் படிப்பவர்கள் யாரேனும்

இப்போதேனும் சொல்லுங்கள் மூடநம்பிக்கை...மூட நம்பிக்கை என்கிறோமே அதன் எல்லை தான் எது ?!!!
நோட்: -
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது அதற்கும் இந்தக் கட்டுரைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை .

Sunday, November 1, 2009

கணவர்களின் வாயை அடைப்பது எப்படி?!

யாரோ சொன்னார்கள் கணவனது வயிற்றின் வழியாக அவனது மனதைச் சென்றடையலாம் என்று,சில நாட்கள் இந்த வரிகளுக்கான அர்த்தம் அத்தனை தெளிவாகப் புரிந்திருக்கவில்லை,ஒரு வார்த்தையின் அர்தத்தம் புரிதல் என்பது வெறுமே அதற்கான பொருளை அறிதல் அல்லவே, உணரப் படல் என்பது தானே சரியாக இருக்கும் .

அப்படித் தான் அஷ்விதாவுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருடங்கள் கழிந்த பின் தான் மேற்சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியதாம்,எப்படித் தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி கதை தான் .

அஷ்விதாவுக்கும் அவளது கணவருக்கும் தலைவலி காய்ச்சல் போல எல்லாம் அல்ல நேர நேரத்துக்குப் பசி எப்படி வருமோ அதே போல வாக்கு வாதமும் அவ்வப்போது வந்து வந்து போகும்...வரும் ...அப்புறம் போகும் !!!

அஷ்வியின் கணவர் எத்தனை நல்லவராய் இருந்தும் ஒரு மனஸ்தாபம் அல்லது சண்டை என்று வந்து விட்டால் பேசி பேசியே கொன்று விடுவாராம் மனிதர்.அவர் வாயை அடைக்க வேறெந்த யுக்தியும் இன்றி அஷ்வி ரொம்பவே இன்னல் பட்டிருக்கக் கூடுமோ என்னவோ?!

எல்லாம் கொஞ்ச நேர மனஸ்தாபம் தான்...காலையில் பணிக்குக் கிளம்பும் போது ஆரம்பிக்கும் வாக்குவாதம் சாப்பாட்டுத் தட்டுக்குப் பக்கத்தில் வந்ததும் சட்டென முறியும் ,மதியம் மறுபடி வரும்...வராமலும் போகலாம் அது வேறு விஷயம்;

அப்போதெல்லாம் அவள் கண்களை குளமாக்கி கன்னங்களை வாய்க்காலாக்கிக் கொண்டு அழுகையில் கரைவதை அவர்களது மூன்று வயது குட்டி சுட்டிப் பெண் சம்யூ (சம்யுக்தா) பார்த்துக் கொண்டே இருந்திருக்கக் கூடும் போல!?

காலங்கள் உருண்டன அஷ்வி எதையும் உணர்ந்தாலோ இல்லையோ ?

சம்யூ எதையோ உணர்ந்திருக்கக் கூடும் போல?!

சம்யூவுக்கும் ஐந்து வயது ...

வழக்கம் போல அம்மாவும் அப்பாவும் எதற்கோ கத்திப் பேசிக் கொண்டு வாக்குவாதம் பண்ணிக் கொண்டு இருக்கையில் மெல்ல அம்மாவின் கையைப் பற்றி இழுத்து அவளைக் குனிய வைத்து காதருகே கிசு கிசுப்பாய் ரகஷியம் போல ஒரு விஷயம் சொல்லி விட்டு வெளியில் விளையாட ஓடி விட்டாள்.

இந்தியா ...பாகிஸ்தான் யுத்தம் போல வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்த சண்டையின் நடுவே அஷ்வி பக்கென்று சிரித்து விட அவளது கணவரும் இதென்னடா ..பைத்தியம் என்பது போல அவளைப் பார்க்க ,

அஷ்வி தீபாவளிக்கு செய்து வைத்திருந்த ரவா லட்டு ஒன்றை எடுத்து வந்து அவளது கணவரின் வாய்க்குள் திணித்தாள்.

கடு கடுப்பாய் மேலே எதோ பேச வந்த கணவனும் வாய்க்குள் இருந்த லட்டின் சுவையால் உடனே பேச வழியின்றி அதை துப்பவும் மனமின்றி அதை ரசித்து உண்பதில் முனைய அஷ்விக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது .

"சம்யூ சொன்னா சாமி சொன்ன மாதிரி " எப்போதோ ஒரு ஜோசியக் காரன் ஜாதகம் பார்க்கப் போன போது கொளுத்திப் போட்ட புகழ் வார்த்தை ஒன்றை அஷ்வியின் கணவர் அடிக்கடி சொல்வாராம் ...பெண்ணின் மேல் தகப்பனுக்கு அத்தனைப் பிரியம் போலும்!

அதுவே தான் நடந்ததாம் ...

சம்யூ என்ன சொல்லியிருப்பாளாய் இருக்கும்.

"அப்பா வாயை அடைக்கனும்னா ரவா லட்டு எடுத்து வாய்க்குள்ள திணிச்சுடும்மா " அப்புறம் பேச முடியாது பார்...

குழந்தை உணர்ந்து சொன்னாலோ விளையாட்டாய் சொன்னாலோ எது எப்படியோ மனைவியின் சுவை மிகுந்த கை மணம் சண்டை சச்சரவுகளின் போது மனைவிக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பதில் ஐயமில்லை .

இப்போது புரிகிறதல்லவா பதிவின் முதல் வரியில் சொல்லப் பட்ட வாக்கியத்தின் அர்த்தம்?!

