Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, January 21, 2010

White ஜோக்ஸ் ...(முறைவாசல்)



நேற்று பாப்புவை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு அழைத்துப் போயிருந்தேன் ,அவள் விளையாடப் போனதும் கையோடு கொண்டு போன புத்தகத்தை விரித்துக் கொண்டு அதன் மீது ஒரு கண்ணும் பாப்புவின் மீது ஒரு கண்ணுமாய் அங்கிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டேன் .

சற்றுத் தள்ளி மூன்று நடுவயதுப் பெண்கள் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தனர்.ரொம்ப நேரமாய் பேசிக் கொண்டிருப்பார்கள் போலும்.காற்றின் தயவால் என் காதுகளிலும் வந்து விழுந்தது அவர்களது பேச்சு .

பக்கத்து வீட்டுக்காரி அவ மொறவாசல் செய்றப்போ என் வீட்டு வாசப் படியில தண்ணி தெளிக்கிறாலோ இல்லையோ நான் என் மொறவாசல் வரும் போதெல்லாம் அவ வீட்டு வாசப்படியையும் தண்ணி தெளிச்சு நல்லாப் பெருக்கி கொட்டிருவேன் .முன்னாடி ரெண்டு கூடு இழுத்து கோலம் கூட போட்டு வைப்பேன் ,அந்தப் பொம்பள ஒருநா நான் இல்லன்னு நெனச்சுக் கிட்டு நாம் போட்ட கோலத்தைப் பார்த்து இப்பிடி..இப்பிடி மூஞ்சக் காட்டுனாளா (பொறாமை பிடித்த பெண்கள் முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொள்வதைப் போல பாவனை செய்கிறார் )அன்னிலருந்து கோலம் மட்டும் போடமாட்டேன்.யப்பாடி சரியான பொம்பிள அது!

இரண்டாமவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...ஒன் வீட்டு வாசலைப் பெருக்கற சரி அவ வீட்டு வாசல்ல ஏன் கோலமெல்லாம் போட்டு வைக்கிற நீ? ஒனக்குத் தேவையா இது?எதுக்கு அவளுக்கெல்லாம் நீ தண்ணி தெளிக்கற?

அதேன் கேட்கற போ ...! அவ தண்ணி தெளிக்கற லட்சணம் பாக்கணுமே?!

என்னமோ யாரும் பார்த்துரக் கூடாதுன்னு திருடப் போறவ மேனிக்கு அப்படி அங்கிட்டு இங்கிட்டும் முழிச்சிக்கிட்டு ஒரு சொம்புத் தண்ணி கொண்டாந்து சலுப்புன்னு வாசல்ல கொட்டி தொடப்பத்தால அங்கிட்டு இங்கிட்டு வெரசி விட்டுப் போயிடுவா.இதான் மொறவாசலாக்கும்?!எங்கியும் கண்டதுண்டா?அதன் நான் ரெண்டு கோலம் போட்டு வச்சுட்டு இருந்தேன்.அதையும் கெடுத்துட்டா மவராசி.

ஒன் வீட்டு வேலையே ஓம்பதூட்டு வேளக்கிச் சமானம் ,வேண்டாதாதா செஞ்சிட்டு ஏன் பொலம்புற?(இது மூன்றாவதாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்)

அவ வீட்டு வாச ,அவ எப்படியும் தெளிச்சுக்குறா ! நேரமாச்சு எந்திரிங்க போவம்.

இப்போது முதலில் பேசிய பெண்)

அதென்ன அப்பிடிச் சொல்லிட்ட. ஒழுங்கா மொறவாச செஞ்சாத்தான பூமா தேவி நம்மள நல்லாத் தாங்குவா.(!!!)

மற்ற இரண்டு பெண்களும் ஒரு நொடி "ங்கே" என்று முழிக்க தொடர்ந்த அந்தப் பெண் ...

ஆமா ...இல்லாட்டிப் போனா செத்தப்புறம் அரக்கப்பரக்க அள்ளிட்டுப் போயி இல்ல அடக்கம் பண்ணுவாங்க.செத்த அன்னிக்கு நாம மொறவாச செஞ்ச அழக ,நன்றிய நெனச்சுப் பாத்து இவ நல்லா நம்மள சுத்தமா வச்சுக்கிட்டானு அந்த பூமா தேவி நம்மள நல்லாக் கெடக்க வச்சு நிதானமா அனுப்புவா.இல்லாட்டிப் போனா வெரசா வெரசமா அள்ளிட்டுத் தான் போவாக .

