Wednesday, September 29, 2010

The Journey ( பயணம் )



கமலா அடிக்கடி கண்ணாடி பார்த்து சலித்தவாறு இருந்தாள். சலிப்பென்றால் பெருங்கொண்ட சலிப்பு .


சற்றைக்கெல்லாம் ஆட்டோ வந்து விடும் ,அவள் புறப்பட்டாக வேண்டும். அக்கா காரோடு வந்து கொண்டிருப்பதாக அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.காரோ ..ஆட்டோவோ எதுவானாலும் அவள் சீக்கிரமே புறப்பட்டுத் தான் தீர வேண்டும் .

பெரியவன் தினா டியூசனுக்குப் போயிருந்தான் ,சின்னவனுக்கு இந்த தை வந்தால் மூன்று வயது முடிகிறது,எந்தப் பள்ளியில் சேர்ப்பதென்று நினைத்த மாத்திரத்தில் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது,ஆனால் பொங்கி வழியக் காணோம் ,

அம்மா ஆதூரமாய் நெருங்கி வந்து,

"கமலி சீலயச் சுத்திக்கிறியாம்மா ...நாழி ஆச்சு பாரு"

என்றாள் மிக மிக மிருதுவாய்,எங்கே கூடக் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் மகளுக்கு வலிக்குமோ என்று அஞ்சுவதைப் போல!என்ன வலித்து என்ன ?!

"சீலையெல்லாம் வேணாம்மா ...இந்த நைட்டி போறும். இடுப்புல நிக்கான்டாமா சீலை? நழுவிண்டே இருக்கச்சே என்னத்துக்கு சீலையச் சுத்திண்டு !"

கை நடுங்க மகளைப் பார்வையால் அணைத்துக் கொண்ட அந்தம்மாள் மனசும் நடுங்கிப் போனவளாய் எதுவும் சொல்லாமல் பேசாது அவளையே பார்த்தவாறு இருந்தாள்.

கமலியின் புடவைக் கட்டு வெகு நேர்த்தி,

அந்தத் தெரு மொத்தமும் இளம்பெண்கள் அவளிடம் வந்து புடவை கட்டிக் கொண்டு போனதுண்டு."கமலிக்கா மாதிரி எட்டு ப்ளீட்ஸ் வச்சு புடவை கட்டனும், விசிறி மாதிரி அழகா படிஞ்சு நிக்கணும் ப்ளீட்ஸ் தம்பி மனைவியின் தங்கை ஆசை ஆசையாய் புடவையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவாள் கமலியிடம்.

எந்நேரமும் வாகனம் வந்து விடும் அறிகுறிகள் இருந்தாலும் இன்னும் வரவில்லை தானே!

கமலி மீண்டும் சலித்துக் கொண்டு அந்த நீண்ட மரப்பீரோவில் பொருத்தப் பட்ட பெரிய பெல்ஜியம் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டாள், ஒரே நொடி தான் தனக்குத் தானே சகிக்க மாட்டாமல் முகம் சுளித்துக் கொண்டு ஒதுங்கி மெல்ல நடந்து தூங்கிக் கொண்டிருந்த சின்னவனின் அருகே வந்தாள்.

மூணே வயசு தானே! பிஞ்சு பிஞ்சாய் ரப்பர் பந்து போன்ற கைகளும் கால்களும் "அம்மா என்னைக் கொஞ்சேன்" என்று உயிரை வதைத்தன. அவனைத் தொட்டு தூக்கி அணைத்து முத்தமிடும் ஆசையை வெகு பிரயத்தனப் பட்டு அடக்கிக் கொண்டு ஏக்கத்தோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தாள்.

கனத்த சிப்பி இமைகளுக்குள் குண்டு விழிகள் உருண்டன,பிள்ளை எதோ கனவு காண்கிறானோ! எழுந்து விட்டால் வம்பு!

