Monday, June 7, 2010

எக்ஸ்கியூஸ்மீ ...உங்களுக்கு சொந்த வீடா? வாடகை வீடாங்க!?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கென்று சட்ட உரிமைகள் எதுவும் இருக்கிறதா? எத்தனை அதிக வாடகை கொடுத்து ஒரு வீட்டில் குடி இருந்தாலும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ்வதைப் போலான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்த சட்ட உரிமைகள் தேவையா இல்லையா? 20௦ ௦ ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாடகை கொடுத்து குடியிருக்கும் நபருக்கே அந்த வீடு சொந்தம் என்ற சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா!

நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு தமது ஒட்டு மொத்த வாழ்நாளுக்கும் சேர்த்து தமக்கென்று ஒரே ஒரு சொந்த வீடு என்பது வாழ்நாள் லட்சியம் ...கனவு என்று சொல்லலாம்,அப்படி கட்டிய வீட்டை விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு மீண்டும் வாடகை வீட்டுக்கு குடியேறும் நிலை வந்தால் அந்த வாழ்வின் அர்த்தம் என்ன?!

வீட்டு உரிமையாளர்கள் ,வாடகைக்கு குடி இருப்பவர்கள் என்பதை தாண்டி இடைத்தரகர்கள் என்றொரு பிரிவு வாடகை வீடு தேடுபவர்களின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறதே,இதை எல்லாம் முறைப்படுத்த சட்ட ரீதியாக எதுவும் செய்ய இயலாதா? அகஸ்மாத்தாக மனிதத் தன்மையும் கொஞ்சம் நேர்மையும் கலந்த வீட்டு உரிமையாளர்கள் அல்லது சட்ட நிபுணர்கள் இதற்கு பதில் அளிக்க முயற்சிக்கலாம்.

800 சதுர அடி வீட்டுக்கு ஏழாயிரம் ரூபாய் வாடகை அட்வான்ஸ் வீட்டு உரிமையாளர்களின் நோக்கம் போல அவர்களது மனநிலைக்குத் தக்க தீர்மானிக்கப் படும் போல,முகப்பேரில் உறவினர் ஒருவர் வீடு தேடிக் கொண்டிருந்தார் நகர சந்தடி அற்ற புற நகரப்பகுதி வீடு ஒன்றிற்கே 900 சதுர அடி வீட்டுக்கு 8000 ரூ வாடகை 80 ,000 ரூ அட்வான்ஸ் கேட்கப் பட்டது ,இந்த அட்வான்ஸ் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை,ரொம்பத் தெரிந்தவர்கள் என்றால் தொகை குறையுமாம்,அறிமுகமற்றவர்கள் என்றால் 10 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாகத் தர வேண்டியதாய் இருக்கும்.வாடகைக்கு வீடு தேடும் பலரும் இந்த அட்வான்ஸ் தொகையையே பெர்சனல் லோனில் தான் வாங்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள்,ஆக மொத்தம் வீட்டு வாடகையோடு இந்த பெர்சனல் லோன் டியூவும் மாதாந்திர செலவில் சேர்ந்து கொள்ளும்,

இன்னொரு சகிக்க முடியாத கஷ்டம் ,இடைத் தரகர்கள் இல்லாமல் வீடு வாடகைக்குக் கிடைத்தால் சரி இல்லையேல் அவர்களுக்கு ஒரு மாத வாடகைத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும்.சரி இப்படி கமிஷன் அடிக்கிறார்களே அதில் ஒரு நேர்மை குறைந்த பட்ச நியாயம் இருக்குமா என்றால் அதுவும் இல்லை,வீட்டு உரிமையாளர் நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகையைக் காட்டிலும் இந்த இடைத் தரகர்கள் 500௦௦ அல்லது 1000 ரூ அதிகமாக சொல்லித் தான் வீட்டையே கண்ணில் காட்டுவார்கள்,


எங்களது காம்ப்ளக்சில் 400 சதுர அடிகள் கொண்ட சிங்கிள் பெட் ரூம் பிளாட் ஒன்று சென்ற மாதம் காலி ஆனது ,முன்பு இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு கொடுத்து வந்த வாடகை 3 ,500 ரூ ,வீட்டுக்கு வெள்ளை அடித்து புதுபித்து இருக்கும் அதன் உரிமையாளர் இப்போது அந்த வீட்டுக்கு நிர்ணயித்த வாடகைத் தொகை 4000 ரூ ஆனால் உரிமையாளர் இந்தப் பணியை ஒப்டைத்திருக்கும் இடைத்தரகர் அந்த வீட்டுக்கு நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகை 5000௦௦௦ ரூ