இந்த இடத்தில் எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வர அவர்களறிய சிரித்து விட்டேன் போல பேசிக் கொண்டிருந்த பெண்மணி என்னைத் திரும்பிப் பார்த்து விட்டு சங்கோஜமாய் முழித்து விட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டார்.

வீட்டு வாசலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்ற அந்தப் பெண்ணின் எண்ணம் சிரிப்புக்குரியது அல்ல. பாராட்ட வேண்டிய விசயமே. ஆனாலும் வெள்ளந்தியாய் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்னை வெகுவாய் நகைப்பில் ஆழ்த்தியது.வைட் ஜோக்ஸ் னா வெள்ளந்தி ஜோக்ஸ் ன்னு வச்சிக்கலாம் மக்களே.
நோட்:
படம் கூகுளில் தேடி எடுத்தது. நன்றிகள் இப்படத்தை அப் லோட் செய்தவர்களுக்கு.

Sunday, November 1, 2009

கணவர்களின் வாயை அடைப்பது எப்படி?!

யாரோ சொன்னார்கள் கணவனது வயிற்றின் வழியாக அவனது மனதைச் சென்றடையலாம் என்று,சில நாட்கள் இந்த வரிகளுக்கான அர்த்தம் அத்தனை தெளிவாகப் புரிந்திருக்கவில்லை,ஒரு வார்த்தையின் அர்தத்தம் புரிதல் என்பது வெறுமே அதற்கான பொருளை அறிதல் அல்லவே, உணரப் படல் என்பது தானே சரியாக இருக்கும் .

அப்படித் தான் அஷ்விதாவுக்கு கல்யாணம் ஆகி ஆறேழு வருடங்கள் கழிந்த பின் தான் மேற்சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கியதாம்,எப்படித் தெரியுமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி கதை தான் .

அஷ்விதாவுக்கும் அவளது கணவருக்கும் தலைவலி காய்ச்சல் போல எல்லாம் அல்ல நேர நேரத்துக்குப் பசி எப்படி வருமோ அதே போல வாக்கு வாதமும் அவ்வப்போது வந்து வந்து போகும்...வரும் ...அப்புறம் போகும் !!!

அஷ்வியின் கணவர் எத்தனை நல்லவராய் இருந்தும் ஒரு மனஸ்தாபம் அல்லது சண்டை என்று வந்து விட்டால் பேசி பேசியே கொன்று விடுவாராம் மனிதர்.அவர் வாயை அடைக்க வேறெந்த யுக்தியும் இன்றி அஷ்வி ரொம்பவே இன்னல் பட்டிருக்கக் கூடுமோ என்னவோ?!

எல்லாம் கொஞ்ச நேர மனஸ்தாபம் தான்...காலையில் பணிக்குக் கிளம்பும் போது ஆரம்பிக்கும் வாக்குவாதம் சாப்பாட்டுத் தட்டுக்குப் பக்கத்தில் வந்ததும் சட்டென முறியும் ,மதியம் மறுபடி வரும்...வராமலும் போகலாம் அது வேறு விஷயம்;

அப்போதெல்லாம் அவள் கண்களை குளமாக்கி கன்னங்களை வாய்க்காலாக்கிக் கொண்டு அழுகையில் கரைவதை அவர்களது மூன்று வயது குட்டி சுட்டிப் பெண் சம்யூ (சம்யுக்தா) பார்த்துக் கொண்டே இருந்திருக்கக் கூடும் போல!?

காலங்கள் உருண்டன அஷ்வி எதையும் உணர்ந்தாலோ இல்லையோ ?

சம்யூ எதையோ உணர்ந்திருக்கக் கூடும் போல?!

சம்யூவுக்கும் ஐந்து வயது ...

வழக்கம் போல அம்மாவும் அப்பாவும் எதற்கோ கத்திப் பேசிக் கொண்டு வாக்குவாதம் பண்ணிக் கொண்டு இருக்கையில் மெல்ல அம்மாவின் கையைப் பற்றி இழுத்து அவளைக் குனிய வைத்து காதருகே கிசு கிசுப்பாய் ரகஷியம் போல ஒரு விஷயம் சொல்லி விட்டு வெளியில் விளையாட ஓடி விட்டாள்.

