Sunday, August 7, 2011
சித்ரா -சிறுகதை
இன்று தான் பார்க்கிறேன் இவனை.
எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு பலகாலம் ரொம்ப சிநேகம் போல அவனது தோளைத் தட்டி கைகளைப் பற்றிக் கொண்டும் விட்டுக் கொண்டும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் .
தலை முழுக்க மங்கி நிறமிழந்த பேப்பர் கூழ் பெட்டியை வைத்துக் கவிழ்த்தார் போல ஒரு ஹேர் ஸ்டைல் அவனுக்கு ,அந்த முடி வெட்டும்,முழி வெட்டும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது எனக்கு . இவனை எப்படித்தான் சகித்துக் கொண்டு இரண்டு வருடங்கள் வாழ்ந்து சித்ரா ஒரு பிள்ளையையும் பெற்றாளோ என்று பற்றிக் கொண்டு வந்தது. காட்டெருமை நடை!
சித்ரா வீட்டிலிருந்து ஒருவரும் இன்னும் சாமி கும்பிடுக்கு வரக்காணோம். கோயிலில் கூட்டம் நெறிபட்டுக் கொண்டிருந்தது .
ஃபேன் உபயம் ராசுக் கொத்தனார் என்ற அடர்நீல எழுத்துக்களோடு தலைக்கு மேலே காற்றாடி ஓடிக் கொண்டிருந்தாலும் அந்தக் காற்றை அந்த அடர் நீல எழுத்துக்களே மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டார் போல ராசுக் கொத்தனார் வகையறாக்கள் அந்த ஃபேன் அடியை விட்டு நகர்வேனா என்று நின்று கொண்டிருந்தார்கள் .
ராசுக் கொத்தனார் சம்சாரம் அலமேலு யாரும் பார்க்காத சமயமென்று தான் எண்ணின நேரமெல்லாம் அண்ணாந்து அண்ணாந்து அந்த ஃபேனைப் பார்ப்பதும் உடனே உள்ளே அம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வதுமாய் இருந்தாள்.
பார்க்கப் பார்க்க வேடிக்கை தான் மனித சுபாவங்கள் ,நான் சித்தியின் மணிக்கட்டைக் கிள்ளி ராசுக்கொத்தனார் சம்சாரத்தை காட்டினால் அவளோ போன வருடம் தாத்தா இருக்கும் போது கோயிலுக்கு என்று கோயில் முகப்பில் செய்து நிறுத்தி இருந்த பெரிய வெண்கல மணியையே பெருமை சிந்தி சிதற பார்த்துக் கொண்டிருந்தாள். என்னே அரிய கல்யாண குணங்களடா நம் மக்கள் மனங்களுக்குள் !!
அதற்குள் சித்ரா கணவனைக் காணோம் ,கழுதை கெட்டால் குட்டிச் சுவராம். எங்கே போயிருப்பார்கள் ? பால்வாடியின் முள்காட்டுப் புதர் ஓரம் தள்ளிக் கொண்டு போயிருப்பார்கள் தண்ணிக் கோஷ்டிகள் ,அவனுக்கு இந்த ஊரோடு இழுத்துக் கட்டிய சரடுகள் அறுந்தே போன பின்னும் ஊர்ப் பொங்கலுக்கு வருகிறான் ...வந்து கொண்டே இருக்கிறான் என்றால் வேறென்ன உத்தம உன்மத்தமான பந்தங்கள் கட்டிக் கொண்டு ஆடக் கூடும்!
"]உங்க மாமா தண்ணி அடிக்கறதுக்கோசறமே அவன இங்க அழைச்சிருப்பாரு தெரியுமாடீ ?"
அத்தை சூடத் தட்டை உள்ளங்கை நிறைக்க கருப்பு பூசிக் கொள்ள தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே எனக்குச் சொன்னாள்.
சூடத் தட்டில் விபூதிக்குள் காசுக் குவியல்களும் பச்சை நோட்டுக்க்களுமாய் பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது . தட்டுக் காசு நிரம்பி வழிய வழிய பூசாரி வேளார் முகம் ஆறேழு முறை பழனி கந்த விலாஸ் விபூதி தேய்த்து தேய்த்து பள பளப்பாக்கிய செப்புச் சொம்பு போல மினுங்கியது .
சித்ரா வீட்டுக்காரர்கள் பொங்கல் என்றில்லை எப்போதுமே சாமி கும்பிட ஜதையாகத் தான் கோயிலுக்கு வந்து போவார்கள் ,
துலுக்கபட்டியில் கட்டிக்கொடுத்திருக்கும் பெரியக்கா பாமா , போலீஸ்காரனைக் கட்டிக்கொண்டு சிவகாசி ரிசர்வ் லைனில் குடி இருக்கும் சின்னக்கா தனம் ,வெங்கால் நாயக்கன்பட்டியில் வாக்கப் பட்டிருக்கும் கடைசி அக்கா நீலவேணி ,எல்லோருக்கும் மூத்த அண்ணன் ஜெகநாதனின் பெண்டாட்டி ராஜகமலம் எல்லோரும் யூனிபார்ம் மாதிரி ஒரே நிறத்துப் பட்டு கட்டிக் கொண்டு முழ நீல பவுடர் டப்பாவைக் காலி செய்து விட்டு சீவிச் சிங்காரித்து தலைப்பின்னல் நீளத்துக்கு பூ வைத்துக் கொண்டு பெரிய பித்தளைத் தாம்பாளத்தில் சாமி கும்பிடு சாமான்களை நிறைத்துக் கொண்டு அவர்களது அம்மா சாவித்திரி அன்ன நடை போட்டு வர வாத்து நடை,பூனை நடை,எருமைநடையில் அக்காள்கள் எல்லாம் பின்னே பவனி வந்து கோயிலை அடைவார்கள் .
சாமி கும்பிடுவதெல்லாம் வெறுமே சம்பிரதாயம் , பழக்க தோசம் என்பதாகத் தான் இருக்கும் அப்போது யாரைப் பார்த்தாலும் .
மூன்றாம் வருடம் நான் என் அம்மா,சித்தி ,பாட்டி அத்தைகள் புடை சூழ கோயிலுக்குள் நுழைகையில் சித்ரா அண்ட் சிஸ்டர்ஸ் பச்சைப் பட்டு கட்டிக் கொண்டு மல்லிகை மணத்துக் கசங்கி தலை பாரம் தாங்காது கூந்தல் தாண்டி தரை என்பது தொட்டு விடும் தூரம் தான் என்பதாக சரிந்து தொங்கத் தொங்க கோயிலுக்குள் வியர்த்து வழிந்து கொண்டிருந்தார்கள் .
வந்த வரன்களை எல்லாம் அது நொள்ளை ,இது சொள்ளை என்று தட்டிக் கழித்து கொண்டிருந்ததில் பாட்டிக்கு என் மேல் ஏகக் கடுப்பு .
சித்ரா பல லட்சம் சொத்துக்களோடு டிஜிட் ராஜகோபாலை மணக்கப் போகும் பெருமையில் இருந்திருப்பாள் போலும் ! பெரிய கவர்னர் மாலை சங்கிலி பச்சைப் பட்டின் மேல் தாழ்ந்து படிய கழுத்தை இறுக்கிய பச்சைக் கல் அட்டிகை யோடு என்னைப் பார்த்தும் பாராதவள் போல்...என்ன நிம்மி (நிர்மலா) என்ன பண்ணிட்டு இருக்க இப்ப? என்று மிதப்பாய் பெரிய மனுஷி தோரணையில் கேட்டாள் .
" நான் ஓட்டுச் சில்லு வச்சு பாண்டி ஆடிட்டு இருக்கேன்டீ "
வாய்க்கு வந்ததை நக்கலாய் நான் சொல்ல பாட்டிக்கு வந்ததே கோபம் .
"என்ன பண்ணுவா ?எங்க உசுர எடுத்துக்கிட்டு இருக்கா வர்ற மாப்ளை எல்லாம் தட்டிக் கழிச்சிட்டு அவ்வையாராகப் போறாளாம் .."
தர தரவென்று பாட்டியை இழுத்துக் கொண்டு போய் கோயிலுக்கு வெளியில் விட்டு வந்தால் தேவலாம் என்றிருந்தாலும் அடக்கிக் கொண்டேன் அந்த என்னத்தை பிறகு அதற்கொரு பொங்கல் நேரும். எதற்கு வம்பு ?
"உன் சோட்டுப் பொண்ணு தான பாரு எம்மாம் பெருசா படிச்சிருந்தும் அதுக்குத் தக்கன மாப்ள வரணும்னு ரூல்ஸ் பேசாம எத்தன புத்தியா வீட்ல சொன்ன மாப்ளைய வசதி வாய்ப்ப பார்த்து கட்டிக்கிறேன்னு தலையாட்டிடுசுச்சு ,அதாம் பொழைக்கற பொண்ணு ."
பாட்டி எனக்குச் சொல்லிக் கொண்டே அம்மாவையும் சித்தியையும் ,அத்தைகளையும் பார்த்தாள் .
"அதானே?!" என்றன அந்த முகங்கள்.
அதற்கப்புறம் வந்த பொங்கலுக்கு நான் பாட்டி ஊருக்குப் போகவில்லை கல்யாணமாகி புகுந்த வீட்டுப் பொங்கலைப் பார்க்கப் போய் சேர்ந்து விட்டேன் . அம்மாவும் சித்தியும் கூட என்னோடு அங்கேயே பொங்கலைப் பொங்க வைக்க வந்து சேர "அங்கேயும் பொங்கல் பொங்கத்தான் செய்கிறதாம் "என்றான் தம்பி. எல்லோரும் சிரித்தார்கள் , அந்தப் பொங்கலுக்கு சித்ராவின் நினைவே இல்லை எனக்கு .
நான் போகாவிட்டாலும் பாட்டி ஊரிலும் கூட அந்த வருடம் பொங்கல் பொங்கித்தான் வழிந்ததாம் . அட எப்போதும் பொங்கலின் இயல்பு பொங்கி வழிவதன்றி வேறேல்லவே!
சித்ரா கறுப்பி தான் ஆனாலும் அழகுக் கண்கள் அவளுக்கு ;என் தங்கைக்கு தான் அவள் வகுப்புத் தோழி என்றாலும் விளையாடுகையில் நாங்கள் இருவரும் தான் ஒன்றாய் சேருவோம் பல நாட்கள் .
அடர்ந்த கரும்புப் புருவங்கள் அவளுக்கு ...கீழே திராட்சை பழத்தை பாலிடாலில் மிதக்க விட்டது போல பெரிய கண்கள்.ஒருமுறை விளையாட்டில் என்னவோ சண்டை வர ;வந்த கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் தலைமுடியை இழுத்துக் கீழே தள்ளி புடைத்துத் தெரிந்த அவளது இமைகளை ரத்தம் கன்றும் அளவுக்கு கடித்து விட்டேன். அலறி விட்டாள் அலறி ,விஷயம் அவளம்மா வரை போய் சாயந்திரமாய் பஞ்சாயத்துக்கு பாட்டியிடம் வந்தது.
"தேவகிக்கு இப்படியும் ஒரு பிள்ள பிறக்கனுமா? அதென்ன பொம்பளபுள்ள மாதிரியா நடந்துக்கிடுது? என்னத்தே நீங்க கண்டிக்கிறீங்களா இல்ல நானே ரெண்டு சாத்து சாத்தவா ? "
கண் காயத்தில் தேங்காய் எண்ணெய் பூசிய சித்ராவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் திண்ணையில் பாட்டிக்குப் பின்னால் அமர்ந்து பயத்துடன் நடக்கப் போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை இழுக்க சாவித்திரி அத்தை கை நீட்ட ...ராத்திரி சமையலுக்காய் அவரைக்காய் நறுக்கிக் கொண்டிருந்த பாட்டி சடக் புடக்கென உதறிக் கொண்டு எழுந்தாள்.
இந்தா சாவித்திரி ...என்ன திடு திப்ன்னு பிள்ளைய அடிக்க கை ஓங்கிட்டு வர்ற நீ ?சின்னப்பிள்ளைங்க சண்டைய போய் வீதிக்கு கொண்டு வந்துட்ட ...போ...போ நான் கண்டிக்கறேன் .
சாவித்திரி எனக்கு அத்தை முறை ...பாட்டி இப்படிச் சொன்னதும் என்ன நினைத்தாளோ ?
"அடியேய் உன்ன எம்மருமகளாக்கி என் பையன விட்டு உதைக்கச் சொன்னா தான் திருந்துவ நீ ...என்று அநியாயத்துக்கு என்னை மிரட்டி விட்டுப் போனாள் .
எனக்கு அவள் என்னை அடித்து விட்டுப் போயிருந்தால் கூட அத்தனை பயமிருந்திருக்காது ,அவள் சொல்லி விட்டுப் போன பிறகு ராவெல்லாம் நினைத்து நினைத்து பயந்து கொண்டே இருந்தேன் அந்த குண்டுக் கண்ணன் கோபிக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடுத்து விடுவார்களோ என்று .இத்தனைக்கும் அப்போது படித்துக் கொண்டிருந்ததென்னவோ மூன்றாம் வகுப்பில் தான்.
சித்ரா வீட்டில் ரோஸ் நிறப் பெயின்ட் அடித்த மரக்குதிரை ஒன்று இருந்தது ,அந்தக் குதிரையில் மூன்று பேர் உட்கார்ந்து ஆடலாம் .இந்த குண்டுக்கண்ணன் உட்கார்ந்தால் யாருக்குமே இடமிருக்காது அவனுக்கே இடம் பத்தாதே ! அவன் இருக்கும் பொது அந்தக் குதிரையில் யார்ரையும் ஆட விடாமல் அழிச்சாட்டியம் செய்வான் ,அண்ணனும் தங்கையுமே குதிரைக்காக கட்டிக் கொண்டு அடித்துப் புரள்வார்கள்,சாவித்திரி வந்து முதுகில் நான்கு வைத்து எல்லோரையும் தெருவில் விளையாட விரட்டி விடுவாள். இப்படித் தான் இனிதே கழிந்தது எங்கள் பால பிராயம் .
அவனம்மா தான் அப்படி மிரட்டினாலே தவிர அவனுக்கு என்னைக் கண்டால் காந்தாரி மிளகாய்நெடி மூக்கேறிய கதை தான் ...சித்ராவின் சிநேகிதிகளான எங்களில் யாரைக் கண்டாலும் அவன் "ஏய் கொண்டி "என்று தான் கூப்பிடுவான் .
"போடா கோண மூக்கு குதிரைக் கோவாலு "என்று உரக்க கத்தி விட்டு ஓடிப் போய் ஒழிந்து கொள்வோம் நாங்கள் ,ஒருநாளைக்காவது அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் பாட்டி மிளகாய்ப் பொடி அரைக்க காய வைத்திருக்கும் வர மிளகாய் இரண்டை உடைத்து அவன் மூக்கில் திணித்து விட்டு ஓடியே போய் விட வேண்டும் என்றெனக்கு ஆவல் உந்தித் தள்ளி இருக்கிறது அப்போதெல்லாம் .
எப்படியோ என் வர மிளகாய் உடைப்பிற்கு தப்பி விட்டாலும் பாவம் சித்ராவைக் கட்டிக் கொடுத்த ஆறே மாதத்தில் ராத்திரி fireஆபிஸ் கணக்குப் பிள்ளை வேலையை முடித்து கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அவன் வைத்திருந்த பணத்துக்காக சாத்தூர் முக்குப் பாலம் ரோட்டில் வைத்து முகமறியாத சிலரால் விருதாவாய் குத்திக் கொல்லப் பட்டான் .
கோபாலின் கதை இப்படி முடிந்தது .
கோபால் உயிரோடு இருக்கும் போதே ... கை நாட்டு கூட ஒழுங்காய் போடா வராத டிஜிட் ராஜகோபால் என்ற திருநாமத்தோடு ஊரெல்லாம் வளைய வந்த தன் சின்ன முதலாளிக்கு சிவகாசி எஸ்.எப்.ஆர்.காலேஜில் எம்.சி.ஏ படித்து முடித்த தன் கடைசித் தங்கை சித்ராவை சொத்துக்காக கல்யாணம் பண்ணி வைத்திருந்தான். எல்லாம் இவன் ஏற்பாடு தான் .சித்ராவும் எதற்கு மண்டையை ஆட்டினாள் என்பது ஒரு எழவும் புரியத்தான் இல்லை , என்ன தான் சொத்து கிடைத்தாலும் அவளுக்கு ரசனை காணாது என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது இப்போது அவள் புருசனின் முடி வெட்டைக் காண்கையில் ,
"பேப்பர் கூழ் பெட்டி மண்டையன். " ஓரிருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவனுக்கென்ன தெரியவா போகிறது இப்படியெல்லாம் தனக்கு பெயர் வைக்கப் படுவது .
அவன் இந்நேரம் யார் யாரோடெல்லாம் தண்ணியில் முங்கிப் போய் கிடக்கிறானோ?!
போன வருடப் பொங்கலுக்கு தன் பெண்டாட்டியோடு வந்திருப்பானாய் இருக்கும். இந்த வருடம் தனியே வர என்ன ஒரு திண்ணக்கம் இவனுக்கு ? என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன் .
தேனிப்பக்கம் சருத்துப் பட்டியில் இருந்து எலுமிச்சம் பழச் சிவப்பில் அவனுக்கு மறுகல்யாணத்துக்கு பெண் எடுக்கப் போகிறார்களாம். பாட்டி குசு குசுவென்று சித்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் .
"அவனுக்கென்ன ஆம்பளை ...பொண்டாட்டி செத்தா புது மாப்ள தான் "செவிட்டில் அறைந்தார் போலிருந்தது பாட்டி சொல்வது.
அவன் எக்கேடோ கெட்டு ஒழிகிறான் .
எம்.சி.ஏ படித்து முடித்த பெண்ணை அவன் ஏன் வீட்டு டெலிபோன் வயரால் கழுத்தை நெறித்துக் கொன்றான் ?!
ஊர் என்ன சொன்னது?
உறவுகள் என்ன சொல்லி ஆற்றிக் கொண்டன இந்த துக்கத்தை ?
சித்ரா செத்துப் போகையில் அவளுக்கு ஒரு வயதில் ஒரு மகளிருந்தாள்.
சித்ராவின் அப்பாவுக்கு பேத்தியை விட மகள் செத்ததில் மருமகன் மீது வழக்குப் போடாமல் இருக்க வந்த நஷ்ட ஈட்டுத் தொகையின் மீது தான் அதீத பாசம் மிகுந்து வழிந்தது.
கழுத்து நெறிபட்டு செத்துக் கிடந்த தன் பெண்டாட்டியை ட்ரை சைக்கிளில் போட்டு எடுத்துக் கொண்டு போய் சுடுகாட்டில் எரிக்கச் சொன்னது எது? ஆணாதிக்கமா ? பண ஆதிக்கமா?
என்ன நடந்திருக்கக் கூடும் என பல யூகங்கள் கசிந்தன.அதிலொன்று தன் கம்பெனி ஆர்டர்களுக்காக வடநாட்டு ஏஜெண்டுகளுடன் தன் அழகான பெண்டாட்டியை கம்பெனி கொடுக்கச் சொன்னானாம் இந்த பேப்பர் கூழ் பெட்டி மண்டையன்.
இவளென்ன சொன்னாளோ... நடந்த வாக்கு வாதத்தில் தான் சித்ராவின் கழுத்தை டெலிபோன் வயர் சுற்றிக் கொண்டதாம்.