சுபம்

அடைதோசை



அடைதோசை :


தேவையான பொருட்கள் :
அரிசி - ஒரு கப்
கடலைப் பருப்பு -அரை கப்

பாசி பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10 உரித்தது

தக்காளி - ஒன்று (பெரியது)

காய்ந்த மிளகாய் வற்றல் - 5 அல்லது ஆறு

சீரகம் - ஒரு டீ ஸ்பூன்

கருவேப்பிலை &கொத்து மல்லித் தளை - கைப்பிடி அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசி மற்றும் தேவையான பருப்பு வகைகளை மேற்சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும் , இட்லிக்கு அரைப்பதைப் போலவே ஆனால் கொஞ்சம் கரகரப்பாக அரைத்து கடைசியாக வெங்காயம் ,தக்காளி (பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ),காய்ந்த மிளகாய்,சீரகம் போன்ற பொருட்களையும் சேர்த்து அரைத்த பின் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து பிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்பு எடுத்து அடையாக ஊற்றி சாப்பிடலாம் ,அடைக்கு சாதா தோசையைக் காட்டிலும் தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அதிகம் விட்டு திருப்பிப் போட்டு வேக வைத்தால் சுவை அருமையாக இருக்கும் .

அடைக்கு அவியல் பிரமாதமான சைடு டிஷ் ,அதைத் தவிர்த்து அவசரத்திற்கு காரச் சட்னியோ அல்லது தேங்காய் சட்னியோ கூட செய்து சாப்பிடலாம் நன்றாகவே இருக்கும். காலை டிஃபனுக்கு அருமையான உணவு .

அடை பதிவுக்குத் தோதான படம் கூகுளில் தேடியதில் கிடைத்தது ,
நன்றி கதம்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்

Friday, October 23, 2009

மௌனமே சௌக்கியமா ?!

நம் படுக்கை அறை தலையணைகளின்

உறைகளை மீறி

வெடித்து விடுவன போல

திமிறிக் கொண்டிருந்த

மௌனக் கரைசல்கள்

சிந்தாமல் சிதறாமல்

மெல்லக் கசிந்து மெத்தை நனைத்தன

அதை நாம்

அறிந்தும் அறியுமுன்னே

மெத்தையும் திணறித் திமிறவே

பிறிதொரு நாளில்

சமையல் உள்ளுக்குள் கசிந்தோடிப் பரவிய

மௌனச் சாம்பார்

அக்கணமே எங்கும் நீக்கமற நிறைந்து

தளும்பிச் சிலும்ப ;

எப்போது கதவிடுக்கில்

கசியத் தொடங்குமோவென

சொல்லொணாத் தயக்கத்தில்

நானும் நீயும்

முகம் பார்த்துக் கொண்ட தருணத்திலா

அன்றியும்

என் அம்மா முதல் முறை

கதவைத் தட்டிய தருணத்திலா

எத்தருணத்தில்

கரைந்து காணாமல் போனதந்த

பெரு மௌனம் !!!

எப்படியோ ...

கசிவு நின்றதில்

இருவருக்கும் சௌக்கியமே ...!?

Wednesday, September 16, 2009

கண்ணில் மழை...சூன்யம்...குருவியாய்ப் பிற...லயிப்பு(கவிதைகள்)


1
தங்கக் கடுக்கனும்
தவிட்டு நிற
முண்டா பனியனும்
மஞ்சள் பையும்
மட்டுறுத்தப் படாத கோவணமுமாய்
வாழ்ந்து முடிந்து விட்ட தாத்தாவுக்கு
பாடையில் வைத்துக் கட்டப் பட்டது
வெறும் வாக்கிங் ஸ்டிக் மட்டுமே !!!
பாட்டிக்கும் வருத்தமோ
என்னைப் போலவே!
சாம்பல் ஆற்றிய பொழுதில்
விரல்களில் இடறிய
பித்தளைப் பூண் பார்த்து
கண்ணில் மழை !

2

சாங்கோ பாங்கமாய்
பூரண விளக்கமாய்
சட்டி உடைப்பதாய்
சுட்டிக் காட்டி
விளக்கப் படவேயில்லையோ
எங்கேயும்... எப்போதும் ...
தாம்பத்யம் ?!
யாகாவராயினும் நா காக்க
காவாக்கால்
குடும்பநல கோர்ட்டில்
சொல்லிழுக்குப் பட்டு
சொந்த செலவில் சூனியம் தேடுக ...

3

சிட்டுக் குருவியின்
முறி சிறகேறி
பட்டுத் தலையில்
மெல்லக் குட்டி
விட்டு விடுதலை ஆவதெப்படி?
விளக்கம் கேட்டால்
விருட்டென்று பறந்தது
எம்பி எழுந்து ;
உதறி விழுந்தேன்
உதிர் மணல் போலே ...
உதற முடியுமோ ?
குருவியல்லால் ...
குருவியாய்ப் பிற!

4

நேற்றும்
இன்றும்
நாளையுமான
யோசனைகளைப்
பிய்த்துப் போட்டு விட்டு
கொஞ்சம் இளைப்பாறவே
அண்ணாந்து பார்க்கிறேன்
ஆகாய விமானத்தை ...
என்னை மறந்த நான்
லயித்தல் சுகம் .

Saturday, September 12, 2009

சோத்துக் கடையும் மீனும் ...

வனாந்திரம் ...

நீள் வனாந்தரம்
மரகதக் குன்றுகள்
மாணிக்கச் சூரியன்
துருப்பிடித்த இரும்பு போல
செப்பனிடா பழுப்பில்
கரடு முரடு தடித்தண்டில்
அடிவான மஞ்சளை
உரசித் தேய்க்கும் ஆவலுடன்
தகிக்கும் தங்கம் போல்
உரையாடும் மென்இலைகள் ...
அரவமாய் சல சலக்கும்
நிறமற்ற நீரோடை ...
வெள்ளியாய் கிள்ளிப் போட்ட
கண்ணாடி அப்பளமாய்
வானூரும் தண்ணிலா ...
கர்ஜிக்கும் சிங்கங்கள்
கண்களால் மினுக்கும் புலிகள்
நீருருஞ்சும் யானைகள்...
தாழப் பறக்கும் புள்ளினங்கள் ...
தாழை மொட்டவிழ
கம கமக்கும் வனம்.
வனம் ... நீள் வனம் ... வனாந்திரம்
அழகே...!
வனம்
அழகே ..!
கொள்ளை அழகின் கோடி அழகு !!!