இந்தியா ...பாகிஸ்தான் யுத்தம் போல வெகு உக்கிரமாய் நடந்து கொண்டிருந்த சண்டையின் நடுவே அஷ்வி பக்கென்று சிரித்து விட அவளது கணவரும் இதென்னடா ..பைத்தியம் என்பது போல அவளைப் பார்க்க ,

அஷ்வி தீபாவளிக்கு செய்து வைத்திருந்த ரவா லட்டு ஒன்றை எடுத்து வந்து அவளது கணவரின் வாய்க்குள் திணித்தாள்.

கடு கடுப்பாய் மேலே எதோ பேச வந்த கணவனும் வாய்க்குள் இருந்த லட்டின் சுவையால் உடனே பேச வழியின்றி அதை துப்பவும் மனமின்றி அதை ரசித்து உண்பதில் முனைய அஷ்விக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது .

"சம்யூ சொன்னா சாமி சொன்ன மாதிரி " எப்போதோ ஒரு ஜோசியக் காரன் ஜாதகம் பார்க்கப் போன போது கொளுத்திப் போட்ட புகழ் வார்த்தை ஒன்றை அஷ்வியின் கணவர் அடிக்கடி சொல்வாராம் ...பெண்ணின் மேல் தகப்பனுக்கு அத்தனைப் பிரியம் போலும்!

அதுவே தான் நடந்ததாம் ...

சம்யூ என்ன சொல்லியிருப்பாளாய் இருக்கும்.

"அப்பா வாயை அடைக்கனும்னா ரவா லட்டு எடுத்து வாய்க்குள்ள திணிச்சுடும்மா " அப்புறம் பேச முடியாது பார்...

குழந்தை உணர்ந்து சொன்னாலோ விளையாட்டாய் சொன்னாலோ எது எப்படியோ மனைவியின் சுவை மிகுந்த கை மணம் சண்டை சச்சரவுகளின் போது மனைவிக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பதில் ஐயமில்லை .

இப்போது புரிகிறதல்லவா பதிவின் முதல் வரியில் சொல்லப் பட்ட வாக்கியத்தின் அர்த்தம்?!

சுபம்

Wednesday, February 11, 2009

காதல் தேவதை vs நீலு அண்ட் மது ?!


தேவதை அதன் சிறகுகளை விரித்தவுடன்

மதுமதி "நில் ப்ளீஸ் ....போய் விடாதே என்றாள்.

தேவதையோ நான் போய்த்தானே ஆக வேண்டும் என்பதைப் போல ஒரு பார்வை பார்த்தது .

மதுமதி கண்களால் கெஞ்சினாள்(கண்களின் கருந்திராட்சைகள் உருளும் ஒவ்வொரு முறையும் ப்ளீஸ் உடனே போய் விடாதே என்ற கெஞ்சல் ஊஞ்சலாடியது. ..

நீள நீளமான வாக்கியங்களை பேசி வாதம் செய்ய நேரம் இதுவல்ல என்றோ என்னவோ !அவள் திணறலாய் பதட்டத்தோடு .நீல் (நீலு என்ற நீலநாராயணன்) பாவம் ...என்று மறுபடி தேவதையின் முகம் பார்த்து விட்டு தலை குனிந்தாள் .

திராட்சை ரசம் ரெண்டு சொட்டு மண்ணில் விழுந்து மாயமானது .

மதுமதி அழுவது தேவதையைப் பாதித்ததாய் தெரியவில்லை .

"அவனை விடுவதாய் இல்லை" நீ போய் விடு தேவதை இரக்கமின்றி சலனமற்ற முகத்துடன் சொல்லி மறைந்தது.

நீலுவை நீல நிற பட்டு ரிப்பனால் கண்களை மறைத்துக் கட்டி தேவ தூதர்கள் இழுத்துக் கொண்டு பறந்தார்கள் கைகளில் பூக்களால் விலங்கு பூட்டி .

நொடியில் நடந்து விட்ட இந்த மித மிஞ்சிய அதிசயத்தில் உறைந்து போனவளாய் மதுமதி திகைத்து நின்று கொண்டிருந்தாள்.

பெரிதாய் ஒன்றும் நடந்து விடவில்லை .

நீண்ட நாட்களாய் நீலு மதுமதியை ஒற்றையாய் விரும்பிக் கொண்டிருந்தான் .இது அவளுக்கும் தெரிந்தே இருந்ததால் ...போனால் போகிறதென்று இந்த காதலர் தினத்தன்று .தானும் அவனை விரும்புவதாய் பெருந்தன்மையாய் மெரீனாவின் கடல் அலையில் கால் நனைத்துக் கொண்டே பாப்கார்ன் கொறிப்பதைப் போலவே ஈசியாகச் சொல்லி விட்டாள்.

