கல்யாணமாகி முதல் ரெண்டு வருஷம் அம்மா வீட்ல இருந்து மசாலப் பொடி வந்தது,அப்புறம் ஒரு வருஷம் மாமியார் அரைச்சுக் கொடுத்தாங்க ,அதுக்கப்புறம் அவங்களும் மறந்துட்டாங்க ,நானும் எனக்கு மசால் பொடி அரைச்சுத் தாங்கன்னு யாரையும் கேட்டுக்கல ,அதான் எல்லா ஸ்டோர்லயும் விதம் விதமா பாக்கெட் பாக்கெட்டா பல பிராண்ட்ல எல்லா மசாலப் பொடியும் கிடைக்குதேன்னு கடந்த ஆறு ஏழு வருஷமா டி.வி விளம்பரத்துல வர எல்லா மசால் பொடி வகையும் யூஸ் பண்ணிப் பார்த்தாச்சு.
சக்தி மசாலா ,ஆச்சி மசாலா,எம்.டி.ஆர்.மசாலா,எவரெஸ்ட் டீக்காலால் மசாலா ,ஆசிர்வாத் மசாலா ,அண்டக்காக்கா மசாலா ,உண்டக் கட்டி மசாலா etc ,etc ... எனக்குத் தெரிஞ்சு இவ்ளோ இன்னும் இதுக்கு மேல வேற என்னென்ன பிராண்ட் மசால் பொடி இருக்குமோ தெரியல .
இப்ப பிரச்சினை என்னன்னா இந்தக் மசால் பொடி பிராண்ட் எதுவுமே இப்ப கொஞ்ச நாளா வாய்ல வைக்க விளங்கல .அதுக்காக காரமும் மணமுமா ஒரு மசால் பொடி அமைய பதினஞ்சு வருஷம் முன்னால கண்ணன் தேவன் டீக்காக தூர்தர்ஷன் விளம்பரத்துல பி.டி.உஷா காடு,மேடு,மலைன்னு ஓடுவாங்களே அப்படியா ஓடிட்டு இருக்க முடியும்!இதெல்லாம் நம்மால ஆகற காரியமா?!
இருக்கவே இருக்கு அம்மாவும்,பாட்டியும் அரைச்சு பக்குவம் பண்ற ஹோம் மேட் மசாலாப் பொடி .பிராண்ட் நேம் இருந்தா தான் ஸ்டைலா இருக்கும்னா இந்தப் பொடிக்கு மதர்ஸ் மசாலா பொடின்னு பேர் வச்சுக்கலாம்.
மசாலாப் பொடி அரைக்க மிளகாய் வத்தல் ,மல்லி,சீரகம்னு அதுல என்னலாம் சேர்க்கரோமோ அதை செலவுன்னு சொல்வாங்க எங்க பாட்டி .செலவுன்னா இன்கிரடியன்ட்ஸ்.
தேவையான பொருட்கள் :
மிளகாய் வத்தல் - 3 /4 கிலோ
(குண்டு மிளகாய் அல்லது நீட்டு மிளகாய்)
மல்லி (தனியா) - 3 /4 கிலோ
சீரகம் - 1 /4 கிலோ
வெந்தயம் - 50 கிராம்
மிளகு -25 கிராம்
சோம்பு - 100 கிராம்
துவரம் பருப்பு,கடலைப் பருப்பு -தலா ஒரு கைப்பிடி அளவு
கடுகு -3 ஸ்பூன்
கச கசா -3 ஸ்பூன்
அரிசி - 50 கிராம்
கறிவேப்பிலை -7 ஆர்க்
கட்டிப் பெருங்காயம் -3 துண்டு (சின்னது)
செய்முறை:
மிளகாய் வத்தல் மற்றும் மல்லியை குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் வெயிலில் நொறுங்கக் காய வைத்து எடுத்துக் கொள்ளவும் ,மிளகாய் வத்தலைத் தவிர செலவுக்கென மேல குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் வெறும் வாணலியைக் காய வைத்து மிதமான சூட்டில் அந்தந்த பொருட்களின் மணம் வரும் வரை சிவக்க வறுத்து ஒன்றாகக் கொட்டிக் கலந்து கொள்ளவும்.கறி veppilaiyai முன்னதாகவே நிழலில் உலர்த்தி வாணலியில் க்ரிஸ்பியாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.கட்டிப் பெருங்காயம் எண்ணெயில் பொறித்துப் போட்டால் மசால் பொடி எட்டு ஊருக்கு மணம் வீசுமாம்.வெறுமே வறுத்தால் சில நேரங்களில் கட்டிப் பெருங்காயம் மெஷினில் அரைபடாமல் சோதிக்கும். கட்டிப் பெருங்காயமே வேண்டாமென்று நினைப்பவர்கள் தூள் பெருங்காயம் வாங்கி வைத்துக் கொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிஸ்கி :
மேல சொல்லப் பட்டுள்ள மசாலாப் பொருட்களின் அளவில் பொடி அரைத்து வைத்துக் கொண்டால் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து மாதங்களுக்கு வரும்.