அம்மா இவன நீ நல்லா வளர்பியோன்னா ! ரொம்பச் சமத்தும்மா ! பெரியவனா அவன் அப்பா பாட்டி கிட்ட ஒப்படைச்சுடு ,இவன நீ தான் ...நீ தான் பார்த்துப்பியாம்.கொஞ்சம் பேசினாலே கமலிக்கு மயக்கம் வரும் போலிருந்தது .

அம்மா கலங்கிப் போனவளாய் அவசர அவசரமாய் சத்தியம் செய்பவளைப் போல

"சரிடிம்மா,சரிடிம்மா ,எம் பேரன நான் வளர்ப்பேன்டி ஒரு ராஜாவைப் போல நான் வளர்ப்பேன், நீ கலங்காதடி என் சித்திரமே!"

மனம் அது பாட்டுக்கு எங்கெங்கோ சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

போன் ஒலித்த சப்தம் கிணற்றுக்குள் இருந்து கேட்பதைப் போல கமலியின் காதுகளை உரசிச் சென்றது.அவள் அலட்டிக் கொள்ளாமல் எங்கோ பார்வையை நிலைக்க விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தாள்.

போனில் அழைத்தது கமலியின் கணவன் ராஜாராமன் தான், பாவம் கடந்த மூன்று மாதங்களாக நாய் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறான் .

என்ன பேசினானோ மாமி மருமகனிடம் "தினாவையும் அழைச்சுண்டு போயிடலாமே தம்பி,இவ அவனப் பார்க்காம தவிச்சிண்டில்ல இருக்கா" என்றாள் மெல்ல விசித்துக் கொண்டே.

போனை வைத்து விட்டு மகளிடம் வந்தவள்.

ஏண்டி குழந்தே ...சின்னவன எழுப்பித் தரட்டுமா ,செத்த நேரம் விளாட்டு காட்றையா?

அவள் எதோ சம்பிரதாயத்துக்கு தன்னை சமாதனப் படுத்தத் தான் கேட்கிறாள் என்பதைப் போல "வேண்டாம் என" மெல்லக் கையசைத்தாள் கமலி .

கமலி உங்காத்துக்காரர் எவ்ளோ டிப் டாப்பா இருக்கார் பாரேன்,

அன்றைய கமலிக்கு இந்த வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் அத்தனை பர பரப்பாயிருக்கும்.இப்போது நினைத்துப்பார்த்தால் "இருக்கட்டுமே...போ " என்பதான ஒரு அலட்சியம்!

கல்யாண அல்பத்தை திறந்து பார்த்து வருசத்திற்கு மேல் ஆகிறது.

அந்தக் கமலியா இந்தக் கமலி!


சின்னவனை கார்த்தால எழுப்பும் போதே கைல ஒரு முழு பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட் வைச்சிண்டு தான் எழுப்பனும்,இல்லேனா அழுது ஆகாத்தியம் பண்ணி ஊரைக் கூட்டுவான்.

தினாவுக்கு அடிக்கடி புழுத் தொல்லை வரும், சர்க்கரை டப்பாவ எடுத்து ஒளிச்சு வச்சிக்கணும். இனிப்புன்னா எறும்பா வாசம் பிடிச்சிண்டு அதி வேலையா தின்னு தீர்ப்பான். இந்த அம்மா தள்ளாத வயசுல என்னான்னு சமாளிப்பா!

ரெண்டையும் குளிக்கப் பண்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுமே !

அவருக்கு ஓட்ஸ் கஞ்சியும் ,ஹார்லிக்சும் மட்டும் தான் கார்த்தால. ஒரு பொம்மனாட்டி வந்து சிசுருஷை பண்ணித் தான் தீரணும்னு இல்லை,அவர் கைலன்னா இருக்கு எம் புள்ளைங்களோட எதிர் காலம்,இன்னொருத்தி வந்து தான் தீருவாளோ!நினைத்த மாத்திரத்தில் குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி எடுக்கும் உணர்வு தலை தூக்க தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள் கமலி.