அப்படிப் பட்ட துணுக்குறாத நுணுக்க குணம் கொண்ட தகப்பனிடத்தில் தான் சித்ராவின் மகள் வளர்ந்து வருகிறாள்.
"எங்க பொண்ணையே கொன்னுட்டாங்க இனி அவன் பொண்ணை நான் ஏன் பார்க்கறேன் ..." - சித்ராவின் மகளைக் குறித்து கேட்பவர்களுக்கெல்லாம் இதே பதில் தான் சித்ராவின் அப்பாவிடமிருந்து .மனிதருக்கு மகளால் வந்த பணம் இன்னொரு வீடு கட்டிக் கொள்ள உதவியது. சம்சாரத்துக்கு வைக்கோற் பிரி சங்கிலி செய்து போட்டுக் கொள்ள உதவியது.பாவம் அந்த சின்னக் குழந்தை பற்றி யோசிக்கத் தான் எவருக்கும் மனமில்லை.
சதா பணம் பேசிக் கொண்டே இருப்பதால் .
யாரும் எவர் மனதிலும் ஆழப் பதிவதில்லையாம் ...சித்ராவின் மகளை நான் பார்த்ததில்லை போலவே என் மகளையும் அவள் பார்க்கவா போகிறாள் ? என்று என்னை நானே ஊமை சமாதானம் செய்து கொண்டு அந்தப் பொங்கலோடு சித்ராவை மறந்து போனதாய் எனக்குள் நானே சொல்லிக் கொள்கிறேன் எப்போதாவது பொங்கலுக்கு பாட்டி ஊருக்குப் போக நேர்கையில் மட்டும்.
சித்திரைப் பொங்கல்கள் எல்லா ஊர்களிலும் வருடா வருடம் பொங்கிக்கொண்டு தான் இருக்கின்றன சித்ரா இல்லாமல்.
அவள் மகளை எப்போதேனும் பார்க்க நேர்ந்தாலும் கூட எனக்கு அவளை அடையாளம் தெரிய வாய்ப்பே இல்லை.
Friday, July 1, 2011
ஆண் மனம் (சிறுகதை)
சிந்தப்புளி பெரியத்தை வந்திருந்தாள்,பாரைப்பட்டியிலிருந்து சின்னத்தை வந்திருந்தாள், ஒத்தயலில் இருந்து விஜியக்கா கூட வந்திருக்கிறாள் .அம்மா கூடத்தில் புளி தட்டிக்கொண்டே அவர்களோடு பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தாள் ,அப்பா இன்னும் மல்லித் தோட்டத்திலிருந்து வரவில்லை,வரும் நேரம் தான், பசி தாங்க மாட்டார் ,பத்து மணியிருக்கும் சூரியன் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தான் ,பஸ் ஸ்டாப் கடைகளில் வடை ..கிடை என்று என்னத்தையாவது அரித்துப் போட்டுக் கொண்டிருப்பார் இந்நேரம்.
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் காலையில் நீராகாரமும் துவையலும் தான் பெரும்பாலும் ,எங்களுக்கு சோறும் குழம்பும் இருக்கும் தோட்டத்துக் காய்கறிகளில் ஏதோ ஒன்றை அவித்தோ பொரித்தோ வட்டிலில் போடுவாள் பாட்டி , கண் மங்கிப் போனதில் இருந்து புளிக்குழம்பு வைக்கையில் எல்லாம் ஒரு புழுவாவது செத்து மிதக்கும் ரசத்திலோ ,குழம்பிலோ!
பாட்டிக்கு கண் மங்கிப் போச்சு ,நான் நேரம் முச்சூடும் தோட்டமே கதின்னு கெடக்கேன் ,உங்கப்பா தோட்டம் விட்டா பஞ்சாயத்து போர்ட் திடலே கதின்னு கெடக்காரு ,கட்சிக்கார கூட்டாளிக கூட சேர்ந்து அரட்டை அடிக்கவே நேரங்காண மாட்டேங்குது அவருக்கு. இவன் தினோமும் என்னப் போட்டு குடையுறான்.அக்கா தங்கச்சிக இருந்தென்ன அத்தை மாமாக்க இருந்தென்ன காலாகாலத்துல எனக்கொரு பொண்ணப் பார்த்து கட்டி வைக்க யாருக்கும் மனசாகலன்னு ! ஆச்சு வைகாசி பொறந்தா முப்பது முடியப் போகுது அவனுக்கும்.
நம்ம தோட்டத்துல மடை அடிச்சுகிட்டிருந்த பூச்சிப்பய மகன் இவனுக்கு பத்து வயசு இருக்கையில தான் சாத்தூர் கவருமெண்டு ஆஸ்பத்திரில பொறந்தான்,உங்கப்பா இவன தோள்ள தூக்கிட்டு வர நாங்க போயி பார்த்துட்டு சட்டைத்துணி எடுத்துக் கொடுத்திட்டு வந்தோம் , அந்தப் பயலுக்கு கல்யாணம்னு நேத்து வந்து பத்திரிக்க வச்சிட்டுப் போறான் ;
அம்மா சொல்லச் சொல்ல எனக்கு மனசில் ஓரிடத்தில் லேசாக விட்டிருந்த கீறல் கோணல் மாணலாக நீண்டு புயல் நேரத்து மின்னல் கொடி போல விரிந்து கொண்டிருந்தது,அந்தச் சத்தம் என் காதுகளுக்கு மட்டும் தான் இரைச்சல் ,அவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.
பெரியத்தை இரைச்சலை பேரிரைச்சல் ஆக்கும் முனைப்பில் இருந்தாள் ,
"அட ஏன் அண்ணி பூச்சிப்பய மகனுக்குப் போயிட்ட நீ ! என் நாத்தனார் பையன் ரெண்டு பேத்துக்கும் கல்யாணமாகி இப்ப மூத்தவனுக்கு ரெட்டப் புள்ளைங்க ,முந்தாநேத்து நானும் உங்க தம்பியும் மெட்ராசுக்கு போயிட்டு தான வந்தம், புள்ள செக்கச் செவேல்னு ரோஜாப் பூவாட்டம் அம்புட்டு அழகு .
என்மகள கட்டிக்கடான்னு உங்க தம்பி சண்டை பிடிச்சார் ;அவென்..."போங்க மாமா வளர்த்த புள்ளையப் போயி யாராச்சும் கட்டுவாங்களான்னுட்டு இஞ்சினியரிங் படிச்சு வேலைக்குப் போற பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டான் ,கூட வேலை பார்க்கரவலாம் .லவ் மேரேஜாம் அண்ணி...பொண்ணு கிடைக்காத குத்தத்துக்கு அதுவுஞ் சர்தேன்னுட்டு என் நாத்தனார் கம்முன்னு இருந்துகிட்டா ."
அக்கா சொல்றது சரிதேன் ,பொண்ணுகளுக்கு ரொம்ப டிமாண்ட் தானாம் அண்ணி ,சின்னத்தை தன் பங்குக்கு எதையாவது சொல்ல வேண்டுமே என்பதாக ஒரு வார்த்தையை வெளியே விட்டாள்.
அக்கா இன்னும் ஒன்றுமே சொல்லாமல் தான் உட்கார்ந்திருந்தாள் ,
அவளுக்கு தீபாவளிச் சீராக பிறந்த வீட்டிலிருந்து இந்த வருஷம் அரக்குப் பட்டுச் சேலை எடுத்து நீட்டவில்லை என்ற காந்தள் இன்னுமிருந்திருக்கும் போல ,இந்த வருஷம் மல்லி நல்ல விளைச்சல் ,பட்டுச் சேலை எடுத்துக் கொடுத்தால் என்ன நட்டம் என்று அவள் நினைத்திருப்பாள்,
அவளுக்கென்ன தெரியும் வந்த வருமானத்தில் முக்காலும் கடனை பைசல் செய்து கழிந்தது என்று, மிச்சம் மீதி வைத்து தான் இந்த வருஷம் மேலத் தோட்டத்தில் நித்யகல்யாணி போட்டிருக்கிறார் அப்பா.
வருஷம் திரும்பறதுகுள்ள உம்மக சடங்காகி நிப்பா .அப்பப் பார்த்துக்கிடலாம் பிள்ள பட்டுச் சேலையெல்லாம் ,அதுக்குச் செய்ய பணங்காசு பார்க்க வேண்டாமா ?ஒனக்கே எத்தன நாலு ஒடைக்கிறதாம்? அம்மா அவள் மூஞ்சியைத் தூக்கின ஏதோ ஒரு நேரத்தில் ஆற்றாமையில் இப்படிச் சொல்லி விட்டாள் ...என்ன இருந்தாலும் கட்டிக் கொடுத்து அடுத்த வீட்டுக்குப் போன பெண்ணுக்கு ஆயிரம் தான் அம்மா தானே சொன்னாள் என்றாலும் மனசு தாங்குமா ?
என்னவோ ஒப்புக்கு தான் வந்து உட்கார்ந்திருக்கிறேன் இங்கே ... என்பதாகத் தான் இருந்தது கூடத்தில் அவளது இருப்பு.
பெரியத்தைக்கு மகள்கள் இருக்கிறார்கள் ,என் வயதுக்கு சின்னப் பெண்கள் தான் ,ஆனாலும் மாமன் மகனைக்கட்டினால் என்னவாம்? ஆனால் கட்டிக் கொள்ள மாட்டார்கள் படிக்க வேண்டும் என்று சால்ஜாப்பு சொல்லிக்கொள்கிறார்கள் பெற்றதுகள் முதற்கொண்டு நண்டு சுண்டான் வரை. அம்மா கொஞ்ச நாள் கேட்டுப் பார்த்து விட்டு அப்புறம் இது கதைக்காகாது என்று விட்டு விட்டாள் .
சின்னத்தைக்கு ரெண்டும் மகன்கள் தான் ,மூத்தவன் பிளஸ் டூ முடித்து விட்டு படிப்பில் இஷ்டமில்லாமல் அப்பாவின் அரிசி மண்டியில் உட்கார்ந்து விட்டான் ,சின்னவன் பத்தாவது படிக்கிறான். படிப்பு வராத பயலுகள் தான் இவனுகள் பெண்ணாய்ப் பிறந்து தொலைத்திருக்க கூடாதா என்று வர வர புத்தி பேதலித்து தொலைகிறது எனக்கு.
பெரியக்கா மகளை கட்ட எனக்கு இன்னும் இருபது வயசு குறைய வேண்டும் . ஓரோர் சமயம் அம்மாவின் மீதும் அப்பாவின் மீதும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வரும் .ஒன்று அக்காவுக்கு சீக்கிரமே கல்யாணம் செய்து வைத்திருக்க வேண்டும் ,இல்லாவிட்டால் என்னையாவது லேட்டாகப் பெத்திருக்க வேண்டும் .இப்படி ரெண்டும் கெட்டான் நிலையில் அக்கா மகள் என்று உரிமையாய் பெண் கேட்டு சட்டமாய் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் வயது கிடந்தது சீரழிக்கிறதே.
சொந்தத்தில் தான் பெண் கிட்டவில்லை.ஒழிகிறது என்று தெற்குத் தெரு வார வட்டிக்காரன் மகள் மோனியை ரூட் விட்டால் அவள் 'சிரித்துச் சிரித்து சிறையிலிட்டது 'என்னை அல்ல பிரசிடென்ட் மகன் கண்ணனை .அந்த வயிற்று எரிச்சலை ஏன் கேட்கிறீர்கள் ? மூணு வருசமஅய்யா அவள் காலேஜுக்குப் போகையில் எல்லாம் பஸ் ஸ்டாண்டே கதி என்று கிடையாய் கிடந்திருக்கிறேன் .என்னைத் தான் பார்த்துச் சிரிக்கிறாள் என்று எப்படித் தான் நம்பிக் கொண்டிருந்தேனோ!
'அவள் பறந்து போனாளே! ' என்றோ 'எங்கிருந்தாலும் வாழ்க 'என்றோ மன்னித்து சகோதரியாய் ஏற்க முடியவில்லை ,காதலித்த பெண்களுக்கு கல்யாணமாகி விட்டால் அவர்கள் சகோதரிகள் என்று போதிக்கும் தமிழ் படங்களை நான் வெறுக்கிறேன். கனவு காண தமிழ் பட கதாநாயகிகள் யாரும் கிடைக்காவிட்டால் மோனி இப்போதும் என் காதல் தேவதை தான் .அவளுக்கு கல்யாணமானது என் குற்றமா ?
"உன் குற்றமா ...என் குற்றமா ...யாரை நான் குற்றம் சொல்ல?"
இவள்களை விடுங்கள் ஒரு வருஷம் முன்னால் பெரியக்கா கோவில்பட்டியில் வீடு எடுத்துக் கொண்டிருந்தாள் என்று என்னை அங்கே காவல் வைத்தாள்,மாமா சிவகாசியில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார் ,அவரால் அங்கிருந்து அசையக் கூட முடியாது ,அப்பா தோட்டத்துப் புலி, இவர்கள் எல்லோருக்கும் வேலை கெட்டு விடக் கூடாது என்று வெட்டிப் பயலே என்று சொல்லாமல் சொல்லி என்னை அங்கே மேற்பார்வை பார்க்கப் போட்டார்கள்.
முதலில் வேப்பங்காய் ஜூஸ் குடித்த கதையாகத் தான் வண்டி வண்டியாக அக்கா மாமாவைத் திட்டிக் கொண்டு அங்கே போய் வந்து கொண்டிருந்தேன் ஒரு நாள் விட்டு ஒருநாள். அடித்தது லாட்டரி பிரைஸ் கதையாக புறநகர் பகுதியான அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும்பிய புது வீடுகள் ஒன்றில் புவனா வீட்டுக்காரர்கள் குடி வந்தார்கள் .
ஒரே ஜாதி என்ற சலுகையில் குடிக்கத் தண்ணீர் கேட்டும் வீட்டுக்கு phone போடவும் அங்கே போய் வந்ததில்,புவனாவை ரொம்பப் பிடித்துப் போனது .அவளுக்கும் என்னைப் பிடித்திருந்தது ,இல்லாமலா என்னோடு திருச்செந்தூர்,குற்றாலம் என்றெல்லாம் டூர் வந்திருப்பாள். ,அவளுக்கு என்னை கட்டிக் கொள்ள இஷ்டம் தான். அத்தை மகள்கள் அக்கா மகள் விசயத்தில் எல்லாம் விதி தான் சதி செய்தது என்றால் இப்போது அப்பா குறுக்கே விழுந்து கெடுத்தார்.
" அஞ்சு பவுன் கூட போடா மாட்டாங்களாம்டா.அவ அப்பன் கோவில்பட்டி முழுக்க எங்க சீட்டு கச்சேரி நடந்தாலும் அங்க இருப்பானாம் ,அம்மாக்காரி பலகாரம் செஞ்சு தின்னே சொத்த அழிச்சவலாம் ,இப்பிடியாப் பட்ட இடத்துல பொண்ணு கட்டி உன்ன சீரழிக்கச் சொல்றியா ? நான் வேற பொண்ணு பார்க்கறேன் ,இவள விட்ரு "என்று ஒரே போடாகப் போட்டார்.
புவனா அதற்கப்புறமும் கூட ஒருமுறை என்னைப் பார்க்கையில் "என்னை எங்கயாவது கூட்டிட்டுப் போய் கோயில்ல வச்சு தாலி கட்டுங்க ,நீங்க இல்லனா நான் மருந்தக் குடிப்பேன் என்று கெஞ்சியவள் தான் இப்போது சாத்தூர் வெட்டினரி டாக்டர் ஒருவனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டு வருஷம் திரும்பும் முன் பிரசவ லேகியம் தின்று கொண்டிருக்கிறாளாம் .
இதை எனக்குச் சொன்ன வேலுத்தேவர் மகன் போண்டா மருதுவை செவிட்டில் அறைந்து விட்டு தோட்டத்து மோட்டார் ரூமில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன் நான் .
அப்பா கூட படித்தவளாம் ராஜ திலகம் டீச்சர். அவளுக்கு மூணும் பெண்கள் ஒவ்வொருத்திக்கும் 25 சவரன் போடுவேன் என்று இரண்டு மகள்களைக் கரை ஏற்றி முடித்து விட்டாளாம்,கடைக்குட்டி செல்வராணி தான் பாக்கி.அவளை எனக்கு கேட்கலாம் என்று அம்மா ஆசை காட்ட அப்பா பஸ் ஏறி ராஜபாளையம் போய் வந்தார்.
ஐந்தாறு முறை பஸ் காசு தான் விரயமானது ,அந்தப் பெண்ணுக்கு அக்கா மாப்பிள்ளைகள் போல சிங்கப்பூர்,மலேசியாவில் பெட்டி தூக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தான் வேணுமாம் ,விவசாயம் பார்க்கும் என்னையெல்லாம் தலை தூக்கியே பார்க்கப் போவதில்லை என்று விட்டாளாம் அப்பா முகம் தொங்கிப் போக குரல் இறக்கிச் சொன்னார்.
சத்தியமாய் நான் அந்நேரம் புவனாவைப் பற்றி எல்லாம் அப்பாவிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.
ஆனால் அப்பா என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து என்னை அமட்டுவதே இல்லை .
உத்தியோகம் புருஷ லட்சணம் என்று அன்றைக்கு தான் கண்டுபிடித்தவரைப் போல விளைச்சல் வற்றிப் போன கீழத் தோட்டத்தை விற்று விட்டு இந்தாடா எதுனா தொழில் ஆரம்பி என்று சித்துராஜபுரத்தில் கேபிள் டி.வி இழுக்கும் தொழில் செய்ய முதல் தந்து அனுப்பினார் என்னை.
அப்புறமும் ரெண்டு வருஷம் கழிந்து தான் எனக்கு தனலட்சுமி கிடைத்தாள்.
என் தொழிலில் வேர் பிடிக்க வேண்டுமானால் உள்ளூரில் ஏற்கனவே கேபிள் டி.வி தொழிலில் இருந்த ரங்கனை முடக்க வேண்டி இருந்தது ,அவனை உறவாடித் தான் முடக்குவது என்றானது விதி. அவன் என்னை மடக்கிப் போட அவனது மச்சினியை எனக்குக் கல்யாணம் செய்து வைத்தான்.
இப்போது ரெண்டு பேரும் சேர்ந்து கொண்டு சிவகாசியைச் சுற்றி இருக்கும் தாயில்பட்டி,மடத்துப்பட்டி,சுப்ரமணியபுரம்,சசிநகர்,ராமசாமி நகர் வரைக்கும் கூட எங்கள் கொடியைப் பறக்க விட்டு விட்டோம்.
எப்படியோ தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாய் தனத்தைக் கட்டிய பின் முதல் பிரசவத்துக்கு ரங்கலட்சுமி ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தேன் . பிரசவ வார்டில் தனம் ,வராண்டாவில் நான் நின்றேன் ...அப்போது தான் புவனா தன் ஏழு வயது மகனை அழைத்துக் கொண்டு வராண்டா திருப்பத்தில் வரும் போதே என்னைப் பார்த்து விட்டால் போலும் .
என் மனதில் சாரல் அடித்தது .
அவள் முகத்தில் காணாததைக் கண்ட சந்தோசம் .
இத்தனூண்டு நாணத்தோடு கிட்ட வந்தவள் மெதுவாய்க் கேட்டாள்
"எப்டி இருக்கீங்க ராதா? "
"நல்லா இருக்கேன் புவனி ,உம்பையனா ? ஸ்கூல் போறானா? "
லேசாக கலங்கத் தொடங்கிய கண்களை இமைகளை அடித்து நீர் விலக்கம் செய்து அவளை சம்பிரதாயமாய் விசாரித்தேன்.
