Friday, February 12, 2010

ஜெயந்தனுக்கு (நிராயுதபாணிக்கு) அஞ்சலி...




"தீம்தரிகிட" மின்னிதழில் தான் தனது "துப்பாக்கி நாயக்கர்"சிறுகதை மூலமாக முதன் முறையாக ஜெயந்தன் எனக்குஅறிமுகம் ஆனார்.பாஸ்கர்சக்தி ஒரு நினைவுறுத்தும் பகிர்வாக இச்சிறுகதை குறித்து அங்கே எழுதி இருந்தார்.அளவில் நீண்ட சிறுகதை ஆயினும் படிக்கத் தூண்டும் வெகு ஜன வாசம் நிரம்பிய எழுத்து நடை,சற்றே விவரமான வெள்ளந்தி தனமான (!!!) ஆதங்கங்கள்,சமூகம் குறித்த தார்மீகக் கோபங்கள்,வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் படியான பகடிகள்,பல்லிளிக்கும் பகட்டான முலாம் தேய்ந்த பின்னான கோர மனித அக முகங்கள்.இப்படி இவரது சிறுகதைகள் பேசாத பொருள் இல்லை எனலாம்.

எல்லாக் கதைகளுமே திட்டமிட்டு கூடுதல் ஆயத்தங்களுடன் எழுதப் பட்டவை போலன்றி இயல்பாகவே தனது நிஜத் தன்மையால் முழுமையும் நிறைவும் பெற்று விட்டதான தோற்றம் தருபவை.

வம்சி வெளியீடான ஜெயந்தனின் "நிராயுதபாணியின் ஆயுதங்கள்" தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.மொத்தம் 58 சிறுகதைகள்,அனைத்துமே சிந்தனையை தூண்டத் தக்கவை,சில மிக ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.'நம்மில் இருக்கும் நானை வெளிக்கொணரும் முயற்சிகளே 'அவரது பெரும்பான்மையான கதைகளும்.

இந்த தொகுப்பில் என்னில் அதிகம் பாதித்த சிறுகதைகள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் ,இதுவே அந்த உன்னத எழுத்தாளனுக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவும் இருக்கட்டும்.இதை தவிர வேறென்ன செய்து விட முடியும் வாசகர்களை நாம் !

ஊமை ரணங்கள்
மரம்
துக்கம்
துப்பாக்கி நாயக்கர்
வெள்ளம்

இந்த ஐந்து கதைகளும் வெகு கனமான விசயங்களை மிக லேசாகப் பேசிச்சென்று முடிவில் கதையைப் பற்றிய உள்ளுணர்தலில் நடுக்கமான ஒரு அதிர்வை ஏற்படுத்தி ஓய்கின்றன.

"மரம்" சிறுகதை வாசிக்கையில் சற்றேறக் குறைய இதே உணர்வை ஏற்படுத்திய பிறிதொரு குறுநாவல் , பாஸ்கர் சக்தியின் "ஏழுநாள் சூரியன் ஏழு நாள் சந்திரன் "ஞாபகத்தில் பளிச்சென்று நிழலாடியது. இரண்டிலுமே நிகழும் எதிர்பாரா துர்மரணங்கள் தற்செயலானவை.முடிவில் வாசிப்பவர்களை பதற வைத்து திடுக்கிடச் செய்பவை.

இதே போல "துக்கம்" சிறுகதை வாசிக்கையில் தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது" சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையான "காத்திருப்பு" ஞாபகம் வந்தது.இரண்டு சிறுகதைகளுமே வாழ்ந்து சலித்த முதியவரின் மரணத்திற்குப் பின் அவருக்கு மிக நெருக்கமாகிப் போன இளைஞனின் அகக்கோபங்களைப் பற்றிப் பேசிச் செல்பவை.

வயோதிகத்தில் அவர்களின் இருப்பை புறக்கணித்து மதிக்காத சுற்றமும் வாரிசுகளும் மரணத்தின் பின் கதறி அழுவது "புளிப்பும் கரிப்புமாய் வயிற்றுக்குள் நுரைப்பதைப் போலான ஒரு அவஸ்தையான உணர்வை" அந்த இளைஞர்களிடத்தில் ஏற்படுத்துவதாக வாசிக்கையில் எங்கேயோ...எப்போதோ பெயரற்று உணரப் பட்ட ஏதோ ஒரு உணர்வின் நினைவு மேலெழுகிறது.

"ஊமை ரணங்களில்" மகளுக்கு தலை தீபாவளி சீர் செய்யப் பணம் கிடைக்காமல் திகைக்கும் ஒரு அப்பாவி அப்பாவுக்கும் விவரமான மகளுக்கும் இடையேயான உரையாடல் மெய்யான ஊமை ரணமே தான்.

கல்யாணத்துக்கு முன்பு அவள் தகப்பன் வீட்டில் இருந்து வேலைக்குப் போகையில் பெற வேண்டிய சம்பளப் பணம் அரியர்ஸ் என்ற பெயரில் கல்யாணத்துக்குப் பின் மொத்தமாக கிடைக்கவே படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பி அதற்கான பலனை அனுபவிக்க கொடுத்து வைக்காத ஆதங்கமும் வேறு வக்கற்ற இயலாமையும் கலந்து மகளிடமே அந்த தகப்பன் பணம் கேட்டுப் பெற தயக்கம் நிறைந்த நம்பிக்கையோடு புறப்பட்டு வருகிறான்,அங்கே மகளிடத்தில் அவனுக்கு கிடைத்த பதில் தான் ஊமை ரணமாகிப் போகிறது அவனுக்கு,நிஜத்தில் நாம் கண்ட கதை தான்,புத்தகத்தில் வாசிக்கையில் புறக்கணிக்க இயலா வருத்தம் தழும்பி அந்த தகப்பனுக்காக திகைக்கச் செய்கிறது .

"துப்பாக்கி நாயக்கர்" இன்னுமொரு அருமையான நிகழ்வு அடிப்படையில் அமைந்த கதை. ஊரே பயந்து மிரளும் ஒரு பெரிய மனிதனின் இளைய தாரத்தை அவரது அடியாட்களில் ஒருவனே கை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய விழைய ,ஒரு நிமிட சபலத்திலான அவனது அந்த செய்கை பிற்பாடு "முதலாளி" என்ன செய்வானோ எனு பயத்திலேயே தானாக மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறான்.சேதி அறிந்து இவனை எவ்வாறெல்லாம் மிரட்டலாம் என்றெண்ணிய அந்தப் பெரிய மனிதனுக்கு இவனது தற்கொலை மிகப் பெரிய அதிர்ச்சியாகி விடுகிறது.இப்படிப் போகிறது கதை.இந்தக் கதைக்கான லிங்க் கீற்று தளத்தில் தீம் தரிகிடவில் கிடைக்கும் என நினைக்கிறேன்,கிடைத்தால் வாசியுங்கள் ,நல்ல எழுத்து.

"வெள்ளம்" இந்தக் கதை வாசித்த பின் தான் நான் "கிருஷ்ணி "என்றொரு கதை எழுதினேன்.சம்பவங்கள் வேறு வேறு எனினும் மூலம் ஒன்றே.கல்யாணமாகி மனைவியைப் பிரிந்து இருக்கப்பட்ட அல்லது அவ்வாறு இருக்க எதாவது ஒரு வாழ்வியல் சூழலால் நிர்பந்திக்கப் பட்ட ஒரு ஆணின் பார்வையில் பெண்கள்.சொல்லப் போனால் பெண் எனும் பிம்பம் வயது ஒரு பொருட்டின்றி விவஸ்தை கெட்ட மனதின் அலங்கோல சிந்தனைகளைப் பற்றி சொல்லும் கதை இது,

ஒரு ஆணின் அகத்துக்கும் அவனுக்கு கிட்டிய சந்தர்பங்களுக்கும் இடையிலான உரையாடல் தன்மை ஒத்த இச்சிறுகதை மிக நல்ல முயற்சி.பதற வைக்கும் விஷயம் தான் ஆனாலும் முடிவில் மழை ஓய்ந்து வானம் தெளிவதைப் போல கருமை படர்ந்த அவனது விபரீத எண்ணங்கள் ஓய்ந்து அவன் தெளிவான வானம் பார்ப்பதாய் கதை முடிகிறது.வாழ்வும் இப்படித் தான்.நமக்கு நாமே ஒரு கோல் வைத்துக் கொண்டு நம்மை நாமே எல்லா சந்தர்பங்களிலும் வழுவாதிருக்க முயற்சி செய்து கொண்டு ஆட்சி செய்து கொள்ள வேண்டியது தான். இது ஒரு தீராத ஆட்டம் தான்,ஆனாலும் கரணம் தப்பினால் மரணம் போன்ற ஆட்டம்.

இந்த ஐந்து சிறுகதைகளுமே வாசிப்பளவில் என்னை மிகப் பாதித்தவை,இவை தவிர;

உபகாரிகள் :


பெண் பார்க்கச் செல்கையில் அக்கம் பக்கம் அந்தப் பெண்ணைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறார்கள் ஒரு இளைஞனின் சுற்றமும் நண்பர்களும்,லயம் தப்பாமல் எல்லோருமே பெண் மிக நல்லவள்,குணவதி என்று சர்டிபிகேட் தர பையன் ஆகாயத்தில் மிதக்காத குறை ,ஆனால் அந்தப் பென்னிடமிருந்தே "நான் ஒரு பஸ் டிரைவரை காதலிக்கிறேன்,என் அப்பாவும் தம்பிகளும் அவரை சில நாட்களுக்கு முன் நான் வேலை பார்க்கும் பள்ளிக்கு முன்பாகவே எல்லோரும் வேடிக்கை பார்க்க ஆள் வைத்து அடித்து உடைத்து விரட்டி விட்டார்கள்,நான் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் "என்று கடிதம் வரவே அந்த மாப்பிளைப் பையன் ஆகாயத்தில் இருந்து தொபுக்கடீர் என்று தரையில் விழுகிறான்!!!
பிறகெப்படி அப்படி ஒரு பெண்ணை என் தலையில் கட்ட விசாரித்த இடத்தில் எல்லாம் நல்ல பெண் ..நல்ல பெண் என்று சர்டிபிகேட் தருகிறார்களே! என்று இவர்கள் அவர்களிடமெல்லாம் மறுபடியும் விசாரிக்க,

நடந்தது நடந்து போச்சு அதுக்காக ஒரு பொண்ணோட கல்யாண விசயத்துல விளையாட முடியுமா?
அவளுக்கு நல்ல படியா கல்யாணம் ஆகட்டும் என்று எண்ணி தான் இப்படிச் சொன்னதாக சொல்கிறார்கள்
.எப்படிப் பட்ட உபகாரிகள் பாருங்கள் ?!!!இது தான் அந்தப் பெண்ணிற்கு அவர்கள் செய்யும் உபகாரமா!!!