வந்தது வினை !

நீலு சினிமா பார்த்து பார்த்து அந்த பாதிப்பில் தானும் ஒரு காதலன் ஆகி விட்டோமென்ற அடக்க மாட்டாத சந்தோசத்தின் உச்சத்தில் சட்டென்று திக்கு முக்காடி அப்படிச் சொன்னானா ?!

இல்லை அவனுக்கு எட்டில் சனியோ என்னவோ ?!

மது

மது....

மதூ ...

என் செல்லக் குட்டி

என் தங்க கண்ணம்மா ...

பட்டு மீன்குட்டி

இப்பவே இந்த நிமிஷமே ...

நாம கல்யாணம் பண்ணிக்கலாம் .

இதை மட்டும் மதுவைப் பார்த்துக் கொண்டு சொன்னவன்.

"காதல் தேவதை நீ...உன்னை இப்போவே இந்த நிமிஷமே கல்யாணம் பண்ணிகறேன் ; என் மேல ப்ராமிஸ் ."

இதை உரக்கக் கத்திச் சொல்லும் போது அவனது பார்வை மதுமிதாவிடம் இல்லை எங்கேயோ அகண்டு விரிந்து (நீல)நீளமாய் ஜொலித்த கடலில் இருந்து பொங்கிப் பிரவகித்து திரண்டு வந்த ஒரு உயரமான அலையைப் பார்த்து கத்திச் சொன்னான் .

அந்தக் அலையின் கொண்டையில் அஸ்வினி தேவர்கள் அந்நேரம் அவனை நோக்கி வந்தது பாவம் அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமே இல்லை!!!

அவன் பாவம் பித்தம் தலைக்கேறி தத்துப் பித்தென்று உளறுகிறான் என்று தான் மதுமதியும் மெரீனாவில் அந்நேரம் கடலலையில் கடலை போட்டுக் கொண்டும் கடலை கொறித்துக் கொண்டும் இருந்த பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள் .

விதி (அப்படின்னு ஒன்னு இருக்கில்ல????!!!!)

"ததாஸ்து "

என்ன நடந்திருக்கும்?

நீங்களே கெஸ் பண்ணிகோங்க உங்களுக்கு தோணறதை கீழ்கண்ட முக்கியக் குறிப்பின் அடிப்படையில்!!!!!)


முக்கியக் குறிப்பு:

"சதா நம்ம மனசும் வாயும் சும்மாவே இருக்கறதில்லை எதையாவது நினைச்சுக்கிட்டும் ...பேசிகிட்டும் தான இருக்கிறோம்.அப்போ அந்த குறிப்பிட்ட நேரத்துல அஸ்வினி தேவர்கள் வந்து "ததாஸ்து " சொல்லிட்டா நாம என்ன நினைச்சோமோ அல்லது பேசினோமோ அந்த விஷயம் அப்படியே பலிச்சிடுமாம்."ஆகவே காதலர்களே உஷார் ...காதலர் தினம் வருது ! பார்த்துப் கவனமா பேசுங்க இல்லனா நிஜ காதல் தேவதை வந்து கண்ணைக் கட்டி கூட்டிட்டுப் போயிடும்.

Thursday, January 29, 2009

பொன்னியின் செல்வன் ரசிக சிகாமணிகளுக்கு சமர்ப்பணம்

அது ஒரு நாவலாக இருக்கட்டும் அல்லது சிறுகதையாக இருக்கட்டும் வாசிக்கும் போதே அதன் கேரக்டர்களோடு நாம் மனதளவில் நெருங்கி விடுவோம்,சில கேரக்டர்கள் சட்டென்று தோழமை ஆகி மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும் ...

சில கேரக்டர்கள் வெறுப்பைத் தரும் ...வெகு சில பிரமிப்பைத் தரும்...இன்னும் சில கேரக்டர்கள் பிரமிப்பைத் தந்து அவர்களைப் பின்பற்றலாம் என்ற உணர்வைத் தரும் .சில கேரக்டர்கள் ரொம்பவே புத்திசாலித்தனத்துடன் வந்து நம்மை சபாஷ் போட வைக்கும்.

