Showing posts with label கார்த்திகாவாசுதேவன் கவிதைகள். Show all posts
Showing posts with label கார்த்திகாவாசுதேவன் கவிதைகள். Show all posts

Saturday, August 6, 2011

நல்லதங்காளும் அவளேழு வெள்ளரிப்பிஞ்சுகளும்...

வேழமறுத்து துண்டாடும் கோடைகடுவெயில்
கானக நடுவிற் செவ்வரிமா சிறுமுயல்
காண நாணி கடுகிப் பாய்ந்து தாவி அணைந்தது
பின்னப்பட்ட காசி நகர் சுற்றுக் கோட்டை
கற்சிதைந்த பாழும் கிணற்றில் ;
கிணற்று நீர் சிலும்பிச் சிலும்ப
தழும்பி முகம் காட்டினாள்
நல்லதங்காள் .
தூசு தும்பேஎன்று
அருந்தக் கை குவித்த நீரள்ளி வீசி
மஞ்சள் பூ முகம் மறுத்துத் திரும்பினால்
பசியோ பசியென்று கத்திக் குமிகின்றன
ஆறேழு வெள்ளரிப் பிஞ்சுகள்
மூளி மறுத்த முக்கால் வயிற்றை
உப்பி நிறைத்தது உப்பு நீர் கிணறு ;
கோடைக் கிணறுகள் தோறும்
இன்னுமிருக்கிறார்கள்
நல்ல தங்காளும்
அவளேழு வெள்ளரிப் பிஞ்சுகளும் .

Friday, July 1, 2011

டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை ...










//The childhood shows the manAs morning shows the day.~John Milton, Paradise Regained//






// If you carry your childhood with you, you never become older. ~Tom Stoppard//

குழந்தையாகவே இருந்திருக்கலாம்
அம்மாவின் முந்தானையை விடாது பற்றிக் கொண்டு
அப்பாவின் தோள் சவாரி எனக்கு தான் முதல் என்று
தம்பி தங்கைகளிடம் போட்டி போட்டுக் கொண்டு
நானும் வருவேன் என்று முந்திரிகொட்டையாய் வயலுக்கு ஓடி
பாட்டியோடு தூக்குப் போணி மூடியில்
பிடிப் பிடியாய் பப்பு புவ்வா சாப்பிட்டுக் கொண்டு
சுண்டு விரல் பிடித்து
மிளகாய் களத்துக்கும் வரப்பு மேட்டுக்குமாய்
தாத்தாவோடு தோட்டம் அளந்து கொண்டு
பெரிய கேரியர் வைத்த சைக்கிளில்
மாமாக்களோடு சர்கஸ் பார்க்கப் போய்க் கொண்டு
சித்தியோடும் அத்தைகளோடும் வாயாடிக் கொண்டு
தாயமும் பல்லாங்குழியும் கலைத்துக் போட்டு
கூட இரண்டு கொட்டுகளை உபரியாய் வாங்கி
திண்ணையில் உட்கார்ந்து அழுது கொண்டு
அழுத கண்ணீர் காயும் முன்னே
ஊர்ப் பிள்ளைகளோடு தெருமுக்கு காலி இடத்தில்
பாண்டி ஆடிக் கொண்டு பட்டம் விட்டுக் கொண்டு
கிட்டிப் புள் கோலால் தெருவளந்து ஊர்அளந்து
உத்தமக் கண்ணன் கோயில் மார்கழி பிரசாத கியூக்களில்
ராஜியோடும் பாமாவோடும் டூ விட்டுக் கொண்டு
டூ விட்டு டூ விட்டு பழம் விட்ட வாழ்க்கை
ருசியாகத்தான் இருந்தது ... இருக்கிறது
இன்னும் நாக்கின் அடியில் இனிக்கும் தேனாய்
மனம் எங்கும் அந்த நாட்கள் .
நூலறுந்த பட்டங்களாய்
வாலறுந்த தும்பிகளாய் ...