இதே போல "பைத்தியம்" என்றொரு சிறுகதை ; இன்ஜினியரான தன மகனுக்கு நா பைசா வரதட்சினை இன்றி திருமணம் செய்து வைக்கும் ஒரு பேராசிரியரை ஊரும் அந்த ஊர் எம்.எல் ஏ வும் புகழ்ந்து வாழ்த்துகிறார்கள்,"புரட்சித் திருமணம்" என்று வாழ்த்துத் தந்தி எல்லாம் அனுப்பி கொண்டாடுகிறார்கள் அவரை.அதில் மிதப்பாய் சந்தோஷித்து திளைக்கும் அந்தப் பேராசிரியரை அவரில்லாத இடம் என்று எண்ணி அவரது சொந்த அக்காள் கணவரும் அவரது நண்பர்களும் "இப்படி ஒரு பைத்தியத்தைப் பாரேன்" என்றே ரேஞ்சில் எள்ளி நகைத்துப் பேச வானளவு மிதந்து கொண்டிருந்த அந்தப் பேராசிரியர் பூமிக்கு இறங்கி தரையில் கால் பாவி பித்துப் பிடித்தது போல அவர்களைக் கண்டு என்ன சொல்வதென புரியாமல் உரத்துச் சிரிக்கிறார்,நம் செயல்கள் மிக உயர்ந்தவையாய் இருப்பினும் அதைக் குறித்து நாம் மட்டுமே உன்னதம் கொள்கிறோம்,பிறருக்கு ஏதோ ஒரு வகையில் அது எள்ளல் மிகுந்ததாய் அமைந்து விடுகிறது,விசித்திரம் தான்.இது தானே வாழ்கை !

இதே வரிசையில்

வாசித்து நிமிர்கையில் இதழ்களில் மிக மெல்லிய புன்னகை பூசத்தக்க எள்ளல் நடையில் இன்னும் சில சிறுகதைகள் இதிலுண்டு ,அவை

4 வது பரிமாணம்

இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்

ஓர் ஆசை தலைமுறை தாண்டுகிறது

அவர்கள் வந்து கொண்டிருகிறார்கள்

கவிமூலம்

மிஸ்.காவேரி

இந்தக் கதைகளைக் கூறலாம்.

இவை மட்டுமல்ல "பிடிமானம் " எனும் சிறுகதை ஏற்றுக் கொள்ளவியலாத வகையில் அமைந்த ஒரு பெண்ணின் தாய்மையைப் பற்றி பேசுகிறது.

"மொட்டை" இதே சாயலில் இனி எந்தக் கதை வந்தாலும் ஜெயந்தனின் இந்தக் கதை ஞாபகம் வரும்.


"நிராயுதபாணியின் ஆயுதங்கள் " கதையின் தலைப்பே எத்தனை அர்த்தம் பொதிந்திருக்கிறது பார்த்தீர்களா?! இதில் விளக்கம் சொல்ல என்ன இருக்கிறது?! இந்த சிறுகதையும் வாசிக்க வேண்டிய சிறுகதையே.

"டாக்கா மஸ்லின் " ஒரு மாறுபட்ட கற்பனை,வாசிப்பவர்களின் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி நீடிக்கத் தக்க சிறுகதைகளை எழுதும் ஆசை இருக்கும் புதியவர்கள் வாசிக்க வேண்டிய படைப்புகளில் ஒன்று ஜெயந்தனின் சிறுகதைகள்.அந்த எளிமையான எழுத்தாளருக்கு எமது அஞ்சலி இந்தப் பதிவு.
புத்தகம் நிராயுதபாணியின் ஆயுதங்கள்
ஆசிரியர் ஜெயந்தன்
வெளியீடு வம்சி பதிப்பகம்
விலை ரூ 400


நோட்:

வம்சி புக்ஸ் பவா செல்லத்துரை சொன்னதாக ஒரு வாக்கியம் நெட்டில் ஜெயந்தன் அஞ்சலிப் பதிவுகள் எதிலோ ஒன்றில் வாசித்தேன் ,அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது,ஏன் ஜெயந்தன் அதிகம் கொண்டாடப்படவில்லை?!அவருக்கு தன்னை மார்கெட்டிங் செய்து கொள்ளத் தெரியவில்லையோ!!! அல்லது அவரது சிறுகதைகளில் அப்பட்டமாய் வெளித் தெரியும் இயல்புத் தன்மை போலவே "இது போதும்" என்று தன்னிறைவாய் இருந்து விட்டாரோ!எப்படியானாலும் சரி இலக்கிய வாசிப்பில் தவிர்க்க முடியாத படைப்புகள் ஜெயந்தனுடையவை.


வாசிப்பவர்கள் ஜெயந்தன் குறித்த உங்களது பகிர்வுகளை இங்கே பதிந்து செல்லுங்கள்

Wednesday, February 10, 2010

My Daughter...


என் தம்பி இந்த வருடப் பிறந்த நாளுக்காக பாப்புவுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தான்.தினம் அரைமணி நேரமாவது சைக்கிள் ஓட்டினால் தான் அவளுக்கு திருப்தி,மூன்று மணிக்கு பள்ளி விட்டு வந்ததும் 4 to 4 .30 cycling தான்.

நேற்று பாப்புவை cycling அழைத்துச் செல்லும் போது அவள் பாதையோரம் கண்ணில் பட்ட காகங்கள்...நாய் ...நாய் குட்டிகள் ...பசு மாடு ,எல்லாவற்றுடனும் பேசிக் கொண்டே வந்தாள்.பார்க்க வெகு அழகாய் இருந்தது,

காகங்கள் கூட்டமாய் குப்பையில் இருந்த ஏதோ ஒரு உணவுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தன ,ஒரே ஒரு காகம் மட்டும் தனியே மற்ற காகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

பாப்பு இங்கிருந்து கொண்டே ...

"ஏய் செல்லக் குட்டி" நீ சாப்பிட்லையா? ஒனக்குப் பசிக்கலையா? போ...போ ..இப்பிடி...இப்பிடி பறந்து போயி அப்பிடி...அப்பிடி சாப்பிடுவியாம்." சொல்லி விட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு ,

அடுத்து ஒரு நோஞ்சான் பசுமாடு குப்பையில் பிளாஸ்டிக் பையைத் தின்ன முயன்று கொண்டிருந்தது.

"ஏய் கௌ (கௌ) ...பைய போய் திங்கற...வயித்துல சிக்கிக்கும்,ஒனக்கு வாந்தி வாந்தியா வரப் போகுது ச்சூ...ச்சூ ஓடிப் போ" என் சுடிதார் முனையை இறுக்கப் பற்றிக் கொண்டு அதை விரட்ட பார்த்து முடியாமல் போகவே ;

ச்சே..ச்சே ..பெட் கௌ "

சொல்லி விட்டு நான் அவள் சொன்னதை ஆமோதிக்கிறேனா என்றொரு பார்வை என்னை நோக்கி;

பார்க்கில் யாரோ இரண்டு நாய்க்குட்டிகளை கொண்டு வந்து பார்க் பெஞ்சில் கட்டிப் போட்டு விட்டு வாக்கிங் போயிருந்தார்கள் ,அந்நேரம் கூட்டமும் அதிகம் இல்லை.

ம்மா ...நம்மளும் ஒரு dog வளக்கலாமா?!

சூப்பரா இருக்கும்மா குட்டி டாக் "dog guards our home " pet animals ல வருதுல்ல .

ம்...டாடி வந்ததும் டாக் வாங்கிட்டு வரச்சொல்லி வளக்கலாம்டா."

எனக்கு நாய்...பூனை வளர்ப்பெல்லாம் பயங்கர அலர்ஜி,ஆனாலும் மறுத்தால் அவள் அழக்கூடாதே என்பதற்காய் சும்மா சொல்லி வைத்தேன்.

"நீ தான் நாய்னாலே கிட்டப் போக பயப்படுவியே...அப்புறம் எப்பிடி நாய் வளப்பியாம்?!

அதெல்லாம் நான் dog கிட்ட பேசிப் பேசி friend ஆயிடுவேன்"

இப்ப பார் இந்தக் காக்கா...இந்த கௌ இந்த டாக் எல்லாம் கூட நம்ம friends தான் ,டெய்லி இப்பிடி பேசிட்டே இருந்தா நம்ம எல்லாரும் best friends தான் மம்மி!!!"

எனக்கு ;
"காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்" பாரதியின் வரிகள் ஞாபகம் வந்தது,சிரித்துக்
கொண்(டேன்)டோம்.

குழந்தைகளின் அகஉலகம் எப்போதுமே இப்படித்தான் மிக மிக அழகானது மட்டுமல்ல பாரபட்சம் அற்றதும் கூட. :)))


டிஸ்கி:
படம் கூகுளில் தேடி எடுக்கப் பட்டது.

Monday, February 8, 2010

சைக்கிள்...

ஐம்பது காசு இருந்தால் போதும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டலாம் . அம்மா தர வேண்டுமே ! நேற்று தான் அப்பாவிடம் வாங்கினோம் ,அதற்கும் முந்தைய நாள் அத்தையிடம் ... இன்று யாரிடம் கேட்கலாம் ?!;

விஜயலுவின் மனம் பர பரவென்று யோசித்தவாறு சைக்கிள் கடை முன்பாகவே சுற்றிக் கொண்டிருந்தது .தினம் ஒரு ஐம்பது காசு கொடுத்தால் இவர்களென்ன குறைந்த போய்விடுவார்கள் ,நினைக்கும் போதே தன் நெஞ்சம் தன்னை சுட்டது ,காலை முதல் எத்தனை ஐம்பது காசுகள் வாங்கிச் செலவழித்தாகிவிட்டது ,இப்போது போய் கேட்டால் யார் தரப் போகிறார்கள் ?யோசிக்கும் போதே மஞ்சள் நிற பெயிண்ட் அடித்த அரை சைக்கிள் ஐ மோகனப்பிரியா எடுத்துக் கொண்டிருந்தாள் .

போன வாரம் வரை கேட்டால் ஒரு ரவுண்டு ஓட்ட தருவாள் தான் .இன்றைக்கு சைக்கிள் கடை முன்னால் விஜயலுவைப் பார்த்ததுமே கழுத்தை ஒரு வெட்டு வெட்டிக் காட்டி விட்டல்லவா குரோதத்துடன் போகிறாள் .

முந்தா நாள் சமூகவியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது ராமு வாத்தியார் எப்போதும் போல் கேள்வி கேட்டார் , பதில் தெரிந்தவர்கள் சொல்லி விட்டு தெரியாதவர்களின் முதுகில் குனிய வைத்து குத்துவது அந்த வகுப்பின் மரபு .அப்படித்தான் அன்று விஜயலு பதில் சொன்னதும் மோகனப்ரியாவை குனிய வைத்து கொஞ்சம் பலமாக குத்தி விட்டாள்...அதிலிருந்து அவள் இவளுக்கு சைக்கிள் மட்டுமல்ல வேறு எதுவும் தர மாட்டேனென்று விட்டாள் ...

கொய்யாப் பழம் ...
பலாக்கொட்டை ...
மாம்பழக் கீத்து ...
நாவல் பழம் ...
இலந்தைப் பழம் ....
எதுவுமே தான் !

இவளிடம் போய் சைக்கிள் கேட்டு அவமானப் படுவதா ?

நிச்சயம் அவள் சைக்கிளை சும்மா தொட்டுப் பார்க்கக் கூட விட மாட்டாள் ...கூட இருக்கும் அவள் கூட்டாளிகள் இருக்கிறார்களே பிசாசுகள் ...சரியான பேய்க்குட்டிகள்..!

சைக்கிள் வேண்டுமே ஓட்ட !

இப்போது என்ன தான் செய்வது ?

சைக்கிள் பைத்தியம் பிடித்து ஆட்டுதுடீ உன்ன ;அக்கா அடிக்கடி வீட்டில் மாட்டி விட ஆரம்பித்து விட்டாள் .