"கமலிக்கா ஆத்துக்காரர் ஆள் ஜம்முன்னு இருக்கார்" பலர் பல நேரங்களில் காற்று வாக்கில் சொன்னதெல்லாம் இப்போது ஞாபகத்தில் உறுத்திக் கொண்டு பிராணனை வாங்குகிறதே!

பிராணன்...பிராணன் !


எளவெடுத்த பெருமாளே அந்தாளுக்கு ஏன் இம்புட்டு அழக கொடுத்த நீ ? சனிக் கிழமை தவறாது இவள் விரதம் காத்த பெருமாளின் மேல் ஆத்திரம் திரும்பியது .

அக்கா காரோடு வந்து விட்டிருந்தாள்.

கமலியால் எட்டெடுத்து வைக்க முடியவில்லை.

கணவன் ஒரு புறமும் அக்கா ஒரு புறமுமாய் தாங்கி அவளை நடத்திக் கொண்டு போனார்கள் காருக்கு.

அம்மா முந்தானையில் வாய் பொத்தி சத்தமடக்கி தீவிரமாய் அழ தொடங்கி இருந்தாள்.

மெல்ல மெல்லப் புலன்கள் அடங்குவதான உணர்வு .

சுறு சுறுப்பாய் விழிகளைக் கூட அசைக்க இயலா மந்த கதி.

காருக்குள் நுழையும் முன்பே இப்போது கேட்கா விட்டால் இனி எப்போது கேட்க என்று பரிதவிப்பவளைப் போல ,கணவனின் கன்னம் தொட்டு திருப்பி திணறலாய் "ஏன்னா ஏம் பிள்ளைங்கள நன்னா பார்த்துக்குவேளோன்னா , நான் இல்லேன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு போய்டுவேளா ?

கேட்ட மாத்திரத்தில் அவளது புறங்கையை கண்களுக்குள் அழுத்திக் கொண்டு ஹோவென கதறி விட்டான் ராஜாராமன் .

"அசடே..அசடே...ஏண்டி ..ஏண்டி இப்டி பேசி பிராணன வாங்கற ,உனக்கு ஒன்னும் இல்லடி. பார்த்துண்டே இரு ,நீயும் நானும் சேர்ந்து சுபிட்சமா இருப்போம்டி நூறாயுசுக்கு,ஒனக்கு ஒன்னும் இல்லடி,நீ திரும்பி வருவடி, நம்ம பிள்ளைங்கள நல்ல வளர்க்கத் தான் போறோம், அவன் அவளைக் கட்டிக் கொண்டு அழ !

சின்னவன் படுக்கையில் புரண்டான், அக்கா மெல்ல அதட்டினாள்.

கமலி உம் புள்ள முழிஞ்சிண்டா ஒன்ன விட மாட்டான்.

எம் பிள்ளைங்க ...ஏம் பிள்ளைங்க... விக்கி விக்கி அழ வேண்டும் போலான உணர்வு நெஞ்செலாம் நிரம்பித் ததும்ப கமலி தூங்கும் தன் மகனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.

ப்ளட் கேன்சர் அவளை முக்காலும் தின்று முடித்த பின் தன் பிள்ளைகளின் ஏக்கத்தோடு கமலி காரில் போய்க் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு வெகு நிச்சயமாய் தெரியும்.

ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ ராஜாராமன் மறுபடி மணமகன் ஆகலாம்.




Tuesday, September 28, 2010

Friday, September 17, 2010

Thursday, September 16, 2010

வேடிக்கை பிரியங்களும் சலூன் கடை சாய்ந்த நாற்காலிகளும் ...


