Wednesday, December 3, 2008

இப்படித்தான் நியாயம் செய்யுமா இந்திய அரசு?!

ஒலிம்பிக் என்பது உலகளாவிய அளவில் நடத்தப் படும் ஒரு விளையாட்டுப் போட்டி.ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் பெற்றுத் தந்த அபினவ் பிந்த்ராவுக்கு நமது இந்திய அரசு மூன்று கோடி ரூபாய்கள் பரிசுப் பணமும் மற்றும் பல வெகுமதிகளும் கொடுத்துக் கௌரவித்தது .
சென்ற வாரம் மும்பையில் வெறியாட்டம் ஆடித் தீர்த்த தீவிரவாதிகளுக்கு எதிராக நமது இந்திய இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரப் போராட்டத்தில் பலியான ராணுவ வீரர்களின் இழப்புக்கு அவர் தம் குடும்பங்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய்கள் இழப்பீடு வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது .
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரருக்கு மூன்று கூடி ரூபாய்களோடு வெகுமதிகள் வேறு இன்னும் தொடர்கின்றன.நாட்டையும் மக்களையும் காக்க தமது இன்னுயிரை ஈந்த துப்பாக்கி வீரருக்கோ வெறும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு மட்டும்!!! ஏன் இந்தப் பாரபட்சம்?!
அபினவ் பிந்த்ரா ஒரு கோடீஸ்வரரின் மகன் அவருக்கு இந்த மூன்று கோடி ரூபாய் பரிசுப் பணத்தை விட ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கமே பெரியதொரு "கௌரவச் சின்னமாக " இருக்கக் கூடும் .பணம் அவருக்கு ஒரு அத்யாவஸ்யமே அல்ல ! அவருக்கு மூன்று கோடி ரூபாய் வழங்கி ஏன் அரசு கௌரவித்தது என்பது இங்கே முன்வைக்கப் படவில்லை.
விளையாட்டில் ஒருமுறை வென்றால் அதிர்ஷ்டமிருப்பின் மறுமுறையும் வெல்ல வாய்ப்பு இருக்கிறது .ஆனால் நிஜத்தில் போன உயிர்(தேசப் பாதுகாப்புக்காக பறிக்கப் பட்ட உயிர்) மறுபடி திரும்பக் கூடுமா?இறந்த ராணுவ வீரர்களின் கடமை உணர்ச்சிக்கும் தேச பக்திக்கும் இந்திய அரசு இப்படித் தான் நியாயம் செய்கிறதா?
விளையாட்டில் வென்ற துப்பாக்கி வீரரின் பெருமையைக் காட்டிலும் தேசத்துக்காக போராடி உயிரை விட்ட துப்பாக்கி வீரரின் பெருமை எந்த விதத்தில் சோடை போய்விட்டது?அவர்களுக்கும் முக்கியத்துவம் தருவதில் என்ன பாரபட்சம் வேண்டி இருக்கிறது ?
இந்திய அரசு சிந்திக்குமோ ...சிந்திக்காதோ ?
எனது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி என்னை இப்படி சிந்திக்க வைத்தது.அதனால் இதனை உங்களோடு பகிர்கிறேன் இப்போது .