//Old age lives minutes slowly, hours quickly; childhood chews hours and swallows minutes. ~Malcolm de Chazal //









Friday, February 25, 2011

ஜெலூசில் மனிதர்கள்





கானக நடுவில் கனி பறிக்கா தருவொன்று
கிளிகளுக்கும் , காட்டுக் குருவிகளுக்குமாய் ...
பிரப்பங் கொடிகளும் பின்னிலாக் காலங்களும்
விரி மரம் தாவும் உரமுள்ள பட்சிகளுக்கும் குரங்குகளுக்குமாய்
என்றிருந்த நாட்கள் மாண்டன ;
யத்தனங்களின் பிரயத்தனத்தில் ஜனித்த
ஜெலூசில் மனிதர்களைப் பீடித்த
அஜீரணச் சீரகமிட்டாய் குழந்தைகள்
வனமழித்து திரும்புகையில் புறத்துக் கவிந்தன
குறுந்தொகை மேகங்கள் ;
தவழ்ந்து இறங்கின நைலான் மழைத் தூறல்கள்
வகைக்கொரு நிறம் பூண்டு
சிவந்த மூக்கு கிளிகளுக்கோ தவிட்டு நிறக் குருவிகளுக்கோ
என்றைக்கு புத்தியில் உரைக்குமோ ?
பின்னோடிகள் பின்னோடிப் போதல் விதியென்று
இந்த பூமி மனிதர்களுக்கானதாம்
மனிதர்கள் என்றால் மனிதர்கள் மட்டும் தானாம்
வனம் என்றால் அடர் வனம் !
இருட்டு அதன் நிறம் .

நோட் :


இந்தக் கவிதை ஆதியில் இருந்தே அபார்ட்மெண்டுகள் கட்டுவதெற்கென ஆக்கிரமிக்கப் பட்ட காடுகள் மற்றும் ஏரிகளுக்கு சமர்ப்பணம் .



Saturday, November 20, 2010

தகன மித்ரா ...




எப்போதுமே இப்படியல்ல 
எங்கோ நழுவிக் கொண்டிருக்கும் 
நினைவுகளைத் தகனம் செய்ய முடியா 
கோபங்கள்  ...பெண்டுலமாய்
ஆடிச் சலிக்கையில்
ஆட்படுத்தும் ஆகச் சிறந்த சோர்வுகள்
எண்ணிக் கணக்கிட
இன்னொரு ஜென்மமோ  ?
விட்டும் விடாமல்
தூறும் சேய் மழையாய்
சஞ்சலத்தில் ஆழ்ந்து விடும்
பொழுதெலாம் பெரும்பாலும்
கடற்கரையில் நட்சத்திரங்கள் பொறுக்கிக் கொண்டிருந்தேன்  
எலுமிச்சை அளவு குண்டு குண்டு நட்சத்திரங்கள்
கோர்த்து வைத்த நிஜம் சொன்னால்
யாரும் நம்பவில்லை
இன்றும் எடுக்கிறேன் கோர்க்கிறேன்
நம்புதியோ !


Friday, November 19, 2010

அகழ்வாராய்ச்சி ...



உதிரும் கால் நெருடும் சறல்மண்
தகடாய் இறுகிக் கெட்டிக்கும்
அடுக்கடுக்காய் ஏடுகள் படிய
அழுந்த மூடிக் கொண்ட சூலி; 
விரியத் திறக்கும் மாதுளை முத்துக்கள் 
இனிப்பும் புளிப்புமாய்
ஈயமும் பித்தளையும்
உப்பிடக் கடல் காய்ந்து பாலை நிலம்;
நெடுக நெடுகவே கண்கொத்தும் ராஜாளிகள் 
சருகிலை சர சரக்க சதா ஊறும்  சர்ப்ப ராஜாக்கள் ;
தோண்டத் தோண்டவே  கால்சியமும் பாஸ்பரசுமாய்
கண் மறைக்கும் பழுப்பு வெள்ளைகள்
அஃ தன்றோ ...
அகழ்வாராய்ச்சி !



Monday, November 8, 2010

அவஸ்தைகள் இலவசம் ...( கவிதை )






பின்னலில் இட்ட பூ கொதித்துக் கசங்க

ஜன்னல்  வழி பாயும் வெருகாய் 

தாவிப் பறந்திட்ட துன்பக் கேணி; 

இட்டமிலா தெய்வச் சடங்காய்

இன்னமும் உச்சித் திலகம் 

பட்டுத் தெறிக்கும் விழியெலாம் 

கானல் நீர் அமிலக் கரைசல் ;

மின்னட்டாம் பூச்சியாய் தூரத்தே

சிணுங்கும் கொலுசொலி ...