Tuesday, September 8, 2009

விஷாகாவின் டயரி...( 2 )

விஷாகாவுக்கு ஸ்கூலுக்கு நேரமாகியிருந்தது ...


மாமா காலையில் எப்போதுமே எல்லோருக்கும் முன்னதாக சீக்கிரமே கிளம்பி விடுவார் ...மிச்சமிருப்பவர்களும் சென்றாயிற்று ...இனி அவள் கிளம்ப வேண்டியது தான் பாக்கி .கிச்சனுக்குள் நுழைந்து சாப்பிட என்ன இருக்கிறது என்று ஒவ்வொரு பாத்திரமாகத் திறந்து பார்த்தாள்...பெரிதாக அவளுக்கென்று பிரியாணியும் ...கோழி வறுவலுமா இருந்து விடப் போகிறது ?! சோறும் தயிரும் அங்கே எப்போதும் இருக்கும் விஷாகாவுக்கென்றே...போனால் போகிறதென்று மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு ...மதியம் டப்பாவில் கட்டிக் கொண்டதற்கும் போக மிஞ்சினால் எதோ கொஞ்சம் காயோ ..கூட்டோ இருக்கும்...இன்றைக்கு வாணலியில் ஓரமாக ஒட்டிக் கொண்டு கொஞ்சமே கொஞ்சம் கத்தரிக்காய் பொரியல் இருந்தது.


என்ன தான் அத்தையையும் அத்தை மகள்களையும் பற்றி தெரிந்திருந்தாலும் கூட விஷாகாவும் சின்னப் பெண் தானே! பாவம் அந்தக் கத்தரிக்காய் பொரியலைக் கண்டதும் அவளுக்கும் மனம் சிறிதே சமாதானமானது. எப்போதும் தயிருக்கு ஊறுகாயே சாஸ்வதம் என்று மனதை பழக்கி வைத்திருந்தாலும் நாக்கு நல்ல ருசிக்காக ஏங்குவதை யாரால் தடுக்க முடியும்?! அவளும் மனுசி தானே ?!


இப்படியெல்லாம் நீள நீளமாக யோசிக்கவே விஷாகாவுக்கு நேரமில்லை பாருங்கள் .மட மடவென்று குளித்தாள் ...நீல நிற யூனிபார்ம் சுரிதாரை எடுத்து மாட்டினாள்...பர பரவென்று சீவி ரெண்டு புறம் தலையை பின்னலிட்டு கருப்பு ரிப்பனால் தூக்கிக் கட்டினாள் ...நின்று நிதானமாகப் பார்த்து சிங்காரிக்கவெல்லாம் நேரமே இல்லை ...பாண்ட்ஸ் பவுடரை உள்ளங்கையில் தட்டி முகத்தில் பூசினதாய் பேர் செய்து குளியலறைக் கதவின் மறுபுறம் ஏற்கனவே ஒட்டி வைத்திருந்த ப்ழைய வட்ட வடிவ கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை எடுத்து குத்து மதிப்பாக புருவ மத்தியில் ஒட்டிக் கொண்டு ...நிமிர்ந்து மணி பார்த்தால் முட்கள் 8.25 காட்டின. 8.45 க்கு வகுப்பறையில் இருந்தே ஆக வேண்டும்.

இருபதே நிமிடங்கள் தான் இருந்தன ...பள்ளி வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமாவது இருக்கும் ..எவ்வளவு வேகு வேகென்று நடந்தாலும் கூட எப்படியும் தாமதமாகி விடும் அபாயம் வேறு! அறை கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளியை வைத்துக் கொண்டு ராதா சைக்கிள் லில் தான் பள்ளிக்குப் போகிறாள் தினமும் ...இவளையும் உடன் அழைத்துச் செல்லலாம் தான்...சென்றும் இருக்கிறாள் முன்பெல்லாம். அந்த முன்பு முடிந்து போய் முழுதாய் இரண்டு வருடங்கள் ஆகின்றன .

விஷாகாவுக்கு அழுகை வரவில்லை.

கவனத்தை கலைத்துக் கொண்டு பாட்டி ஊருக்கு வந்த சமயம் வாங்கிக் கொடுத்திருந்த சாண்டக்ஸ் செருப்பில் கால்களை நுழைத்துக் கொண்டு விருட்டென்று வெளியேறி கதவை இழுத்துப் பூட்டினாள்...நல்ல வேலை தேர்வு நேரங்களில் ஷூ அணிவதில் இருந்து விலக்கு இருந்தது அவளது பள்ளியில் .சாவியை மீட்டர் பாக்ஸில் வைத்து மூடி விட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

பத்து மணிக்கு மேல் மாமா வீட்டுக்கு வருவார்...அவருக்காகத் தான் சாவி மீட்டர் பாக்ஸில்.

முகமெல்லாம் நச நசவென்று ஈரமாகி காதோரம் வியர்வை கோடாக கழுத்தில் இறங்கி வழிய விஷி பள்ளி கேட்டுக்குள் நுழையும் போது... முதல் மணி அடித்துக் கொண்டிருந்தது ...இரண்டாம் மணி அடிப்பதற்குள் மாடியில் நான்காவதாக இருந்த தனது வகுப்பறைக்குள் தப தப வென்று ஓடிப் போய் தன்னிடத்தில் அவள் உட்காரவும் இரண்டாம் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

முதல் வகுப்பு இன்று கணக்கு தான். கீதா மிஸ் மணி அடித்த உடனே கதவுக்கு வெளியே வே இத்தனை நேரம் காத்திருந்ததைப் போலத்தான் விசுக்கென்று உள்ளே வருவார். நல்ல மிஸ் ?!!??விஷி கணக்குப் போட்டு முடிக்கும் வேகத்தைப் பார்த்து அவளை அநேக நேரம் மெச்சிக் கொண்டதுண்டு .

தொடரும்...

Monday, September 7, 2009

விஷாகாவின் டயரி ...

ஹே விச்சு எங்கடி போன ?