மக்கள் வாழ்வும் ...மரியாதை நிமித்தங்களும் :

ஒன்றும் பிரமாதமில்லை ;
அம்மாவுக்கு உருப்போட கிடைத்த வார்த்தை
"அப்பாவை எதிர்த்து வாயாடாதே "
அத்தையின் ஜெபமோ
மாமாவின் எதிரில் சேரில் உட்காராதே !
இதென்ன பிரமாதம்?
கல்யாணமென்றால் காத தூரம் ஓடிய
அக்கா மசக்கைக்கு பின் அடிக்கடி சொல்கிறாள்
மாற்றுக் கருத்தே கிடையாதாம்
மாமா சொன்னால் சரியாய் இருக்குமாம்;
ம்ம்...
சரி தான் ;
நான் என்ன சொல்லப் போகிறேனோ ?
வருங்காலக் கனவுகளில்
நிகழ்காலம் கரைத்து
ஆணும் பெண்ணும் சமமென கொடி பிடித்த
முற்கால ஞாபகங்கள்
இத்துப் போன பழம் புடவையாய் ...
சில நூறு பொத்தல்கள்.


சலூன்கடை சாய்ந்த நாற்காலி...


பாம்புகள் சட்டை உறிப்பதை நிகர்த்ததா
பறவைகள் சிறகு உதிர்ப்பது ?
நகம் வெட்டிக் கொண்டோ
முடி திருத்திக் கொண்டோ ;
யோசிக்க
நல்லதொரு சந்தேகம் கிடைத்தது
குடும்பத் தலைவர்களுக்கு ;
பாத்ரூம் குழாய் லீக் ஆவதை சரி செய்வதோ !
மளிகை சாமான்கள் வாங்க ஸ்டோர்களுக்குப் போவதோ !
குழந்தையை பார்க்குக்கு அழைத்துப் போய் விளையாடுவதோ
பின்னதெல்லாம் வெறும் தொல்லைகள் தான் .
இருக்கவே இருக்கிறது
சலூன்கடை சாய்ந்த நாற்காலி
சிந்தனை சிற்பிகள் ஆகும்
போட்டிக்கு
இன்று எத்தனை பேர்!



வேடிக்கை் ப்ரியங்கள் ... 


அப்பாவைப் பொறுத்தவரை
தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்கள் ஒவ்வொன்றாய்
தாவித் தாவிப் போவதும்
ஜான்சன் பட்ஸ் எடுத்து காதைக் குடைவதும்
பற்குச்சியால் கோழித் துணுக்குகள் அகற்ற
பல்லிடுக்குகளை நோண்டிக் கொள்வதுமாய்
காரியங்கள் யாவும் நிறைவேறிக் கொண்டிருந்தன;
அம்மாவைப் பொறுத்தவரை
புத்தக அலமாரியில்
ஒவ்வொரு புத்தகமாய் எடுப்பதும் வைப்பதுமாய்
குழாயில் தண்ணீர் வருகிறதா பார்ப்பவள் போல
குமிழைத் திருகுவதும் மூடுவதுமாய்
கர்ம சிரத்தையாய் காரியங்கள் யாவும்
நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
விடுமுறை நாளின் காலை முதலே
வெடித்து விடக் கூடுமென்று நம்பிய
ஒரு சிறு சண்டையை திசை மாற்றி ஏமாற்றும் பொருட்டு ;
என் பங்குக்கு நான் கூட
சாயமேற்றிய நகங்களுக்கு
மறுபடி மறுபடி சாயமேற்றிக் கொண்டும்
பின்னிய கூந்தலை
பிரித்துப் பிரித்து பின்னிக் கொண்டும் ;
காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்
எப்போது வெடிக்குமந்த சண்டை என வேடிக்கை பார்க்க ;


Note :

பஸ்ஸில் எழுதிய கவிதைகள்.சேமிப்பிற்காக இங்கே.



இச்சைகளும் இடாகினிப் பேய்களும் ...