சிந்தூர சந்தன வாசம் 

ஊடற்பொழுதாயினும்,

கூடற்பொழுதாயினும், 

யாதொன்றும் பிடிபடா திக்கில்

செப்பிடு வித்தையாய்
 
செவ்வாய்க்குப் பின் சங்கில் 

அடைக்குமோர் மென்பந்து

அவஸ்தைகள் இலவசம் ;

பொருள் வழிப்  பிரியினும்

பகை வழிப் பிரியினும்

விதி வழிப் பிரியினும்

பிரிவு பிரிந்தோர் மாட்டே ... 









Tuesday, October 19, 2010

கோணல் மானல் கவிதைகள் ...


1.   கோணல் மானல் கவிதைகள் :



காத்திருக்க நேர்ந்தால் என்னவெல்லாம் செய்யலாம் ?

நகம் கடித்து துப்பலாம் 

தென்னந்துடைப்பத்தின் ஒரு குச்சி உருவி

சுட்டு விரலுக்கும் பாம்பு விரலுக்கும் மேலாய் கிடத்தி 

கட்டை விரல் கொண்டு

சொடக் சொடக்கென உடைத்துப் போடலாம் ; 

மர மேஜையில் எங்கேனும் துருத்திக் கொண்டு

சிலும்பு தென்பட்டால் சும்மா இருப்பானேன் 

சுரண்டி சுரண்டி இன்னும் பெரிதாக்கலாம் ;

கோணல் தென்னை மரங்களோ பனை மரங்களோ 

எது கைவருமோ அது

மனம் போன போக்கில் கண்ணில் பட்ட 

புத்தகங்களில் எல்லாம் கிறுக்கி வைக்கலாம்;

இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் ? 

இப்படி கோணல் மானல் கவிதைகள் எழுதி

நேரம் போக்கலாம்.



2.   பூமியில் அகப்பட்டுக்கொண்ட எலிகள் : 


சொல்லிக் கொண்ட சமாதானங்கள் அனைத்துமே 

சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டவையாமே ! 

சொர்கத்துக்குப் போக ஷார்ட் கட் 

அமிர்தம் குடிப்பது 

அமிர்தம் குடிப்பவர்கள் தேவர்கள் தானே ? 

நான் மேருவை மத்தாக்கி 

வாசுகியை கயிராக்கி 

பாற்கடலை கடையும் போதில் 

மணி காலை 5 .30 

பிரம்ம முஹூர்த்தம் 

அலறியது அலாரம் 

இன்னுமா ...இன்னமும் 

பால் பாக்கெட் வரக்காணோம்! 

பேப்பர் காரன் வந்தானோ? 

சிலிண்டர் புக் பண்ண இன்றைக்கு தான் கடைசி நாளோ?! 

சொர்கமாவது அமிர்தமாவது 

பூமியில் அகப்பட்ட எலிகளுக்கு 

வலைகள் மட்டுமே சாஸ்வதம் 

நிறுத்த வகையின்றி 

சதா மூளையை சிதறடிக்கும் அக அலாரங்கள் 

ஆம்புலன்சின் ஓசை போல 

அடாத மழையிலும் 

விடாது ரீங்கரிக்கும...


3.    கனவு ரசம் :


கா முதல் ரா வரை

என்ன குழம்பு ? 

என்ன காய்? 

என்ன கூட்டு ? 

என்ன பொரியல் ? 

என்ன மசியல்? 

என்ன அவியல்? 

இட்லியா...சப்பாத்தியா...பொங்கலா...பூரியா? 

வெறும் சாதமா...கலந்த சாதமா? 

இன்னோரன்ன 

வினாக்களை நசுக்கிப் பிழிந்து 

இடையிடையே 

விட்டு விட்டுத் தொடரும் 

கனாக்களை அரைத்துக் கரைத்து 

பொடித்த முந்திரியிட்டு 

ஞாபகமிருக்கட்டும் 

முந்திரி பொன் வறுவலாய் இருத்தல் நலம். 