சில அனுதாபப் பட வைக்கும் ...சில கேரக்டர்கள் வெடித்துச் சிரிக்க வைக்கும் .சரி ...சரி விட்டால் இப்படியே பிளேடு போட்டுக் கொண்டு போகலாம் தான் ...விசயத்துக்கு வருகிறேன் இப்போது ;

பொன்னியின் செல்வன் நாவல் வாசித்து அதன் ரசிக சிகாமணிகளானவர்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன் .பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கினால் இப்போதைக்கு பீல்டில் இருக்கும் எந்தெந்த நடிகர்கள் எல்லாம் ஓரளவுக்கேனும் பொருந்துவார்கள் என்ற கற்பனை தான் இந்தப் பதிவு .

படிச்சிட்டு திட்றவங்க திட்டுங்கோ உங்களுக்குள்ள ....!

பாராட்றவங்க எல்லாம் பாராட்டுங்கோ எல்லாருக்கும் தெரியறாப்பில?!

போலாமா ...பதிவுக்கு தாங்க !

சரி முதல்ல கேரக்டர்களை வரிசைப் படுத்தலாம் .

  1. வந்தியத்தேவன் கமல்...கமல் ..கமல் (வேற யாரும் பொருந்தலை )
  2. குந்தவை ரம்யாகிருஷ்ணன்
  3. நந்தினி ஐஸ்வர்யா ராய்
  4. அருண் மொழி பிரபாஸ் (தெலுகு ஹீரோ )
  5. வானதி சரண்யா மோகன் (பாலக்காட்டு மோகினி)
  6. அமுதன் பரத்
  7. பூங்குழலி பிரியாமணி
  8. மணிமேகலை அசின் ;அசின் கிடைக்கலைனா மீரா ஜாஸ்மின்
  9. சுந்தர சோழர் அவினாஷ் (சந்திரமுகில சாமியாரா வருவாரே அவரு தான்)
  10. வானவன் மாதேவி ஜெயந்தி
  11. வீர பாண்டியன் - நெப்போலியன்
  12. செம்பியன் மாதேவி - லக்ஷ்மி
  13. கண்டராதித்தர் - விஜய குமார்
  14. மலையமான் -
  15. பெரிய பழுவேட்டரையர் -சத்யராஜ்
  16. சின்ன பழுவேட்டரையர் - சரத் குமார்
  17. மந்தாகினி(ஊமை ராணி) - சுஜாதா
  18. மதுராந்தகன் - சரத்பாபு (அப்பாஸ் கூட ஓகே தான் ஆனால் குந்தவைக்கு சித்தப்பானா கொஞ்சம் இடிக்கும் அதான் சரத்பாபுகாரு )
  19. அநிருத்த பிரம்மராயர் - மோகன்லால்
  20. ஆழ்வார்க்கடியான் - பிரகாஷ் ராஜ் இல்லனா அவர் சகலை ஸ்ரீஹரி நல்லா பொருந்துமோ!
  21. ஆதித்த கரிகாலன் விஷால்
  22. கந்தமாறன் ஸ்ரீமன்
  23. பார்த்திபேந்திரன் கரண்
  24. ரவிதாசன் அப்பாஸ்
  25. குடந்தை சோதிடர்- டெல்லி கணேஷ் (வேற யாருங்க பொருந்துவாங்க இந்த கேரக்டருக்கு?)
  26. கடம்பூர் சம்புவரையர் ராதாரவி
  27. கோடியக்கரை பூங்குழலியின் அப்பா - நாசர்
  28. சேந்தன் அமுதனின் தாய் சாந்தி கிருஷ்ணா (பன்னீர் புஷ்பங்கல்ல வருவாங்க இல்ல அவங்க தான் )

இதுக்கு மேலயும் கல்கி அதுல நிறைய கேரக்டர்ஸ் உலவ விட்ருக்கார்...அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம் ...இதுவரைக்கும் சொன்ன கேரக்டர்ஸ் பத்தி யோசிச்சு பாருங்க...

கொஞ்சம் பொருந்தலாம் .

உங்கள் பொன்னான கருத்துக்களையும் ...இந்தப் பதிவு பற்றிய விவாதங்களையும் வரவேற்கிறேன் .

வந்து ஏதாச்சும் சொல்லிட்டுப் போங்கப்பா !!!

சும்மா ஒரு கற்பனை தான்?????!!!!!

எல்லாரும் உங்க மண்டைக்குள்ள இருக்கற பல்ப்பை கொஞ்சம் எரிய வுடுங்க !