இச்சையில் ஆடும் இடாகினிப் பேய்களுடன்
விடாது கதைக்கத் தொடங்கி
இன்றோடு நாட்கள் எட்டு
எட்டி விடும் தூரம் தான்
சுவாதீனமாய் சப்பணமிட்டு
அவள் ஆடிக் கொண்டிருந்தாள்;

சுளீர் சுளீரென 
அகல விசிறிச் சுழன்று தாழ்ந்து ஓயும்
நீளக் கூந்தல் குத்தூசிகளாய் விரிந்து பரவ
உறுத்து விழிக்கும் ஆங்கார கண்கள்
என்னைப் பிய்த்து தின்று விடும் கோரப் பசியில் ;
பேய்கள் அவளை ஆட்டுவிக்கின்றனவாம்
பேசிப் பேசி கலைகிறார்கள் ;
வேடிக்கை மனிதர்கள்;

பெருந்தீனியிட்டு பேய் வளர்க்கும் கலை அறியாதவர்கள்...


நோட்: படம் கூகுளில்  எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.உரிமைக்காரர்கள் ஆட்சேபித்தால் நீக்கப் படும்


 

 

Wednesday, September 8, 2010

பாட்டியும் பட்டுப்புடவைகளும்...

பாட்டியின் பட்டுப்புடவைகள் ... ((அனுபவ பகிர்வு)

வழமையாய் கோடம்பாக்கம் புடவைகளை பின் கொசுவமிட்டு உடுத்தும் பாட்டிக்கு இந்திரா காந்தி போல மொட மொடப்பாய் புடவை கட்டிக் கொள்ளும் ஆசை மிகுந்திருந்தது ,கைத்தறிப் புடவை என்று நினைத்து விடாதிர்கள் ! விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டெல்லிக்குப் போய் இந்திராவுடன் தாத்தா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பேரன்பும் பெருமிதமுமாய் கூடத்தில் மாட்டி வைத்திருக்கிறாள் ,


இந்திரா கட்டியிருப்பது பட்டுத் தானாம்!,இந்திரா கட்டி இருப்பது பட்டுத் தானென்று ஒரேயடியாய் சாதிப்பதில் இப்போதும் பாட்டி கெட்டிக்காரி தான்.குடும்பத்தின் மூத்தவள் என்பதால் யாருக்கு பட்டெடுத்தாலும் பாட்டிக்கு காட்டாமல் அலமாரிக்கு செல்லாது,பிறந்த குழந்தையை தடவுவது போல ரொம்பப் பாசத்துடன் பிரித்து பார்த்து அசங்காது மடித்து நீவுவாள்,புடவைக்கு வலிக்குமோ என்றிருக்கும் போலும்!இப்படியாக பாட்டிக்கு பட்டுக் கட்ட ரொம்ப ரொம்ப இஷ்டம் என்று நாங்களெல்லோரும் எப்போதும் அறிந்தே இருந்தும் கூட வாழ்வின் கடை நாட்களில் தான் பட்டென்ற ஒன்றை அவள் மேனி தொட்டுப் பார்க்க நேர்ந்தது ,


ராமர் நீலத்தில் அரக்கு ஜரிகை கரையிட்ட ஊசி வாண சரிகைப் புடவை ஒன்று ,அடர் பச்சையில் அழகான தங்க சரிகைக் கரையில் ஒன்று ,இரண்டுமே கடைசி மாமாக்களின் திருமணங்களின்போது பாட்டிக்கென்று எடுத்தார்கள்,முந்தினதை இரு முறை உடுத்தி இருப்பாள்,பின்னது ஒரே ஒரு முறை தான் ,இரண்டுக்குமே வெள்ளை ரவிக்கை தான்.