எவ்ளோ நேரம் கத்திட்டே இருக்கேன்...வந்து இந்த டவல் எடுத்துக் குடுத்துட்டுப் போய் தொலையேன் .

பாத்ரூமில் இருந்து அம்பிகா அக்கா கத்துவது விஷாகாவின் காதில் விழுந்தும் அவள் சட்டை செய்தாளில்லை ;நிதானமாக நடந்து போய் டவல் எடுத்து கதவருகே நீட்டினாள் .

ஈரக் கைகளால் வெற்று வெளியில் துளாவிக் கொண்டிருந்த அம்பிகா "எருமை மாடே ஏன் இவ்ளோ மெத்தனம் உனக்கு? கருவிக் கொண்டு வெடுக்கென்று டவலைப் பிடுங்கிக் கொண்டு கதவைப் படீரென்று அடித்து சாத்தினாள் .

சமையல் உள்ளில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த பார்வதி விஷாகாவின் அத்தை
ஏண்டி விஷி ...ஒரு வேலையும் பண்ணாம நீட்டி நெளிச்சிக்கிட்டுத் திரியற காலமே உங்க மாமா இஸ்திரிக் காரன் கிட்ட துணி கொண்டு போய் போடச் சொன்னாரே ? ...போட்டியா? இல்லியா? எப்போ பார்த்தாலும் மச மசன்னு நில்லு சுவத்த வெறிச்சிக்கிட்டு .என் தலையெழுத்துடி உன்னக் கட்டிட்டு மாரடிக்கணும்னு அலுப்புடன் துருவி முடித்த தேங்காய் சிரட்டையை ச்சட்டீர் என்று குப்பைத் தொட்டியில் விசிறி அடித்தாள்.

விஷாகா அசரவில்லை. காதில் எதுவும் விழுந்தார் போலவே காட்டிக் கொண்டாள் இல்லை ;

பார்வதியின் இளைய மகள் ராதா அம்பிகாவின் தங்கை ...எதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள்...விஷாகாவைக் கண்ணில் கண்டதும்..

ஏய் விச்சு என் சைக்கிள் எடுத்து ஓட்டினியாடி நீ ? வீல் எல்லாம் ஒரே சேறு ...உங்க தாத்தாவா வண்டியக் கழுவித் தருவாரு? மரியாதையா இப்ப என் சைக்கிள் கழுவித் துடைச்சிட்டு அப்புறம் நீ ஸ்கூலுக்கு கிளம்பு .பத்ரகாளி மாதிரி சிடு சிடுத்து விட்டு மீண்டும் பாடம் படிப்பவளைப் போல டெஸ்க்கில் குனிந்து கொண்டாள்.

எதற்கும் வாய் திறக்காத விஷாகா பேசாமல் தனது புத்தகப் பை இருந்த அறைக்கு நடந்தாள் ...

அவளது முதுகுக்குப் பின்னே ...

சரியான அழுத்தம்டி இது ...பாரேன் இத்தனை கரிக்கறோம் ...ஏதானும் வாயத் தொறக்குறதா பார்?!

அறைக்குள் விஷாகா;

சோசியல் ஸ்டடிஸ் புத்தகத்தை அடுத்து கணக்குப் புத்தகத்துக்கும் இங்கிலீஷ் புத்தகத்துக்கும் இடையில் கருநீல நிறத்தில் மெத்து மெத்தென்ற முகப்பு அட்டைகளுடன் நீட்டிக் கொண்டிருந்த தனது டயரியை எடுத்து நடுப்பக்கம் பிரித்து சொருகி வைத்திருந்த ஒரு போட்டோவை எடுத்துக் கொஞ்ச நேரம் வெறித்து விட்டு மறுபடி மூடி பைக்குள் தள்ளினாள் .அவள் கண்ணில் நிறைந்து தழும்பியது நிச்சயம் கண்ணீர் இல்லை .தாங்கவொண்ணா கடுங்கோபம் .

மென்று விழுங்குவதைப் போல ஒரு சொம்பு நீர் மொண்டு தொண்டைக்கு குழிக்குள் விட்டு அந்த கோபத்தைக் கதறக் கதற சாகடித்தாள் ,இப்போது கண்ணில் அந்தப் பழைய கோபத்தைக் காணோம் ,முந்தைய வெறுமை எஞ்சி நின்றது.

அறையை விட்டு வெளியே வந்தவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசினாள் இல்லை ..அங்கிருப்பவர்களும் அவளை பார்வையால் சதா ஆராய்ந்தார்களே தவிர ;என்ன வேண்டும் என்றும் கேட்கவில்லை..சாப்பிட்டாயா ...சாப்பிடுகிறாயா என்றும் ஒப்புக்கு கூட சொன்னார்கள் இல்லை.

அத்தை பார்வதி இடைநிலைப் பள்ளி ஆசிரியை ...அவளது பள்ளி நேரத்துக்கு சரியாக அவள் வெளிக் கிளம்பிப் போனாள் ,அவளுக்குப் பின்னே அம்பிகா பல்கலைக் கழகத்துக்கும் ,ராதா கல்லூரிக்கும் ஒவ்வொருவராய் கிளம்பி இடத்தைக் காலி செய்தனர்.

விஷாகா மட்டும் தனியானாள் அங்கே.

அவளும் தான் பள்ளிக்குப் போக வேண்டும்

பிளஸ் டூ ...மாதாந்திரத் தேர்வு நேரம் வேறு...

வீட்டில் வேலைகள் என்று அதிகப் படியாய் செய்ய நிறைய இருந்தன தான் ..ஆனால் அதில் பட்டுக் கொள்ள அவளுக்கு இப்போதெல்லாம் விருப்பமே இல்லை.
மாமா வீடென்று அவள் இங்கே தங்கிக் கொள்ள வந்து ஆறேழு மாதங்கள் கடந்து விட்டிருந்தன,

பாட்டியும் தாத்தாவும் ஊரில் விவசாயம் பார்க்கின்றனர். அங்கிருக்கும் பள்ளி இவளை ஆங்கில அறிவாளியாக்காது என்று நம்பி இங்கே அனுப்பி விட்டு அவர்கள் நிம்மதியாகி விட்டனர் அப்போதே.