அம்மா அவளுக்கு காசா தராத சைக்கிள் கடைல தான் எந்நேரமும் கிடக்கா ...பேசாம சேவு ...சீனி முட்டாய் ...மரவள்ளிக் கிழங்கு எதாச்சும் வாங்கி குடு ...இல்லாட்டி சைக்கிள்ல அழுதுட்டு என்கிட்டே பங்கு கேட்பா ;அக்காவை அறையனும் போல இருக்கும் அந்நேரம் ;

அந்த ரோஸ் நிற நடுக்கம்பியிட்ட சைக்கிள் இருகிறதே அது தான் விஜயலுவின் செல்ல வண்டி .சைக்கிள் கடை பரமு அண்ணாச்சியிடம் எத்தனையோ தடவை அதை யாருக்கும் தராதிங்க அண்ணே என்று சொல்லி இருக்கிறாள் .அந்த நேரம் சரி...சரி என்று போக்கு காட்டி விட்டு அடுத்த நொடியே யார் வந்து கேட்டாலும் காசுக்கு பேதமின்றி எல்லா சைக்கிள்லும் வாடகைக்குத் தருவார் சைக்கிள் கடை பரமு.

அந்த ரோஸ் நிற சைக்கிள் இன்று இன்னமும் யாரிடமும் போகவில்லை ...அதை எடுத்தே ஆகவேண்டும் என்று தான் பரபரப்பாய் யோசித்துக் கொண்டு இருந்தாள் விஜயலு ,சைக்கிள் லில் அப்படி என்ன தான் கண்டாலோ ?"ஆன்ட பிடகு ஏமிசே சைக்கிள் லு "அக்கா கத்துவாள் .

பஸ் ஸ்டாண்டில் தான் சைக்கிள் கடை ,

யாராவது சொந்தக்காரர்கள் வந்து அடுத்த பஸ்ஸில் இறங்க மாட்டார்களா காசு கிடைக்குமே சைக்கிள் விட !

சித்திக்கு என்ன கேடு பக்கத்து ஊர் தானே ? வந்தால் என்ன?

அத்தை மதுரையில் இருக்கிறாள் ...ஆனாலும் அவசரத்திற்கு வரலாம் ...வந்தால் என்ன கெட்டு விடும் ?

மாமா கோயம்பத்தூரில் இருந்தால் என்னவாம் இப்போது வந்து தொலைப்பதற்கு என்ன?
எங்கே ஒழிந்து போய்விட்டார்கள் இந்த சொந்தக்காரர்கள் எல்லோரும் ஒரேநாளில் !!!
விஜயலுவுக்கு மெல்ல அழுகை வரப்பார்த்தது .சொந்தக்காரர்களை நினைத்ததெல்லாம் இல்லை .

அந்த ரோஸ் நிற கம்பி சைக்கிள் இருக்கிறதே அதை ஒரு பையன் ஸ்டாண்டை விட்டு வெளியே தள்ளிக் கொண்டு இருந்தான் .அது விஜயலுவின் செல்ல வண்டி ஆயிற்றே !!!யார் அந்தப் பையன் ?

ஊர் மந்தைப் வேப்ப மரப்பிள்ளையார் மீது எக்கச்சக்க கோபம் வந்தது ,ஆலமரம் இல்லாமல் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போதே உனக்கு இவ்வளவு குசும்பு இருந்தால் ... உனக்கு இனி தோப்புக்கரணமே போடபோவதில்லை .மனதிற்குள் கருவிக் கொண்டாள்.

போயும் போயும் அந்த கோனை வாய் கோபிக்கா ரோஸ் சைக்கிள் போய் சேரனும் ?எல்லாம் உன்னால் தான் பிள்ளையாரே !என் ரோஸ் சைக்கிள் போச்சே !!!அவன் போகிற போக்கில் இவளைப் பார்த்து நக்கலாய் சிரித்தமாதிரி இவளாக நினைத்துக் கொண்டாள் .

சேச்சே ...இனி இந்த பரமு சைக்கிள் கடைக்கே வரவே கூடாது .ஊரில் வேறு சைக்கிள் கடையா இல்லை ?

ஆமாம் வேறு இல்லையே ...ஒரே ஒரு கடை தானே ஊரில் !!!

தேவையே இல்லாமல் இதுவும் ஞாபகத்துக்கு வர இல்லாவிட்டால் போய்த்தொலையட்டும் .இனி பரமு கடை எந்த திசை என்று கூட மறந்து போகணும் பிள்ளையாரப்பா ...கண்களை இருக்க மூடி சிலுவைக்குறி இட்டுக் கொண்டு வேண்டி விட்டு வீட்டை பார்த்து ஓடினாள்,படிப்பது பாதிரிமார் பள்ளிக்கூடம் ஆச்சே!!!சிலுவை இடாவிட்டால் பிள்ளையார் கோபித்துக் கொள்ளக்கூடுமே !!!

விஜயலு மெல்ல வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள் ,அம்மா புறக்கடையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் கேட்டது .அக்கா ஏழாம் வகுப்பு கூட்டு வட்டி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் இவளுக்கு முதுகைக் காட்டியவாறு ;

இது தான் நல்ல சமயம் யாரும் கவனிக்கவில்லை இருட்டிக் கொண்டு வேறு வந்தது ..மழைக்காலம் ஆச்சே !!!

சாயந்திரம் பெட்டிகடையில் வாங்கித் தின்ற கடலை உருண்டையும் அஞ்சு காசு அப்பளமும் என்னத்திற்கு ஆகும் ?

பசி எடுக்கத்தான் செய்தது ;"எங்க போய் ஊர் சுத்திட்டு வர ?" அம்மா முதுகில் சத்து சாத்தென்று சாத்துவாளே?!

பூனை போல கூடம் தாண்டி எல்லோரும் படுக்கும் இடத்தில் விரிப்பு எதுவும் இன்றியே அந்த ரோஸ் நிற சைக்கிள்ளை நினைத்துக் கொண்டே மெல்ல ...மெல்லத் தூங்கிப் போனாள் விஜயலு .

Friday, February 5, 2010

கடந்து போனவள்...(மீள் பதிவு)




எதிர் வெயிலுக்கு முகம் சுருக்கி தன் முன்னே நடந்து போய்க் கொண்டு இருந்த அந்தப் பெண்ணை முருகேசனுக்கு கொஞ்ச நாளாய் நன்றாகவே தெரியும் . தினமும் இந்த வழியாகத்தானே போகிறாள் ....வருகிறாள் ...; ஒரு முறையேனும் அவள் இவனைத் திரும்பி பார்த்ததில்லை ... இவனும் அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று பார்த்ததில்லை ... பழக்கதோஷம் என்பார்களே அப்படித்தான் இதுவும் ,


முருகேசன் அயன் கடை வைத்திருந்த தெரு அப்பெண் குடியிருக்கும் தெருவாகி விட்டதால் அடிக்கடி பார்வையில் பட நேர்ந்தது ...அதுவே பின்னாளில் அவளைப் பற்றி அவன் யோசிக்கவும் வழிவகுத்தது . ஒருநாள் அப்பெண்ணைப் தெருவில் பார்க்கா விட்டாலும் " இன்னும் காணோமே ... என்று மனம் கேள்வி கேட்கும் நிலை வந்து விட்டது இப்போதெல்லாம் ...


பசி வந்ததும் கூடவே தங்கத்தின் ஞாபகம் வந்தது , மதியம் என்ன செய்து வைத்திருப்பாளோ ? எட்டு மணிக்கெல்லாம் " மீன் ...மீன் ...மீனோய்... வஞ்சிரம் மீனோய் ! என்று கூவி கொண்டு போன மீன்காரனின் குரல் செவியில் இன்னும் கூட தேனாய் தித்தித்தது , இன்றைக்கு மீன் செய்ய சொல்லி இருக்கலாம் ,தங்கம் எது செய்தாலும் வாய்க்கு ருஷியாகத்தான் செய்வாள் .கோழிகறி ஆகட்டும் ...ஆட்டுக்கறி ஆகட்டும் ...உண்டு முடித்தபின் ஆளை ஒரு அசத்து அசத்தி விடும் .


தங்கத்துக்கும் , முருகேசனுக்கும் கல்யாணமாகி ஐந்து வருடம் ஓடி விட்டாலும் சின்னஞ்சிறுசுகள் போலத் தான் இப்போதும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கும் அவர்களது சம்பாசனையில் . பிள்ளையில்லாத வெறுமை கூட இதற்கு காரணமாயிருக்குமோ என்னவோ?


பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணின் பெயர் முருகேசனுக்குத் தெரியாது . கூட ஒரு குழந்தை நடந்து போகும் ,அது அவளுடைய குழந்தை தான் . வாய் ஓயாமல் பேசிக் கொண்டே போகும் . "மம்மி நீ வர வேண்டாம் னு சொல்றேன்ல" நான் தான் இப்ப பிக் கேர்ள்ஆயிட்டேன் ல"அவள் அதிகம் பேச மாட்டாள் , "ரோட்டைப் பார்த்து நட குட்டிம்மா " இது தான் அவள் பேசி அவன் கேட்ட வார்த்தைகள் .


மாமியார் தூரத்தில் துணி மூட்டையுடன் வருவது இங்கிருந்து நிழல் அசைவாய் கண்ணில் பட்டது , பாவம் இந்த வயதிலும் கடின உழைப்பாளி , வீடு வீடாய் போய் அயனுக்குத் துணி வாங்கி வருவாள் அதை பெட்டி போட்டுத் தந்ததும் மறுபடி வீடு வீடாய் போய் கொடுத்து பணம் வாங்கி கொண்டு வருவாள் . முருகேசனுக்கு 'நல்ல சப்போர்ட் 'என்று பக்கத்தில் கறிக்கடை வைத்திருக்கும் முனியசாமி சிலாகித்துச் சொல்லிக் கொள்வார்.


மாமியார் வெயிலை உடல் முழுதும் உறிஞ்சி விட்ட ஆயசத்தில் கருத்துப் போன முகத்தைத் அழுந்தத் துடைத்து விட்டு , பானையில் இருந்து சொமபு சொம்பாய் நீர் மொண்டு குடித்து விட்டு கொஞ்சம் முகத்திலும் சுளீர் ...சுளீரென்று தண்ணீரால் அடித்துக் கொண்டு துடைக்காமல் விட்டு விட்டாள். காற்று படப் பட இதமாய் இருக்கும் போல ... "சரி முருகேசு நீ வீட்டுக்குப் போ ... மணி ஆவுது பாரு" சொல்லி விட்டு கடைக்குள் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டாள்;


நல்லவள் தான்...ஆனால் வாய் கொஞ்சம் ஜாஸ்தி ... பேச்சு அதிகாரமாய் தான் இருக்கும் , இதனால் அயனுக்கு தருகிறவர்கள் ஒன்றிரண்டு பேருடன் அவ்வப்போது சின்ன சின்னத் தகராறும் செய்து கொள்வாள் ,பிறகு மறுபடி அவளே அதை சரி செய்து விடுவாள் , பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணுடன் கூட ஒருமுறை சின்ன சண்டை போட்டிருக்கிறாள் , அன்றைக்கு முருகேசன் கடைக்கு வராத நாள் .


மச்சினன் சித்தநாதனை கடையில் நிற்க வைத்து விட்டு புதுப்பேட்டையில் இருக்கும் ஒன்று விட்ட தம்பி மனைவியின் சித்தப்பா இறந்த துஷ்டி கேட்க போயிருந்தான் . அந்தப் பெண் கடைக்கு துணி கொண்டு வந்து அவன் பார்த்ததில்லை ,மாமியார் தான் போய் வாங்கி வருவாள் , அவசரமென்றால் அவளது கணவன் வந்து பெட்டி போட்ட துணிகளை வாங்கி போவான் .


அவள் வீட்டு துணிகள் இவனுக்கு நன்றாகவே ,அத்துப்படி கணவனது உடைகள் நிச்சயம் விலை கூடுதலாய்த்தான் இருக்கும் ,அருமையான மேல்சட்டைகள் , பெரும்பாலும் அவளது துணிகள் வராது . எப்போதாவது ஒரு சுடிதார் வரும் ,இல்லாவிட்டால் பட்டுப்புடவை வரும் . குழந்தையின் பட்டுப்பாவாடை ,சட்டை ,இப்படி கொஞ்சம் வரும் .