பெரிய சைஸ் பூப் போட்ட 

கண்ணாடி கிளாசில் ஊற்றி 

எவர்சில்வர் ஸ்பூனால் 

இதம் பதமாய் 

கலக்கோ கலக்கென்று கலக்கி 

மடக்கென்று குடித்து விடுதல் கூடாது 

மிடறு மிடறாய் 

ரசித்து ருசித்துக் குடிக்கலாம் ; 

அர்ச்சனாவுக்குக் கல்யாணமாம் 

அவளுக்கு தான் பெரிய சைஸ் பூப்போட்ட கிளாஸ் 

தளும்பத் தளும்ப கனவு ரசம்...


4.     லெட்சுமி அக்கா சிகரெட் பிடிப்பாளா? 


லெட்சுமி அக்கா சிகரெட் பிடிப்பாளா?

நட்ட நடு ராத்திரியில் 

விநோதக் கனவு ! 

கதை கேட்க திண்ணையில் கூடும் 

நாட்களில் எல்லாம் சிரிக்காமல் இருக்க 

பெரும்பாடு பட்டேன் ; 

டேய் கோபிக்கண்ணு கோமுட்டிக் கண்ணு 

கெக்கே பிக்கேன்னு என்னடே இளிப்பு 

எந்நேரமும் ? 

நறுக்கென்று தொடையில் கிள்ளுவாள் ; 

விளையாட்டாய் 

மெழுகுவத்தி ஏற்றி அணைத்து புகையுமுன் 

வாய்க்குள் விட்டு எடுத்து 

அபாரமாய் சிகரெட் புகை விடுவாள் ; 

ஆயிற்று பல வருடங்கள் 

எனக்கு 50 

அவளுக்கு 70 

அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ; 

பாகப் பிரிவினைக்கு ஊருக்குப் போய் திரும்புகையில் 

பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன் 

சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தாள் ; 

சேவல் மார்க் சுருட்டு ... 

ஒரு மெழுகு வத்தி சேவலாக மாறி விட்டது ; 

இன்னமும் சிரிப்புத் தான் ;



Thursday, September 16, 2010

வேடிக்கை பிரியங்களும் சலூன் கடை சாய்ந்த நாற்காலிகளும் ...


மக்கள் வாழ்வும் ...மரியாதை நிமித்தங்களும் :

ஒன்றும் பிரமாதமில்லை ;
அம்மாவுக்கு உருப்போட கிடைத்த வார்த்தை
"அப்பாவை எதிர்த்து வாயாடாதே "
அத்தையின் ஜெபமோ
மாமாவின் எதிரில் சேரில் உட்காராதே !
இதென்ன பிரமாதம்?
கல்யாணமென்றால் காத தூரம் ஓடிய
அக்கா மசக்கைக்கு பின் அடிக்கடி சொல்கிறாள்
மாற்றுக் கருத்தே கிடையாதாம்
மாமா சொன்னால் சரியாய் இருக்குமாம்;
ம்ம்...
சரி தான் ;
நான் என்ன சொல்லப் போகிறேனோ ?
வருங்காலக் கனவுகளில்
நிகழ்காலம் கரைத்து
ஆணும் பெண்ணும் சமமென கொடி பிடித்த
முற்கால ஞாபகங்கள்
இத்துப் போன பழம் புடவையாய் ...
சில நூறு பொத்தல்கள்.


சலூன்கடை சாய்ந்த நாற்காலி...


பாம்புகள் சட்டை உறிப்பதை நிகர்த்ததா
பறவைகள் சிறகு உதிர்ப்பது ?
நகம் வெட்டிக் கொண்டோ
முடி திருத்திக் கொண்டோ ;
யோசிக்க
நல்லதொரு சந்தேகம் கிடைத்தது
குடும்பத் தலைவர்களுக்கு ;
பாத்ரூம் குழாய் லீக் ஆவதை சரி செய்வதோ !
மளிகை சாமான்கள் வாங்க ஸ்டோர்களுக்குப் போவதோ !
குழந்தையை பார்க்குக்கு அழைத்துப் போய் விளையாடுவதோ
பின்னதெல்லாம் வெறும் தொல்லைகள் தான் .
இருக்கவே இருக்கிறது
சலூன்கடை சாய்ந்த நாற்காலி
சிந்தனை சிற்பிகள் ஆகும்
போட்டிக்கு
இன்று எத்தனை பேர்!



வேடிக்கை் ப்ரியங்கள் ... 