சிரிக்கையில் அவள் மூக்கு விரிகையில் ஒரு பக்கம் அன்ன பட்சி ,மறுபக்கம் தோகை விரித்தாடும் மயில் என்று ரெட்டை பேசரி ஜொலிக்கும் ,வாடிய வெற்றிலை போல் வரியோடித் துவண்ட உதடுகளின் பின் ஏழு கல் வெள்ளைத் தோட்டுக்கு போட்டியாய் பளீரிடும் பச்சரிசி பற்கள்.சின்ன வயதில் யாரோ சொன்னார்கள் என்று நெற்றிக்குப் பச்சை குத்திக் கொண்டிருந்தாள்,யாரும் கேட்டால் அறியாச் சிறுமி போல அந்தப் பச்சை செத்துப் போன பின் அவள் சொர்க்கம் போக வழித்துணைக்கு வருமென்பாள் !


வெள்ளி செவ்வாய்களில் தலைக்கு குளித்து முழுகிய பின் கொண்டைக்கு சிவப்புக் குற்றாலத் துண்டு சுற்றி அதீத மங்களகரத்துடன் மேல் வாசற் படியில் நின்று கொண்டு மாரிக்கு சோறிட வருவாள்,அந்த கணங்கள் புகையோடிய விடிகாலை மென் வெளிச்சம் போல ஆழ் மனதை அசைத்துப் பார்க்கும்.. .


பட்டசைத்த ...பட்டுக்கு அசைந்த பாட்டியின் உலகம் ஒரு நாளில் வெண்மை சூழ்ந்தது ,கருத்து நெடிந்து தளர்ந்த தாத்தா அவளைச் சூழ இருந்த நிறங்களை திருடிக் கொண்டு செத்துப் போன பின் அவளுக்கென்று வாய்த்தது ஒரே ஒரு நிறம் அது அந்தப் பாழும் வெள்ளை தான். கலர் புடவை உடுத்திக் கொள்ள யார் சொல்லியும் கேட்க மறுத்து விட்டாள்,தாத்தாவுக்கு பிடிக்காதாம்,வயதான கைம்பெண்கள் கலர் சேலை உடுத்திக் கொண்டு எதிரில் வந்தால் கேலி செய்வாராம். வேண்டவே வேண்டாம் என்று விட்டாள்.செத்தும் வாழ்ந்தார் தாத்தா!


நேற்று பாட்டியின் இரண்டு புடவைகளில் முன்னதை எனக்கும் பின்னதை தங்கைக்கும் என பாட்டியே பங்கு பிரித்துக் கொடுத்து விட்டாள்.உடுத்தும் போதெல்லாம் பாட்டியின் புடவை என்று சந்தோசிப்பதா? பாட்டி உடுத்த முடியாப் புடவை என துக்கிப்பதா ! இனம் புரியாக் குழப்பத்தில் புடவையை கையில் ஏந்திக் கொண்டு கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டேன் ,பாட்டியின் இளகிய உள்ளங்கை தசைகளின் வெது வெதுப்பும் மெது மெதுப்புமாய் கன்னம் தாண்டி சுட்டது புடவை .

Saturday, September 4, 2010

ஆனந்தாயி என்ற நாவல் குறித்த அறிமுகத்திற்கு:








இந்த சுட்டி  ஆனந்தாயி என்ற நாவல் குறித்த அறிமுகத்திற்கு .

சிவகாமி என்பரின் நாவல் ,இந்த எழுத்தாளர் குறித்து இந்த தளம் தவிர வேறெங்கும் தகவல்கள் இல்லை. 1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர்,இன்னும் பலரையும் பரவலாகச் சென்றடையக் காணோம்.ஆனால் கல்லூரி விடுமுறையில் அம்மாவின் பள்ளி நூலகத்தில் இந்த நாவலை வாசிக்கையில் எனக்கு மிகப் பிடித்திருந்தது இந்த நாவல். 
 

 இங்கே எழுத்தாளர் சிவகாமி  குறித்த சிறு அறிமுகம் வாசிக்க கிடைத்தது.