அவள் சுடிதார் அயனுக்குப் போடததாலோ என்னவோ ! தினம் அவள் கடை தாண்டிப் போகையில் இவன் அவளது உடை பார்க்க ஆரம்பித்தான் . ஓ... இன்னைக்கு பச்சை கலர் சுடிதார் ! இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதான் சிவப்புக் கலர் சுடிதாரோ ..! அட இந்த ஊதா கலர் சுடிதார் அந்தப் புள்ள நிறத்துக்கு அவ்ளோ எடுப்பா இல்லையோ ...?! இதென்ன இவ்ளோ சுருக்கஞ் சுருக்கமா இருக்கு ? நல்லா தண்ணிய உதறி சுர்ருன்னு இழுத்து தேய்ச்சா அப்படியே கம்பியாட்டம் நிக்கும் இந்த வெள்ளைக் காட்டன் சுடிதார் ... சேலை கட்டவே மாட்டா போல ?ஒருமுறை எதேச்சையாய் தங்கத்திடம் கூற அவள் பார்த்த கேலிப் பார்வையில் பிறகு இவன் கருத்து கந்தசாமி போல அவளிடம் எல்லாம் சொல்வதை நிறுத்தி விட்டான் .


இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்தே மனம் ஏதோ ஒரு அவஸ்தையில் பர பரவென்று தான் இருந்தது , எப்போதாவது இப்படி நிகழ்வதுண்டு தான் , பதினெட்டு வயதில் முதல் முறை சொந்த அத்தை மகள் கனகம் வயசுக்கு வந்ததும் கூட்டாளிகளின் கேலி கிண்டலுக்கு மத்தியில் அவளுக்கு குச்சு கட்டப் போகையில் இப்படித்தான் ஆனதாய் ஞாபகம்....!!!


பிறகொரு முறை ; மதுரை அழகர் கோயிலின் தீர்த்த தொட்டியில் குளித்து விட்டு கீழே வருகையில் குரங்குக்கு பயந்து மிரண்டு ஒதுங்குவதாய் நினைத்து தடுமாறி விழப்போன பத்து வயது பெண் குழந்தை ஒன்று இவன் மீது மோதி நிற்க பதறிப் போய் தாங்கினான் . நடுங்கி ஓய்ந்த குழந்தை நடுக்கம் நின்றதும் சிறு புன்னகையுடன் "தேங்க்ஸ் அங்கிள் " என்று புறங்கையில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட . அப்போதும் இப்படித்தான் பர பரத்து சிலிர்த்தது மனசு .


பிறகு தங்கத்துக்கும் அவனுக்கும் கல்யாணமான அன்று இரவில் அவளுக்காக தனி அறையில் காத்திருக்கும் போது கூட மனம் இப்படி தான் .... வெட்ட வெளியில் சீறும் காற்றில் ஒற்றையாய் கொடியில் சட சடக்கும் சல்லாத் துணி போல் பட பட வென அடித்துக் கொண்டு பர பரத்து அலைந்தது . இது போல சொல்லிக்கொள்ள உதாரணங்கள் இன்னும் கூட சில உண்டு அவனுக்கு .... இன்று என்ன வரப் போகிறதோ ?!


போனவளை இன்னும் காணோமே ?! யோசனையுடன் அவள் போன திக்கை யதேச்சையாய் பார்த்தால் அவள் கணவன் தான் என்றுமில்லா அவசரகதியில் வண்டியை அலற விட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான் . கொஞ்சம் மெதுவாய் போனால் தான் என்ன ? மனதோடு சொல்லிக் கொண்டான் . அவளைக் காணோம் , இந்த வழியாகத்தானே வருவாள் என்று மறு படி சொல்லிக்கொண்டு , மதியச்சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுப் போனான் .


சாப்பிட்டு விட்டு ஒரு அரை மணி தூங்குவான் ,இன்றும் அப்படிப் படுத்தான் . காலையிலிருந்து உள்ளே எழுந்து ஆடிக் கொண்டு இருந்த மனப் பாம்பின் சீற்றம்...தங்கம் இவன் கேட்காமலே மனதறிந்து செய்து வைத்த வஞ்சிரம் மீனில் சற்றே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே தூங்கி விட்டான் போல ....! தங்கம் டீ போட்டுக் கொண்டு எழுப்பித் தரும் போது மணி நான்கை தொட்டிருந்தது , மாமியார் புலம்பிக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாய் கிளம்பி போனான் .

மெல்லத் தான் போயேன் ....ஏன் ஓடற ...? தங்கம் பேசியவாறு பின்னோடு அவனுடனே கடைக்கு வந்தாள் ...கொஞ்ச நேரம் இருந்துவ்விட்டு விளக்கு வைக்க வீட்டுக்குப் போவாள் அவள் .கடைக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யமான இன்ப அதிர்ச்சி மேலெழும்பி குதியாளம் போடாத குறை தான் , அந்தப் பெண் இரண்டு பெரிய கட்டை பைகள் நிறைய அயனுக்குத் துணிகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தாள்.

அன்றைக்கு முருகேசன் வழக்கத்தை விட ரொம்ப சந்தோசமாய் மனைவியிடமும், மாமியாரிடமும் பேசிச் சிரித்தவாறு துணிகளைப் பெட்டி போட்டு முடித்தான் . இனிமேல் அவள் வீட்டுத் துணிகள் மறுபடியும் இங்கே தான் வரும் . அவள் வந்ததில் இவனுக்கு என்ன சந்தோசமோ ???!!! அவனுக்கே புரியவில்லை தான் ...ஆனாலும் குதூகலமாய் ராத்திரிக்கு தங்கத்துக்கு அல்வா வாங்கிக் கொண்டு போனான் வீட்டுக்கு .. என்னய்யா இது ? சனிக்கிழம தான வாங்கிட்டு வருவா ... இன்னிக்கி என்னவாம் ..என்று வெட்கச் சிரிப்போடு வாங்கி வைத்த மனைவியின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி விட்டு குளிக்கப் போனான் . இரவு நன்றாகத் தூக்கம் வந்தது .

மறுநாள் வழக்கத்தை விட வேகமாய் கடை திறந்து வேலையை ஆரம்பித்தான் .அவன் கடைக்கு அடுத்து ஒரு மளிகைக் கடை, ஒரு ஜெராக்ஸ் கடை .ஒரு கல்யாணமண்டபம் ,அதற்கும் அப்பால் வக்கீல் சீதாராமன் வீட்டை அடுத்து அவள் குடியிருக்கும் வீடு தான் , அது ஒரு அபார்ட்மென்ட் , மொத்தம் இருபது வீடுகள் ,அவள் இருப்பது முதல் பிளாட்டில் தான் ,

முருகேசன் கடை திறக்கும் போது நேரம் ஏழரை மணி இருக்கும் . வழக்கமாக எட்டு மணிக்கு தான் போவான், இன்று என்னவோ ஒரு இனம் புரியா உல்லாஷம்.யதேச்சையாகத்தான் பார்த்தான் .... அவள் பிளாட்டின் முன்புறம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது . நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கும் போல இவன் இப்போது தான் பார்கிறான் .யாரோ வீடு மாற்றிக் கொண்டு போகப் போகிறார்கள் போல !

அந்த பிளாட்டில் இப்படித்தான் அடிக்கடி ஒரு வீட்டில் மட்டும் இப்படி நிகழும் . ராசி இல்லாத வீடாம் அது ... என்ன ராசியோ ?! என்ன நம்பிக்கையோ ? போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும் ...! கிண்டலாய் உள்ளே நகைத்துக் கொண்ட முருகேசன் தன் வேலையைப் பார்க்கலானான் .நேரம் போய்க் கொண்டே இருந்தது . அந்தப் பெண்ணைக் காணோம் ...! குழந்தையையும் பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை பெட்டி போடப் பட்ட துணிகளையும் வாங்கிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை . சரி வரும் போது வரட்டும் .... இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ;

அந்த லாரி தாண்டி முகமெல்லாம் சந்தோசம் பூத்துக் குலுங்க அவள் ....அவள் தான்.... அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள் .... இவனது கடையை நோக்கி ...துணி வாங்க வருகிறாள் போல ... வரட்டும் ... வரட்டும் ... அவளது சந்தோசம் ' முருகேசனையும் தொற்றிக் கொள்ள ... அப்போது சூரியன் எப் எம் மில்

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" பாடல் ;

முடிந்து

"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"

பாடல் மாயவரம் ராதா ,மதுரை சுப்பு , தேனாம் பேட்டை மல்லிகா ,ஒன்டிபுதூர் அம்பிகா ஆகியோருக்காக ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள்,மெல்லத் தனக்குள் பாடிக்கொண்டே அவள் கிட்டே வரக் காத்திருந்தான் ... வந்தாள் ... வந்தவள் ... அவன் மாமியாரிடம் . எவ்ளோ ஆச்சு ஆயா ? என்று கேட்டு பணம் தந்து துணி வாங்கி நகரப் போனாள்.

வக்கீல் சீதாராமன் மனைவி காம்பௌண்டில் இருந்து எட்டிப் பார்த்து சத்தமாய் கேட்டாள்...

"ஏண்டிம்மா கல்பனா .. எத்தனை மணிக்கு கிளம்பறேல் ...சாமான் சட்டேல்ல்லாம் பாத்து பாக் பண்ணிட்டேலா இல்லியோ ?"

அவள் மாமிக்கு என்ன பதில் சொன்னாலோ !!!

அவளது வீட்டைப் போலவே இப்போது இவனது மனமும் காலியாக .... ஒரு கணம் முகத்தில் சந்தோசம் வடிந்து சங்கடம் காட்டி நின்றான் ...சில நிமிட வெறுமைக்குப் பின் சின்னதாய் உள்ளே ஒரு குரல் ஓ... கல்பனாவா ...இதான் உன் பேரா ..? என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டது.

இந்தக் கல்பனா இனி அவன் கடை தாண்டி .. அந்தப் பக்கம் போக மாட்டாள் .இந்தப் பக்கமும் போக மாட்டாள் ... ஏன் இடப்பக்கம் ... வலப்பக்கம் என்று எந்தப் பக்கமும் போகவே மாட்டாள் ... அவள் இனி அந்தத் தெருவில் இருந்தால் தானே எப்பக்கமும் போவதற்கு ? முருகேசனின் மன பரபரப்பு இந்த முறை இப்படி தான் ஓய வேண்டும் போல ?!

இப்படி எல்லோருடைய வாழ்விலும் நிகழ்வது உண்டு தானே !

வாழ்வின் அன்றாட சுவாரஸ்யங்களுக்கு இப்படி ஒரு கல்பனாவோ ...முருகேசனோ தப்பி விடக் கூடுமா?"எதுவும் கடந்து போகும்" சற்று அதிகப் படியான மேற்கோளாய் தோன்றினாலும் ஆற்றில் மிதந்து கடக்கும் பூக்களாய் ...இலைகளாய் நம்மைக் கடந்து கொண்டிருக்கும் சில விஷயங்கள் நம்மில் சில பாதிப்புகளை ஏற்படுத்திச் செல்வது மறுக்க இயலாத நிஜமே!

Thursday, February 4, 2010

பந்தநல்லூர் ராஜகுமாரி...

