Friday, January 7, 2011

கண்டமனூர் ஜமீனும் வேலப்பர் கோயிலும் (விசிட்)



நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சியில் பட்டுப் போன வருஷ நாட்டு ஜாமீன் அரண்மையை காட்டிக் கொண்டிருந்தார்கள். கண்டமனூர் ஜாமீன் தான் வருசநாட்டு ஜாமீன் என்று துலங்கியவர். ஜாமீன் ஆண்டி வேலப்பா நாயக்கர் தன ஆப்த நண்பன் பளியன் சித்தனை கொன்றதால் அவர் குடும்பத்தில் ஆண் வாரிசு பிறந்தால் தகப்பன் ஸ்தானம் அற்றுப் போகட்டும் என சாகும் போது சாபமிட்டு செத்துப் போகிறான் பளியன்.

பளியனின் சாபமோ ஜமீன்தாரின் தன பயமோ எப்படியோ அவருக்கு ஒரு மகன் அவரது மனைவியின் வயிற்றில் சூழ் கொண்ட போதே ஜமீந்தார் இறந்து போகிறார். இந்த ஜாமீன் வம்சத்து சாமித்துரை எனும் ஜாமீன்தார் என் அப்பாவின் தாத்தா காலத்தவர் என்று நினைக்கிறேன். எங்கள் ஊருக்கும் கண்டமனூருக்கும் நடுவில் வைகை ஆற்றுப் பாலம் உண்டு .இந்தப் பாலத்தை திறந்து வைக்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார் அப்போது. நிற்க .

இந்தப் பாலத்தின் அடியில் கடைசி ஜமீன்தாரின் கல்லறை ஒன்று உண்டு இப்போதும் கூட. சின்ன வயதில் நாங்கள் விளையாட்டாய் அங்கே நுழைந்து பார்த்திருக்கிறோம் ,அதென்னவோ கோயில் என்று நினைத்திருந்தோம் அப்போது.

எங்கள் ஊரின் வைகையாற்றின் கரையோரமாகவே நீள நடந்தால் அரண்மனைப் புத்தூருக்கும் வைகைக்கும் இடையே ஒரு இடிந்து போன மாளிகை எச்சங்களையும் மிச்சங்களையும் பார்க்கலாம் இப்போதும் .அது ஆண்டி வேலப்ப நாயக்கர் மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது பழக்கப் பட்டுப் போன அவரது தாசி ஜனகதிற்கென ஜமீன் கட்டிக் கொடுத்த மாளிகையாம் .ஜனகமும் ஜாமீனும் இந்த மாளிகையில் வாழ்ந்திருந்தார்கலாம்.இங்கே வைத்து தான் ஜனகம் சுட்டுக் கொல்லப் பட்டாளாம். சுட்டது ஜமீனின் முதல் மனைவி எரசக்க நாயக்கனூர் ஜமீனின் இளவரசியின் சகோதர முறை உறவினர் என்றும் சொல்வார்கள்,அதைக் குறித்து விரிவாகத் தெரியவில்லை.

ஜமீன் ஆண்டி வேலைப்ப நாயக்கர் காலத்தில் தான் மாவூத்து வேலப்பர் கோயில் புனரமைக்கப் பட்டதாம். இதற்கு மிகப் பெரும் காரணமாக இருந்தவன் பளியன்.அதெல்லாம் பளியன் சித்தன் ஆண்டி வேலப்ப நாயக்கரின் ஆப்த நண்பனாக இருந்த காலம்.அதற்கு பின் காலங்கள் மாறின சித்தன் எதிரியானான். கொலையும் செய்யப் பட்டான். என்பது ஜாமீன் கதை.


மாவூத்து வேலப்பர் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும் இங்கே .கோயிலுக்கு அடியில் உள்ள மலைபாறையின் ஊடே பல குகைகள் குடையப் பட்டுள்ளன,இங்கு தான் பளியர்கள் வாழ்ந்து வந்தார்களாம்.

மேலும் நேற்று டி.வி நிகழ்ச்சியில் கூட சொன்னார்கள் இந்த மலைக் குகைகளில் கற்காலத்தில் கூட மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளனவாம். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சூழ மெல்லிய சுனை நீர சப்தத்துடன் வேலப்பர்(முருகர்) கோயில் கொண்டுள்ளார் மலை மீது. கிழக்குச் சீமையிலே ,கும்மி பாட்டு போன்ற படங்களில் எல்லாம் இந்த வேலப்பர் கோயிலை காட்டுவார்கள். மிக அருமையான டூரிஸ்ட் ஸ்பாட். சுனையில் இருந்து கசியும் நீர் மலையிலிருந்து கீழாக வழிந்து ஓடையாக விரிந்து கீழே பரவுகின்றது. இந்த சிற்றாறு எங்கே போகிறதோ தெரியவில்லை.

விடுமுறை நாட்களில் சாப்பாடு கட்டிக் கொண்டு உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் கொண்டாடிக் கழிக்க உகந்த இடம் இந்த மலைக் கோயில்.ஆண்டிபட்டியில் இருந்து ஒரு மணி நேரப் பயணம் என்று நினைக்கிறேன்.

சுனைத் தண்ணீர் கிறிஸ்டல் கிளியர் தூய்மையில் தலை வழியே வழிந்தோட சுனை மடுவில் இறங்கி நின்று குளிப்பது சொர்கானுபவம்.தனியே நின்று குளிக்க இயலாது பாசி பிடித்துப் போன மடு காலை வாரி விடலாம். கூட்டமாக ஒருவரோடு ஒருவர் கைகளைப் பிணைத்துக் கொண்டு மடுவில் இறங்கி குளிக்கலாம்.

குளித்து மேலேறினால் பளீர் வெளியில் முகமும் உடலும் பிரகாசிக்கும் மலை வெயிலுக்கு தங்க நிறம் கொள்ளும் உடல்கள். பசி வயிற்றைக் கிள்ளும் .

ஹாட் பாகில் சூடான பதார்த்தங்கள் கொண்டு போய் விடுவது உத்தமம். குளித்து முடித்ததும் பசி அத்தியைப் பிடிக்க சாப்பாடு கொண்டா கொண்டா என உள்ளே போகும்.

மாலை மங்கும் முன்பு சாவதானமாக வீடு திரும்பலாம் .

மலையும்,மடுவும்,சுனைக் குளியலுமாக ,மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

சொல்ல மறந்தது ...

நேற்று மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அண்ணாமலை சீரியல் புகழ் சூதாடிச் சித்தன் கார்த்திகேயன் தான்.

அவரே ஒரு சித்தர் களையில் தான் இருந்தார் .மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றி