அப்பாவைப் பொறுத்தவரை
தொலைக்காட்சிப் பெட்டியின் சேனல்கள் ஒவ்வொன்றாய்
தாவித் தாவிப் போவதும்
ஜான்சன் பட்ஸ் எடுத்து காதைக் குடைவதும்
பற்குச்சியால் கோழித் துணுக்குகள் அகற்ற
பல்லிடுக்குகளை நோண்டிக் கொள்வதுமாய்
காரியங்கள் யாவும் நிறைவேறிக் கொண்டிருந்தன;
அம்மாவைப் பொறுத்தவரை
புத்தக அலமாரியில்
ஒவ்வொரு புத்தகமாய் எடுப்பதும் வைப்பதுமாய்
குழாயில் தண்ணீர் வருகிறதா பார்ப்பவள் போல
குமிழைத் திருகுவதும் மூடுவதுமாய்
கர்ம சிரத்தையாய் காரியங்கள் யாவும்
நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
விடுமுறை நாளின் காலை முதலே
வெடித்து விடக் கூடுமென்று நம்பிய
ஒரு சிறு சண்டையை திசை மாற்றி ஏமாற்றும் பொருட்டு ;
என் பங்குக்கு நான் கூட
சாயமேற்றிய நகங்களுக்கு
மறுபடி மறுபடி சாயமேற்றிக் கொண்டும்
பின்னிய கூந்தலை
பிரித்துப் பிரித்து பின்னிக் கொண்டும் ;
காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்
எப்போது வெடிக்குமந்த சண்டை என வேடிக்கை பார்க்க ;


Note :

பஸ்ஸில் எழுதிய கவிதைகள்.சேமிப்பிற்காக இங்கே.



இச்சைகளும் இடாகினிப் பேய்களும் ...




இச்சையில் ஆடும் இடாகினிப் பேய்களுடன்
விடாது கதைக்கத் தொடங்கி
இன்றோடு நாட்கள் எட்டு
எட்டி விடும் தூரம் தான்
சுவாதீனமாய் சப்பணமிட்டு
அவள் ஆடிக் கொண்டிருந்தாள்;

சுளீர் சுளீரென 
அகல விசிறிச் சுழன்று தாழ்ந்து ஓயும்
நீளக் கூந்தல் குத்தூசிகளாய் விரிந்து பரவ
உறுத்து விழிக்கும் ஆங்கார கண்கள்
என்னைப் பிய்த்து தின்று விடும் கோரப் பசியில் ;
பேய்கள் அவளை ஆட்டுவிக்கின்றனவாம்
பேசிப் பேசி கலைகிறார்கள் ;
வேடிக்கை மனிதர்கள்;

பெருந்தீனியிட்டு பேய் வளர்க்கும் கலை அறியாதவர்கள்...


நோட்: படம் கூகுளில்  எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.உரிமைக்காரர்கள் ஆட்சேபித்தால் நீக்கப் படும்


 

 

Wednesday, June 23, 2010

கனகாம்பரம்

அம்பாரமாய் கனத்துக் கிடந்தது
முப்பது கடந்த கன்னி மனது
கல்யாணம் இல்லை தேவை
கல் கரைக்கும் மனிதர்கள்
பேச்சு கேளாத தூரம் செல்ல
நடக்கத் தொடங்கும் போதே
கடந்து நகர்கின்றன கல்யாண மண்டபங்களும்
மல்லி முல்லை சம்பங்கியுடன் கலந்த
கனகாம்பாரக் கடைகளும் ;
அப்போதும்
இப்போதும்
அம்பாரமாய் கனத்து கிடந்தது
எதையும்
கடக்கவியலா கன்னி மனது ;

Monday, June 21, 2010

மௌனிக்கப்பட்ட பதில்களின் அணிவகுப்பு




இரைந்து கிடக்கும் கேள்விகளை
உரசிப் பற்ற வைக்க
சதா முயன்று கொண்டிருக்கும்
சலனக் காட்டின்
சபை நடுவே
மௌனிக்கப்பட்ட பதில்களின்
அணிவகுப்பு ;
பார்க்க விசித்திரமென்ன
நின்று நிதானித்து நிமிர்ந்து
என்றோ ஒரு கணத்திலும்
பதில் சொல்ல விருப்பமில்லை ;
கேள்விகளும் பதில்களுமற்ற
நிசப்தத்தில் கரைந்தாலென்ன
நஷ்டம்!