Sunday, January 18, 2009

யவனிகா...திரைப்படமானால்!(சுஜாதா கோச்சுக்க மாட்டார்!)

யவனிகாவை வாசித்து முடித்திருக்கிறேன் இன்று காலை.சுஜாதா ஏன் இவ்வளவு சீக்கிரம் இறக்க வேண்டும் என்று எல்லா சுஜாதா வாசகர்களைப் போலவே நானும் நினைத்தேன் கொஞ்ச நேரம்,பிறகு காலை சமையல் இருக்கவே இருக்கிறதே எல்லாவற்றையும் மறக்கடிக்க.

நிறைய பேர் யவனிகாவை வாசித்திருப்பீர்கள் என்று தெரியும்,நானும் என் பங்குக்கு இன்று தான் ...முடித்தேன்.சுஜாதாவை மட்டம் தட்டநினைப்பவர்கள் மற்றும் ஒரு கணேஷ்...வசந்த் கதை என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட முடியும் தான் .ஆனால் இதில் கற்றுக் கொள்ளவும் ...ஆச்சர்யப்படவும் விஷயம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.

ஒவ்வொரு கேரக்டரும் தனித் தனி குணநலன்களுடன் படைக்கப் பட்டிருப்பதே சுஜாதா டச் தான்.யார் யார் எப்படி இருப்பார்களோ...அவர்களை அப்படி அப்படியே கதையில் உலவ விட சுஜாதாவால் மட்டுமே முடியும்! வரும் கேரக்டர்கள் எல்லோரும் கும்பலில் கலந்து கட்டி கும்மி அடிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்வது ரசிக்கும் படி இருக்கிறது.

வேண்டுமானால் ஒரு பரீட்சை வைத்துப் பார்க்கலாமா?
இப்போது நான் யவனிகா கேரக்டர்களின் பெயர்களை இங்கே வரிசைப் படுத்துகிறேன் ...உங்களுக்கு அவர்கள் கதையில் எந்த இடத்தில் என்னவாக வந்து போகிறார்கள் ?என்பது சட் சட்டென்று மனதில் வந்து நிற்கும் பாருங்கள்(நிற்கும் தானே!!!)

கணேஷ் &வசந்த்-இவர்களைத் தெரியாதவர்கள் சுஜாதாவையே தெரியாதவர்கள்.

கணேஷ் கேரக்டருக்கு எவ்ளோ யோசிச்சும் "வெற்றி விழா ...விக்ரம் ...படத்துல பார்த்த நம்ம உலக நாயகன் கமல் தவிர வேற யாரும் செட் ஆகலைங்களே!

வசந்த் கேரக்டருக்கு பேசாம விக்ரமை போட்றலாம்.(காசா...பணமா...எதோ எனக்குத் தோணினதை சொல்றேன்.)

கெளரி-இவள் இந்தக் கதையில் யார்?இப்படி பல கேரக்டர்கள் நம்மைக் கடந்து போயிருக்கும் நாம சரியா கவனிச்சிருக்க மாட்டோம்...;(இந்தப் பொண்ணு கேரக்டருக்கு அலை பாயுதேல மாதவன் பிரெண்டா வந்த மேத்தாவை போடலாம்!

தேஜோமயி -ஹை... இவளை நீங்கள் மறந்திருக்க முடியாதே!(சரி நம்ம நமீயைக் கற்பனை பண்ணிக்குங்க இப்போதைக்கு ...சுஜாதா வர்ணனைல நமீ தேஜூவை விட கொஞ்சம் ஜாஸ்தி பிரம்மாண்டமாவே இருந்தாலும் கூட தேஜூ தமிழ் நமீக்கு மட்டுமே பொருந்தும் இன்னைய தேதிக்கு!

ராஜா செல்லையா...ராஜா ராமையா-சகோதரர்கள்.(ராஜா ராமையாவுக்கு நம்ம கிரீஸ் கர்னாட் அருமையா செட் ஆவார்.செல்லையாவுக்கு கிட்டியப் போட்டுக்கலாம்.(எவ்வளவு நாள் தான் பாவம் அவரும் வில்லனாவே வந்து போயிட்டு இருப்பார்?! இதுல கேரக்டர் ரோல் பண்ணட்டுமே?!

நடேசன்-செல்லையாவின் பார்ட்னர்(தேவன் ஒரு மலையாள நடிகர் அவர் பொருந்தலாம் இந்த ரோலுக்கு!)