"ம்ம்...ரெண்டாங் கிளாஸ் படிக்கிறான்.
"பொம்பளப் புள்ளயாமே ... வெராண்டாவுல பார்த்தேன் அக்கா சொன்னாங்க ,மகாலட்சுமி பொறந்திருக்கா. "
புவனா பிரசவ ஆஸ்பத்திரியின் பழக்க தோசமாய் சில வார்த்தைகள் உதிர்த்தாள்.
" ம்ம்..."
எனக்கும் கல்யாணமாகி குழந்தையும் பிறந்திருக்கிறது அதை புவனி வாயால் கேட்டதும் ஒரு பெரிய ஆயாசப் பெருமூச்சு கிளம்பியது எனக்குள் நிம்மதியாய்.
பரம நிம்மதி .
அப்படியே வெராண்டாவில் போட்டிருந்த சிவப்பு வினைல் சேரில் சாய்ந்து கொண்டு தூக்கம் போல கண்களை மூடிக் கொண்டேன் .
புவனி போய் வெகு நேரமான பின் ரங்கனின் அலைபேசி அழைப்பில் தான் துள்ளிக் கொண்டு விழித்தேன் .
"சகள எங்க இருக்க நம்ம பயக எல்லாம் பிரியாணி ட்ரீட் கேட்க்ரானுங்க பாப்பா பொறந்ததுக்கு ,சீக்ராம் வாய்யா பெல்லு ஓட்டலுக்கு. "
"வரேன்ய்யா வரேன் "
என்று சிரித்துக் கொண்டே கிளம்பினேன் நான்.
Friday, April 1, 2011
ரஸ்தாளி ( சிறுகதை )
இங்லீஷ் பரீட்சை இன்றைக்குப் பார்த்து மெயின் ஹால் சூப்பர்வைசிங்செய்து கொண்டிருந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும்பரீட்சை ஆரம்பித்து முக்கால் மணி நேரத்திற்குள் பெருத்த சந்தேகம் ஒன்றுவந்து யார் சொல்வது மெத்தச் சரி என்பதில் பெரிய போட்டியாகப் போய் விட்டது. மெயின் ஹால் பள்ளியின் இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாய்விரிந்து கிடக்கிறது. மொத்தம் இருபத்தி ஐந்து வரிசைகளாக பெஞ்சுகளும்டெஸ்க்க்குகளும் அதில் உட்கார்ந்து எழுதும் பிள்ளைகளுமாய் நீளக்கிடந்தது .
அதனால் தான் இந்த ஹாலுக்கு மட்டும் சூப்பர்வைசிங் செய்யஎப்போதும் .இரண்டு டீச்சர்களைப் போடுவார்கள் . பிள்ளைகள் அதன் பாட்டில் எழுதிக் கொண்டிருக்க வரும் டீச்சர்கள் அவரவர்போக்கில் எதையாவது பேசிக் கொண்டே ஹால் கவனிப்பார்கள். இப்படித் தான்சென்ற அரைப்பரீட்சைக்கும் மேனகாவுக்கு மெயின் ஹால் தான் .அதிலும்டீச்சர்கள் பேசுவதை வரிக்கு வரி காதாரக் கேட்கும் படியான இடத்தில் அவளதுபெஞ்சும் டெஸ்க்கும் . பத்தாவது கணக்குப் பாடம் எடுக்கும் அனுராதா டீச்சர் அதிகப் படியாகயாரோடும் பேசுவதில்லை ,குட்டி போட்ட பூனை மாதிரி ஹால் முழுக்க சுற்றுசுற்றி வந்து கொண்டிருப்பதைக் கூட சகித்துக் கொள்ளலாம் .
மேனகாவுக்குகணக்கு எப்போதும் கொஞ்சம் பிணக்கு தான் ,எல்லாப் பாடங்களிலும்தொண்ணூறுக்கு மேல் மார்க் வாங்கியும் கணக்கு அவளைப் பெரும் பாடுபடுத்தும் , படுத்துவது பாடம் மட்டுமல்ல கணக்கு டீச்சரும் தான் . அரைப் பரீட்சைக்கு முந்தி வைத்த மன்த்லி டெஸ்ட்டில் சயன்சில் 99 3 /4மார்க்குகள் வாங்கி இருந்தாள் மேனகா .பேப்பர் கொடுக்கும்போது முருகன்சார் மொத்தம் மூணு செக்சன்லையும் வச்சு இந்தப் பொண்ணு தான் இவ்ளோமார்க்கு வாங்கிருக்கு ,100 /100மார்க் போடலாம் ,அப்டி போடக் கூடாதுன்னுதான் கால் மார்க் குறைச்சிட்டேன்.என்று பெருமையாகச் சொல்லி எல்லோரையும்மேனகாவுக்காக கை தட்ட சொன்னார் .
ஒரு செக்சனுக்கும் இன்னொரு செக்சனுக்கும்இடையே சுவர் வைத்து மறைத்திருக்க அதென்ன இங்க்லீஷ் மீடியம் ப்ரைவேட்ஸ்கூலா ! வெறும் ஓலைத் தட்டி தான் செக்சன் பிரிக்கும் ,முருகன் சார் பேசியதும்,பிள்ளைகள் கை தட்டியதும் அந்தப் பக்கம் 10 th B க்கு கணக்குப் பாடம்எடுத்துக் கொண்டிருந்த அனுராதா டீச்சர் காதில் தெள்ளத் தெளிய விழுந்துவைக்க மேனகாவுக்கு அடுத்த வகுப்பு கணக்கு வகுப்பாகிப் போயிருக்ககூடாது! வெளியே அப்பட்டமாய் காட்டிக் கொள்ளப் படாவிட்டாலும் அனுராதா டீச்சருக்குமுருகன் சாருக்கும் இடையே யார் அடுத்த HM என்பதில் போட்டி இருந்தது.ரெண்டு பேரும் வகுப்பு இடைவேளைகளில் பேசிக் கொள்ளும் போதும் சரி,ஸ்டாப் ரூமில் பேசிக் கொள்ளும் போதும் சரி சிரிக்கச் சிரிக்கப் பேசும்பேச்சிலும் ஒருவரை ஒருவர் வாரிக் கவிழ்க்க நினைக்கும் இடக்கு மடக்குகள்நிறைய தென்படும்.
கணக்குப் பாடத்தில் 59 /100 தான் வாங்கி இருந்தாள் மேனகா . முதல் பீரியடில் எல்லோரும் கை தட்டிப் பாராட்டிய சந்தோசத்தை இந்தக்கணக்குப் பேப்பர் மார்க் தவிடு பொடியாக்கியது ,அப்படியே பேப்பரை வாங்கிமடித்து பைக்குள் வைத்து விட்டு முதல் மார்க் வாங்கிய மதன் கபில் தேவ்ஐ அனுராதா டீச்சர் பாராட்டி கை தட்டச் சொல்வதை சுணங்கிப் போன முகத்தோடுபார்த்தும் பாராமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மேனகா . அவ்வப்போது டீச்சர் இவளிருந்த பக்கம் பார்த்த போதெல்லாம் டீச்சரின்பார்வை வட்டத்தில் விழாமல் தப்பிக்க அவள் செய்த பிரயத்தனம் தோற்றுப்போனது.
கொஞ்ச நேரத்தில் டீச்சர் மேனகாவை பேப்பரோடு எழுந்து தன் மேஜை அருகேவரச் சொன்னாள் . ; "என்னம்மா மேனகாதேவி உனக்கு சயன்ஸ் பாடம்னா இனிக்குது மார்க் வாங்க,கணக்குப் பாடம்னா கசக்குதா ? என்ன மார்க் வாங்கிருக்க நீ ? எடு உன்பேப்பரை " என்று ஆணையிட்டாள் . கிட்டத் தட்ட கால்மணி நேரம் அவள் வாங்காமல் போன 49 மார்க்குகள்அனாமத்தாய் துச்சமாய் போக காரணம் அவளுக்கு கணக்கு டீச்சரை பிடிக்காததும்தான் என்பது வரை அனுராதா டீச்சர் படையலிட்டு பட்டியலிட்டுகொண்டிருக்கையில் வகுப்பு மொத்தமும் கொல்லென்று சிரித்தது .
"போன பீரியட்ல கை தட்டல் வாங்கிட்டு இந்தப் பீரியட்ல பார்டர்ல மார்க்வாங்கி பைக்குள்ள மடிச்சு வச்சுக்க வெட்கமா இல்லியா உனக்கு?!அடுத்து அரை பரீட்சை வருது ..அதுல எத்தன மார்க் வாங்கறதா உத்தேசம் மேடமுக்கு?! " "ஏன் கணக்குப் பாடம்னா வேப்பங்காயா இருக்கா ? " "கணக்குப் பாடம் பிடிக்கலையா ...கணக்கு டீச்சரையே பிடிக்கலையா ?சொல்லும்மா ...நான் வேணா ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடவா? " கண்களை உருட்டி நக்கலாய் சிரித்துக் கொண்டே கேலியாக டீச்சர் கேட்கமேனகாவுக்கு மளுக்கென்று கண்ணோரம் கண்ணீர் ஏரி கரையை உடைத்துக் கொண்டது.
அவள் அழுவதைப் பார்த்ததும் டீச்சர் கொஞ்சம் சாந்தி ஆகி விட்டார் போலிருந்தது. "நீ என்ன சின்னக் குழந்தையா இதுக்கெல்லாம் அழற ...அடுத்த பரீட்சைக்குநல்லா படிச்சு கணக்குலயும் நல்ல மார்க்க வாங்கி கை தட்டல் வாங்கணும்.புரியுதா...கண்ணைத் தொட அழதா ...அழாத பிரம்பால அடிச்ச மாதிரி என்ன ஒருஅழுகை உட்காரு...உட்காரு " இதேதடா தொல்லை இந்தக் கழுதை அழுது ஊரைக் கூட்டப் போகிறதோ ! என்றுடீச்சர் சமாதானப்படுத்துவதை முந்திக் கொண்டு சாப்பாட்டு மணி அடித்துவிட்டார்கள் .இனி நீ அழுதாலும் எனக்கென்ன என்று டீச்சர் வெளியேறிப் போய்விட்டாள்.
டீச்சர் போன மாயத்தில் பத்து (பத்மினி) தான் ஓடோடி வந்து தேற்றினாள் மேனகாவை . "மேனா அழாத மேனா ...அந்தக் ஒன்ற கண்ணு டீச்சரப் போச் சொல்லுடி .அதுக்கும்சயன்ஸ் வாத்தியாருக்கும் சண்டைன்னா நாம என்ன பண்ணுவோம்,அவர் பாடத்துலமட்டும் நீ நிறைய மார்க் வாங்கிட்டு கணக்குல குறைஞ்சுட்டன்னு இப்டிதிட்டி உன்ன அழ வச்சுட்டுப் போகுது . விடு ராப்பகலா அடுத்த பரீட்சைலகணக்கு போட்டு போட்டுப் பார்த்து நல்ல மார்க் வாங்கிக்கலாம் ." டீச்சர் போன பின் பத்மினியின் தேற்றுதலைத் தாண்டியும் கணக்கில் முதல்மார்க் வாங்கிய சுப்பலக்ஷ்மியின் கோணல் நக்கல் சிரிப்பு தான் மேனாவைரொம்ப துடிக்க வைத்தது.
"இவள் ஏன் இப்டிச் சிரிக்கிறாள்? " சுப்பு சயன்ஸிலும் 95 மார்க் வாங்கி இருந்தாள் .அவளுக்கு சோசியல்சயன்ஸ் பாடம் தான் பெரும் பிணக்கு .அந்தப் பாடத்தில் மட்டும் தான் அவளைஅடித்துக் கொண்டு முந்த வழி இருந்தது. சந்திரா பாய் டீச்சர் தான்சோசியல் பாடம் எடுப்பார்கள். இன்னும் சோசியல் பேப்பர் தரவில்லை .ஒருவேளை மத்தியானத்துக்கு மேல் தரலாம். இல்லாவிட்டால் நாளைக்கு தான் . மேனாவுக்கு சோசியல் எடுத்த இந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ஆறாம்வகுப்பு ரேணுகா டீச்சருக்கும் தான் இன்றைக்கு எக்ஸாம் ஹாலில் வைத்துபெரும் போட்டி ஆகி விட்டது .
அடடா... அனுராதா டீச்சர் பரீட்சை ஹாலில் சூப்பர் வைசிங் செய்யும் லட்சணம்பற்றிச் சொல்ல வந்து விட்டு கதையில் எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறோம் . சரி டீச்சருக்கு வருவோம் . அந்த அனுராதா டீச்சர் பரீட்சை ஹாலுக்கு வந்தாள் என்றால் சும்மாவாஇருப்பாள் ? ஹால் சுற்றி வருவது ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் மேனா வகையாகமாட்டிக் கொள்வாள், அனுராதா டீச்சர் மேனகா பரீட்சை எழுதும் டெஸ்கில்சாய்ந்து நின்று கொண்டு கணக்குப் பரீட்சை என்றால் அவள் கணக்குப்போடுவதை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இடையிடையே அதிரடியாய் ஏதாவதுகமென்ட் அடித்துக் கொண்டிருப்பாள் , தப்பாக ஃபார்முலா எழுதினால் நாலைந்து கொட்டுகள் இலவசம் ,அவள் அடிக்கும் கமெண்டுகளில் மொத்த ஹாலும் வேறுதிரும்பிப்பார்த்து சிரித்து தொலைக்கும்.
"பிள்ளையாரப்பா கணக்குப் பரீட்சை அன்னிக்கு மட்டுமிந்த அனுராதா டீச்சர்என் ஹாலுக்கு வரவே கூடாது " என்று மேனா நடுங்கிச் செத்திருக்கிறாள் பலமுறை . எல்லாம் அரைப் பரீட்சை வரை தான் .அப்புறம் ரொம்பவும் ரோசப் பட்டுக்கொண்டு இவள் ராத்திரி எல்லாம் முட்டிக் கொண்டு கணக்குப் பரீட்சைக்குபடியோ படியென்று படித்து எல்லாக் கணக்குகளையும் தலை கீழ பாடமாய் போட்டுப்பார்த்து 90 /100 மார்க்குகள் வாங்கிய பின் டீச்சரின் கெடு பிடிஇவளிடத்தில் குறைந்து விட்டது .கொஞ்சம் மதிப்போடு கூட பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தாள் மேனாவை.
"பள்ளிக் கூடம் போய் வருவதென்ன அவ்வளவு லேசுப் பட்ட காரியமா ? " அனுராதா டீச்சர் யாரோடும் பேசி கவனம் திருப்பாமல் பிள்ளைகள் ஒருபேச்சுக்கு கூட காப்பி அடிக்க இடம் கொடாமல் பரீட்சை ஹாலில் ரோந்துசுத்தி வருவாள் என்றால் ஏழாம் வகுப்பு லச்சுமி காந்தம் டீச்சர் அதற்குஅப்படியே தலை கீழாய் ஹால் க்கு உள்ளே வரும் போதே மூச்சு விடாமல்சளா..புளாவென்று பேசிக் கொண்டே தான் வருவாள்.
பேச்சு யாருடன்வேண்டுமானாலும் நடக்கும் . பக்கத்து ஹால் ராஜாம்பா டீச்சர் ,அட்டன்டன்ஸ் கொண்டு வரும் ஆயா தனபாக்கியம,ஹாலுக்கு வெளியே கிரவுண்டில் நிற்கும் பி.டி மாஸ்ட்டர்....அப்படி இவர்கள் யாரும் அகப் படவில்லை என்றால் உள்ளே பரீட்சை எழுதும்மாணவிகள் . யாருடனாவது பேசிக் கொண்டே தான் இருந்தாக வேண்டும் அந்தடீச்சருக்கு. இல்லா விட்டால் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று ஒற்றைத்தலை வலி வந்து விடும் . பிறகு வாட்டர் பாட்டிலில் மாணவிகள் யாராவதுவெந்நீர் கொண்டு வந்திருக்கிறார்களா என்று ஒவ்வொருவராகக் கேட்டு ஆள்அனுப்புவாள் . ஒற்றைத் தலை வலிக்கு இப்படி வெந்நீர் பாட்டில் ஒத்தடம்கொடுத்தால் சுகமாக இருக்குமாம்.
கால் பரீட்சைக்கு எட்டாம் வகுப்பு C செக்சன் நான்சியையும் பத்தாம்வகுப்பு A செக்சன் மேனகாவையும் ஒரே டெஸ்க் போட்டிருந்தார்கள் .நான்சி இருந்த ஓரத்தில் தான் டீச்சர் உட்கார ஒற்றைச் சேர்போடப்பட்டிருந்தது .பெரும்பாலும் ஹால் பார்க்கும் போது உட்காரக் கூடாது.ஆனால் லட்சுமி காந்தம் டீச்சர் உட்கார்ந்து தான் ஹால் பார்ப்பதுவழக்கம். HM வரப் போவது தெரிந்தால் ரொம்ப சின்சியராக ஹால் பார்ப்பதுபோல காட்டிக் கொள்ள இத்தனை வருசத்தில் டீச்சருக்கு நன்றாகப் பழகிஇருந்தது.
நான்சி காந்தம் டீச்சர் ஹாலுக்கு வருவதற்கு முன்பிருந்தே டீச்சரைதிட்டிக்கொண்டே தான் இருந்தாள். "எருமை மாடு இது எங்க பரீட்சை எழுத விடப் போகுது ? பேசியே கொல்லுமே,கொறத்தி மாதிரி வேஷங்கட்டிட்டு டீச்சர்னு வந்திருக்கு பாரு! " அவள் பேச்சைப் பார்த்து மேனகாவுக்கு பயமாகி விட்டது ,இவளென்ன டீச்சர்என்ற மரியாதை துளி கூட வைக்காமல் இப்படி கொட்டி முழக்குகிறாள் என்று ;
நான்சிக்கு லட்சுமி காந்தம் டீச்சர் தான் குடிமையியல் பாடம் எடுக்கிறாள்.நான்சி க்கு மேனகாவை விட வயது ஒன்றிரண்டு கூடத்தான் இருக்கும்.அவள்முறையே ஆறு மற்றும் ஏழாம் வகுப்பில் இரண்டு முறை பெயில் ஆகி உட்கார்ந்துஉட்கார்ந்து தக்கி முக்கித் தான் எட்டாம் வகுப்புக்கு வந்திருந்தாள்பாவம். பொதுவாக நான்ஸியின் வகுப்புப்பிள்ளைகள் அவதானத்தின் படி டீச்சருக்குநான்சி என்றால் செந்திலைப் பார்த்த கவுண்டமணி மாதிரி ஏறுமாறாக கோபம்எகிறும் என்பதை அன்று பரீட்சை ஹாலில் பார்க்க முடிந்தது . அன்றைக்கு நான்சிக்கு செம மண்டகப் படி நடந்தது லட்சுமி காந்தம் டீச்சர் வாயில் .