அவர்கள் பாவம் வயதானவர்கள் ..

அவர்களைப் பற்றி விஷாகாவுக்கு எந்த கோப நினைவுகளும் அற்றுப் போய் நாட்கள் பல கடந்து விட்டிருந்தன. அவர்கள் மட்டும் அல்ல ..யாரைப் பற்றிய நினைவுகளும் இன்றி அவள் ஏதோ தனியானா கூட்டுக்குள் அடைபட்டுப் போனதைப் போலத் தான் சில மாதங்களாக உணர ஆரம்பித்திருந்தாள் .

விஷாகாவின் அம்மாவும் ..அப்பாவும் எங்கே ...?!

கேட்கத் தோன்றுமே ?!

நாளை அவளே சொல்லக் கூடும்.

Sunday, September 6, 2009

கேளுங்கள் இதொன்றும் ரகசியமல்ல ;

அசைவுகளற்றதொரு
சமாதானத்தின்
எருமைச் சோம்பல்
முறியும் போதில்
முளையிடும் சன்னக் கோபத்தில்
கடுகி மறையும்
முந்தைய சகிப்பு
பின்னும் ஒரு கோபப் பரவெளி
முன்னும்
பின்னும்
அசைதலைப் போலவே அலைதல்
கோபங்களால் நிரப்பப் பட்ட
எனது காபிக் கோப்பை
சிதறியதும்
பீங்கான் ஆனது ;
கேளுங்கள் இதொன்றும் ரகசியமல்ல !

Sunday, August 30, 2009

ரெட்டை வால் ரெங்குடு vs பாப்பு

சென்ற வார விகடனில் ஒரு கார்டூன்" ரெட்டை வால் ரெங்குடு " என்ற தலைப்பில் ;ரெங்குடுவுக்கு லீவ் முடிந்து ஸ்கூல் திறப்பதற்கு முதல் நாளாம் ,அவனது அப்பாவும் அம்மாவும் முகமெல்லாம் கொள்ளை மகிழ்ச்சி பூத்துக் கொண்டாட தட்டாமாலை சுற்றுகிறார்கள்.

(தட்டாமாலை என்பது "கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகா "பூவரசம் பூ பூத்தாச்சு ...பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு " என்று பாடிக் கொண்டே "கிறு..கிறு..கிறு " என்று பாவாடை குடையாக விரிந்து பறக்க குதூகலாமாய் சுற்றிக் கொண்டே ஆடுவாரே அது தான்,)
சுற்றி முடித்ததும் காதுக்குள் கொய்ங் என்று ரீங்காரம் எழலாம்.அதிகப் படியான சந்தோஷ உணர்வை வெளிப்படுத்த இப்படி ஒரு அருமையான விளையாட்டை அல்லது கொண்டாட்டத்தை யார் கண்டுபிடித்தார்களோ தெரியாது...ஆனால் அவர்கள் புண்ணியவான்கள்!!!

இனி கார்டூன் விசயத்துக்கு வருகிறேன் ,

தன் அருமை பிள்ளைக்கு பள்ளி திறந்தால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விடுதலை கிடைத்தது போல இத்தனை சந்தோசமா ? இப்படியா சிறுபிள்ளைகளைப் போல தட்டாமாலை சுற்றிக் கொண்டு ஆடுவார்கள்?

அதற்க்கு ரெங்குடுவின் கமென்ட் " எனக்கு நாளைக்கு ஸ்கூல் திறக்கப் போறாங்கன்னு நீங்க இன்னைக்கு இவ்ளோ கொண்டாடறது அவ்ளோ ஒன்னும் நல்லா இல்லை!!!???
இந்த பதிவை நான் இப்போது இந்நேரம் நான் வெளியிடக் காரணம் சென்ற வாரம் முழுக்க லேசான காய்ச்சல் காரணமாக விடுமுறையில் ஓய்வெடுத்த (!!!??? )பாப்பு;

இருங்க ...

பாப்பு asked ரெஸ்ட்டா அப்படின்னா என்ன?!) நான் சொன்ன பதில் "நல்லா தூங்கி எழுந்தா அது தான் ரெஸ்ட் கண்ணம்மா.

பாப்பு replied "தூங்கறதா தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை தூக்கம்...தூக்கம் ...தூக்கம் தான்"

"நான் தூங்காமலேயே ரெஸ்ட் எடுத்துக்கறேன் , ம்மா நீ என்னை தூங்கச் சொல்லி disturb பண்ணாம இருந்தாலே போதும் " பிராமிஸ் பண்ணு .

அம்மே பகவதி துர்கே இந்த ஒரு வாரம் முழுக்க சோதனை தான்

வீட்டை பெருக்கித் தள்ள தள்ள சுத்தமாக்கின சுவடே தெரியாம மறுபடி இறைபடும் காகிதக் குப்பைகள் (பாப்பு சியாமா ஆன்ட்டி கிட்ட சின்ன சின்ன கிராப்ட் கத்துக்கராங்கலாமாம் !!!)

பாத்ரூமில் டேப் மூட மறந்து விட்டேனோ என்னவோ என்று ஓடிப் போய் பார்த்தாள் "ஒரு சாக்சுக்கு ஒரு சோப்பு போதும் இல்லையாம்மா ..பத்தலைன்னா சோப்பு எங்க இருக்குன்னு சொல்லிட்டு நீ போய் ரெஸ்ட் எடு இனிமே என் டிரஸ் நான் தான் வாஷ் பண்ணுவேன்.(சொல்லி விட்டு என்ன ஒரு சாத்வீகப் புன்னகை அந்த குட்டிப் பூ முகத்தில் !?)

திடீர்னு ஒரு மத்தியான நேரம் பறக்கும் குதிரை செய்யனும்னு ஆசை படு தீவிரமாக கொழுந்து விட்டு எரிய ...மறுபடி பாட்டியோட வாயில் புடவையால் நடு ஹாலில் தொட்டில் கட்டினோம்

குதிரை செய்ய தொட்டில் எதுக்கு??