அம்ஜத்-தேஜுவின் பாய் பிரென்ட் (சல்மான் கானைத் தவிர இதுக்கு யாருமே பொருந்தலைங்க என் கற்பனைல!?

சம்பத்-தேஜுவின் பி.எஸ் (எல்லா மெகா சீரியல்லயும் வர ட்ரை பண்ணுவார் பாருங்க மோகன் ராம் அவரைப் போடலாம் சரியா இருக்கும்.)

கும்பகோணத்தில் இருந்து வந்து அநியாயமாகச் உயிரை விடும் ஸ்தபதி ஒருவர்.(இந்த கேரக்டருக்கு நிழல்கள் ரவி கொஞ்சம் சரியா பொருந்துவார்னு தோணுது!

யவனிகா சிலையை கணேஷிடம் ஒப்படைக்கும் பரமானந்த் (இந்தக் கேரக்டருக்கு பழைய காதல் தேசம் அப்பாசைப் போடலாம் பொருத்தமா இருக்கும்!

மயிலாப்பூர் ஆழ்வார் சன்னதியின் அர்ச்சகர் கேரக்டர் .(யவனிகாவை படமாக்கினா இந்த ரோலை ஹேமா பாஸ்கருக்குத் தரலாம்...மனுஷர் பிச்சு உதறிடுவார் பாத்திரத்தை! பிரிவோம் சந்திப்போம் ல சேரனுக்கு சித்தப்பாவா வருவார் அவர் தான்!)

வெடி குண்டுகளை செயலிழக்க வைக்க கணேஷின் நண்பனாக கடைசி பக்கங்களில் மட்டுமே அதிரடியாக வந்து போகும் ஸ்ரீ ,(கரன் அவர் கிடைக்கலனா ஸ்ரீமன் நடிச்சா சரியா வரும் இந்த ரோல்!)

தப்பு தப்பாக ஆங்கிலம் பேசியே கொல்லும் ஒரு அராபிக் கொள்ளை கூட்டக் காரன் .(கசன் கானைப் பத்தி என்ன நினைக்கறீங்க இந்த ரோலுக்கு!)

அவ்ளோ தாங்க நடிகர்...நடிகைகள் தேர்வு முடிஞ்சது. இனி கதைக்கு போகலாம்.

கதை என்று பார்த்தால்,யவனிகா ...சோழர் காலத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வீர ராஜேந்திரர் காலத்தில் செய்வித்த ஒரு வெண்கலச் சிலை.

இதை நம்ம கிட்டி தொல்பொருள் சேகரிப்பாளர் கம் ஆர்வலரா இருந்து ஒரு மியுசியம் வச்சு பாதுகாத்துட்டு வரார்.
நம்ம மேத்தாக்கா அவர்கிட்ட வேலை பாக்கறாங்க அசிஸ்டன்ட்டா...திடீர்னு ஒருநாள் யவனிகா சிலை காணமா (திருடு) போய்ட்டதா மேத்தாக்க வந்து கமல் கிட்டயும் விக்ரம் கிட்டயும் புகார் பண்றாங்க.

இடைல நம்ம நமீதா சல்மான் கான் காதல் கலாட்டா வேற வரும்(ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்கக் கூடாது...நமீ இருந்தா தானே சூட்டிங் சீன் வைச்சு கொஞ்சம் கலகலப்பா ஆக்க முடியும் கதை ஓட்டத்தை !அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் நமீ சூட்டிங்கள தான் கதையோட முடிச்சு அவிழும்.அதனால் நமீ இந்த கதைக்கு ரொம்பத் தேவை.இவங்க கதை ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கட்டும்.
மெயின் கதைக்கு போவோம் வாங்க...

கமலும் ...விக்ரமும் யாவநிகாவைத் தேடறாங்க...தேடறாங்க...ஒரே குழப்பமா இருக்கு ! யார் தான் யவனிகாவை திருடினதுனு ? முதல்ல தேவன் மேல சந்தேகப் படறாங்க...அப்புறம் கிட்டி மேல...அப்புறம் மேத்தாக்கா மேல...கடசில திருடன் நம்ம கிரீஸ் கர்நாட்னு தெரிஞ்சிருது,

அவரே அவங்க தம்பி வச்சிருந்த விலை மதிப்பற்ற சிலையை திருடி வெளிநாட்டுக்கு விக்கிறதா சொல்லி போலி சிலையை வித்துட்டு அவங்களையும் ஏமாத்திடறார்(கிரீஸ் கர்னாட் இப்படி ஏமாத்தலைனா தான நமக்கெல்லாம் டவுட் வரும்!.