தன் சேருக்குப் பக்கத்தில் நான்சி இருப்பதைப் பார்த்ததும் மெயின் சீட்கொடுக்கும் போதே ஆரம்பித்து விட்டாள் ; "பாரு இதெல்லாம் பரிட்சை எழுதலைன்னு யார் அழுதா ? மெயின் ஷீட்லையே அஞ்சுபக்கம் மிச்சம் வப்பா இவ. ஏண்டி இன்னைக்கு படிச்சிட்டு வந்து எழுதறியாஇல்ல பிட்டு ஒழிச்சு கொண்டாந்திருக்கையா? " நான்சி பயந்து பவ்யமாய் பதில் சொல்லி இருந்தால் ஒருவேளை லக்ஷ்மி காந்தம்டீச்சர் அன்றைக்கு பேசாமல் விட்டிருப்பாள் போலும். இவளைப் பிடித்த சனியன் ரெட்டை ஜடையில் சஞ்சரித்ததோ என்னவோ ;
"சும்மா இருங்க டீச்சர் ,நான்லாம் பிட்டு அடிச்சதே இல்லை.என்னை திட்றதேஉங்களுக்கு வேலையாப் போச்சு"
என்று எதிர்த்து பேசி விட்டாள் . எல்லோருக்கும் மெயின் சீட் கொடுத்து முடித்து விட்டு சேரில் உட்கார்ந்தடீச்சர் நான்சி 2 பக்கம் தாண்டி எதுவும் எழுத தெரியாமல்உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் கொதித்துப் போய் ஆரம்பித்து விட்டாள் ; "ஏண்டி டீச்சர் கிட்ட பேசற மாதிரியா பேசின நீ? எல்லாரையும் பார் மெயின்சீட் முடிச்சிட்டு அடிசனல் சீட் வாங்கிக் குமிக்குதுங்க .அவோ எல்லாம்படிக்கிற புள்ளைங்கடி. நீ என்ன ஸ்கூலுக்கு வர மாதிரியா வரவ? கண் மையும்,மூணு இஞ்சுக்கு பவுடரும் ,உடம்பு வெடிச்சுப் போறாப்ல சட்டையும் அரைப்பாவாடையும் .என்னாடி சட்டை இது மூணு வருஷம் முன்ன தச்சதாட்டம். ஆம்பளவாத்தியாருங்க முன்ன வெட்கமில்லாம எப்டி நிக்கிற இதப் போட்டுக்கிட்டு?இதுல கேம்ஸ்ல வேற சேர்ந்துகிட்டு பாதி நாலு முக்காவாசி வகுப்புக்குமட்டம் போடறவ. " டீச்சர் பெரு மழையென பொழிய ...இடையிடையே ;
"டீச்சர் அடிசனல் சீட் ; டீச்சர் எனக்கொரு பேப்பர் " என்று மற்ற மாணவிகள் எல்லோரும் தங்களது சின்சியாரிட்டியை தவறாதுகாட்டிக் கொண்டார்கள் . மேனகாவும் நெருக்கிப் பிடித்து பத்து அடிசனல்சீட் வாங்கி எழுதிக் குவித்துக் கொண்டிருந்தாள் .அன்றைக்கு வரலாறுபரீட்சை .கதை அடிக்க சொல்லியா தரவேண்டும் . இந்த மக்கு நான்சிக்கு ஒரு எழவும் தெரியவில்லை. டீச்சர் அத்தனை திட்டியும் எருமை மாடு சேற்றில் நிற்பதைப் போல தேமேவெனநின்று கொண்டிருந்தாள் . கடைசியாய் அலுத்துப் போனது டீச்சர் தான் ...
ஆனாலும் நான்சியை இன்னும்காயப் படுத்த வேண்டுபவளைப் போல எக்கி அவள் வயிற்றைப் பிடித்து கிள்ளி ; "இந்தா பாருடி ...நாளைக்கு ஒழுங்கா ஒரு தாவணிய சுத்திகிட்டு வாஸ்கூலுக்கு ...இல்லனா தாராளமா சட்டை தச்சு முழுப் பாவாடை போட்டுட்டுவரணும் ,நீ படிக்கத் தான் வரியா இல்ல ரிகார்டு டான்ஸ் ஆட வரியா இங்க"ஜாக்ரதை என்று ஓய்ந்தாள்.
நான்சி அழுது விடுவாளோ அன்று அவள் மூஞ்சியை மூஞ்சியை பார்த்துக் கொண்டுஉட்கார்ந்திருந்த மேனகா தன் எதிர்பார்ப்பில் தோற்றுப் போனாள். அவள் பாட்டுக்கும் முதல் மணி அடித்ததும் பேப்பரை குப்புரக்கவிழ்த்துவிட்டு எழுந்து போய் விட்டாள் .
"போகுது பாரு "கோயில் மாடு " மாதிரி திங்கு திங்குன்னு" டீச்சர் தான் உரக்க முணு முணுத்துக் கொண்டே நகர்ந்தாள். டீச்சருக்கு போக்குக் காட்டவேனும் நான்சி ரெண்டொரு நாட்கள் டைட்டாய்சட்டை அணிந்து கொள்வதை தவிர்த்து தாவணி உடுத்திக் கொண்டு வருவாள் எனமேனகா நினைப்பில் ஒரு கூடை மண் ,அவள் அப்படியே தான் வந்தாள் ,டீச்சரும்அப்படியே தான் கூடை கூடையாய் திட்டிக் கொட்டிக் கொண்டிருந்தாள் .
சரி அவர்கள் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் சந்திரா பாய் டீச்சருக்கு வருவோம் நாம் . ஹாலின் இந்த முக்கில் சந்திரா பாய் டீச்சரும் அந்த முக்கில் ரேணுகாடீச்சரும் நின்று இன்றைக்கும் அதே மெயின் பரீட்சை ஹால் தான். மேனகாவுக்கு சந்திரா பாய்டீச்சர் என்றால் கொள்ளைப் ப்ரியம் .டீச்சர் ரொம்பவெல்லாம் தொண தொணவென்று பேசிக் கொண்டிருந்து பரீட்சைஎழுதும் பிள்ளைகளை துன்புறுத்த மாட்டாள். அவளது சோசியல் பாடமே பரீட்சைஎன்றாலும் கூட அனுராதா டீச்சர் போல முந்திரிக் கொட்டையாய் முன்னால் வந்துநின்று கொண்டு தப்புக் கண்டு பிடித்து தலையில் குட்டி மாணவியை அவமானப்படுத்தி மொத்த ஹாலையும் கொல்லென்று சிரிக்க வைக்க மாட்டாள்.
மேனகாவை டீச்சருக்குப் பிடிக்கும் .டீச்சரின் அக்கா மகள்கள் யாரோஒருத்தியின் ஜாடையில் மேனா இருப்பதாக சந்திரா பாய் டீச்சரும் தையல்டீச்சர் காமாட்சியும் மாலை கோச்சிங் எடுக்கையில் ஒருநாள 9th A செக்சன்படிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவர்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள் . கூடவே மேனாவுக்கு சோசியல் சயன்ஸ் படிக்க ரொம்பப் பிடித்திருந்ததால்சந்திரா பாய் டீச்சரையும் ரொம்ப ரொம்ப பிடித்துப் போயிருந்தது .அப்படித்தான் டீச்சருக்கும் அவளுக்குமான பாசப் பிணைப்பு இறுகி இருந்தது.
டீச்சர்வகுப்பில் எல்லோரையும் ஏசுவாள் மேனாவைத் தவிர ; ஒருமுறை மாடல் எக்சாம் நடக்கையில் முன் தினம் சோசியல் ரிவிசன்வைத்துக்கொண்டிருந்தார்கள் . மேப் ஸ்கெட்ச் பேனாவால் கடலுக்குஅடர்த்தியாக நீலத்தை இவள் கொட்ட ஒவ்வொரு பெஞ்சாக மேப் நோட்டுதிருத்திக் கொண்டு வந்த டீச்சர் ஆள் யாரென்று பார்க்காமல் இவள் ஸ்கெட்ச்வைத்து தீட்டி இருந்ததைப் பார்த்து கடும் கோபத்தில் ;
"கழுதை ஏண்டி இப்படி மையக் கொட்டி தீட்டி இருக்க கடலுக்கு " ஆக்கங்கெட்ட கூகை ...கலர் பென்சில் இல்லியாடி ஒங்கிட்ட... " என்று தலையில் குட்ட கையை ஓங்கி விட்ட பிறகு தான் அது தனப்ரியத்துக்குகந்த மாணவி மேனகா என்று தெரிந்தது. டீச்சரின் ஓங்கிய வலது கை அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது .
"ஏய் நீயா ...என்று சிரித்து மழுப்பி விட்டு , இப்டி ஸ்கெட்ச்ல மையக் கொட்டக் கூடாது பென்சிலாட்டி தான் அடிக்கனும்...அடிச்சி முடிச்சிட்டு ஒரு துண்டு பேப்பர் கிழிச்சு கடல்பக்கம்முழுசும் ஒரே சீரா தேய்க்கணும் அப்பத்தான் கடல் கண்ல உறுத்தாது...பப்ளிக்ல மார்க் போடுவான் சரியா ?!" என்று பேசாமல் போய் சேரில் உட்கார்ந்து விட்டாள். எல்லாப்பிள்ளைகளுக்கும் டீச்சர் மேனாவைத் திட்டாததால் பொறாமையில் வயிறு எரிந்தது . அத்தனை பிரியமான டீச்சர் தான் சந்திரா பாய் டீச்சர் .மேனாவுக்கு பப்ளிக்எக்சாம் வர இன்னும் ஒரு மாதமே இருக்கிறது. அதற்கான மாடல் எக்சாம் எழுத தான் இப்போது இந்த மெயின் பரீட்சையை நினைத்துக்கூட அவளுக்கு அத்தனை துக்கம் எதுவுமில்லை ,போனவாரத்தில் ஒருநாள் டென்த் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம்காசு போட்டு தங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த எல்லா டீச்சர்வாத்தியார்களுக்கும் சின்ன சின்னதாய் அன்பளிப்புகள் வாங்கி வைத்து ஒருஸ்வீட் ஒரு காரம் காப்பி என்று பிரிவுபச்சார பார்ட்டி வைத்தார்கள் . அப்போது பேசும் போது சந்திரா பாய் டீச்சர் சொன்னது; "இதுவரைக்கும் எட்டு செட் டென்த் பிள்ளைங்க இங்க முடிச்சிட்டுபோயிருக்காங்க ...அவங்க ஒவ்வொருத்தரையும் எம்பிள்ளைகளைப் போலவே எனக்குநல்லா ஞாபகம் இருக்கும் ,என்னடா டீச்சர் வகுப்பெடுக்கைல அப்படிஏசறா..இப்படி எசறாளே ன்னு இருந்திருக்கும் உங்களுக்கெல்லாம் பிள்ளைகளா ! எம்பிள்ளைங்க பப்ளிக்ல நல்ல மார்க்கு வாங்கி டாக்டர்,இஞ்சினியர்ன்னுவந்து நின்னா அதுல வர சந்தோசம் வேற எதுல இருக்கு! எல்லாம் உங்கநல்லதுக்கு நினைச்சு சொன்னது தான். பப்ளிக் பரீட்சைக்கு ஒரு மாசம் தான்இருக்கு ,திரும்பி பார்க்கறதுக்குள்ள ஓடிப் போயிடும் நாளு .அப்புறம்நீங்க ரெக்கை முளைச்ச பறவைங்க உங்களைப் பிடிக்க முடியாது ...எல்லாரும்பறந்து போய்டுவீங்க. இந்த டீச்சர் அன்னிக்கி அப்படிச் சொன்னாளேன்னுஞாபகம் வச்சுக்கறதே ரொம்பப் பெரிய விஷயம் தான். " லேசாக கண்கள் கலங்க டீச்சர் இப்படிச் சொல்லி முடிக்கக் கூட இல்லைமேனாவுக்கு பொங்கிப் பொங்கி அழுகை வந்தது ,கணக்கு டீச்சரின் செல்லப்பிள்ளை ஜெயலட்சுமி அனுராதா டீச்சர் பேசுகையில் விக்கி விக்கி அழுதேவிட்டாள். தமிழ் சாரை எல்லோருக்கும் பிடிக்கும் (அவர் தான் வகுப்பில் யாரையும்திட்டியதே இல்லையே ...குச்சனூர் பக்கம் ஏகப்பட்ட விவசாய பூமி அவருக்குராவெல்லாம் தோட்டம் வயல் என்று நீர் பாய்ச்சி விட்டு வருவார் என்று கேலிசெய்வார்கள் மற்ற ஆசிரியர்கள். அவர் ஒரு நாளும் வகுப்பில் தூங்காமல்இருந்ததே இல்லை .தமிழ் ரெகார்டு நோட்டில் கையெழுத்துப் போடும் போது கூடதூங்கிக்கொண்டே தான் போடுவார். ஆனால் எப்படியோ பரீட்சை வருவதற்குள்போர்சன் முடித்து விடுவார் ) இப்பேர்ப் பட்ட தமிழய்யாவை விட்டு பிரிந்துபோகப் போகிறோமே என்று ஒவ்வொரு பிள்ளைகளும் அழுது தவித்தார்கள் அன்றையதினம் . பிறகு டீச்சர்களும் வாத்தியார்களுமாய் எல்லாப் பிள்ளைகளையும் ரொம்ப நேரம்தேற்ற வேண்டியதாயிற்று . ஒரு வழியாய் பிள்ளைகள் தங்கள் டீச்சர்களோடும் வாத்தியாரகளோடும் ஹெட்மாஸ்ட்டரோடும் குரூப் போட்டோ எடுத்து முடித்த பின் பார்ட்டி இனிதேமுடிவடைந்தது. "அடடா...எங்கே ஆரம்பித்து எங்கெல்லாம் போய் விட்டோம் பாருங்கள்!?" ம்ம்...சந்திரா பாய் டீச்சரும் ரேணுகா டீச்சரும் மெயின் ஹால் உள்ளேநுழைகையில் பரஸ்பரம் புன்னகை முகத்தோடு தான் உள்ளே வந்தார்கள்,இருவருமேபொதுவில் சாப்ட் டீச்சர்கள் தான் , இருவருக்கும் முகம் சாந்தமாகத் தான்இருக்கும் எப்போதும் கடு கடு கடுவன் பூனைகள் அல்ல . முதல் ஒரு மணிநேரத்தில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை இருவரும் ,பிறகுசும்மாவே நிற்பது போர் அடித்திருக்கும் போல ரேணுகா டீச்சர் தான்ஆரம்பித்து வைத்தாள். " உங்க மாமியாருக்கு உடம்பு முடியாம சிரமப் பட்டாகளே டீச்சர் இப்பந்தேவலையா அவுகளுக்கு ? " " இப்பங் கொஞ்சந் தேவலை டீச்சர் ... நடமாட்டமில்லை ...ஒன்னுஞ் சாப்பிடக்கொள்ளல ...நீர்க்க கரைச்சிக் கொடுத்தா என்னவோ சிந்தியும் சிதறாமஇம்புட்டு உள்ளபோகும் " "அம்புட்டுக்கு என்ன ஆச்சு டீச்சர் அவுகளுக்கு ? கரைச்சி ஊத்துனா பசிதாங்குமா ? நீங்க இங்கிட்டு வந்திற்றீங்க ...புள்ளைங்க ஸ்கூல் போயிரும்,உங்க சார் ஆபீசுக்கு போய்டுவாரு ,வீட்ல அவுக மட்டும் தான் என்னமாச்சும்பசி அத்தில புடிச்சா என்ன செய்வாக?" "அதெல்லாம் பசிச்சா தான டீச்சர் ...படுக்க ஓரத்துலையே டப்பாவுல போட்டுரொப்பி வச்சிட்டுத்தான் வாறது இங்க. அவுகளுக்கு ரெண்டு நாளா மலச் சிக்கவேற .சும்மாவே பசி இல்லம்பாக இப்போ ஒரு காப்பி குடிக்க கூட கஷ்டப் படுதாக" நல்ல பச்ச வாழப் பழம் ஒரு சீப்பு வாங்கி கை எட்டுற தொலாவுல வச்சிட்டுவந்திருக்கேன் சாயங்காலமே போய் பார்த்தா சொல்வாக கக்கூஸ் போனாகளாஇல்லியான்னு" டெட்பான் தான் அவுகளே வச்சிக்கிடுவாக ." "ஏன் டீச்சர் பச்ச வாழப் பழம் வாங்கி வச்சிங்க ரஸ்தாளி நெல்லா ருசியாஇருக்குமே அத வாங்கி வச்சிட்டு வந்திருக்கலாமே ? நெல்லா இளக்குமேரஸ்தாளியும் ." ரேணுகா டீச்சர் இப்படிச் சொன்னதும் சந்திரா பாய் டீச்சர் சிரித்துக் கொண்டு ; "என்ன டீச்சர் இப்படிச் சொல்லிட்டீக ...என்ன இருந்தாலும் பச்சப்பழம் ருசி ரஸ்தாளி தராது ...பச்சப் பழம் ..பச்சப் பழம் தான் .நீங்க எப்டி இப்டிச்சொல்றீகன்னு தெரியல ! இதற்கு ரேணுகா டீச்சர் கொஞ்சமே கொஞ்சம் திகைத்தார் போல அதிருப்தியாய்முகத்தை வைத்துக் கொண்டு ; "இல்லைங்க டீச்சர் ரஸ்தாளி ருசியே தனி , லேசா இனிப்பும் புளிப்புமா அந்தருசி பச்சப் பழத்துல காணாது ! " பச்சப் பழம் துவர்ப்பா இல்ல இருக்கும்சமயத்துல இனிப்பு கூட காணாது " சப்புன்னு இல்ல இருக்கும் " சந்திர பாய் டீச்சர் பதிலுக்கு தன தரப்பு வாதமாய் ஏதாவது சொல்லியாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தால் இப்போது ; "அய்யே ...ரஸ்தாளியும் தான் சமயத்துல சவ சவன்னு ருசிய இல்லாம சப்புன்னுஇருக்கும் , சுமாரான பழத்தைக் காட்டிலும் மொந்தையா இருக்கற ரஸ்தாளிப்பழம் என்னிக்குமே இனிச்சு கண்டதில்லை நான். என்ன இருந்தாலும் பச்சைப்பழம் பச்சைப் பழம் தான் ." ரேணுகா டீச்சர் தன் பிரதிவாதித் தனத்தை நிறுவுபவளைப் போல நெற்றிசுருக்கி சந்திரா பாய் டீச்சரைப் பார்த்து ; "அய்யய்யே ...சந்திரா பாய் டீச்சர் நீங்க உங்க பக்கத்துக் கடைல சல்லிசாகிடைக்குதுன்னு மாமியார்க்கு பச்சப் பழம் வாங்கித் தந்து ருசியாஇருக்கும் ன்னு ஏமாத்தலாம் ,அதுக்கு நானும் அதை ஒத்துக் கிட முடியுமாஎன்ன ? எங்க வீட்லஎல்லாம் சின்னப் புள்ளைங்க கூட நம்பாதுங்க பச்சப் பழம் தான் ரஸ்தாளியக் காட்டிலும் ருசி ன்னு சொன்னா " திகைத்துப் போவது இப்போது சந்திரா பாய் டீச்சர் முறையானது ; என்ன இந்தRENUGA டீச்சர் சாதாரண வாழைப் பழ விவகாரத்தில் மாமியார் மருமகள் உள்அரசியலை எல்லாம் நுழைத்துப் பேச ஆரம்பித்து விட்டாளே என்று ; உட்கார்ந்து பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவிகளுக்கு விஷயம் ரொம்பவும்சுவாரஷ்யமாகிப் போனது போலும் ; பரீட்சை முடியும் நேரமாகி விட்டபடியால்டீச்சர்களின் வாய் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது பொழுதுபோக்காக இருந்திருக்கும் . அந்த நாளின் கடைசியில் எந்தப்பழம் ருசியானது என்பது தீர்மானமானதோஇல்லையோ ? சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும் இடையில்இருந்த சுமூகமான ஒரு உறவு குழைந்து சீர் கேட்டுப் போனது . அடுத்து மேனாவுக்கு முழுப் பரீட்சை லீவு விட்டதும் பாட்டியோடு சேர்ந்துகேபிள் டி.வி .யில் பக்திப் படம் பார்க்கவே நேரம் சரியாகிப் போனது.தினமும மத்தியானத்தில் கந்தன் கருணை ,ஆதி பராசக்தி,முப்பெரும்தேவியர்,ஸ்ரீ வள்ளி என்று பக்தி சொட்டச் சொட்ட படங்கள் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் திருவிளையாடல் படம் பார்த்த நாளில் தான் அவளுக்குமறுபடியும் சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும் இடையில்நடந்த பழப் பிரச்சனை உள்ளபடியே திருவாளர் முருகன் மற்றும்பெருவாளர்(ஞானப் பழத்தைப் பெற்ற பெற்றல் பெறுவாளர் !) விநாயகரால் நினைவூட்டப்பட்டது. அதாகப் பட்டது ... "பழம் என்றாலே ஆதியில் இருந்தே பிரச்சினை தான் போலும் " என்று பாட்டியிடம் பெரிய மனுஷி போல கொண்டாள் அவள். பாட்டியும் ஆர்.கே நாராயணின் "சுவாமியும் சிநேகிதர்களும் " கதையில்வரும் பாட்டி போல மேனா சொன்னதற்கு பள்ளி விஷயம் எல்லாம் தெரிந்தார்போலொரு பாவனையில் பெரிதாக சப்தமெழ " ம்ம் " கொட்டிக் கொண்டாள் .