பாப்பு said அதான குதிரையோட உடம்பு ..உனக்கு ஒன்னும் தெரியலை நீ கம்முனு இரு .குதிரை செஞ்சப்புறம் உன்னைக் கூப்பிடுவேன் ...சும்மா...சும்மா question கேட்டுகிட்டு தொல்லை பண்ணாதம்மா .

என் சுடிதார் துப்பட்டாக்கள் இரண்டு தொட்டிலின் இரு முனைகளில் கட்டப் பட்டன ,அவற்றை புடவைக் கடைகளில் விரித்து விடுவதைப் போல விசிறியாக விரித்து விட்டு அடுத்த முனைகள் இரு பக்கமும் எதிர் எதிர் சுவர்களில் இருந்த கம்பிகளில் குதிரையின் றெக்கைகள் போல தோன்றும் படி மாட்டப் பட்டன.

விளையாட வைத்திருந்த மேஜிக் மாஸ்க் குதிரையின் முகமானது . முனைகளில் குஞ்சலங்கள் நிறைந்த இன்னொரு துப்பட்டா குதிரைக்கு வாலானது .
பாப்பு முருகன் மயிலில் உட்காரும் பாவனையில் தொட்டிலில் இரு புறமும் கால்களைப் போட்டு அமர பறக்கும் குதிரை ரெடி .

இது என்னோட செல்லக் குதிரை நீ அப்பால்லாம் இதுல ride பண்ணக் கூடாது ...பாவம் அதுக்கு முதுகு வலிக்கும் ...குட்டிப் பாப்பா குதிரை ,இது பாப்பாவுக்கு மட்டும் தான்.(ரொம்பத்தான் ஜாக்கிரதை உணர்வு?!)

மம்மி எப்போ பார்த்தாலும் ஒரே மாதிரியே ட்ரெஸ் பண்ற நீ ...ஒரே போரிங் !!!
நான் உனக்கு disigner skirt பண்ணித் தரேன் .

அன்றைக்கு வந்த எக்ஸ்பிரஸ் நடுப்பக்கத்தை உருவி ஸிஸரால் மடமடவென்று skirt வடிவத்தில் கத்தரித்து முழுதும் கம் தடவி வெள்ளி நிற ஜிகினாத் தூளை அதில் குத்து மதிப்பாகக் கொட்டி தடவி விட மேலே அவளுக்குப் பிடித்த குந்தன் கற்களை ஒட்டி முடித்து அதைக் காய வைக்கும் பொறுமை எல்லாம் இல்லை .

எவ்ளோ அழகா இருக்கு பார், இப்படி veriety யா ட்ரெஸ் பண்ணிக்கணும் மம்மி. என்று ஒரு வெற்றிச் சிரிப்பு .

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ...

என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் ...நான்?!

அதாகப்பட்டது என்னவெனில் ஒரு வாரம் லீவ் முடிந்து இன்றைக்கு தன் பாப்பு ஸ்கூல் போகிறாள்.

நாங்கள் ரெங்குடுவின் அப்பா அம்மாவைப் போல தட்டாமாலை எல்லாம் சுற்றவில்லை ...நம்புங்கள்.

Friday, August 28, 2009

பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் - ஒரு பார்வை

பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது,எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்...ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக விமர்சித்து படிப்பவர்களை குழப்புவது எந்த விதத்தில் நியாயமான செயலோ?

ராமன் கடவுள் அல்ல...ராமாயணம் கற்பனை,சொல்லப் போனால் ஆரியர்களின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு வடிகாலாய் தோற்றுவிக்கப் பட்ட புனைவு,சீதை பதி விரதா பத்தினி இல்லை...சரி இதெல்லாம் ஒரு சாராரின் ஆணித்தரமான கருத்து ...வாதம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்படி மேலோட்டமாகச் சொல்லி நம் மக்களை நம்பிக்கை மாற்றம் செய்ய முடியாது என்பதாலோ என்னவோ பெரியாரின் ஆதாரப் பூர்வமான எதிர் கருத்துக்கள் இப்புத்தகம் முழுதுமே கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன.

ஒரு விடயத்தைப் பற்றி நமது எதிர் கருத்தை தெரிவிப்பது என்பதற்கும்...திணிப்பது என்பதற்கும் நிச்சயம் நிறைய வேறுபாடுகள் உண்டு தானே?!எனக்கென்னவோ இப்புத்தகத்தில் பெரியாரின் எழுத்துக்களில் தெரியும் கடுமை திணித்தல் ரகமாகவே தோன்றுகிறது.

சமூகம் என்ற ஒரு கட்டமைப்பில் வாழும் போது சில நியாயமான பயங்களும் அவசியம் தான். அழுக்கை உருட்டி உருவம் செய்த பொம்மை தான் விநாயகர்...பிள்ளையார் என்றும் வாதிக்கிறார்கள். சரி ;ஓரினச் சேர்க்கை பற்றி வாதிக்கையில் அய்யப்பனை எள்ளுகிறார்கள் ...சரி இருக்கட்டும் .இந்துக் கடவுள்கள் கற்பனை உருவங்கள்...அதுவும் சரியே .

இவையெல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டுமே இவற்றால் பலரது மண்டைகள் உடையாமல் இருக்கும் வரை. இவற்றால் பலரது ரத்தம் தெறிக்காமல் இருக்கும் வரை...வெறும் கற்பனை உருவங்கள் ...ஆரியர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப் பட்ட மாயத் தோற்றங்கள் .எல்லாம் சரி தான். அப்படி இருக்கையில் வெறும் கற்பனைக்காக ஏன் மதம் சார்ந்த சண்டைகள் இட்டுக் கொள்ள வேண்டும்? வடை தானே முக்கியம் வடை சுற்றித் தரும் காகிதம் முக்கியமென்று ஏன் மோதிக் கொள்கிறார்கள்?