இந்த அறையில் பெரிதும் கவனம் கலைக்காத வகையில் வடக்குப் பார்த்து தென்புறச்சுவற்றில் ஒரு ஆணி அடிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையை ஒட்டி சற்றே உட்புறமாக கொஞ்சம் நடுத்தர அளவிலிருந்த அந்த அறையில் நாற்காலி மட்டத்தில் அடிக்கப்பட்டிருந்த அந்த ஆணியைக் குறித்து விமலகீதாவுக்கு எந்த வித அபிப்ராயமும் இது வரைஇல்லை.அவள்அதை எப்போதேனும் கவனித்தாளோ இல்லையோ?!

குடி வந்த புதிதில் அந்த ஆணியில் டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை ஒத்த ஒரு பெரிய நிலைக்கண்ணாடி மாட்டி வைத்திருந்தாள்,என்ன நினைத்தாலோ இப்போது அதை கழற்றி வேறிடத்தில் மாட்டிவிட்டாளென்று நினைக்கிறேன்.

விமலகீதா அக்கம் பக்கம் யாருடனும் தேவை இன்றி பேசாத வகை மனுஷி ...

அவள் புருஷன் சொட்டு நீர்ப்ப்பசனம் இன்ஜினியர்.அவனைப் பற்றி அப்படிச்சொன்னால் தான் இங்கிருப்பவர்களுக்கு தெரியும்,சொந்தத் தொழில் என்று சொட்டு நீர்ப்பாசனத்தை கட்டிக் கொண்டு அழுததில் ஆற அமர கட்டினவளைக் கொஞ்சும் அவகாசமெல்லாம் இல்லாதவனாகிப் போனவன் அவன்.

விமலகீதாவும் புருசனையும் அவனது அலட்சியத்தையும் கண்டு அனாவசியமாய் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை

இந்த இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமில்லாதவர்களாய் விநோதமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார்கள் இங்கே.

நானும் இவர்கள் இங்கு குடியேறிய நாள் தொட்டு கவனித்துக் கொண்டே தான் வருகிறேன் விமலியும் அவள் புருசனும் ஒரு நாளேனும் அந்யோன்யமாய் சிரித்துப் பேசிக்கொள்ளமாட்டார்களா என்று! அதொன்றும் நடந்தபாடில்லை,ஒரு சின்னச் சிரிப்பு ,அதிகம் வேண்டாம் ஒரு சன்னமான கேலி,மிஞ்சி மிஞ்சி எப்போதேனும் போனால் போகிறதென்று மெலிசாய் ஒரு ஊடல் ,ரொம்ப முத்தினால் ஒரு சண்டை .

எப்போதும் என் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள் இருவருமே .

ஒழியட்டும்...இலவு காத்த கிளியாய் ஆணியில் தவமிருக்கிறேன் நான் !!! இப்படித்தான் இவர்கள் விஷயம் எனக்கு பெருத்த மன உளைச்சலாகிப்போனது.இங்கிருந்து விலகிப் போகலாம் என்று பார்த்தால் அதற்கு எனக்கு விதியில்லை .

எனது எல்லைகள் வரையறுக்கப்பட்டவை ,இந்த ஆணி மட்டத்திலிருந்து பார்த்தால் எதிர்த்தாற்போல எதிர் வீட்டின் .
பெரிய ஜன்னல் தெரிகிறதா ?! நேர்கோடு போல இங்கிருந்து அந்த ஜன்னல் வரை மட்டுமே நான் போய் வர முடியும்,சில நாட்கள் ரொம்பவும் போர் அடித்தால் அந்த ஜன்னல் வரையிலும் போய் ஜன்னலில் இருந்து ஜிங்கென்று தாவிக்குதித்து அந்தப் பக்கம் ஈசி சேரில் நிசப்தமாய் ஆடிக் கொண்டிருக்கும் தாத்தாவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.

எப்போதாவது என் கணவனின் ஞாபகம் வருகையில் மனசு கனமாகிப் போகும்.பாருங்கள்...இப்போதும் அவரைப் பற்றி சொல்லும் முன்பே என் குரல் மெலிந்து கண்கள் கரிக்க ஆரம்பித்து விடுகின்றன. அழுது கொண்டே என் கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

எத்தனை ஆண்டுகள் ஓடி விட்டன.இப்போதும் அவர் முகம் என் நெஞ்சில் பதித்த அச்சாய் .

அவரை நினைக்கையில் எல்லாம் பாகாய் உருகும் நெஞ்சம் ;அனலில் கரையும் பனிமலையாய் அவர் நினைவுகள் என்னில் ஆறாய்ப் பெருகினால் நான் மெலிதான விசும்பலுடன் தேம்பி அழத் தொடங்குவேன் ,யார் காதிலும் விழப் போவதில்லைஎனினும் என் துக்கம் எனக்கு.

எந்த ஜென்மத்தில் நான் செய்த சுண்டு விரல் புண்ணியமோ அப்படி ஒரு கணவன் எனக்கு வாய்க்க...என்ன தவம் நான் செய்தேனோ!


ஹூம்...

பந்தநல்லூர் ராஜகுமாரியைத் தெரியுமா உங்களுக்கு?!

சுதந்திரத்துக்குப் பின் வல்லபாய் படேல் ஜமீன்களை எல்லாம் நிர்மூலமாக்கி இந்தியாவை ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தாரில்லையா? அப்போது அதிகாரமிழந்து போன ஒரு ஏழை ஜமீனின் ராஜகுமாரி அவள்.

பாவம் ரொம்பவும் சின்னப்பெண் ,வயது பதினைந்து தாண்ட விடமாட்டார்கள் அப்போதெல்லாம்,மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போலப் பெண்ணுக்கு தாலிக்கயிறு,பாரம் சுமக்க அவளை இப்படித் தான் பழக்க ஆரம்பிப்பார்கள்,அட அப்படி ஒரு கயிற்றுக்கும் கதியற்றுப் போனவளாய் காலிப்பெருங்காய டப்பாவான ஜாமீன் வீட்டில் இவள் பதினேழு தாண்டியும் பருவம் தந்த யவ்வனம் சுமந்து நின்றதில் ஜமீன்தாருக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வர தன் மகள் ஈடேற முடியாமலே போவாளோ என்ற பயத்தில் அரண்டு போய் மீட்சியின்றி ஒரு அடைமழை நாளில் மாண்டும் போனார்.

தனித்தவள் ஆனால் ராஜகுமாரி ;

சொந்த பந்தங்கள் ...ஒத்த அந்தஸ்துகள் கல்லில் நார் உறிப்பினும் ஒன்றும் தேறாதென்று ஒதுங்க,உற்ற உறவுகள் எதற்குச்சுமையென கை கழுவ ,அவளிருந்த ஊர் ஜமீன் மரியாதையில் எட்டி நிற்க...இன்னும் தன்னிகரிலா தனித்தவள் ஆயினள் ராஜகுமாரி .

தகிக்கும் தனிமை விஷ சர்ப்பம் போல் அவளோடு ஊர்ந்து உறுத்திய நாட்களொன்றில்

வந்தான் ஒரு ராஜகுமாரன்,

நிஜத்தில் ராஜன் அல்ல ;அவள் அகத்தின் ராஜனாய் பட்டாளத்து உடையில் பகட்டின்றி சிரித்து தண்ணீர் கேட்டுக் குடித்தவனின் கைத்தசை முறுக்கில் கண் அமிழ,கடைந்தெடுத்த தேக்காய் திரண்டு உருண்ட தோளில், தன் பலாச்சுளை கன்னம் பதித்து சொல்லாத் துயர் சொல்லிச்...சொல்லி அழும் ஆசை கொண்டாள் ராஜகுமாரி.

இந்த ஊர்க்காரன் இல்லை அவன்...எங்கு போய்க் கொண்டு இருப்பவனோ ..இடைவழியில் தாகமென்று வந்தவன்...என்ன நினைத்தானோ ?! ஏனிங்கு தங்கினானோ ?பொல்லாத அவள் விதியோ...பொருந்தித் தான் போயிற்றோ...ஜாமீன் பெருமைகளை ஒரு கண்ணீர்ச் சொட்டில் சேகரித்து வீதியோரம் சுண்டி விட்டு சொக்கிப் போய் அவனிடம் தஞ்சமெனசரணடைந்தாள் அன்றே அந்த ராஜகுமாரி .

ஊர் எது? பேர் எது ?... தெரியாது.அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய பின் கை பிடித்து கூட்டிப் போனான் ஊர் ஒதுங்கிய எல்லைக் கோயிலுக்கு,பொம்மக்காவோ..திம்மக்காவோ எவளோ ஒருத்தி எல்லைத்தெய்வமென்று கல்லாய் சமைந்திருக்க ;ஜென்ம ஜென்மமாய் காத்திருக்க முடியாதவன்போல் சங்குக் கழுத்து வளைத்துக் கட்டினான் திருமாங்கல்யம் .

மங்கையின் கண்கள் மளுக்கென்று உடைப்பெடுக்க ;உள்ளம் அறிந்தவன் போல் சோகம் உணர்ந்தவன் போல்,உற்றவனாய் உரியவனாய் தோள் சாத்தி தலை வருடி ஆசை தீர அழ விட்டான் ,யாரோ...அவன் யாரோ இன்றவளின் ஆன்மச் சிறகசைத்துப் பறக்க விட்ட பட்டமாக்கினான்,மனம் லேசானது.

அன்றே புறப்பட்டு ,அங்கங்கே உண்டு உறங்கி நடந்தே அவனூருக்கு அழைத்துப் போனான்.மாங்கல்யம் மஞ்சள் மணந்ததால் அவன் கணவனெனும் நினைப்பு வரினும் மிச்ச சொச்ச நேரமெல்லாம் அவள் மனம் மெச்சும் சிநேகிதனாய் களிப்பான கதைகள் பேசி நடந்து நடந்து ஓய்ந்த ஒரு உச்சிப் பொழுதில் அவன் ஊரை அடைந்தார்கள்.

அழகான ஊர் ,இவள் ஊரைப் போல இல்லை அவ்வூர்,இங்கு அவள் ராஜகுமாரி இல்லை என்பது பெருத்த நிம்மதி தந்தாலும் அதை விட ,தோழமை பொங்கும் அன்பான கணவனின் மனைவி என்ற நினைப்பில் தித்தித்துக் கிறங்கிப் போய் எந்நேரமும் அவனை ஒட்டியே இழைந்து நின்றாள் அவள்,

எல்லாம் சில பொழுதே ;நாத்தி ஒருத்தி சேதி அறிந்து பதை பதைத்து ஓடி வரும் வரை மட்டுமே!

ஜோடிகளைக் கண்ட மாத்திரத்தில் அலையக் குலைய ஓடி வந்து மூச்சு வாங்க நின்ற நாத்தியின் கண்கள் விதிர் விதிர்த்து நிலைத்தது பசு மஞ்சள் காயாத இவள் தாலிச்சரட்டில் தான்.நிஜம் போல பொய்யாய் சிரித்து ஆலாத்தி சுற்றி நெற்றியில் பொட்டிட்டு அவள்...என் நாத்தி ;

"வலது கால் எடுத்து வைத்து வாம்மா "

என்று என்னை அழைத்தது இதோ இந்த வீட்டின் வாசலில் நின்று கொண்டு தான்.

"ஆமாம் அந்த பந்தநல்லூர் ராஜகுமாரி நானே தான்.ஏன் என்னை அப்படி உற்றுப் பார்த்து தேடுகிறீர்கள்?!"