Friday, December 31, 2010
சால்னாக்கடை சாமுண்டீஸ்வரி ...
என் கிளாஸ்மெட் சாமுண்டீஸ்வரியின் அப்பா தான் புரோட்டா மாஸ்டர்.அவரே தான் செல்லேரியம்மன்கோயில் பூசாரியும் கூட. புரோட்டாவும் நானே பூசாரியும் நானே கதையாகரெட்டைக் குதிரை சவாரி அவருக்கு .கோயில் பொங்கலுக்கு கிடா வெட்டுபிரசித்தம் என்பதால் ஒரு சால்னாக் கடை ஆள் பூசாரியாய் இருப்பதில்அம்மனுக்கு எந்தக் கோப தாபங்களும் இல்லாமலிருந்து வந்தது .
சாமுண்டீஸ்வரி அந்தக் கால பாப் கட் பேரழகி ,முடியை ஏன் சினிமாவில் குட்டைபாவாடை கட்டி ஆடும் விஜய லலிதா போல கட்டையாக அப்படி வெட்டிக் கொள்கிறாள்என்று நாங்கள் கேட்டால் அவள் பதில் ஏதும் சொன்னதே இல்லை.கூச்சமாய்சிரித்து வைப்பாள். எப்போதேனும் ரீசஸ் பீரியடில் தண்ணீர் குடிக்கபோகிறோம் என்ற பெயரில் நாங்கள் வடக்குத் தெருவை சுற்றி வந்தால் அங்கேஅவளது வீடு கம் புரோட்டாக் கடை பனை ஓலைக் கூரையில் செருகி வைத்திருக்கும்பழைய ராணி புத்தக அட்டையைக் காட்டுவாள் .
நூற்றுக்கு நூறு படத்தில்விஜயலலிதா டான்ஸ் போஸ் இருக்கும் அதில் ,.அந்தப் பாடத்தில் தான்விஜயலலிதாவுக்கு என்ன ஒரு அழகு கூந்தல் ! இப்படி நினைத்துக் கொண்டு தான்அந்தப் புத்தகப் படத்தைக் காட்டி அவளது அப்பா ஒவ்வொரு முறையும் தனமகளுக்கு ஊர் நாவிதரிடம் முடி வெட்டி விடுவார் போல என்று நினைத்துக்கொண்டோம் நாங்கள் .அது நிஜமும் கூட. பூசாரி விஜயலலிதாவின் மிகப் பெரியரசிகராக இருந்தார் என்பது ஊரறியும் .
அம்மாவுக்கு சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் சத்துணவு டீச்சர் வேலை,அப்பாவுக்கோ உத்தியோகம் மதுரைக்கு அந்தப் பக்கம் அதனால் வாரம் ஒரு முறைவந்து போவார் .அப்பா வரும் போதெல்லாம் மதியம் சாமுண்டீஸ்வரி புரோட்டாஸ்டால் சால்னா மணக்கும் எங்கள் வீட்டு வட்டில்கள் தோறும் .சால்னாவில்மருந்துக்கும் ஒரு சின்ன கோழித் துண்டோ ...கறித் துண்டோ இருக்கவேஇருக்காது,வெறும் சுடு தண்ணீரில் தேங்காயை மசால் கரைத்து அறைத்து விட்டதினுசில் இருந்தாலும் அப்படியோர் ருசி .
மத்யான வாக்கில் பெரும்பாலும் நான் தான் புரோட்டா வாங்கப் போவேன் .எண்ணெய் கசிந்த தினத் தந்தி பேப்பரில் கசங்கிய வாழை இலையை பரத்திஏழெட்டு பத்து புரோட்டாக்களை அடுக்கி நீட்டாக மடித்துச் சுற்றி மேலே சரடு கட்டி முறுக்கி எடுத்து பெரிய தேக்சா மூடி மேலே வைத்து தள்ளி விடுவார். " இந்தா எடுத்துக்கோ " என்பதாக;
சால்னா வாங்க வீட்டிலிருந்து திருக்கு செம்பு எடுத்துப் போவேன் நான்.முக்கால் சொம்பு நிறைக்க சால்னா கொதிக்கும் .
சூடான எண்ணெய் புரோட்டாவும் கருவேப்பிலை மிதக்கும் சால்னா வாடையுமாக ஒருகுதூகல மனநிலை வாய்க்கும் அப்போது .
புரோட்டா சாப்பிடும் ஆசை ஒரு பக்கம்இருந்தாலும் பெரிதும் ஈர்த்த ஒரு விஷயம் ;
புரோட்டா மாஸ்டர் புரோட்டா தட்டும் லாவகம் தான் .
"இந்த வெயிலில் நான் வடக்குத் தெரு வரை எல்லாம் போக மாட்டேன். தினமும்நானே தான் போகனுமா இன்னைக்கு தம்பி இல்லன தங்கச்சிய அனுப்புங்கம்மா "
என்றெல்லாம் போட்டி போட்டுக் கொள்ள அவசியமில்லாமல் ,அல்லது தோன்றக் கூடஇல்லாமல் நானே ஒரு பழைய வயர் கூடையும் திருக்குச் செம்பும் எடுத்துக்கொண்டு குசியாக கிளம்பி விடுவேன்.
நீள் சதுரமான பெரிய இரும்புத் தோசைக் கல் ,என்ன தான் புரோட்டாவும் அதில்போட்டாலும் கூட அதை தோசைக் கல் என்றே சொல்லிக் கொள்கிறோம்,ஏனென்றால்தோசையும் அதில் தான் ஊற்றப் படுகிறதென்பதால்! அந்தக் கல்லை பொசுங்கிச்சுடும் அளவுக்கு காய வைத்து நன்றாக காய்ந்திருக்கிறதா என்று பார்க்க தன்நெற்றி வியர்வையை புறங்கையால் வழித்து ஒரு சுண்டு சுண்டி விடுவார்புரோட்டா மாஸ்டர். கல் எறும்பு கடித்த பச்சிளம் குழந்தை போல சுரீரென்றுவீறிடும். இது நல்ல பதம் போல .
என்னென்னவோ வித்தையெல்லாம் காட்டி உருட்டி வைத்த மைதா உருண்டைகளைஇஷ்டத்துக்கும் நாளா பக்கமும் வீசி வீசி தட்டி கொட்டி சற்றேறக் குறையவட்டம் எனும் ஒரு வடிவத்தில் புரோட்டாவாக்கி அந்தக் கல்லில் சாதாரணமாகஅன்றி வீசி வீசிப் போடுவார். ஒரு பத்து பதினோரு புரோட்டாக்களை ஒரே தடவைஇப்படி வீசி முடித்ததும் அதில் ஒரு அகப்பை பாமாயிலை விட்டு திருப்பிப்போடுவார் .பாமாயில் மனம் நாசி நிறைத்து திகட்டினாலும் கூட இந்த வேடிக்கைசலித்ததில்லை எனக்கு.
முதல் சுற்று புரோட்டாக்களை எடுத்ததும் அடுத்த ஈடு புரோட்டாக்களை கல்லில்வீசும் முன்பாக படு சுத்தக்கார பெருமாளாக எரவாணத்தில் செருகி வைத்த ஒருபக்கம் மட்டுமே குறிப்பிடத் தக்க வகையில் தேய்ந்து போன கட்டை விளக்குமாற்றை எடுத்து "சரக் ...புருக்கென்று " கல்லில் இட வலமாக விட்டுபரத்தி உள்ளிருக்கும் தீய்ந்த புரோட்டாத் துணுக்குகளை பெருக்கித்தள்ளுவார்.இந்தக் காட்சி காணக் காணத் தெவிட்டாது. அப்படியோர் லாவகம்மாஸ்டரின் கைகளுக்கு ,ஒரு முறை கூட அதிக பட்ச நேரம் எடுத்ததில்லை, ஒரேநொடி தான். பிச்சு பிசிறுகள் இன்றி கல் எண்ணெய் மினுங்க சுத்தமாகி சூடுதணியாமல் புகை மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் , கல்லின் சூட்டைத்தணிக்கவே பிறவி எடுத்ததைப் போல அடுத்த ஈடு மைதா உருண்டைகள்புரோட்டாவாகத் தயாராய் தேக்சா மூடி மேல் நிற்கும்.
இதெல்லாம் ஓரிரண்டு வருடங்களில் முடிவுக்கு வந்தது.
நாங்கள் அப்பாவின் ஊருக்கே மறுபடி போக வேண்டியவர்களானோம் .
அங்கே புரோட்டாக் கடைகளைக் காணோம் ,ஆனால் நான்கைந்து மிக்சர் கடைகளும்காபிக்கடைகளும் இருந்தன. எழுபத்தி ஐந்து பைசாவுக்கு நூறு கிராம் மிக்சர்.வெறும் ஐம்பதே பைசாவுக்கு சுமாரான காபி ,முப்பது பைசாவுக்கு வடையும்போண்டாவும் கூட கிடைத்தது. சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் அதே பழைய வயர்கூடையும் திருக்கு செம்பும் இப்போது மிக்சருக்கும் காபிக்கும் என்றானது.
புரோட்டா மாஸ்டருக்குப் பதிலாக இப்போது ஜம்பலிபுத்தூர் டீ மாஸ்டர் ஒருவர்வாய்த்தார். டீ மாஸ்டர் தான் காப்பியும் ஆற்றுவார் என்றாலும் அவருக்குபெயரென்னவோ டீ மாஸ்டர் தான்.இந்த டீ மாஸ்டர் காபி ஆற்றும் அழகே அழகு.நல்ல உயரமான மனிதர் தன் முழு உயரத்துக்குமாக காபியை கண்ணாடி தம்ளர்நிறைக்க நிறைக்க நுரை பறக்க விட்டு சர்...சர் என்று ஆற்றினால் அது ஒருகண் கொள்ளாக் கட்சியாகாதோ!
ஜீரா தோசை என்றொரு வஸ்து கூட இந்த மாஸ்டரால் தான் எங்களது ஊரில் அன்றையநாட்களில் பிரபலமானது. இந்த மாஸ்டருக்கும் கடை உரிமையாளரானஜம்பலிபுத்தூர் நாயக்கருக்கும் சம்பள விசயமாக ஏதோ வாக்கு வாதம் வந்துசில பல மாதங்களில் மாஸ்டர் வாக் அவுட் ஆனார்.
பேக் டு தி புரோட்டா மாஸ்டர் ...
புரோட்டா மாஸ்டருக்கு வயசாகிப் போனதால் இப்போதெல்லாம் முழு நேரப்பூசாரியாகி விட்டார்.நோ புரோட்டா அட் ஆல் . புரோட்டாவுக்கு பாமாயிலைஅகப்பை நிறைய அள்ளி ஊற்றும் பாவனையில் கை நிறைய திருநீறை அள்ளி அள்ளிபக்த கோடிகளின் முகமெல்லாம் வீசிக் கொண்டிருக்கிறார் இப்போது.
சாமுண்டீஸ்வரி பாப் கட் தலைமுடியை இப்போது தன் மகளின் தலைக்கு இடம்மாற்றி விட்டிருந்தால் போலும் .விஜயலலிதா ஹேர் ஸ்டைல் இப்போது அடுத்ததலைமுறையின் தலைக்கு ட்ரான்ஸ்பர் ஆகியிருந்தது .
பொங்கலுக்கு கோயிலுக்குசாமி கும்பிடப் போன போது பாப் கட் முடி சிலும்பி எழ அந்தக் குட்டிவெட்கமாய் என்னைப் பார்த்து சிரித்தது அதன் அம்மாவைப் போலவே .
டீ மாஸ்டரை மறந்தே போய்விட்ட பல வருடங்களின் பின் ஒருநாள் நள்ளிரவில்தேனீ டூ சென்னை பேருந்துப் பயண தேநீர் நிறுத்தத்தில் தேமேவெனவிக்கிரவாண்டியில் ஒரு காபிக் கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்தார்.
புரோட்டா மாஸ்டர் பூசாரியாகலாம் டீ மாஸ்டர் கடைசி வரை டீ மாஸ்டர் தான்போல ! என்று நினைத்துக் கொண்டே பஸ்ஸில் ஏறி என் இருக்கையில் அமர்ந்துவிட்டுப் போன தூக்கத்தை தொடர ஆரம்பித்தேன்.
மழை வரப் போவதற்கு அறிகுறியாய் ஈர காற்றில் நீர்த் துளிகள் மிதந்துவந்து கன்னம் தீண்டிப் பறந்தன ஜன்னல் வழியே...
எங்கும் மிதந்து பறக்கின்றன நீர்த் துளி மேகங்கள் . பழைய பிஸ்கட் கலர்வயர் கூடை ,திருக்கு செம்பு,புரோட்டா மாஸ்டர்,டீ மாஸ்டர்...சாமுண்டீஸ்வரி அவளது பெண் குழந்தையின் வடிவில் .
Tuesday, November 2, 2010
டிஸ்கோ பாவாடை ...
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.
செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.
கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .
பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.
தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.
ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்
போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.
காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.
போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.
பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.
ங்கே விட்டேன் ?
ம்ம்..டிஸ்கோ பாவாடை;
பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.
தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.
சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!
தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.
"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "
"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "
"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."
அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு
"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "
என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.
மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.
பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)
நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.
"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)
தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!
அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!
தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!
இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.
தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,
இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .
தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .
தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,
தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.
தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .
யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?
வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!
அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.
கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .
டிஸ்கோ பாவாடை ...
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமிருக்கிறது .கன்னிசேரி செட்டியார் சைக்கிளில் துணி மூட்டை கட்டிக் கொண்டு ஊரை வலம் வரத்தொடங்கி விட்டார்.
செட்டியார் நல்ல தாட்டியான மனிதர் கன்னங்கரேல் சதுர முகத்தில் பழுப்பு
விழிகள் பல்லாங்குழியாட சைக்கிளின் இரண்டு ஹேன்ட் பார்களிலும் வாயகன்ற
பெரிய சீட்டிப் பைகளில் ரகவாரியாக நிறவாரியாக ஜாக்கெட் பிட்கள் அடுக்கிக்
கொண்டு பின்புற கேரியரில் மிலிட்டரிக் கம்பளியில் சுற்றிய துணி மூட்டை.
கன்னிசேரி செட்டியாருக்கு இந்த ஊரில் வளப்பமான வியாபாரம் இருந்து வந்தது
,அவரிடம் எடுக்கும் துணிமணிகள் புது மோஸ்தர் என்று அந்த ஊர் மக்கள்
நம்பினர் ,டி. வி பரவலாக எல்லா வீடுகளுக்கும் வரும் வரையிலும் அந்த
நம்பிக்கை நீடித்ததெனலாம் .
பத்மாவுக்கு இந்த தீபாவளிக்காவது டிஸ்கோ பாவாடை வாங்கி கட்டிக் கொள்ள
வேண்டும் என்று ரொம்பத் தான் ஆசை. முந்தைய தீபாவளிக்கே ருக்குவும்
,ஜெயாவும் டிஸ்கோ பாவாடை கட்டிக் கொண்டார்கள். டிஸ்கோ பாவாடை என்ன சாதாரண
சீட்டிப் பாவடையா ? போனால் போகிறதென்று விட்டு விட.
தெருக் கூத்து நாடகங்களில் ராஜா ராணி வேஷம் கட்டுபவர்கள் உடுத்திக்
கொள்ளும் துணிகளைப் போல அந்தப் பாவடைத் துணி மெத்து மெத்தென்று
இருக்கும். ,பாவாடையின் பார்டரில் செய்திருக்கும் பூ வேலைப்பாடுகளில்
உள்ளே ஸ்பாஞ் வைத்திருப்பார்களாய் இருக்கும்,அப்படி ஒரு மெது
மெதுப்பு,ருக்குவின் பாவாடையை அடிக்கடி தொட்டுத் தொட்டு பார்த்ததில்
தெரிந்து கொண்ட சேதி இது.
ஜெயாவின் டிஸ்கோ பாவாடையில் அதிசயமாக சலங்கை கூட வைத்திருக்கும் ,அவள்
நடக்கும் போதும் அசையும்
போதும் ஏன் விளையாட்டுப் பீரியடில் குடை ராட்டினம் சுற்றும் போதும் கூட
சலங் சலங் என ஓசை எழுப்பி ஓயும்,சலங்கைமணி வைத்து தைத்த டிஸ்கோ பாவாடை
கட்டிக் கொண்டிருப்பதால் ஜெயா ரொம்பத் தான் பீற்றிக் கொள்வாள்.
காவியம்,மணிக் காவியம் சொல்லி பச்சைக் குதிரை தாண்டும் போது
குனிந்திருப்பவளின் முதுகில் தாண்டுபவளின் கால் படக்கூடாது, ஜெயா தான்
சலங்கை வைத்த டிஸ்கோ பாவாடைக்காரி ஆயிற்றே அவளுக்கு மட்டும் மூன்று தடவை
மாப்பு உண்டு. அவள் நடுவிரலைப் பிடித்து நறுக்கென்று கடித்து வைத்தால்
என்ன என்று பத்துவுக்கு(பத்மா) ஆங்காரமாய் வரும். எல்லாம் இந்த டிஸ்கோ
பாவாடையால் தான்.
போன வருஷ பொங்கலுக்கே டிஸ்கோ பாவாடை வாங்கிக் கொடுத்திருக்கலாம் ,இந்த
அம்மாவுக்கு அதில் என்ன நஷ்டமோ?தாத்தாவுக்குப் பிடிக்காது ...வைவார்
பத்துக்குட்டி என்று பாசிப்பயறு நிறத்தில் பாலிஸ்டர்(பாலிஎஸ்டர் )
பட்டுப் பாவாடை தான் எடுத்து தைத்தார்கள்.
பத்துவுக்காவது பரவாயில்லை அவளது தங்கை சத்யாவுக்கு நட்சத்திரக் கழுத்து
வெட்டிய வாடாமல்லிக் கலர் பாலிஸ்டர் பட்டுப் பாவாடை.நட்சத்திரக்
கழுத்தின் அறு முனைகளை கத்தி போல வைத்து வெட்டி விட்டார் போலும் குண்டுச்
செட்டியார் அந்தப் பாவாடைக்கு பொருத்தமான சட்டையை சத்யாவை போட
வைப்பதற்குள் அம்மாவுக்கும் அவளுக்கும் மச்சு வீட்டுத் துணி பீரோ முன்
மாமியார் மருமகள் சண்டை தான்.