மதங்கள் வெறும் சட்டைகள் தான் என்று எங்கோ படித்தேன். சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம் ...அட துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு ...முடை நாற்றம் ...என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?

நான் இந்துக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்...முகமதியனாகப் பிறக்க வேண்டும்...கிருத்தவனாகப் பிறந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் யாரும் தீர்மானம் செய்து கொண்டு பிறத்தல் சாத்தியம் இல்லையே?!மதங்கள் மனங்களைப் பண்படுத்த அல்லவோ பிறப்பிக்கப் பட்டன.

ஆற்றில் சென்று கொண்டிருக்கிறோம் ...நீரின் துர்நாற்றம் சகிக்கவில்லை என்றால் ஆற்றை அல்லவா தூர்வார வேண்டும் ,நீரை அல்லவா சுத்தப் படுத்த வேண்டும். ஒட்டு மொத்தமாக ஆற்றை ஒதுக்கி வைக்க முடியுமா ? புழுக்கள் நெளியும் மெட்ரோ வாட்டர் அதை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கும் புண்ணியவான்கள் அல்லவா நாம்? சென்னையில் வாழ்ந்து கொண்டு மெட்ரோ வாட்டர் வேண்டவே வேண்டாம் என தைரியமாக வெறுக்க முடியுமா?

அப்படி இருக்கிறது சீதையை பஜாரி என சாடுவது. ராமனும் சீதையும் கடவுள்கள் அல்ல ...இது சரியான வாதம். ராமாயண காலம் பொய்யானது ...இது முற்றிலும் சரியே ,ஆதாரங்களும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.இதையும் ஏற்றுக் கொள்ளலாம். எல்லாம் சரி ஆனால் இப்படி ஆதாரப் பூர்வமாக சான்றுகள் கொடுத்து விளக்கிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று சடுதியில் பக்திமான்களின் மனதைப் புண்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கற்பனைக் கதைக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்து சேற்றை வாரி இறைக்க வேண்டுமா?

கதையை கதை என்று மட்டுமே வாசிக்கலாம் தானே? இதில் தவறேதும் உண்டோ?
நீ இறை பக்தியோடு இரு ,ராமனை வணங்கு ...சீதையை அன்னையாய் பாவித்தே தீர வேண்டும் இல்லையேல் உயிர் சேதம் எனும் கட்டாயம் இங்கே யாருக்கும் இல்லையே? பிறகேன் இத்தனை காட்டமான விமர்சனம்?! மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் குழப்பமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எந்த விதத்தில் சமுதாய நற்பணியாம் ?

நீ சாமி கும்பிடுவாயா? சரி செய்துகொள் அது உனது உரிமை...எனக்கதில் நம்பிக்கை இல்லை... இது எனது உரிமை. இப்படி முடிப்பது நல்லதா? இல்லை சான்றுகளுடன் விளக்குகிறேன் சகலமும் என சகதியில் காலை விட்டுக் கொண்டு சிரிப்பது நல்லதா?

"அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் "--------------------------

இந்தக் குறளை ஏனோ சொல்லத் தோன்றியது இப்போது !!!

அஞ்ச வேண்டிய விசயங்களுக்கு அஞ்சி அஞ்சத் தகாதவற்றுக்கு அஞ்சாது தெளிந்து குறைந்த பட்சம் பிறருக்கு நன்மை செய்யா விடினும் தீமையோ ..குழப்பமோ செய்வதில்லை எனத் தீர்மானித்து வாழ பல நல்ல கொள்கைகளையும் கொண்டது தான் இந்து மதம். இந்துக் கடவுள்களின் உருவத்துக்கும் அவற்றின் தோற்றத்தின் பின்னுள்ள புனைவுகளுக்கும் கூட சில நல்ல விளக்கங்கள் இருக்கலாம். வெறுமே வாதத்துக்காக நாம் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது.

சின்ன வயதில் என் தாத்தா சொன்ன விடயங்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.

1.பிள்ளையார் ஏன் இடுப்புல பாம்பு ஒட்டியாணம் போட்டு இருக்கார்?,
2. சிவன் ஏன் கழுத்துல பாம்பு நெக்லஸ் போட்டு இருக்கார் ?
3.எல்லா சாமிகளுக்கும் ஏன் நிறைய கைகள் இருக்கு...அவ்ளோ கை இருந்தா ரொம்ப பசிச்ச உடனே அத்தனை கைகளையும் சீக்ரமா எப்படி கழுவிகிட்டு சாப்பிட முடியும்? ரொம்ப லேட் ஆகாதா?
4.துர்கை ஏன் சிங்கத்துல உட்கார்ந்திருக்கா ?
5. காளி ஏன் இவ்ளோ அகோரமா பயமுறுத்தற மாதிரி இருக்கா?
6.பயமில்லாம கும்பிட எந்த சாமியும் இல்லையா நமக்கு ?!

இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் பல வாண்டுக் கேள்விகள் எழுந்ததுண்டு .
இதற்க்கெல்லாம் ;

அச்சச்சோ ...இப்படியெல்லாம் கேள்வி கேட்டா சாமி கண்ணைக் குத்திடும் " என்றெல்லாம் யாரும் எங்களை மூட நம்பிக்கையில் மூழ்கடிக்கவில்லை .

என்ன பதில் சொன்னார்கள் தாத்தாவும் பாட்டியும்???

நாளை சொல்கிறேன் .

சும்மா...சும்மா...சும்மா...!