என் கதையை நானே சொல்லி வந்தாலும் ஞாபகங்களின் பாரம் தாங்காமல் ,அடக்க மாட்டாமல் அழுகை வருகிறது எனக்கு

என் அம்மா ஜீவித்து இருந்திருந்தால் அவளுக்கு என் நாத்தியின் வயதிருக்கும்.என் கணவனின் ஜாடை தான்,அந்த வயதிலும் வெகு சௌந்தர்யமாய் இருந்தாள்,காராம்பசுவைப் போல அவள் கண்கள் கருணை பொழியக் கூடியவை என்று நம்ப வைக்கும் சாந்தம் காப்பது அவளுக்கு இயல்பாகிப் போனதோ என்னவோ !

வந்த மூன்றாம் நாளே என் கணவன் மறுபடி பட்டாளத்திற்கு அழைக்கப் பட்டார் என தந்தி வந்தது,துடித்துத் துவண்டேன் நான்,இன்னும் எதுவும் இல்லை எங்களுக்குள்!,பிள்ளைச் சிநேகிதம் போல பேசுவதும் சிரிப்பதும் காதல் மிஞ்சிப் போனால் இருவரும் கைகளை கோர்த்துக் கொள்வதும் முழுமை பெற்ற தாம்பத்யம் ஆகுமோ !?

'இம்மென்றால் 'அழுகை வந்தது எனக்கு அவரை பிரிந்து அறியாத தெரியாத மனிதர்களுடன் இந்த ஊரில் எத்தனை நாள் தனித்திருக்க நேருமோ ! பரிதவிப்பிலும் சுய பட்சாதாபத்திலும் சேதி கேட்ட நொடி முதலாய் உழன்றேன் நான்.அங்கத்திய நிலைமையும் அப்படித்தான்..ஆனாலும் ஆணாயிற்றே அழவில்லை...உருகவில்லை...தவிக்கவில்லை என்பதாக ஒரு நாடகம் நடத்த தெரிந்திருந்தது அவருக்கு.

இதே வீடு தான்,இப்போது வாஸ்து பார்த்து குளியலறையாகிப் போன அந்த அறையின் நடுவில் ஒரு மரக்கட்டில் இருந்தது அப்போது,என் கணவரோடு நான் இருந்த இரண்டு நாட்களில் அவர் கட்டிலிலும் நான் தரையில் ஜமுக்காளம் விரித்தும் ஏதேதோ கதைகள் பேசியவாறு அங்கு உறங்கி இருக்கிறோம்,

நாள் கிழமை பாராமல் கல்யாணம் தான் கழித்தாகி விட்டது ..இந்த விசயத்திலும் அவ்விதமாய் அலட்சியப் படுத்தினால் அவரது அக்காவின் கோபம் அளவிலாமல் மீறுமோ என்று அவளிஷ்டப் படி நாங்கள் நல்ல முஹூர்த்த நாளுக்காய் தள்ளி நிறுத்தப்பட்டிருந்தோம்.

அவர் பட்டாளத்திற்கு புறப்பட்ட நாளன்று மதியம் நாத்தி வீட்டு விருந்து எங்களுக்கு,சீராகச்சம்பா அரிசிச்சோறும் ஆட்டுக்கறியும்,கோழி குழம்பும் ,குளத்து மீனுமாய் அமர்க்களமாய் விருந்தளித்தாள்,அவள் மகள் மீனாட்சி எனக்கொரு ஆப்த சிநேகிதியாய் இருந்திருக்கக் கூடும்...நான் அவளுக்குப் போட்டியாய் வந்திரா விடில்!

எதைக் கண்டேன் நான் !இப்படி ஒரு மகளை தம்பிக்காய் நாத்தி வளர்த்து வைத்துக் காத்திருப்பாள் என்று நான் எதிர்பார்த்தேனா!!!அவள் கண்களில் கலக்கம் இருந்தும் என்னிடம் குரோதம் இல்லை,நடு நடுவில் தயங்கித் தயங்கிப் பேசிக் கொண்டிருந்தாள்.பாவமாய் இருந்தது எனக்கு.

"மாமனைக் குறித்து என்னென்ன ஆசைக்கற்பனைகளை சுமந்து கொண்டிருந்தாளோ இந்த அப்பாவிப் பெண்!!! "எதுவும் சொல்ல முடியாமல் மெல்லவும் முடியாமல் மௌனித்தேன் நான்.

பலமான விருந்து தான் ஆனாலும் சரியாக உண்ணாமலிருந்த எனைக் கண்டு நாத்தி வெகு பிரியமாய் உளுந்து வடைகள் நிறைந்த கிண்ணம் ஒன்றை எடுத்து வந்தாள்,எண்ணெய் வடியாத சூடான பொன்னிற வடைகள்...;

"இதையாவது கொஞ்சம் பிட்டு வாயில் போட்டுக்கொள்,என் தம்பியின் குலம்கொழிக்க வாரிசுகளை பெற்றுத் தரப்போகிறவள் இல்லையா நீ?இப்படி கிள்ளிக் கிள்ளி சாப்பிட்டால் எப்படி? கேலியுடன் சிரித்துக் கொண்டே கிண்ணத்தை என்னருகில் வைத்து விட்டு தம்பியிடம் ;

"அவள் சாப்பிடட்டும் ,நீ வா நாட்டாமைக்காரர் வீடு வரை போய் வந்து விடுவோம்,இதை விட்டால் இனி பொழுதிருக்காது அங்கே போக,திருவேங்கடம் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.போய் சுருக்கத் திரும்பி விடலாம்,

"திருவேங்கடமா? கடல் தாண்டிப் படிக்கப் போனானே?! என்னருமை நண்பன்.முகமெல்லாம் சிரிப்போடு குதூகலித்து என் கணவர் கண்ணசைவில் என்னிடம் விடை பெற்று தன் அக்காவோடு வெளியில் நடந்தார்.

உளுந்து வடைகள் அபார ருசி, மீனாட்சி நான் மறுக்க மறுக்க பிரியத்துடன் நிறைய வடைகளைத் தின்ன வைத்துக் கொண்டே இருந்தாள்,

"அவர் வந்து சாப்பிட மாட்டாரா?!,சும்மா இரு மீனாட்சி ,நானே முழுதாய் தின்று தீர்த்து விடுவேன் போல,சரியான தீனிப்பண்டாரம் என்று அவர் என்னை கேலி செய்யப் போகிறார்." என்று நான் தவிர்க்க நினைத்தும் அளவு மீறித்தான் உண்டு விட்டேன்.

மீதி நடந்ததெல்லாம் எனக்கு அத்தனை ஞாபகமில்லை,

என்னவர் வந்ததும், உறக்கமும் விழிப்புமாய் தலை சுற்றித் துவண்டிருந்த என்னைக் கண்டு பதறியதும்,

"என்னக்கா இது? இவளுக்கு என்ன? ஏன் இப்படி இருக்கிறாள்? "என்று பரிதவித்ததும்,அவரது அக்கா ;

"ஒன்றுமில்லையடா ... வடை ருசியாயிருக்கிறதென்று கொஞ்சம் அளவு மீறித் தின்றிருப்பாள்...எண்ணெய்ப் பலகாரங்கள் ஆச்சுதே ! வயிற்றுக் ஒத்துக் கொள்ளாமல் தலை சுற்ற வைத்து அசத்தி இருக்கும் ! நீ ஒன்றும் பயந்து போகாதே" என்று தம்பியை சமாதானம் செய்ததும் கூட அசங்கள் மசங்கலாய் தான் நிழலாடுகின்றன.

அப்புறம் என்ன ஆனதென்று நான் சொல்லத்தான் வேண்டுமா?!

தன் கை வளைவில் என்னை தாங்கிக் கொண்டு புறப்பட மனமற்றவராய் கடைசி நிமிடங்களில் என் கணவர் ;

"அக்கா குடிக்க தண்ணீர் கொண்டு வா" என்று அக்காவை சமையல் உள்ளுக்கும்,துவைத்த துண்டெடுக்க மீனாட்சியை கொல்லைக்கும் அனுப்பி விட்டு ,நானிருந்த கோலம் தாங்காது ஒரு பச்சிளம் குழந்தையை பத்திரம் போல் உடலோடு அணைத்துத் தழுவி தூக்கிக் கொள்வதைப் போல மயக்கமும் விழிப்புமான பரவச நிலையிலிருந்த என்னை தன்னோடு சேர்த்தணைத்து "மலரினும் மெலிதாக..."

மேகங்களின் ஊடே பஞ்சாய் மிதப்பதைப் போல...உடல் நீங்கி உயிர் காற்றில் கரைவதைப் போல் ;

மிக மிக மெத்தென்று உதடுகளால் ஒரு மென் ஸ்பரிசம் ,அதை முத்தமென்று சொல்வார்களாமே!வலிய ஆணின் வலிக்காத ஒரு முத்தம்.

உருகி ...உறைந்து...உருகினேன் நான்.

கனவில் நிகழ்வதாய்...

கண்மணி...!( அவர் அப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தார் என்னை);

"ம்..."

"நான் போய் வரட்டுமா?!"

ம்...ம்ஹூம்;

நீ...நீ...பத்திரமாய் இருப்பாய் தானே நான் வரும் வரை!?என்னிலிருந்து பிரிய முடியாதவராய் அவர் தவிக்கும் போதே நாத்தியும் மகளும் உள்ளே வர,மனமற்று என்னை விட்டு விட்டு கடைசி கேள்விக்கு விடை பெறாமலே போய் விட்டார் .ரயிலுக்கு நேரமாகிறதே!

அந்த நாளுக்குப் பிறகு அவரைக் காணவில்லை நான்.

நாத்தி எத்தனை கெட்டிக்காரி என்று நான் உணர்ந்து கொள்ள அவள் இத்தனை மெனக்கிட்டிருக்க வேண்டுமோ?! சொன்னால் என் கதை கேட்டு நீங்களும் அழக் கூடுமோ என்னவோ?!அவள் முகம் தாய்மை நிறைந்தது,பாவி...அந்த முகத்தை வைத்துக் கொண்டு தான் அவளால் தன் நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொள்ள முடிந்தது .

அவர் பட்டாளம் சென்ற பின்னும் தொடர்ந்து மூன்று நாட்களாகியும் என்னால் தலை தூக்கிப் பார்க்கவே முடியாமலானது,சதா மயக்கத்தில் இருந்தேன்,என்னைக் குறித்து அச்சப் படும் அளவேனும் எனக்கு புத்தி தெளிந்திருக்கவில்லை.கிராதகி சாப்பிடு..சாப்பிடு என்று உருகி உருகி உபசரித்தாளே எதைக் கலந்து உண்ண வைத்தாளோ!

புதுப் பெண்ணாயிற்றே என்று என்னைப் பார்த்துப் போக வந்த ஊர்க்காரர்கள் முன்னில்
பேசக்கூட இயலாதவளாய் நாக்கு குழறிற்று,ரெண்டடி நடக்க மாட்டாமல் நடை பிசகிற்று, கண்கள் சொருகிக் கொண்டு எங்கோ வெறித்து வெறித்து மூட "நான் நானில்லை ...அவள் கைப்பொம்மை" என்றானேன்.

என் கதை இந்தியா சுதந்திரம் பெற்ற சமீபத்திய கதை.பட்டாளத்துப் புருஷன் திரும்பி வரும் முன்னே நான் முடிந்து போனாலும் கேட்பாரில்லை அன்று.

நாத்தி எனக்குப் பேய் பிடித்திருக்கிறதாக கதை கட்டினாள்,உள்ளூர் கோடாங்கி ஒத்துப் பாட...புளிய விளாராலும்,அது கிடைக்காத போது காய்ந்த துவரை மார்களாலும் விளாசு விளாசென்று விளாசித் தள்ளினான் அவன்.சிவந்த என் உடலில் பாலம் பாலமாய் ரத்தக் கோடுகள் கண்ட போது

நான்...நான் ;

அவர் என்னை கடைசி கடைசியாய் மிக மிக மென்மையாய் முத்தமிட்டதையே நினைத்துக் கொண்டு தூக்கத்தில் உலுக்கி எழுப்பப் பட்ட குழந்தை போல விசும்பி ...விசும்பி அழுதேன் ;அழக் கூட சத்தற்றவளாக்கினார்கள் என்னை.