ங்கே விட்டேன் ?
ம்ம்..டிஸ்கோ பாவாடை;
பத்துவுக்கு டிஸ்கோ பாவாடை ரொம்பப் பிடித்திருந்தது, தோழிகளின்
கூட்டத்திற்குள் தன் அந்தஸ்தின் அடையாளமாய் அந்தப் பாவாடையை அவள்
எண்ணிக் கொண்டிருந்தாள்.
தீபாவளி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பாட்டியை நச்சரிக்க
ஆரம்பித்திருந்தாள். அம்மாவிடம் கேட்டுப் புண்ணியமில்லை. கணவரை விட்டுப்
பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் சூழலில் தாத்தா வீட்டில் அம்மா
பேச்சுக்கு அத்தனை எடுப்பில்லை என்பது பொங்கலுக்குப் பின் பத்துவுக்கு
எப்படியோ புரிந்து விட்டிருந்தது.
சித்தியிடம் கூட சொல்லி வைத்திருந்தாள். சித்தப்பா என்ன சொல்வாரோ?!
அதெல்லாம் யோசிக்கத் தெரியவில்லை இன்னும்!
தேவகோட்டை மில்லில் சூப்பர் வைசராய் இருந்த சின்ன மாமா கண்டிப்பாய தீபாவளிக்கு
ஊருக்கு வருவாரே...அவரிடமும் போன லீவுக்கு வந்திருந்த போதே அப்ளிகேசன்
போட்டு வைத்திருந்தாள்.
"சனிக்கிழம,புதங்கிழம மறக்காம எண்ணெய் தேய்ச்சுக் குளிடா "
"கத்தரிக்கா திங்காத அரிப்பு வரும் "
"ஒண்ணாந்தேதி மறக்காம மணியார்டர் அனுப்பிரு இல்லன அப்பா உரம் வாங்க திண்டாடுவார்."
அம்மாவும் அக்காக்களும் இப்படி ராகம் பாடுகையில் .
சம்பிரதாயமாய் தலை குழுக்கி வைக்கையில்,போனால் போகிறதென்று கழுத்தை
கட்டிக் கொண்டு
"ஊடே ஊடே ...மாமா தீவாளிக்கு பாவாட வேணும்...மாமா...தீவாளிக்கு டிஸ்கோ
பாவாட ...கன்னி சேரி செட்டியார் ...டிஸ்கோ பாவாட வாங்கித் தருவெல்ல "
என்று காதில் தொண தொணத்துக் கொண்டிருந்த பதினோரு வயது பத்துவின்
விண்ணப்பத்துக்கும் தலையை குலுக்கி விட்டுப் போயிருந்தான்.
மாமா கூட டிஸ்கோ பாவாடை வாங்கித் தரலாம்.
பெரிய மாமா கல்யாணத்துக்கு இதே டிஸ்கோ பாவாடை கேட்டு அழுது பெரிதாய்
ஆகாத்தியம் பண்ணிக் கூட பார்த்திருந்தாள். இப்பிடி அழுதா உன்ன வச்சு
போட்டோ எடுக்க மாட்டாங்க ,என்று பயம் காட்டி அம்மா அந்த ஆகாதியத்துக்கு
அரைமணி நேரம் கூட ஆயுசில்லாமல் பண்ணி விட்டாள். (துரோகி அம்மா !)
நடுமாமா கல்யாணத்துக்கு கேட்கும் போதும் இப்படித் தான் எதோ ஒரு சாக்கு
,குடும்பத்தில் எல்லார்க்கும் ஜவுளி எடுக்க மதுரை வரை போன
பாட்டி,அம்மா,சித்தி,பெரியத்தை கும்பல் பத்துவுக்கும் சத்யாவுக்கும் சைனா
சில்க் பாவாடை தான் எடுத்து வந்திருந்தார்கள் ,பார்த்ததுமே பத்துவுக்கு
கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டன.
"போடி அழுகுணி ,இந்தத் துணிக்கென்ன? இதான் இப்ப ஸ்டைலாம் பெரியத்தை
கண்களை சிமிட்டிக் கொண்டு சொன்னாள். " (துரோகி நம்பர் 2 !)
தாத்தா பெரிய ஆளாம்..பெரிய ஆள்!!!
அவரெல்லாம் ஒரு ஆளாம் ஆள் ! பத்துவுக்கு தாத்தாவை நினைக்கையில் கோபம்
கட்டு மீறிக் கொண்டு விடும்,அதனால் நினைப்பதில்லை். வேறு வழி? அவரை என்ன தான் செய்து விட முடியும்?!
தாத்தாவுக்கு பெண் குழந்தைகள் நதியாக் கொண்டை போட்டு கண்ணில் குளிரக்
குளிர மை பூசி காது வரை நீட்டி விட்டால் பிடிக்காது,கலர் கலராய் சாந்துப்
பொட்டு வைத்துக் கொண்டால் பிடிக்காது ,பள பளா ஜிகினா பாவாடை சட்டை
பிடிக்காது,சிவப்பு,பச்சை,வாடாமல்லி,மஞ்சள் தவிர வேறு நிறங்களே அவரது
அகராதியில் கிடையாது. இப்படி ஒரு தாத்தாவை வைத்துக் கொண்டு அவளெங்கே
கூட்டாளிகள் முன் அம்பாரி ஏறுவதாம்?!
இப்படியாக டிஸ்கோ பாவாடை தாண்டியும் பல வழிகளில் பத்துவுக்கு தாத்தா
பெரும் சோதனையாகத் தான் இருந்தார்.
தாத்தா எப்படியோ இருந்து தொலைக்கட்டும் ,
இப்போது தீபாவளிக்கு டிஸ்கோ பாவாடை எடுத்துத் தரப் போவது யார்? அது
மட்டும் தான் பத்துவின் பிஞ்சு மனதில் பெரிய பாரமாய்ப் படிந்து போனது .
தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்பே அம்மாவும் பாட்டியும் பத்து அழ அழ
கன்னிசேரி செட்டியாரிடம் டிஸ்கோ பாவாடை துணி தவிர வேறு என்னென்னவோ
துணிகளை எடுத்து குண்டு செட்டியாரிடம் தைக்கப் போட்டார்கள் .
தீபாவளிக்கு நான்கைந்து நாட்கள் இருக்கையில் ராஜபாளையத்து பெரியத்தை ரோஸ்
கலர் நெய்ல் பாலிஷ் வாங்கிக் கொண்டு வந்து தந்தாள் பத்துவுக்கும்
சத்யாவுக்கும்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சித்தி வந்து இறங்கி விட்டாள்,
தீபாவளிக்கு முதல் நாள் சின்ன மாமா வந்து இறங்கினான்.
தீபாவளி அன்று இல்லாத அதிசயமாய் மாமனாருடன் ஏற்பட்டு விட்ட
மனஸ்தாபத்தில் மூன்று வருடங்களாய் எட்டியும் பாராமல் இருந்த பத்துவின்
அப்பா கூட ஏகமனதாய் பிள்ளைகளுக்காய் பெண்டாட்டி ஊருக்கு வந்து இறங்கி
விட்டார் .
யார் வந்தாலும் தான் என்ன? பத்துவுக்கு சந்தோசம் வந்து விடுமா?
வராத டிஸ்கோ பாவாடைக்காய் பத்து துக்கம் காத்துக் கொண்டிருப்பது
அவர்களுக்கு என்றைக்குப் புரியும் ?!
அவர்களுக்குப் புரிவதற்குள் பத்து பருவம் தப்பிப் போனவள் ஆனாள்.
கடந்து போகின்றன வருடம் தோறும் பருவம் தப்பா தீபாவளிகள் .
Wednesday, September 29, 2010
The Journey ( பயணம் )
கமலா அடிக்கடி கண்ணாடி பார்த்து சலித்தவாறு இருந்தாள். சலிப்பென்றால் பெருங்கொண்ட சலிப்பு .
சற்றைக்கெல்லாம் ஆட்டோ வந்து விடும் ,அவள் புறப்பட்டாக வேண்டும். அக்கா காரோடு வந்து கொண்டிருப்பதாக அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள்.காரோ ..ஆட்டோவோ எதுவானாலும் அவள் சீக்கிரமே புறப்பட்டுத் தான் தீர வேண்டும் .
பெரியவன் தினா டியூசனுக்குப் போயிருந்தான் ,சின்னவனுக்கு இந்த தை வந்தால் மூன்று வயது முடிகிறது,எந்தப் பள்ளியில் சேர்ப்பதென்று நினைத்த மாத்திரத்தில் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது,ஆனால் பொங்கி வழியக் காணோம் ,
அம்மா ஆதூரமாய் நெருங்கி வந்து,
"கமலி சீலயச் சுத்திக்கிறியாம்மா ...நாழி ஆச்சு பாரு"
என்றாள் மிக மிக மிருதுவாய்,எங்கே கூடக் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் மகளுக்கு வலிக்குமோ என்று அஞ்சுவதைப் போல!என்ன வலித்து என்ன ?!
"சீலையெல்லாம் வேணாம்மா ...இந்த நைட்டி போறும். இடுப்புல நிக்கான்டாமா சீலை? நழுவிண்டே இருக்கச்சே என்னத்துக்கு சீலையச் சுத்திண்டு !"
கை நடுங்க மகளைப் பார்வையால் அணைத்துக் கொண்ட அந்தம்மாள் மனசும் நடுங்கிப் போனவளாய் எதுவும் சொல்லாமல் பேசாது அவளையே பார்த்தவாறு இருந்தாள்.
கமலியின் புடவைக் கட்டு வெகு நேர்த்தி,
அந்தத் தெரு மொத்தமும் இளம்பெண்கள் அவளிடம் வந்து புடவை கட்டிக் கொண்டு போனதுண்டு."கமலிக்கா மாதிரி எட்டு ப்ளீட்ஸ் வச்சு புடவை கட்டனும், விசிறி மாதிரி அழகா படிஞ்சு நிக்கணும் ப்ளீட்ஸ் தம்பி மனைவியின் தங்கை ஆசை ஆசையாய் புடவையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவாள் கமலியிடம்.
எந்நேரமும் வாகனம் வந்து விடும் அறிகுறிகள் இருந்தாலும் இன்னும் வரவில்லை தானே!
கமலி மீண்டும் சலித்துக் கொண்டு அந்த நீண்ட மரப்பீரோவில் பொருத்தப் பட்ட பெரிய பெல்ஜியம் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டாள், ஒரே நொடி தான் தனக்குத் தானே சகிக்க மாட்டாமல் முகம் சுளித்துக் கொண்டு ஒதுங்கி மெல்ல நடந்து தூங்கிக் கொண்டிருந்த சின்னவனின் அருகே வந்தாள்.
மூணே வயசு தானே! பிஞ்சு பிஞ்சாய் ரப்பர் பந்து போன்ற கைகளும் கால்களும் "அம்மா என்னைக் கொஞ்சேன்" என்று உயிரை வதைத்தன. அவனைத் தொட்டு தூக்கி அணைத்து முத்தமிடும் ஆசையை வெகு பிரயத்தனப் பட்டு அடக்கிக் கொண்டு ஏக்கத்தோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தாள்.
கனத்த சிப்பி இமைகளுக்குள் குண்டு விழிகள் உருண்டன,பிள்ளை எதோ கனவு காண்கிறானோ! எழுந்து விட்டால் வம்பு!
அம்மா இவன நீ நல்லா வளர்பியோன்னா ! ரொம்பச் சமத்தும்மா ! பெரியவனா அவன் அப்பா பாட்டி கிட்ட ஒப்படைச்சுடு ,இவன நீ தான் ...நீ தான் பார்த்துப்பியாம்.கொஞ்சம் பேசினாலே கமலிக்கு மயக்கம் வரும் போலிருந்தது .
அம்மா கலங்கிப் போனவளாய் அவசர அவசரமாய் சத்தியம் செய்பவளைப் போல
"சரிடிம்மா,சரிடிம்மா ,எம் பேரன நான் வளர்ப்பேன்டி ஒரு ராஜாவைப் போல நான் வளர்ப்பேன், நீ கலங்காதடி என் சித்திரமே!"
மனம் அது பாட்டுக்கு எங்கெங்கோ சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.
போன் ஒலித்த சப்தம் கிணற்றுக்குள் இருந்து கேட்பதைப் போல கமலியின் காதுகளை உரசிச் சென்றது.அவள் அலட்டிக் கொள்ளாமல் எங்கோ பார்வையை நிலைக்க விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தாள்.
போனில் அழைத்தது கமலியின் கணவன் ராஜாராமன் தான், பாவம் கடந்த மூன்று மாதங்களாக நாய் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறான் .
என்ன பேசினானோ மாமி மருமகனிடம் "தினாவையும் அழைச்சுண்டு போயிடலாமே தம்பி,இவ அவனப் பார்க்காம தவிச்சிண்டில்ல இருக்கா" என்றாள் மெல்ல விசித்துக் கொண்டே.
போனை வைத்து விட்டு மகளிடம் வந்தவள்.
ஏண்டி குழந்தே ...சின்னவன எழுப்பித் தரட்டுமா ,செத்த நேரம் விளாட்டு காட்றையா?
அவள் எதோ சம்பிரதாயத்துக்கு தன்னை சமாதனப் படுத்தத் தான் கேட்கிறாள் என்பதைப் போல "வேண்டாம் என" மெல்லக் கையசைத்தாள் கமலி .
கமலி உங்காத்துக்காரர் எவ்ளோ டிப் டாப்பா இருக்கார் பாரேன்,
அன்றைய கமலிக்கு இந்த வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் அத்தனை பர பரப்பாயிருக்கும்.இப்போது நினைத்துப்பார்த்தால் "இருக்கட்டுமே...போ " என்பதான ஒரு அலட்சியம்!
கல்யாண அல்பத்தை திறந்து பார்த்து வருசத்திற்கு மேல் ஆகிறது.
அந்தக் கமலியா இந்தக் கமலி!
சின்னவனை கார்த்தால எழுப்பும் போதே கைல ஒரு முழு பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட் வைச்சிண்டு தான் எழுப்பனும்,இல்லேனா அழுது ஆகாத்தியம் பண்ணி ஊரைக் கூட்டுவான்.
தினாவுக்கு அடிக்கடி புழுத் தொல்லை வரும், சர்க்கரை டப்பாவ எடுத்து ஒளிச்சு வச்சிக்கணும். இனிப்புன்னா எறும்பா வாசம் பிடிச்சிண்டு அதி வேலையா தின்னு தீர்ப்பான். இந்த அம்மா தள்ளாத வயசுல என்னான்னு சமாளிப்பா!
ரெண்டையும் குளிக்கப் பண்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுமே !
அவருக்கு ஓட்ஸ் கஞ்சியும் ,ஹார்லிக்சும் மட்டும் தான் கார்த்தால. ஒரு பொம்மனாட்டி வந்து சிசுருஷை பண்ணித் தான் தீரணும்னு இல்லை,அவர் கைலன்னா இருக்கு எம் புள்ளைங்களோட எதிர் காலம்,இன்னொருத்தி வந்து தான் தீருவாளோ!நினைத்த மாத்திரத்தில் குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி எடுக்கும் உணர்வு தலை தூக்க தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள் கமலி.
"கமலிக்கா ஆத்துக்காரர் ஆள் ஜம்முன்னு இருக்கார்" பலர் பல நேரங்களில் காற்று வாக்கில் சொன்னதெல்லாம் இப்போது ஞாபகத்தில் உறுத்திக் கொண்டு பிராணனை வாங்குகிறதே!
பிராணன்...பிராணன் !
எளவெடுத்த பெருமாளே அந்தாளுக்கு ஏன் இம்புட்டு அழக கொடுத்த நீ ? சனிக் கிழமை தவறாது இவள் விரதம் காத்த பெருமாளின் மேல் ஆத்திரம் திரும்பியது .
அக்கா காரோடு வந்து விட்டிருந்தாள்.
கமலியால் எட்டெடுத்து வைக்க முடியவில்லை.
கணவன் ஒரு புறமும் அக்கா ஒரு புறமுமாய் தாங்கி அவளை நடத்திக் கொண்டு போனார்கள் காருக்கு.
அம்மா முந்தானையில் வாய் பொத்தி சத்தமடக்கி தீவிரமாய் அழ தொடங்கி இருந்தாள்.
மெல்ல மெல்லப் புலன்கள் அடங்குவதான உணர்வு .
சுறு சுறுப்பாய் விழிகளைக் கூட அசைக்க இயலா மந்த கதி.
காருக்குள் நுழையும் முன்பே இப்போது கேட்கா விட்டால் இனி எப்போது கேட்க என்று பரிதவிப்பவளைப் போல ,கணவனின் கன்னம் தொட்டு திருப்பி திணறலாய் "ஏன்னா ஏம் பிள்ளைங்கள நன்னா பார்த்துக்குவேளோன்னா , நான் இல்லேன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு போய்டுவேளா ?
கேட்ட மாத்திரத்தில் அவளது புறங்கையை கண்களுக்குள் அழுத்திக் கொண்டு ஹோவென கதறி விட்டான் ராஜாராமன் .
"அசடே..அசடே...ஏண்டி ..ஏண்டி இப்டி பேசி பிராணன வாங்கற ,உனக்கு ஒன்னும் இல்லடி. பார்த்துண்டே இரு ,நீயும் நானும் சேர்ந்து சுபிட்சமா இருப்போம்டி நூறாயுசுக்கு,ஒனக்கு ஒன்னும் இல்லடி,நீ திரும்பி வருவடி, நம்ம பிள்ளைங்கள நல்ல வளர்க்கத் தான் போறோம், அவன் அவளைக் கட்டிக் கொண்டு அழ !
சின்னவன் படுக்கையில் புரண்டான், அக்கா மெல்ல அதட்டினாள்.
கமலி உம் புள்ள முழிஞ்சிண்டா ஒன்ன விட மாட்டான்.
எம் பிள்ளைங்க ...ஏம் பிள்ளைங்க... விக்கி விக்கி அழ வேண்டும் போலான உணர்வு நெஞ்செலாம் நிரம்பித் ததும்ப கமலி தூங்கும் தன் மகனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.
ப்ளட் கேன்சர் அவளை முக்காலும் தின்று முடித்த பின் தன் பிள்ளைகளின் ஏக்கத்தோடு கமலி காரில் போய்க் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு வெகு நிச்சயமாய் தெரியும்.
ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ ராஜாராமன் மறுபடி மணமகன் ஆகலாம்.
Monday, August 30, 2010
மிலிட்டரி நாயக்கர் ...
அந்த ஊரில் மிலிட்டரி நாயக்கர் வீடென்றால் அது சீமை ஓடு வேய்ந்த எட்டுக் கட்டு வீடு ;
அந்த வீட்டுக்கு ரெண்டு வாசத்திண்ணைகள் இருந்தன.