இது தவிர குடிநீருக்கு மாதம் 350 ரூபாய் ,கரண்ட் யூனிட் ஒன்றிற்கு வாடகைக்கு குடி இருப்பவர்கள் மாத்திரம் 4 .50 ரூ கொடுத்தாக வேண்டும்,இதில் வீட்டு உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டம் ,சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது யூனிட்டிற்கு 3 ரூ கீழ் வாங்குவதே இல்லை.இதற்கெல்லாம் கேள்விமுறைகளே இல்லை.அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் இல்லை.

இந்த இடைத் தரகர்களின் சாகசப் பேச்சு வலையில் சிக்காமல் ஒரு வீட்டுக்கு இத்தனை வாடகை தான் தகும் என நியாயமான வாடகைக்கு குடி போக மக்களுக்கு ஆலோசனை தரும் மையங்கள் எதுவும் தமிழகத்தில் இது வரை உருவானதுண்டா!?அரசு நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 .50௦ ரூ,அதை பொருட்படுத்தாமல் அல்லது அரசை மதிக்காமல் தான் யூனிடிற்கு 3 .50௦ ரூ அல்லது 4 .50௦ ரூ கூடுதல் தொகை வசூலிக்கப் படுகிறது எனும் போது இது தண்டனைக்குரிய குற்றம் ஆகாதா?அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? இதற்கெல்லாம் என்ன வரைமுறைகள்!

இந்தத் தொல்லைகளில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து போய் கட்டக் கடைசியாய் சொந்த வீடு இல்லை பிளாட் வாங்குவது என்று முடிவெடுத்தால் சிரமம் குறைந்து விடப் போவதில்லை ,அதிகக் குடியிருப்புகள் கொண்ட ப்ளாட்களில் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிச் செல்வோம் அங்கே மாதாந்திர மெயிண்டனன்ஸ் தொகை கண்டிப்பாக 1000 க்கு குறையாது,லோனில் வீடு வாங்கியிருந்தால அந்தத் தொகையோடு செலவுக் கணக்கில் இந்த மெயிண்டனன்ஸ் தொகையையும் சேர்த்து தான் கணக்கிட வேண்டியதாய் இருக்கும்.

ஆக மொத்தம் சொந்த வீடு என்று ஆகி விட்டால் செலவு குறையும் என்று ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடியாது.முன்பு வாடகை வீட்டில் முறைவாசல் செய்பவர்களுக்கும் துவைக்க பெருக்க வருகிறவர்களுக்கும் கொடுக்கும் தொகை போக இப்போது atm ,ஜிம்,பார்க்,மெடிக்கல் சாப் வசதிகள் என்று பிளாட்டில் அழ வேண்டியதாய் இருக்கும்.இத்தனைக்கும் கூரை நமக்கில்லை கீழே தரை தளமும் நமக்கில்லை,பாண்டி விளையாட்டில் கோடு கிழிப்பதைப் போல துண்டு துண்டாய் கோடு கிழித்து வைத்திருப்பார்கள் கார் பார்கிங் என்று அதற்கும் லட்சக் கணக்கில் அழுது விட்டு மூச்சுக் காட்டாமல் இருக்க வேண்டும்.அப்போது தான் நீங்கள் ஒரு தேர்ந்த சொந்த பிளாட்வாசி .


இதைக்காட்டிலும் சிரமம் ஒன்றுள்ளது,வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு இடையிலான நட்புறவு, நீ யாரோ நான் யாரோ என்பதெல்லாம் சாதாரணம், பழைய குடித்தனக் காரர்கள் புதிதாகக் குடி வருபவர்களை எதிரிகளைப் போல அல்லது நாங்கள் இங்கே பல வருடங்களாய் இருக்கிறோம் நீ முந்தா நாள் மழையில் நேற்று முளைத்த காளான் ரீதியில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர தொனியில் தான் கண்ணெடுத்துப் பார்க்கிறார்கள்,இவர்களுக்கிடையே நல்ல நட்பு நீடிக்க அல்லது முளைக்கத் தான் முடியுமா?