//1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது//

http://www.newbooklands.com/new/product1.php?catid=15&&panum=2934 ( இங்கே இந்த நாவல்   விற்பனைக்கு கிடைக்கிறது )



http://udaru.blogdrive.com/archive/953.html  ( இந்த சுட்டியில் சிவகாமி அவர்களின்  பேட்டி  வாசிக்க கிடைக்கிறது  )



Friday, September 3, 2010

எஸ்ராவின் தளத்தில் காணக்கிடைத்த மற்றவள் குறும்படம் குறித்த ஒரு பகிர்வு :


http://www.youtube.com/watch?v=_Al94vZlxHs   


எஸ்ரா வின் தளத்தில் "மற்றவள்" என்ற இந்த குறும்படம் பார்க்கக் கிடைத்தது. பள்ளிக்குப் புறப்பட்டு விட்ட தனது எஜமானியின் குழந்தைகளின் யூனிபார்ம் தோற்றம் கண்டு சுய பட்சாதாபத்தில் உறையும்அந்தச் சிறுமியின் ஏக்கம் கலந்த முக பாவனைகள் மிகப் பொருத்தம்,அவளது எஜமானிக்கு அவள் மீது இரக்கமில்லை எல்லா எஜமானிகளைப் போலவே! 


குடும்பச் சுமைகளுக்காக குழந்தைகள் எடுபிடிகளாகவும் வேலைக்காரர்களாகவும் ஆக்கப் படுவதற்கு பதிலாக அங்கீகரிக்கப் பட்ட அனாதை ஆசிரமங்களில் சேர்த்து விடுவது தேவலாம் ,குறைந்த பட்சம் தடையற்ற கல்வி கிடைக்கும் உத்திரவாதம் உண்டு. கிறிஸ்தவ மிசினரிகள் பல இருக்கின்றன.மதம் மாற போதிக்கப் படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும் இந்த நிலைக்கு அது தேவலை, சுயமரியாதை என்ற ஒன்று குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும் தானே!

மேலும் தொண்டு நிறுவனங்கள் ,அனாதை ஆசிரமங்கள் குறித்தும் தெளிவான நம்பகத் தன்மை உறுதி செய்யப் பட வேண்டும்,வாணலிக்குத் தப்பி அடுப்பில் குதித்த கதையாக குடும்பக் கஷ்டம் என்று ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கப் படும் குழந்தைகள் நிர்வாகிகள் என்ற போர்வையில் நடமாடும் சில வக்கிர புத்திக்காரர்களின் விபரீத ஆசைகளுக்கு வடிகால்களாகி விடக் கூடாது .

நிராதவரான குழந்தைகள் நலன் பேண அமைப்புகள் பல இருந்தும் கூட சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் எப்போதும் குறைந்த சுவடே இல்லை .

முதல் காரணம் பெரியவர்களின் அசட்டை என்றே சொல்ல வேண்டும். குழந்தைகளின் மன நலனுக்கு எதிரான இத்தனை செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்த்தும் பத்திரிகைகளில் படித்தும் என்ன பலன்?மீண்டும் அந்த தவறுகளும் குற்றங்களும் குறைந்த பாடில்லை,ஒவ்வொரு தனி மனிதனும் இவ்விசயத்தில் குறைந்த பட்ச மனிதத் தன்மையுடன் பிற மனிதர்க்கு இரங்கும் சுபாவங்களை வளர்த்துக் கொண்டு விழிப்புணர்வோடு செயல்பட்டால் அன்றி குழந்தைகள் நலன் பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை.

இதை நிகர்த்த மற்றொரு குறும்படம் " குட்டி "

அதற்கான youtube சுட்டி கிடைக்குமென்று தேடித் பார்த்தேன் ,கிடைக்கவில்லை. சன் தொலைக்காட்சியில் முன்பு ஏதோ ஒரு சனிக்கிழமை அந்தப் படம் திரையிட்டார்கள்.நல்ல படம் ,பார்க்க வாய்த்தவர்கள் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.