விடியற்கருக்கு...இன்னும் இருட்டு விலகாத சித்திரை மாசத்து கோடை ராத்திரி ,ராப்பூச்சி ரீங்காரம் இருட்டின் குறட்டை சத்தம் போல மெல்லக் கசிந்தபடி இருக்க இந்த வீட்டுத் தொழுவத்தில் சாணி அள்ளவென்றே ஜென்மமம் எடுத்தவளாய் ஊர் குப்பைக்காரன் செல்லாண்டியின் பெண்டாட்டி வெள்ளையம்மா அந்தண்டை வாசதிண்ணையில் குப்புறப் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ,
இந்தண்டை வாசத்திண்ணையில் செல்லியும் அவள் மாமியாரும் வீட்டின் எல்லாக் குஞ்சு குளுவான்களோடு நல்ல சயனத்தில்;
வீட்டு ஆம்பளை மிலிட்டரி நாயக்கரை அவரது அம்மாவும் ,மனைவியும் வெளித்திண்ணையில் படுத்து தூங்க அனுமதிப்பதில்லை என்பதால் அவர் மட்டும் வீட்டுக்கு உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நாயக்கரை திண்ணையில் படுக்க விடாததற்கு ஒரு ரசமான கதை இருந்தது அவர்களிடம் ;இந்த இருட்டில் அந்தக் கதை என்னத்திற்கு?!
இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும்.அப்படி இருக்கக் கொள்ள தான் திடீரென்று எதிர் வீட்டு முருங்கை மரத்திலிருந்து ஜிங்கென்று குதித்து இறங்கினாள் பெரிய கோதை ;அவள் இறங்கிய அறிகுறியோ என்னவோ கொல்லையில் கிணற்றுச் சகடம் "கட..கடவென்று "உருண்டு ஓய்ந்து நின்றது .
வீட்டு நாய் விக்கி சன்னமாய் குழந்தை அழுவது போல ஊளையிட்டு அடங்கியது ,என்ன இருந்தாலும் அவள் வளர்த்த நாய் ஆச்சுதே?
"செல்லி ..."
"செல்லி ..."
"ஏய் செல்லி ...வாயேன் எவ்ளோ நேரமா கூப்டுட்டு இருக்கேன் ...வா நல்லதண்ணிக் கெணறு வரைக்கும் ஒரு நட போயிட்டு வருவோம்."
வரும் போதெல்லாம் எப்படி வழக்கமோ அது போலவே அன்றும் வாசற்படியில் ஒரு காலும் தெருவில் ஒரு காலும் வைத்து நின்ற வாக்கில் தண்டை மெலிதாய் குலுங்க செந்தூரக்கமிட்ட முகத்தில் உறைந்து போன சிரிப்புடன் பெரிய கோதை சின்ன செல்லியை அழைக்க ஆரம்பித்தாள் .
செல்லி தூக்கம் கலையாதவளாய் ; கோதை தன்னைக் கையை பிடித்து இழுத்த பாவனையில் கையை உதறிக் கொண்டு ;
"இந்தா ...நான் வரல ...நீ போ ...எம்புள்ளைங்க அழும்.சின்னவன் நானில்லாம ஒத்தப் பருக்க திங்க மாட்டான்."
அவள் சொன்னால் விட்டு விடுவாளோ கோதை ;
"ஏய் கிறுக்கி ... போயிட்டு வெரசா ...வந்துரலாம்டி" இந்தா இருக்கு நல்ல தண்ணிக் கெணறு ,எந்திரி ...எந்திரி "
"ம்ம்ஹூம் ...நான் வல்ல ...நீ போ எம் புருஷனுக்கு சோறாக்கனும் ... கெழக்குத் தோடத்துல மொளகா நாத்து புடுங்கனும் ...அம்மோய் எம்புட்டு வேலயிருக்கு ! ... நான் வல்ல ...நீ போயேன் "
கோதையின் முகத்தில் உறைந்திருந்த சிரிப்பு சன்னமாய் சுணங்க...
"ம்ம்...தண்ணிக் கெணத்துக்கு தான் வல்லேங்கற ...வெறகு பெறக்க காட்டுக்காச்சும் வா போவோம் ..."
"வேணாம்...வேணாம் நான் வல்ல ...நான் எங்கயும் வல்ல "
"ஊர்கம்மாய் ரொம்பிக் கிடக்காம் ,அழுக்குத் துணி எடுத்தா ...போய் புள்ளைங்க துணியன்னாலும் துவைச்சிட்டு வரலாம் ...எந்திரி ..வா...வா "
" அழுக்குத் துணி எடுக்க வண்ணாத்தி வருவாளே ...கம்மாய்க்கு ஏன் கூப்டற நான் வல்ல..."
செல்லி மறுக்க மறுக்க கோதைக்கு ஆங்காரம் கூடிக் கொண்டே போனது போலும் ;
உக்கிரமாய் விழிகளை உருட்டியவள் கொடிக் கயிற்றில் காய்ந்து கொண்டிருந்த செல்லியின் சிவப்பு சுங்கிடிச் சேலையை படக்கென்று உருவி எடுத்து அதை சுருக்கிட்டு அதே கொடியில் தொங்க விட்டாள்,
கட்டக் கடைசியாய் ஒரு முறை அழைப்பவள் போல ;
"அடியே ...இப்ப நீ வரப் போறியா ...இல்லியா?"
அப்போதும் தூக்கக் கலக்கத்துடன் தான் செல்லி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ;
"நானெதுக்கு உன்கூட வரணும் ?" நான் வல்ல நீ போ "
" எதுக்கு வரணுமா? வரணும்டி ...நான் கூப்ட்டா நீ வரணும்.எம் புருஷன் கூப்டோடன மட்டும் வந்துட்டியில்ல ....நாலு புள்ளைங்க கூட பெத்துகிட்டியில்ல. எந்திரிச்சு வா வெள்ளன கெணத்துக்குப் போவோம்
" ஆங் ...உம்புருஷனா ... செல்லிக்குப் பொட்டில் அடித்ததைப் போல உணர்வு
"உம்புருஷனா ...உம்புருஷனா ...அம்மாடியோவ்
அ...த்...தே...அத்...தே ... யாரு வந்துருக்கா இதாரு....? ...எந்திரிங்கத்தே...எந்திரிங்க ... ..."
அலறிக் கொண்டு விழித்த செல்லி உடம்பெலாம் உதறலெடுக்க பக்கத்தில் செத்துப் போனவளைப் போல உறங்கிக் கொண்டிருந்த தான் மாமியாளை உலுக்கோ உலுக்கென்று உலுக்க ;
கோரைப் பாயில் படுத்துக் கொண்டிருந்த அந்தம்மாளும் அதிரி புதிரியாய் சேலையை அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு ;
இந்தா செல்லி ...எதுக்குத்தா ...இப்பிடி பயந்து கத்தற... மருமவளே என்னடி ஆச்சு ?
பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த தன் ஐந்து வயது கடைக்குட்டி மகனை மடியிலிட்டு இறுக்கிக் கொண்டும் மற்ற பிள்ளைகள் மூன்றையும் எங்கோ கண்ணுக்குத் தெரியாத பூதத்திடம் இருந்து காப்பவளைப் போன்ற பாவனையில் தான் வலது கையை நீளமாக அவர்கள் மேல் பரப்பி வைத்துக் கொண்டு மூச்சுக் கிடைக்காதவளைப் போல மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நடுங்கிப் போனவளாய் செல்லி அரண்டு போய் இருட்டில் கண்களை உருட்டிக் கொண்டிருந்தாள் ;
அதற்குள் சத்தம் கேட்டு தொழு வாசத்திண்ணையிலிருந்து அரக்கப் பரக்க ஓடி வந்தாள் வெள்ளையம்மா ;
"சின்ன மொதலாளிம்மா ...சும்மா இருங்க .சும்மா இருங்க ..ஒண்ணுமில்ல..ஒண்ணுமில்ல என்று செல்லியின் கைகளை இருக்கப் பிடித்துக் கொண்டு மிலிட்டரி நாயக்கரின் அம்மாவிடம் திரும்பி குசு குசுப்பாய் ...
சத்தம் போடாதிங்கம்மா ...எல்லாம் நம்ம பெரிய கோதையம்மா வேலையாத்தேன் இருக்கும்
போய் செல்லேரியம்மன் துன்னூறு எடுத்தாங்க ...பூசி விட்டா தொந்திரவு இருக்காது "
அவளா ...அவ செத்து மண் மூடிப் போயிட்டாளே...இப்ப எங்கருந்துடி வந்தா ? அச்சத்தால் வறண்டு போன நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள அந்தம்மாள் திரு திருவென விழித்துக் கொண்டு வெள்ளையம்மாளிடம் கேட்டாள் .
செத்தாலும் ...பொழச்சாலும் நாயக்கரு மொதல்ல கட்டினது கோதை அம்மாளைத் தானுங்கம்மா ,அந்தப் பாசம் விட்டுப் போகுமா !
நாண்டுகிட்டு செத்தவளுக்கு என்னடி புருஷன் பாசம்? விடிஞ்சதும் மொத்தக் காரியமா கோடாங்கிக்கு ஆள விட்டனுப்பு .
அதற்குப் பிறகு பல வருடங்கள் உருண்டு ஓடியே போயின .
செல்லி பாட்டியாகி ..கொள்ளுப் பட்டியான பின்னும் கூட இன்னும் நம்புகிறாள் அவ்வப்போது கோதை தன்னை கிணற்றில் தள்ளி சாகடிக்க அழைப்பதாக ;
உப்புப் பெறாத சுங்கிடிச் சேலைக்காக புருஷனோடு மனஸ்தாபப் பட்டுக் கொண்டு ஆறு மாத சிசுவை வயிற்றில் சுமந்திருந்த போதிலும் தூக்குப் போட்டுச் செத்துப் போன மூத்த சம்சாரம் கோதை ஆண்டாள் இன்னும் செல்லியை அழைத்துக் கொண்டே தான் இருக்கிறாளாம்.
செத்து செத்து விளையாடுவதற்காய் இருக்கக் கூடும் .
மிலிட்டரி நாயக்கர் திண்ணையில் தூங்குவதில்லை .அந்த மட்டும் புரிந்திருக்க வேண்டும் .
Tuesday, August 10, 2010
ஹமீதாக்கா ...
ஹமீதாக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை,அவளின் அக்கா ரஷீதாவை போன வருஷம் தான் மதுரையில் கட்டிக் கொடுத்தார்கள் ,கல்யாணமான மாயத்தில் ரசீதாவுக்கு உம்மா வீடு இல்லைஎன்றானது,வாப்பா போட்ட நகை பத்தலையாம்.ஒரு பொண்ணைக் கரை சேர்க்கக் கொள்ளவே வாப்பாவுக்கு நெஞ்சு வலி கண்டு விட ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் நடை கழண்டு கொண்டிருந்தது.
குடி இருக்கும் வீடும் சொந்த வீடில்லை வாடகை வீடு தான்,வாப்பா முன்னைப் போல சரி வர உத்தியோகத்துக்குப் போக ஏலாத நிலையில் ஆறு மாத வாடகை பாக்கி வேறு அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
உம்மா அழுது அழுது அதிலேயே கரைந்து விட்டவள் போல எந்நேரமும் வாப்பாவின் கட்டிலருகே ஒரு சேரைப் போட்டுக் கொண்டு உறங்கியும் உறங்காத நிலையில் ஏதோ பேருக்கு ஜீவித்திருப்பதைப் போல எந்தப் பிரஞ்சையும் இன்றி அவள் பாட்டுக்கு இருந்தாள்,நல்ல நாள் பொல்லாத நாளுக்கு ஒரு புதுத் துணி கிடையாது,வாய்க்கு ருசியாய் ஒரு மட்டன் பிரியாணி ,அடச்சே ...பிரியாணியாம்...பிரியாணி இந்தக் கேடு கேட்ட கெண்டை மீனுக்கு கூட வக்கில்லை இப்போதெல்லாம் ,ஒரு ரசம் வைத்து உளுத்துப் போன உப்புக் (வாளைமீன்) கருவாட்டை சுட்டு வைப்பது தான் ஹமீதாக்காவின் பிரமாத சமையல் வேலை,இது தவிர அவள் நாளெல்லாம் பொழுதுக்கும் சும்மாவே தான் இருந்தாள்.
ஏழாம் மாதமும் வாடகை பாக்கி நிற்கவே விடிந்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் வீட்டுக்காரி ராஜம் டீச்சர் உம்மாவிடம் வந்து ,
"மாமி நீங்க வேற வீடு பார்த்துகிடுங்க ,என் மக பிரசவத்துக்கு வரா பாம்பேல இருந்து,தொணைக்கு எங்க அம்மா வருவா,எங்க வழி உறமுறைங்க மருமகன் வழி சொந்தக்காரவுக வேற ரொம்பப் பேரு வரப் போக இருப்பாங்க.எங்க போர்சன்ல எட வசதி பத்தாது.இந்த வீட்ட ஒழிச்சுக் கொடுத்திங்கன்னா தான் சரிப்படும் ,ஆனது ஆச்சு,இந்த கொற மாசத்துக்கு இருந்துக்கிடுங்க,தாயா புள்ளையாப் பழகிட்டு டீச்சர் இப்பிடிச் சொல்லுதேன்னு நெனைக்காதீக.எங்களுக்கு வீடு வேணும் ,என்ன நாஞ் சொல்றது? அம்புட்டுதேன்"
சொல்லி முடித்து சனி விட்டது பாவனையில் அவள் போய் விட்டாள்.
டீச்சர் சொன்னதைக் கேட்ட மாயத்தில் உம்மாவுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வர ,தலையைப் பிடித்துக் கொண்டு ,
"ஹமீதா அரை லோட்டா கடுங்காப்பி போட்டு எடுத்தா,தலையச் சுத்துதுடி "
என்று மறுபடி கட்டிலில் தலையை முட்டுக் கொடுத்து சரிந்து விட்டாள் .வாப்பா தூங்கவில்லை,ஆனால் தூங்குவதைப் போல கண்களை மூடிக் கொண்டிருந்தார்.இல்லா விட்டாலும் தான் அவர் அதைத் தவிர என்ன செய்து விடப் போகிறார்?
ஹமீதாக்காவுக்கு நியாயப்படி உம்மாவின் மீதும் வாப்பாவின் மீதும் கொள்ளை கொள்ளையாய் கோபம் இருந்தாலும் அவர்களை எதுவும் சொல்ல முடியா இயலாமை குடைந்து கொண்டிருந்தது,
"ரசீதாவ கட்டிக் கொடுத்தாப்பில என்னையும் எங்கனயாச்சும் கட்டிக் கொடுத்திருங்க..."
என்று மூன்று மாதங்களுக்கு முன் தொணதொணத்துப் பார்த்தாள்.உம்மாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியாத நிலை!
"ஏய் ...இவளே,ஒனக்கு நிக்ஹா பண்ணிப் பார்க்கற நெலமையிலயா நாங்க இங்கன இருக்கம்?! வாப்பாவுக்கு மொதல்ல நெஞ்சு வலி குணமாகட்டும் ஹமீதா ...பெறகு பார்ப்போம்.இப்பமென்ன ஒனக்கு இருபது வயசு தான ! "
உம்மா மெல்ல முணு முணுத்துக் கொண்டு வாப்பாவை ஆஸ்பத்திரிக்கு கிளப்பிக் கொண்டு வெளியேறினாள்.
அப்புறமும் ஹமீதாக்கா விட்டு விடுவாளா ?
அவள் பாட்டுக்கு தொண தொணவென்று நச்சரிக்க உம்மாவுக்கு எரிச்சல் வந்தது;
"இந்தாருடி ...ஏன் கெடந்து நிக்ஹா பண்ணிக்க இந்த அல அலையற ?! "
சுள்ளென்று உம்மா கேட்க ஹமீதாக்காவுக்கு பளாரென்று கன்னத்தில் அறை பட்ட வலி நெடு நேரம் இருந்தது.அதற்குப் பிறகு அவள் நிக்ஹா பேச்சை எடுக்கவே இல்லை.
உம்மாவின் பொட்டு பொடுசு நகைகள் கற்பூரமாகி குடும்பத்தின் வறுமைத் தீயில் எரிந்து பதங்கமாக ஹமீதாக்கா தெரு வாசலில் சும்மா வேடிக்கை பார்க்க கூட வந்து நிற்க முடியாதவளாகிப் போனாள்.அவளுக்கு காது மூக்கில் கூட பொட்டுத் தங்கம் இன்றி பிறர் கண்ணில் காட்சிப் பொருளாவது ரொம்ப அவமானமாகத் தெரிந்தது.
முன்னெல்லாம் ராஜம் டீச்சரின் அம்மா ஊரிலிருந்து வந்தாளானால் ஹமீதாக்கா அந்த முதியவளுடன் சரிக்குச் சரி வாயடிப்பாள்.அந்தம்மாள் பொல்லாதவள் ,ஆனாலும் மகள் பள்ளிக்குப் போய் விட்டால் அப்போதெல்லாம் அவசரத்துக்கு கடைக்குப் போக,ஆஸ்பத்திரிக்குப் போக,முட்டி வலி தைலம் தேய்க்க இப்படி பொழுதை தள்ள ஹமீதாவை தான் நம்பி இருந்தாள் அந்தப் பாட்டியம்மாள்.
அதனால் ஹமீதாக்காவின் மீது நிஜமாய் பாசமே இல்லையென்றாலும் கூட தனக்கு ஹமீதாவென்றால் தனிப் பாசம் என்பதாய் எல்லோரிடமும் காட்டிக் கொள்வாள்,இது ஹமீதாக்காவுக்கும் தெரிந்தே தான் இருந்திருக்கக் கூடுமோ என்னவோ! ஆனாலும் அவள் பாட்டியுடன் மிகுந்த விருப்பத்தோடு தான் எப்போதும் பேசுவாள்,பாட்டி அளந்து விடும் ஊர்க் கதைகள் அதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம் .
அந்தப் பாட்டி இன்றைக்குக் காலையில் நிலக்கோட்டையில் இருந்து வந்து இங்கே மகள் வீட்டில் இறங்கி விட்டாள் போலும் ,அடுத்த போர்சனில் பேச்சு களேபரமாய் இருந்தது.இருட்டறையில் அடைந்து கிடந்ததைப் போல புழுங்கிப் போயிருந்த ஹமீதாக்காவுக்கு முகத்தில் லேசாய் குளிர் காற்று பட்டார் போல கொஞ்சம் போல சந்தோசம் எட்டிப் பார்த்தது.
ஆனால் வீட்டை காலி செய்யச் சொல்லி விட்ட நாளில் இருந்து சும்மாவேனும் டீச்சர் வீட்டுக்குப் போய் வருவது நின்று விட்டபடியால் ,பாட்டியே வந்து பேசினால் ஒழிய தான் அங்கே போவதற்கில்லைஎன பேசாமல் சமையல் கட்டின் பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு மீந்து விட்ட பழைய சோற்றை வட்டிலில் இட்டு செத்துப் போன நாக்கை அரிந்து கீழே வீசி விட்டால் தேவலாம் போல கண்ணை மூடிக் கொண்டு பெரிய பெரிய கவளங்களாக உருட்டி உருட்டி முழுங்கிக் கொண்டிருந்தாள்.அன்றைக்கு அந்த பாழாய்ப் போன உப்புக் கருவாட்டுக்கும் வழி இல்லாத நிலை.
பெரிதாய் வீட்டை காலி பண்ணச் சொல்லி விட்டாள் ராஜம் டீச்சர் ,வீடென்னவோ இப்போதே ஏற்கனவே கழுவித் துடைத்து காலி செய்தார் போலத் தான் இருக்கிறது !