பழகும் முறை ரொம்பத் தான் பாழ்பட்டுக் கிடக்கிறது,எப்போதும் நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் ,ஜாக்கிரதை உணர்வு நொடிக்கொரு முறை மண்டையில் அலாரம் அடிக்குமோ என்னவோ! யாரும் யாரோடும் சுமுகமாய் பழகுவதே இல்லை,வெளிப் பகட்டுப் பேச்சுக்கள் எத்தனை நிமிடங்களுக்கு!

ஒரே மாதிரியான ஒரே அளவான வீடுகள் வீட்டு உரிமையாளரின் தனிப்பட்ட விருப்பங்களின் அல்லது மனநிலைக்கு ஏற்ப வெவ்வேறு தொகைகளில் வாடகைக்கு விடப் படுகிறது. சுமார் 600௦௦ சதுர அடிகள் கொண்ட நான்கு பிளாட் என்று வைத்துக் கொள்வோம்,ஒரே அளவான பிளாட் என்றால் எல்லாமே ஒரே வாடகைக்குத் தானே விடப் பட வேண்டும்,அப்படி இல்லை,முதல் வீடு 4000 ரூ,அடுத்த வீடு 4,500 ரூ அதற்கடுத்த வீடு 5000 ரூ ,இதற்கான கரண்ட் சார்ஜ் மற்றும் மெட்ரோ வாட்டர் மாதாந்திர தொகையிலும் நோக்கம் போல பாரபட்சம்,குடியிருக்கும் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஒற்றுமையோ நட்போ இருந்தால் இந்தக் குட்டு வெளிப்பட்டு என்றைக்கோ நீர்த்துப் போயிருக்கலாம்,இப்போது உண்மை தெரிந்தும் கேட்டுக் கொள்ள முடியாத மனக்குமைச்சல் ,நம்பிக்கையின்மை தான் மிஞ்சக்கூடும்.

இதை எல்லாம் தாண்டி வந்தாச்சா? உட்கார்ந்து மூச்சு வாங்கிகிட கூடாது, மாச செலவுன்னா அது ஹவுசிங் லோன் கட்றதும் வீட்டு வாடகை,தண்ணி பில்,கரண்ட் பில் கற்றதோட முடிஞ்சுடுத்தா என்ன? இல்லையே, நைட் தூங்கிட்டு இருக்கீங்க,உங்க குழந்தைக்கு படுத்திருக்கற பொசிசன் மாறினதுல எதோ ஒரு செகண்ட்ல திடீர்னு கழுத்து சுழுக்கிடுது இதென்ன கிராமமா சுழுக்கு எடுத்து விடறவங்களைத் தேட...இல்லனா வீட்டுக்கு வீடு பாட்டிகள் இருக்காங்களா என்ன? தனிக் குடும்ப அவஸ்தைகளை கேளுங்க, வேற வழியே இல்லை குழந்தை வலியில போடற கூப்பாடு பெத்தவங்க நம்மள டாக்டர் கிட்ட ஓட வைக்கும் ,டாக்டர் சும்மா தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார், கன்சல்டிங் fee 300௦௦ ரூ க்கு குறையா வாங்கினா அவர் திறமையான டாக்டர் இல்லையாம்!ஹாஸ்பிடலும் சும்மா சொல்லக் கூடாது இன்டீரியர் டெகரேசன் கூடக் குறைய ஸ்டார் ஹோட்டல் ரேஞ்க்கு மெயிண்டன் பண்ணிருப்பாங்க.அதுக்கெல்லாம் சேர்த்து தான் கன்சல்டிங் fee வாங்கறாங்களோ என்னவோ!மாசம் ஒரு தடவை யாருக்காக டாக்டரை பார்க்கப் போனாலும் சர் பர்ஸ் ஊசி குத்தின பலூன் தான்.

என்னத்தை சொல்ல இதோட நிறுத்திக்கிறேன்,

முடிவு பெறாத அல்லது ஒரு ஒழுங்கான வடிவமற்ற இந்தக் கட்டுரை போலவே தான் நான் மேலே சொன்ன விசயங்களும் எப்போதுமே வரையரைப் படுத்தப் படுவதே இல்லை எனும் தார்மீக வருத்தத்தோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.