இரக்கமற்ற பாவிகள் !

என் உடலில் காயங்கள் முற்றிப் போன ஒரு நாளில்,உடல் செத்து உயிர் சாகாத என்னை ;நனவும் கனவுமாக அரை பிரக்ஞையுடன் தத்தளிப்பில் தவிக்க ,துள்ளத் துடிக்க குளிப்பாட்டி ஒரு பழைய மர நாற்காலியில் உட்கார வைத்து இதோ இங்கே ...இந்த ஆணியில் தான் தலை சாய்த்து நாடிக்கட்டுப் போட்டு பிணம் என்று சாற்றி வைத்தார்கள் என்னை.

இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை ,

சற்றைக்கெல்லாம் இந்த ஆணியில் தான் என் உயிர் பிரிந்தது.

அன்றிலிருந்து இங்கே தான் இருக்கிறேன்.

என் கணவர் என்ன ஆனார்?

என்னைத் தேடினாரா? ...நிச்சயம் தேடி இருப்பார்,இந்தப் பாசப்பழிகாரி எதையாவது சொல்லி பசப்பி இருப்பாள்!

நானாக அனுமானம் செய்து கொண்டவளாய் அமைதியானேன்.

என்ன செய்து விடமுடியும் நான்!

ஆவிகள் பழிவாங்குவதெல்லாம் சினிமாக்களில் சாத்தியமாகலாம்.அதென்னவோ நான் அப்படி முயலக் கூட இல்லை,என் வரையில் ஒரு நல்ல தம்பதிகள் இந்த வீட்டில் குடி இருந்து நான் வாழ விரும்பிய வாழ்க்கையை எனக்கு வாழ்ந்து காட்ட மாட்டார்களா என்ற ஏக்கம் நிரம்பிப் போனவளாய் இன்னும் காத்திருக்கிறேன் இந்த ஆணி மீது!

யாராவது வருவார்களா?

உங்களுக்குக் கல்யாணமாகி விட்டதா ?...நீங்கள் வருகிறீர்களா இந்த வீட்டுக்கு குடி இருக்க !?

முகவரி இது தான் ;

கதவு எண் 210 ,
சிவன் கோயில் தெரு ;
இளையரசனேந்தல் ;
கோவில்பட்டி தாலுகா.

Monday, February 1, 2010

கக்கூசும் ஒரு உரிமைப் போராட்டமும் (!!!)




தாத்தா குளித்து ஒரு மாதமிருக்கும் ...

இப்போதெல்லாம் குளிக்க ரொம்பவே அசௌகரியப்பட்டார் ,பல்லும் கூட விளக்குவதில்லை,வேப்பங்குச்சி தான் அவருக்கு பிரஸ்,கிட்டக் கொண்டு போனாலே
'த்தூவென்று' துப்ப ஆரம்பித்ததும் ,எதற்கிந்த அனத்தம் பிடித்த வேலையென்று அம்மாவோ சித்தியோ பல்லை விளக்கிவிட அவரிடம் போவதில்லையென சபதம் எடுத்துவிட்டார்கள் இன்று காலை பத்துமணி முதல் .


வீட்டுக்குள் கக்கூஸ் இருந்தும் தாத்தா அதில் ஒரு தடவையும் உட்காரப் போனதில்லை.எப்போதும் கண்ணன்கோயில் கம்மாக்கரை தான்.காலங்காலையிலேயே போய் விட்டு தண்ணீர் பதனமாய் இருந்தால் அங்கேயே குளிப்பையும் கூட முடித்து வந்து விடுவார் , தாத்தா வீட்டுத் திண்ணை நல்ல உயரம்,அகலம் அகலமான ஐந்தாறு படிகள் ஏறித்தான் வீட்டுக்குள் நுழைய முடியும், பித்தளைப்பூணிட்ட கம்பை ஊணிக்கொள்ள ஆரம்பித்த நாள் தொட்டு கம்மாக்கரை செல்வதிலும் சுணக்கம் தான்.

இந்த ஒரு மாதமாய் பாட்டிக்குப் பிடித்த பல்வேறு அனர்த்தங்களில் ஒன்று ;தாத்தா இந்த தெருவில் யார் வீட்டு முன் மலம் கழித்தார் ,எங்கே ஒன்னுக்கிருந்தார் என்று
யாரேனும் கொண்டு வரும் புகார்களை ;


இங்கயும் உண்டுமா கொடுமை ரேஞ்சில் கன்னத்தில் கை பதித்துக் கேட்பது;

அன்றைக்கு அப்படித்தான் செல்லத்தாயம்மாள் வீட்டுத் திண்ணையடியில் விட்டை விட்டையாய் பெரிய சைஸ் ஆட்டுப் புழுக்கைகள் போல தாத்தா இயற்கை கடன் கழித்து விட...அந்த அம்மாள் விக்கி விரைத்துப் போய் திக் பிரமை அடைந்து ;


"என்ன மாமா...இப்படிச் செய்யுறாரு !? வீட்டுக்குள்ள தான் கக்கூசு இருக்குல்ல ,அங்கன கழிக்கலாம்ல! நெடுங்கண்டம் ...நெடுங்கண்டமா மூணு ஆம்பளைப் புள்ளைங்களும் மாசா மாசம் காசு அனுப்பி வீட்டுக்குள்ள கக்கூசென்ன...பளிங்கு கல்லு பதிச்ச ஜல்ஜாரி (கொச்சைத் தெலுங்கில் பாத்ரூமைக் குறிக்கும் சொல் )என்ன?இங்கன வந்து இப்பிடிப் பண்ணி வச்சாருன்னா ... இப்ப நான் என்ன செய்யுவேன்?! "

என்று புலம்ப ஓடைப்பட்டி அத்தை அந்த நிமிஷமே கர்மமே கண்ணாயினளாய் பாட்டியிடம் வந்து போட்டுக் கொடுக்க ,

அந்தம்மாள் பாட்டியிடமே நேரடியாகப் புலம்பியிருந்தாலும் பாட்டி சரி..சரி போ என்று சொல்லியிருக்கக் கூடும் ,இப்படி இன்னொருத்தர் வந்து சொல்லும் படியாயிற்றே என்ற விசனத்தில் பாட்டியின் தன்மான உணர்வு திடுதிப்பென்று சிலிர்த்து எழுந்து விட்டது ,

ஊருக்குத் தெரிந்தும் தெரியாத இன்னொரு ரகசியம் வேறு இதில் இருந்ததில் ...பாட்டி தன் பின் கொசுவமிட்ட கோடம்பாக்கம் சேலையை நாலைந்து முறை கொசுவி கொசுவி நீவி விட்டு ஏற்கனவே சுமாராக கொப்பு வைத்து சொருகியிருந்த தலை மயிரை வெடுக்கென பிரித்து உதறி மறுபடி அள்ளிச் சொருகிக் கொண்டு மதில் மேல் நின்று பார்ப்பதைப் போல தன் வீட்டு உயரம் அகலமான படிகளில் மேல்படியில் இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு சண்டி ராணி மாதிரி போஸ் கொடுத்து நின்றவாறு ,

"ஏய் ..செல்லத்தாயி...ஏ.......ஏய்ய்...செல்லத்தாயி " என்று கூப்பிட ;

ஏற்கனவே சில வருடங்களாய் முதுகுத் தண்டு வளைந்து கூனியே நடந்து பழகி விட்ட செல்லத்தாயம்மாள் தன் விதியை நொந்தவளாய் தன் வீட்டு குட்டைப் படிகளின் மேல் சப்போர்ட்டுக்கு நிலையைப் பிடித்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்க முயற்சித்தவாறு

என்ன கிருஷ்ணம்மா ..ஏன் இப்பிடிக் கத்தற? மெல்லத் தான் கூப்புடேன்...என்று சொல்லிக் கொண்டே
வந்து நின்று கொண்டாள்.

"இந்தா பாரு செல்லமாக்கா...இப்ப நீ என்ன சொன்னயாம்? ஓடப்பட்டி வந்து சொல்லிட்டுப் போறா,ஒரு பெரிய மனுஷன் இம்புட்டு இருந்துட்டாருன்னா..அள்ளிப் போட்டு போவியா?தெருவுல போறவுங்க..வாரவுங்க கிட்டல்லாம் புகார் சொல்லிக் கிட்டிருக்கியாம்?! என்னா சங்கதி?! "

அதட்டலாய் பற்களை கடித்துக் கொண்டு பாட்டி கேட்க ;

முதுகு கூனினாலும் ரோஷம் கூனாத செல்லத்தாயி பாட்டி ;

"அதென்ன அப்பிடிச் சொல்லற கிருஷ்ணம்மா?இப்ப நான் என்னா சொல்லிட்டேன்? கக்கூஸ்ல இருக்கக் கூடாதான்னு தான கேட்டேன்.இதுல என்ன இருக்கு ! வீட்டுக்குள்ள இருக்கு கக்கூசு இத நாஞ்சொன்னா குத்தமாக்கும்?!


அதற்குள் 'சபாஷ் சரியான போட்டி' என்று தெருஜனமெல்லாம் வாசலுக்கு வந்தாயிற்று.

குத்தமா இல்லையோ...நீ அப்பிடிச் சொல்லிருக்க கூடாது செல்லம்மாக்கா! நான் தாலி கட்டிட்டு வந்தவங்கறதுக்காக எனக்கு மட்டுந்தான் பாத்தியதையா என்னா? ஏன் உனக்கில்லையா அவருக்குச் செய்யுற முறம ?! (முறைமை) பாட்டி ஏகதேசமாய் தெருவென்றும் பாராமல் தேங்காய் உடைத்த கணக்கில் அந்தரங்கத்தை போட்டு உடைக்க .

தெரிந்த ரகசியமேஎன்றாலும் புள்ளி விவரமாய் தெரிந்து கொள்ளும் ஆவலில் சில பல தலைகள் இரு வீட்டு வாசல்களுக்கிடையில் மூண்டு விட்ட சண்டையை விலக்கி விடும் பாவனையில் ஒட்டி வந்து காதைத் தீட்டிக் கொண்டு நின்றன.

அதில் நீலியாவும் ஒருத்தி;

நீலியா என்றதும் யாரோ இளம்பெண் என்று நினைத்து விட்டீர்களா?

அவளுக்கு இருக்கும் எழுபது வயது ;

பாட்டி கல்யாணமாகி புதுப்பெண்ணாய் இந்த வீட்டுப்படி ஏறிய நாள் தொட்டு நீலியாவும் கூடவே இந்த வீட்டுக்கும் வயலுக்குமாய் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறாள்.நல்ல நாள் பொல்லா நாள் என்றால் சாப்பிட்டு அசந்து வரும் பின் மத்தியானத்தில் தாத்தாவின் தீப்பெட்டி ஆபிஸ் நிழல்கூரையின் கீழ் பெரிய ஆட்டுரலில் சாய்ந்தமர்ந்து எங்களுக்கெல்லாம் முனிக்கதைகளும்,சாமிக்கதைகளும் சொல்வாள்.அவளுக்கு தெரியாமல் எங்கள் வீட்டில் எந்த ரகசியமும் இல்லை .