ருக்கு,
ரங்கா,
கே.உஷா,
டி.உஷா,
நிஷா,
தீபு,
விக்கி,
ஸ்ரீதர்,
வி.விஜி,
எஸ்.விஜி,
ஜெகதீஷ்,
ரெங்கராஜ்,
சந்திரன்,
ராதா,
தாமரைக்கண்ணன்,
வேல்முருகன்,
மோகனவள்ளி,
ராம்,
கங்கா,
பாலாமணி,
தியாகு,
செந்தில்,
மீனாட்சி சுந்தரி,
அங்காளீஸ்வரி,
புஷ்பா,
கலைஸ்ரீ,
சுமதி,
சத்யப் பிரியா,
விஜயப்பிரியா,
சத்யபாமா,
சுப்புலட்சுமி,
ஜெயா,
ஜெயலட்சுமி,
சுமித்ரா,
நர்மதா,
சவிதா,
பெருமாள்,
பாலமுருகன்,
கமல்,
ராஜகோபால்,
மதன்கபில்தேவ்,
கொண்டல் சாம்ராட்,
கிருஷ்ணகுமார்,
சதீஷ்,
சக்தி வேல்,
மஞ்சுளா,
போதும் பொண்ணு,
போதுமணி,
மும்தாஜ்,
பானு,
ஹேமா,
சுபா,
சங்கரி,
பரிமளா,
ஏஞ்சல்,
ஜெயச்சந்திரன்,
வேல்முருகன்,
சியாம் சுந்தர்,
ஜெகன்,
பிரபு,
சித்ரா,
சுகீதா,
பிரியா,
நித்யா...........

அவ்ளோ தான் ...

இவங்க பேர் மட்டும் தாங்க இப்போதைக்கு ஞாபகம் இருக்கு .இவங்கலாம் யார்னு கேட்கத் தோனுமே?!

ஒன்னாங்க்ளாஸ்ல இருந்து என்கூடப் படிச்ச கூட்டாளிகள் ..சிநேகிதர்கள்,நண்பர்கள்...எல்லாம் ஒரே அர்த்தம் தானே!

ஆமாங்க அவ்ளோ தான்...அவ்வளவே தான் .

களிக்கூத்து


பட்சிகள் கரையா
பகலற்ற கருங்கானகம்

இரையும் பூச்சிகள்

இரையாக்கும் பாம்புகள்

மத்தியானத் தூக்கத்தில்

மடல் அவிழ்க்கும் தாழம்பூக்கள்

யாமத்தில் நாசி துளைக்கும்

நன்னாரி மரப்பட்டை

சில்லென்று ... மோருண்டு ...

சிலு சிலுக்கும் காற்றும் உண்டு ...

பக்கத்தில் பத்தினிப் பெண் ...!!!

யாரங்கே ... ?

உச்சி மரப்பேய்

தானாய் ஆடும் களிக்கூத்து

காளி கூளிக்கு கூறும் செய்தி

நம்மில் ஒருத்தி நாளை வருவாள்?!

Friday, August 21, 2009

காற்றைக் கடைந்து...கடைந்து பறப்போமா?

கைகளைத் துடுப்பாக்கி
காற்றைக் குடைந்து
சோம்பி மிதக்கும்
துகள்கள் மறுத்து
இன்னும் ...இன்னும்காற்றைக்
கடைந்து கடைந்து
வளி மண்டலம் துளைத்து
வலி மண்டலம் துடைத்து
விட்டு விடுதலையாகி
விதை வெடித்த பஞ்சு
பறப்பதைப் போல்
இலகுவாய்ப் பற
துக்கம் மறந்து போம்
துன்பம் பறந்து போம்
ஆதலின்
பற...
பற...பற...பற

Thursday, August 20, 2009

அழுத்தமான கோடுகள்

அழுத்தமாகப் போட்டுக் கொண்ட
சில கோடுகளை
அழிக்க முடிந்தும்
அழிக்க நினைத்தும்
அழியாமல் காத்துக் கொள்ளவே
அனுதினமும்
பிரம்மப் பிரயத்தனத்துடன்
கோட்டுக்குள்
தாண்டாமல் நிற்கும்
கால்களுடன்
நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
திமிர்ந்த ஞானச் செருக்கும்
கொண்டவளாய்
நிற்பவள்

.
.
.
.
.
பெண்

Wednesday, August 19, 2009

கருப்பு வெள்ளை தாண்டாத கனவுகள்

வர்ணங்களைக் குழைத்துக் குழைத்து
நாட்காட்டியில் தேய்த்து தேய்த்து
பரத்தி விட்ட பின்னும் கூட
அந்த நாளொன்றும்
வண்ணமயமாகி விடவில்லை ...
அன்று மட்டுமல்ல
என்றென்றும்
கருப்பு வெள்ளை தாண்டி
கனவுகளும் நுழைவதில்லை ...
பகலுக்கு ஒரு நிறம்
இருளுக்கு ஒரு நிறம்
வெயிலுக்கு ஒரு நிறம்
குளிருக்கு ஒரு நிறம்
தங்கத்துக்கு மஞ்சளும்
வெள்ளிக்கு வெள்ளையுமாய்
முலாம் பூசுவதைப் போல
பூசிப் பூசிப் பழகிய குணம்
வண்ணங்களற்ற வெற்று வெளியை
உதாசீனம் செய்வதில்
சிறிதொரு சமாதானம்
பிறிதொரு சாந்தம் ...
சமாதானக் குடுவையில்
பொங்கிச் சிந்திய வண்ணக் குழம்புகளில்
தேங்கித் தேடிய பின்
சொந்தக் கருத்தொன்று
சொடேர் என்று தலையில் குட்டிவிட்டு
சொத்தென்று விழுந்து காணாமல் போனது
வர்ணக் கலவைகளில் ...
நிறப்பிரிகைக்கு முன்னிருந்த
நிர்மல வண்ணமே நித்தியமோ ?!

Friday, August 7, 2009

வேம்பும்...கரும்பும் ...வெற்று வாழ்வும் சுற்றுப்புறமும்

வாழ்தலுக்கான
நியாயங்கள்
மழுங்கடிக்கப்பட்ட
அகண்டதோர் சமவெளியில்
மருந்தென்ற பெயரில்
ஊமைச்சமாதானமாய்
வெறும்
வேம்புகள் ;
கரும்பு வேண்டாம் ...
கற்கண்டும் வேண்டாம்
வேம்பின்
ருசியறியா
நாவின் நரம்புகள் தா ...
வேம்பைக் குறித்தெழும்
மறுப்புகள்
மறக்கப்படும் .