இருக்கும் ஒரே நாடாக் கட்டிலை மடக்கி வாப்பா தலையில் வைத்துக் கொண்டால் அதன் மேலேயே ஓரம் நைந்த இரண்டு கோரைப் பாய்கள் அரிசிக் கடைபையால் உறை தைத்துப் போட்ட மூன்று தலையணைகள்,ஒரே நைலான் மூட்டையில் கட்டி வைத்து விடத் தக்க சில தட்டு முட்டுச் சாமான்கள்,மிஞ்சிப் போனால் துணிமணிகள் அடங்கிய ஒரு ஜாதிக்காய் பெட்டி எஞ்சும் ,அதை ஹமீதாக்காவே கையில் சுமந்து கொண்டு போய் விடலாம்,கிழிந்தது ,ரொம்பப் பழசானது என்று கழித்தால் மொத்தமே பத்து துணிகள் தான் தேறும் அந்தப் பெட்டியில் பிறகென்ன! தூக்கிச்சுமந்து கொண்டு இப்போதே கூட நடையைக் கட்டி விடலாம்,அதொன்றும் பெரிய காரியமில்லை தான்,ஆனால் போவதற்கு போக்கிடம் எது?!
இந்தக் கேள்வி தான் பூதம் போல வீட்டில் மூவரையும் பயம் காட்டிக் கொண்டிருந்தது.
ரஷீதா வீட்டுக்கு ...!
நினைத்தமாத்திரத்தில் ஹமீதாக்காவுக்கு பழைய சோறு புரையேறிக் கொண்டு விக்கியது.சொம்புத் தண்ணீரை மடக் மடக்கென்று குடித்து விட்டு உச்சந்தலையை இடக்கையால் படீர் படீர் என தட்டிக் கொண்டாள்.கண்ணில் நீர் வரும் அளவுக்கு புரையேறி தொண்டை கமறியது ;
என்னடி பொண்ணு நீ ! இப்பிடியா புரை ஏறிப் போற அளவுக்கு வட்டிலப் பார்க்காம சோத்த முழுங்குவ !? பாட்டி தான் ...ஹமீதாக்காவைத் தேடிக் கொண்டு சமையல் கட்டுக்கே வந்து விட்டாள்.
சம்பிரதாயத்துக்காக ...
"வாங்க பாட்டி ...இப்ப தான் வந்தீகளா?"
என்று கேட்டுக் கொண்டே
சாப்பாடு கொள்ளாமல் வட்டிலை கொல்லை கிணற்றடியில் போட்டு விட்டு கை கழுவிக் கொண்டு வந்தாள் ஹமீதாக்கா .
அதற்குள் கால் மூட்டைப் பிடித்துக் கொண்டு கொல்லைப் படிக்கட்டில் அமர்ந்த பாட்டி;
"அடியாத்தி வலி இந்தப் பிடுங்கு பிடுங்குதே ...இந்தா இந்த தைலத்தை போட்டு கொஞ்சம் நீவி விடேண்டி அமீதா "
ஹமீதாக்கா பாட்டில் மூடியை திறந்து கொண்டிருக்கும் போதே ... பாட்டி ;
"ஏன் அமீதா ...வீட்டக் காலி பண்ணச் சொல்லிப்பிட்டாளாமே எம்மக,வந்து எறங்குனதும் அவ சொன்னதை கேட்டோடனே எனக்கு ரொம்ப மனத் தாங்கலா ஆயிடுச்சுடி அமீதாக்குட்டி "
"என்னடி இது உங்களுக்கு வந்த கேடு! என்னப்பனே ஈஸ்வரா கிணற்றுத் திண்டில் சாய்ந்து கொண்டு பாட்டி கொஞ்சம் சோகம் போலக் காட்டிக் கொண்டு தான் இதை சொல்லி இருக்க கூடும்;
ஹமீதாக்கா பதில் சொல்வாள் என்று பாட்டி நினைத்திருக்களாம். பதிலுக்காக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ,
"காலி பண்ணிட்டு எங்க போகப் போறீங்க ரஷீதா வீட்டுக்கா !?"
அடுத்த கேள்வி பாட்டியிடமிருந்து ;
"பேசாம ரஷீதா வீட்டுக்காரனுக்கே ஒன்னையும் கட்டிக் கொடுத்து குடும்பமா அங்க போய் உட்கார்ந்துக்கலாம்னு நினைக்கார உங்க வாப்பா !?" துப்புக் கெட்ட மனுசன்னா அது உங்க வாப்பா தான் . விசமத்துடன் பதிலை எதிர்பாராமல் பாட்டி பேசிக் கொண்டே இருக்கக் கண்டு ;
ஹமீதாக்காவுக்கு பாட்டியை தர தரவென இழுத்து வெளியில் தள்ளி கதவைப் பூட்டி விட்டு ஒரு மூச்சு ஓவென்று அழுது ஓயவேண்டும் போல ஒரே ஒரு கணம் தோன்றி மறைந்தது .
மிஞ்சி மிஞ்சிப் போன வாடக எம்புட்டு தரிங்க மாசம் 600 ரூவா அதுக்கும் ...ஆறு மாசமா ததிங்கனத்தோம்னா எப்டி சகிப்பாங்க....அதான் போகச் சொல்லிப்பிட்ட போல எம்மக ...சரி விடு யாரோ மிலிட்டரிக் காரன் குடும்பமாம் 1200 ரூவா க்கு சரினுட்டாங்கலாம் அடுவான்சு 20 ,000௦௦௦ ரூவான்னா பார்த்துக்கோ ,
உன் வாப்பா தருவாரா அவ்ளோ பணம்?!
நான் சொல்றதக் கேளு புத்தியாப் பொழைக்கப் பாரு.பேசாம ரஷீதா வீட்டுக்கு போய்டுங்க ,முடிஞ்சா அவ புருஷனையே கட்டிக்கோ ...ஊர் உலகத்துல நடக்காத கதையா!
அதற்கும் ஹமீதாவிடம் பதிலில்லாமல் போக
"என்னடி அமுக்கினி மாதிரி பேசாம உட்கார்ந்திருக்க ...சத்தமே காணோம்"
.பாட்டி என்னவோ ஹமீதாவுக்கு தான் நல்லதொரு உபகாரம் செய்து விட்ட நினைப்பில் சற்று உரக்கவே கேட்டு ...மு...டிக்..க....கூட இல்லை ;
அரிசி புடைக்கும் முறத்தால் ஹமீதா பாட்டியை முழங்கால் ...தோள்பட்டை தலை என்று பேதம் பிரிக்கவே பிடிக்காதவள் போல சாத்து சாத்தென்று சாத்த ஆரம்பித்திருந்தாள் .
அரண்டு போன பாட்டியின் ஓலம் தெரு முக்கு தாண்டி கேட்டிருக்க கூடும் .
ஆனால் அசரவில்லை ஹமீதாக்கா.
தடுக்க வந்த உம்மாவுக்கு காலால் எட்டி ஒரு உதை. வாப்பாவுக்கு நல்ல செந்தமிழில் அர்ச்சனை ,இத்தனைக்குப் பின் கிட்டே வர ராஜம் டீச்சர் என்ன பைத்தியமா!?
ஹமீதாக்காவுக்கு என்ன ஆச்சு!
ஒருத்தருக்கும் தெரியாது தான் .
ஆனால் தெரிந்தார் போலத் தான் தங்களுக்குள் தினம் பேசிக் கொள்கிறார்கள்.
"அவளுக்கு பேய் பிடிச்சிருக்கு ."
அவளுக்கு சித்த பிரமை ...
அவளுக்குப் பைத்தியம்...
அவள முனி அடிச்சிருச்சு etc ...etc .
நீங்க சொல்லுங்க ஹமீதாக்காவுக்கு என்ன தான் ஆச்சு ?!
Monday, August 9, 2010
அட்ரஸ்...
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் பார்த்த தோற்றம் தான் நெஞ்சில் நிழலாடியது ; சமீபத்தில் அவரைப் பார்க்க நேரவில்லை.
பாட்டி திக்கித்து துக்கித்து உட்கார்ந்தாலும் புலம்பிக் கொண்டே தான் இருந்தாள்...என்ன மனுஷன் ? ...எப்பிடிச் செத்தாரோ? சாமான்யமா போற உசுரா அது?!
தங்கையின் முகம் பார்த்தேன் தாத்தாவின் இறப்புக்காக அவள் நிறைய அழப் போகிறாளோ என்று!
சோகம் போல உட்கார்ந்திருந்தாலும் அழக்காணோம்...எனக்கும் தந்தி பார்த்த கணத்தில் ...என்ன முயன்றும் உடனே பட்டென்று கண்ணீர் தெறிக்கக் காணோம் தான்.
நெடுஞ்சாலையின் மேலிருக்கும் வீடென்பதால் வெளிப்புற குட்டிக் காம்பவுண்டில் உட்கார்ந்து கொண்டு சாலையில் விரையும் ரூட் பஸ்களையும் லாரிகளையும் வேடிக்கை பார்ப்பதைப் போல துக்க நேரத்தில் கொஞ்சத்தை கரைக்க யத்தனித்தேன் .
ஐந்து வயதில் ஆலங்குலத்து தாத்தாவோடு சாத்தூர் ராஜா ஆசாரியிடம் காது குத்திக் கொள்ளப் போனது நன்றாய் நினைவில் இருக்கிறது.ஒரே தடவையில் காது குத்தி இலைத்தோடு போட்டு விட்டாலும் கூட காது புண்ணாகி புண்ணாகி சீல் வைக்கவே அப்படியே கொஞ்சநாள் விளக்கு மாற்றுக் குச்சி உடைத்து காதோட்டையில் சொருகி புண் ஆறியதும் மறுபடி ராஜா ஆசாரி வீட்டுக்கு போவோம் நானும் தாத்தாவும்.
முதல் மரியாதை சிவாஜி சாயலிருக்கும் தாத்தாவுக்கு; கக்கத்தில் ஒரு புத்தம் புது மஞ்சள் பையை இடுக்கிக் கொண்டு வெள்ளைத் துண்டை உருமாக்கட்டாய் கட்டிக் கொண்டு சந்தன நிற சட்டையும் வெள்ளைக் கதர் வேட்டியுமாய் புறப்பட்டு வருவார்.
"மாமா இந்தப் புள்ள ரோட்ல அங்கிட்டு இங்கிட்டு திங்கு திங்குன்னு ஓடுவா...பாத்துக் கூட்டிட்டுப் போயிட்டு வாங்க "
என்றவாறு பாட்டி அவரோடு தன் கையால் வெகு அருமையாக தலை நிறைய எண்ணெய் கவிழ்த்து பின்னி விட்ட கோண வகிட்டு ரெட்டைச்சடையுடன் என்னை அனுப்புவாள்.
பின்னாட்களில் ராஜா ஆசாரியிடம் இரண்டு மூன்று முறை காது குத்திக் கொள்ளும் பெருமைக்காக அப்போது ஆலங்குலத்து தாத்தாவோடு டவுன் பஸ்ஸில் ஏறி ஆசாரி வீட்டுக்குப் போயிருக்கிறேன் நான்.ராஜா ஆசாரி வீடு என்று ஒரு வீடு இப்போதும் சட்டென்று ஞாபகத்தில் வந்தாலும் அந்த வீட்டுக்கு உள்ளே ஒருநாளும் நான் போனதில்லை.
வெளியே கருங்கல் பாவிய பெரிய திண்ணை இருக்கும் பெரிய நீளமான வாசல் படிகளை மிதித்து ஏறி அந்தத் திண்ணையில் உட்கார்ந்தால் வெயிலுக்கு குளு குளுவென்று இதமாய் இருக்கும் ,எனக்கு வெள்ளை வேட்டி சட்டையில் எல்லைக்கருப்பண்ணசாமி போல சிடு சிடு முகம் காட்டும் ராஜா ஆசாரியைக் கண்டு கொஞ்சம் பயம் இருந்தாலும் , ஜிலு ஜிலுப்பான அந்த திண்ணையில் உட்கார ரொம்பப் பிடித்திருந்தது அந்நாட்களில் .என்னைப் பொறுத்தவரை ராஜா ஆசாரி வீடென்றால் இப்போதும் அது கரும் பளிங்கு போல மினுங்கி குளுமையூட்டும் அந்த திண்ணை மட்டும் தான் ,திண்ணை தாண்டி உள்ளே நீளும் வீடாகிய அறைகளைக் குறித்து அலட்டல்கள் எதுவும் மனதில் பதியவில்லை .
ஆலங்குளத்தை விட்டு விட்டு ஆசாரிக்குத் தாவிய மனதை இழுத்துப் பிடித்து மீண்டும் தாத்தாவுடனான சம்பவங்களை கோர்க்கத் தொடங்கினேன் .ஆலங்குலத்து தாத்தா அருமையான தவசுப் பிள்ளையாகவும் இருந்தார் எங்கள் வீட்டு விஷேசங்களில்,அவரே சமையல் ஆட்களுடன் வேண்டி விரும்பி சேர்ந்து கொள்வார். சாப்பாட்டில் அத்தனை பிரியம் மனிதருக்கு.
எண்ணெய் மிதக்கா விட்டால் எந்தக் குழம்பும் ருசிக்காது என்று நம்புபவர் அவர்.
ஆடு,கோழி,காட்டுப் பன்றி ,ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்து காடுகளில் இருந்து தப்பி வந்து லாரியில் அடிபட்டு செத்த நரியின் கறி ,எப்போதேனும் வயலில் சிக்கும் மயில் ,அவ்வப்போது அவரே பிடித்து வரும் முயல் கறி,வாரம் இருமுறை மீனும் கருவாடும்...இப்படி தனி வயிரானாலும் தன் வயிற்றை அட்டகாசமாய் பல ஐட்டங்களைப் போட்டுத் தாக்கி வாடாமல் வனப்பாய் கவனித்துக் கொண்டவர் தாத்தா .
அவர் சேவல் (மீனை சேவல் என்றும் சொல்வார்கள் ஏனோ!) குழம்பு வைத்தால் எங்கள் தெரு தாண்டி அடுத்த தெருவும் கூட மணக்கும்,அப்போதெல்லாம் ஒட்டு வீடுகள் தானே!காற்றுக்கென்ன வேலி?
தக்காளி பஜ்ஜி ருசிக்க ருசிக்கச் செய்வார்.நெய் வாங்க காசில்லா விட்டால் தஞ்சாவூர் நாயக்கர் கடையில் அடி மண்டியோடானாலும் பரவாயில்லையென்று உள்ளங்கை குவித்து பிடித்து ஒரு முட்டை நல்லெண்ணெய் விட்டு உண்டால் தான் பருப்பு சாதமே ருசிக்கும் அவருக்கு.
உண்டு முடித்த மட்ட மத்தியானத்தில் அவர் வீட்டு சுண்ணாம்புத் திண்ணையில் சாய்ந்து கொண்டு தடித்த கருப்பு சட்டமிட்ட கோழி முட்டை லென்ஸ் கண்ணாடி மூக்கில் சரிய சரிய பெரிய எழுத்து போஜராஜன் கதை படிப்பார்,அசைவ சாப்பாடென்றால் என்ன உல்லாசமோ ! அன்றைக்கு மட்டும் தெரு பிள்ளைகள் எல்லோரையும் கூட்டி வைத்துக் கொண்டு கதை சொல்வார்,மற்ற நாட்களில் கதை சொல்ல சொல்லி நாங்கள் யாரும் நச்சரித்தால் தன் உருமாலைக் கழட்டி சுழட்டி சுழட்டி வீசி "போங்க கழுதைகளா தூங்க விடாம...மனுசன நச்சரிச்சுக்கிட்டு 'என்று விரட்டுவார்.
இப்படி விதம் விதமாய் பசிக்கு மட்டும் இல்லாமல் ருசிக்கு உண்ணும் அந்த ஒற்றை ஜீவன் தூரத்து உறவென்றாலும் கூட ரொம்பப் பக்கத்தில் இருந்ததால் சொந்தத் தாத்தாவாகத் தான் எங்களால் நினைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
அவர் ஏன் துத்தநாகத்தை கரைத்துக் குடித்தார் !
வானம் பார்த்த பூமி .
மழை இல்லை விளைச்சலும் இல்லை .
குவைத்தில் இருக்கும் மகன் குவைத் பற்றி எரிந்ததில் போட்டது போட்டபடி ஓடி வந்தார்.அப்பா வீட்டுக்கு அல்ல ,மனைவி வீட்டுக்கு. ஓரிரு முறை அப்பாவை பார்க்க வந்தார் ,செம்பட்டை அப்பாவை பாசமாய் பார்க்க வந்து போனதில் ஆலங்குலத்து தாத்தாவின் ஒன்னரைக் குழி சொந்த பூமி பட்டாளத்து நாயக்கர் பெயரில் பட்டாவானது .
எலி வலையானாலும் தனி வலை,தனி வலையானாலும் தன் வலை ,என்றிருந்த மகராசன் .வீட்டைக் கூடை மகன் அடமானம் வைக்க உள்ளுக்குள் ஒடுங்கித் தான் போனார்.ஆனாலும் கெத்து விடாமல் இருக்கவும் கொஞ்ச நாட்கள் முயன்று பார்த்தாராம். அப்போது அம்மாவுக்கு வேலை கிடைத்து நாங்கள் மானாமதுரைக்குப் பொட்டி கட்டியிருந்தோம். கூடவே பாட்டியும் தாத்தாவும் .
ஆத்திர அவசரத்துக்கு ஒரு டம்ளர் ரசமோ,ஒரு கிண்ணம் பருப்போ ,கொஞ்சம் சோறோ,வெஞ்சனமோ வாங்கிக் கொள்ளலாம் கூடவே பாடு பஞ்சம் என மனசை ஆற்றிக் கொள்ள பேச்சுத் துணைக்கு இருந்த இந்த உறவும் அற்றுப் போக அவர் நிர்கதியானார்.
மகன் கடனில் இருக்க ...மகள் யாரோவாகிப் போக ...வந்த இடத்து சொந்தங்களும் தூரமாகிப் போக ;
கடைசி கடைசியாய் பெருமாள் சித்தப்பா மகள் சடங்குக்கு பள்ளிக்கு லீவு போட்டு விட்டு அம்மா ஊருக்குப் போகையில் தாத்தா அம்மாவைப் பார்த்து ஆசையாய் ஓடி வந்து பேசினாராம்.
அம்மா கண் கலங்க அவர் கையில் நூறு ரூபாய் நோட்டை திணித்து விட்டு
"வாரேன் சித்தப்பா பஸ்சுக்கு லேட் ஆச்சு "
; என்று ஓடி வந்து பஸ் ஏறியதை அம்மாவே சொல்லக் கேட்டோம் அன்றொரு நாள்.
போகும் போதே பாட்டி அம்மாவிடம் ஒன்றுக்கு பலமுறை சொல்லி அனுப்பிய ஒரு வார்த்தை .
"மறந்தும் இந்த வீட்டு அட்ரஸ் மட்டும் கொடுத்துறாத ஆலங்குலத்து நாயக்கருக்கு" அவர் பாட்டுக்கு பஸ் ஏறி வந்துரப் போறாரு. ஏதாவது பணம் காசுன்னு கேட்டுகிட்டு "
கண்கள் கரித்துக் கொண்டு வரவில்லையா?
ச்சே என்ன பெண் நான்?!
ஊமை வலியில் சூன்யம் பார்த்துக் கொண்டு நெடு நேரம் உட்கார்ந்திருந்தேன் . அம்மாவும் பாட்டியும் எதையோ பேசிக் கொண்டே காபி அருந்திக் கொண்டிருப்பது கலங்கலாய் தெரிந்தது.இமை தட்டியதில் ஒரு துளிக் கண்ணீர் உதிர்ந்து புறங்கை நனைந்தது ;
அழுகிறேன் போல !
Friday, February 5, 2010
கடந்து போனவள்...(மீள் பதிவு)