அந்த வெளிநாட்டு கொள்ளைக்கூட்ட காராங்க (அதாங்க கசன்கான் கோஷ்டி )இதனால் வெறி பிடிச்சி போயி நிஜ யவனிகா சிலையைத் தேடி இந்தியாவுக்கு வந்து கிரீஸ் கர்நாட்டுக்கு பீதி தராங்க.
ஒரு பக்கம் போலி சிலையை செஞ்சு தர உதவின ஸ்தபதி நிழல்கள் ரவி அதுக்கு உடந்தையா இருந்த தேவன்...இப்படி ஒரு நாலஞ்சு பேரை இந்தக் கூட்டம் சகட்டு மேனிக்கு கொலை செய்யுது.அதான் டுவிஸ்ட்டு !

அப்புறம் என்ன ஆகுது சில பல இடங்கள்ல (அட நம்ம சென்னைக்குள்ள தாங்க கதை நடக்குது) கலவரங்களும் குண்டு வெடிப்பும் நடந்த பின்ன யவனிகா சிலை பத்தின துப்பு விக்ரமுக்கு கிடைக்குது .கூடவே நம்ம கமலுக்கும் கிடைக்குதுங்கடா சாமியோவ்!
கமலும்...விக்ரமும் புத்திசாலித் தனமா பல செயல்கள் செஞ்சு அப்பால நிஜ (ஒரிஜினல்)யவனிகாவை கண்டு பிடிச்சிடறாங்க ஒரு கட்டத்துல .

இதுல காமெடி இன்னான்னா கடைசில அந்த சிலை ராமையா & செல்லையா கிட்டயும் போகலை...இந்திய அரசாங்கத்தின் தொல் பொருள் துறை வசமும் போகலை ...கட்டக் கடைசில மயிலாப்பூர் ஆழ்வார் கோயில்ல அவரோட பத்தினியா நிக்க வைக்கப் படுது.
சில பல உயிர்களைக் காவு வாங்கிட்டு அந்த சிலை பொது மக்கள் கண்ணில் தட்டுப் பட எவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்கு பாருங்க!சிலைக்கும் உயிர் உண்டோ?

கிரீஸ் கர்னாட் வந்து வெளிநாட்டுக் கொள்ளைக் காரங்க அவரோட கார்ல வச்ச குண்டால ...தப்பு தப்பு அதான் அந்த குண்டு வெடிப்பு விபத்துல இருந்து கரனும் கமல் அண்ட் விக்ரம் கோஸ்டி அவரைக் காப்பாத்திடுதே...ஆனாலும் உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும் " பழமொழிக்கேற்ப தன்னோட வாலட்டை (மணி பர்சு தாங்க athai ippadiyum solluvaangalaam!)கார்ல் இருந்து எடுக்க மறுபடி காருக்குள்ள பாயுற கிரீஸ் பீஸ் பீசா வெடிச்சு சாகிறார்.(படத்துலங்க!)

மேத்தாக்க இடைல கணேஷை லவ் பண்ணறதா பீல் ஆகிட்டு பின்னாடி ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி அமேரிக்கா போயிடறாங்க.

நம்ம வசந்த் சல்மான் கான் கிட்ட இருந்து நமீயை காப்பாத்த நமீயோட தற்காலிக பாய் பிரெண்டா நடிக்கறார்.அப்புறம் kazhandukkaraar..சல்மான்கான் மான் vettaila ஜெயிலுக்குப் போனதும் நமீ இந்தியன் கிரிகெட் டீம்ல ஒருத்தனை லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.

அதாங்க கமல் கல்யாணம் பண்ணிக்காம ...காதல்லயும் மாட்டிகாம eppavum போல ஒழுங்கான பிரம்மச்சாரியா காலத்தை வக்கீலாவே கடத்திட்டு இருக்கார்.

இதாங்க யவனிகா கதை விமர்சனம்.

நிஜமா தான் சொல்றேன்...யவனிகா படிக்க நினைப்பவர்கள் தயவு செய்து இதை படிக்காதீங்க.ஏதேதோ எழுத நினைச்சு கடைசில இன்னைக்கு இப்படி போய் முடிச்சிட்டேன் பதிவை.

திட்ரவங்க திட்டலாம் ....பாராட்டுறவங்க பாராட்டலாம்!!!!!அப்படி யாராச்சும் வருவாங்க பாருங்களேன்!