நீலியாவைக் கண்ட மாத்திரத்தில் பாட்டியும்;

கேட்டியா நீலியா ...அது சொல்றத...இங்கயும் உண்டுமா இப்பிடி ஒரு கொடுமே! என்னான்னு கேளு ? வீட்டுக்குள்ள கக்கூசு இருக்குதாம் ,அப்ப வீட்டுக்குள்ள தான் உட்கார்ந்து எந்திரிக்கனுமாம்...ஒரு மனுஷன் தன்னுஜாறு(தன் உஷார்) இல்லாமக் கெடந்தாலும் அப்பிடிதான் இருக்கனுமாம்.அத இந்தம்மால்ல சொல்லுது ! என்னான்னு கேளு கதைய!

செல்லத்தாயம்மாள் சொன்னதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் திணறுபவளைப் போல பாட்டி ஏற்கனவே சிவந்த மூஞ்சி இன்னும் ஜிவு ஜிவுக்க அள்ளி முடிந்த கொப்பை மறுபடி அவிழ்த்து விருட் ..விருட்டென ரெண்டு உதறு உதறி சுருட்டி கூந்தலுள் சொருகிக் கொண்டாள்,(வயதான கிராமத்துப் பொம்பிளைகள் கோபமிருப்பதாக காட்டிக் கொள்ள செய்யும் நடைமுறைகளில் இதுவும் ஒன்றோ என தோன்றத்தொடங்கியது எனக்கு).

நீலியா பாட்டி கட்சி என்ன ஆனாலும் எஜமானியம்மாளாச்சே !

"அந்தம்மாளுக்கு வேலக் கழுதைஎன்ன ? இதுக்கு போயி கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்காக்கும்? நீங்க நகருங்க முதலாளிம்மா ,நாம் பெருக்கித்தள்ளுறேன்."

நீலியா ரவிக்கை அணிந்து பழக்கமற்ற தனது உடம்பில் முந்தானையை இழுத்து இடுப்பில் செருகி முன்னே வர,

"ஏய் ... இந்தா ...நீ நில்லு "

'அதாரு மூணாவது ஆளு ?!'

தெரு ஜனமெல்லாம் திரும்பிப் பார்க்க ;

ஆவணத்தக்கிழவி(ஆவால் நத்தம் எனும் ஊரிலிருந்து இந்த ஊருக்கு வாக்கப் பட்டு வந்த கிழவி,பெயர் எப்படி மருவி நிற்கிறது பாருங்கள்!) கையில் ஒரு பிளாஸ்டிக் முறத்தை தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள்.

"எங்க ராசா ...தீப்பெட்டி ஆபிசுல ஓசில தங்கிக்க சொல்லி என்னைய விட்டிருக்காரு.அவருக்கு நான் இல்ல அள்ளிப் போடணும்! நீ தள்ளுடி நீலியாக்கிழவி,நான் அள்ளுவேன் எட்டூரு கக்கூசுன்னாலும் எங்க அய்யாவுக்கு "

சொன்னவள் சடக்கு..புடக்கென்று முறத்தில் அள்ளப் போக நீலியாவுக்கும் ரோசமிருக்காதா என்ன?

"ஏய் ...நீ என்னடி அள்ளுறது ..நான் இந்த வீட்டுல எத்தன நாளா பாடுபடுறேன் ,எனக்கில்லாத உரிமை ஒனக்கா? போ அங்கிட்டு ..எல்லாம் நாங்க பார்த்துகிடுவோம்"

இந்த திடீர் சச்சரவில் திகைத்துப் போனவர்கள் பாட்டியும் ,செல்லத்தாயம்மாளும் கூடத்தான்.

நடந்து போன விசயங்களில் மூர்ச்சையாகி விட்டதைப் போல நின்ற செல்லத் தாயம்மாள் மெல்லத் தன்னுஜார்(தன் உணர்வு) அடைந்தவளைப் போல ,ஏய் போங்க கழுதைகளா ? மானத்த வாங்கிடுவிங்க போல?!நானே அள்ளிப் போட்டுக்கறேன் என்று வீட்டுக்குள் திரும்பி தென்னந்துடைப்பத்தை தேட ஆரம்பித்தாள்.

பாட்டிக்கு மட்டும் ரோசமிருக்காதாக்கும்? நிரூபித்தாகனுமே !

எல்லாருக்குந்தெரிஞ்சி போச்சேன்னு இப்பச்சொல்லுறியாக்கும்? அந்த மனுஷன் எங்க ஊருக்கு என்னைய பொண்ணு பார்க்க வரும் போதே ஒன்ன இல்ல கூட்டிட்டு வந்தாரு,அப்பவே சுனோ(ஸ்னோ ) என்ன? பவுடரு (பௌடர்) என்ன? சும்மா சினிமா நடிக பத்துமினி (பத்மினி) மாரி மினிக்கிகிட்டு இல்ல நீ வந்த?! எனகொன்னும் தெரியாது...நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்னு இருந்தியாக்கும்?!விடுவனா நானு?!

செல்லத்தாயம்மாள் ரொம்பவே நொந்து போனாள்,கண்ணு கூட கலங்கி நிக்கட்டுமா சிந்தட்டுமா என்று கேட்பதைப் போல் அவளது பழுத்து சுருங்கிய கன்ன மேட்டில் தழும்பி நிற்க தலையைக் குனிந்து கொண்டாள்.

இருந்தாலும் இவ்வளவு பேசும் க்ருஷ்ணம்மாளிடம் எதற்கு விட்டுக் கொடுப்பானேன் ,ஏதாவது சொல்லி வைப்போமே என்ற சாக்கில் ;

"இப்ப எதுக்கு போன கத...வந்த கதயல்லாம் சொல்லிட்டிருக்க ,விடேன்.என்னால ஒனக்கென்னா தொந்திரவு?! நான் எம்பாட்டுக்கு செவனேன்னு இருக்கேன்.பெரிய பெரிய பேச்செல்லாம் சொல்லாத கிட்ணம்மா."(கிருஷ்ணம்மாவை தெலுங்கில் இப்படித்தான் அழைப்பது வழக்கம்)

பாட்டிக்கு வகையாக மாட்டிக் கொண்டாயா எனும் எக்களிப்போ என்னவோ?! செல்லத்தாயம்மாளின் கண்ணில் கலக்கம் கண்ட பின்னும் விடத்தோன்றாமல் ;

"ஊரு ஒலகத்துக்கே தெரிஞ்ச கத ...நான் வந்து டமாரமடிச்ச மாதிரி சொல்ற?! மூடிக்கிட்டு அள்ளிப் போட்டுட்டு போயிருக்கலாம்,இப்ப அத சொல்லாத இதச் சொல்லாதன்னா,எனக்கும் மான ரோசமிருக்குமில்ல?!எம்புட்டு நாளா அடக்கி அடக்கி கொமஞ்சிருப்பேன்(குமைந்திருப்பேன்) மனசுக்குள்ள ! " பாட்டி விடாமல் தன் பாட்டில் இன்னுமேதேதோ சொல்லிக் கொண்டு இரைந்து கொண்டிருந்தாள் ;

தாத்தா திடமாய் இருந்த காலத்தில் செல்லத்தாயம்மாள் வீட்டுக்கு போக வர இருந்தாராம்,அப்போதிருந்த புருஷ பயத்தில் ஏனென்று கேட்டு விட முடியாத எல்லாக் கோபமும் இன்றைக்கு இப்படி கொட்டி முழக்கிக் கொண்டு வந்தது பாட்டிக்கு ,இப்போதைக்கு நிறுத்தக் கூடுமென்று தோன்றவில்லை. அது ஆகும் சாயங்காலம் காப்பி குடிக்கும் போது வேறெதுவும் பிரச்சினை அகப்பட்டால் ஒழிய வேறு பேச்சுக்கு தாவக்கூடும் நிலையைக் காணோம் .

ஏதோ சமாதானம் சொல்ல முயல்வதைப் போல வாயைத் திறந்து திறந்து மூடிக் கொண்ட செல்லத்தாயம்மாள் இப்போதைக்கு கிட்ணம்மா ஓயாது என்று தானே ஒரு முடிவுக்கு வந்து
துவைத்துப் பல நாட்கள் ஆன தன் அழுக்கு வெள்ளைச் சேலையின் கிழிசல் முந்தியில் மூக்கையும் கண்ணையும் துடைத்துக் கொண்டு வீட்டுக்குள் .

இவ்வளவு பேச்சுக்கும் சண்டைக்கும் காரணமாகி விட்ட சரித்திரப் பிரசித்தி பெற்ற தாத்தா போட்ட பெரிய சைஸ் ஆட்டுப் புழுக்கைகள் என்ன கதி ஆயிற்றோ என்று கவனமாய் என்னைத் தவிர அப்போது யாரும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை .

பெரிய மாமாவின் புல்லட் வண்டி சத்தம் கேட்ட மாத்திரத்தில் பாட்டி முக்கா முக்கா மூணு தரம் ரேஞ்சில் அள்ளி முடிந்த கொப்பை மறுபடி சரட்டென்று பிரித்து கோபமாய் உதறி அள்ளி முடிந்து கொண்டு எதுவும் நடக்காததைப் போல வீட்டுக்குள் போய் விட்டாள்.

நீலியா ...

ஆவாணத்தக்கிழவி...

செல்லத்தாயம்மா...

கிட்னம்மா ...

யாருக்கும் என்ன பெரிய உரிமை வைத்து வாழ்கிறது என்னை விட(!!!) என்பதைப் போல பெரிய மாமா வீட்டு விக்கி நாய் தாத்தா போட்ட புழுக்கைகளை சுவாரஸ்யமாய் சுத்தம் செய்து கொண்டிருந்தது.

மறுநாள் உள்ளூர் பள்ளியில் தமிழ் டீச்சராய் இருக்கும் சித்தியும் சத்துணவு டீச்சராய் இருக்கும் அம்மாவும் ரீசஸ் பீரியடில் (அதாங்க இன்டர்வெல் :) ) சாக்பீஸ் எடுக்க வந்த மல்லிகா டீச்சர் மண் பானைத் தண்ணி குடிக்க வந்த ஆனந்தி டீச்சர் மற்றும் சில டீச்சர்கள் மற்றும் வாத்தியார்கள் எல்லோரும் சூழ்ந்திருக்க "எங்கப்பா போன கக்கூசை எடுக்க நீ நான்னு என்னா போட்டி நேத்து ?நீங்க பார்க்கலையே சார் !...நீங்க பார்க்கலையே டீச்சர் என்று முறை வைத்து சொல்லிச் சொல்லி பிரமித்துக் கொண்டிருந்தார்கள் .

ஜனங்கள் (!!!)

Thursday, January 28, 2010

தமிழ்நதியின் "நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" சிறுகதை தொகுப்பு


நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியதை வாசிக்கையில் என்னுள்ளே உறைந்து போன மௌனத்தைக் களைக்கும் விருப்பம் கிஞ்சித்தும் இல்லாமல் போகவே பின்னிரவின் நிசப்தத்தை சுவாசத்தால் ரசித்து அருந்தியவாறு அரூபமாய் மெல்லக் கதைக்குள் நீந்தித் திளைப்பது இதமாக இருந்தது. நதி நீர் இருக்கும் வரை ஓடக் கூடியதே.நீரே இல்லாமல் போனாலும் நதியின் போக்கு வழித் தடமாயேனும் நீடித்திருக்கக் கூடும். தண்ணீரே இல்லா விடினும் நீரின் ஜில்லிப்பு உணர்ந்தேன் நானும். சந்தியா காலத்தில் சில்லிடும் மணல் தன்னுள் பதுக்கி வைத்துக் கொண்ட குளிர்மையை உணர நதியில் நீர் இருந்து தான் ஆக வேண்டும் என்பதில்லையே!

சுகுணா திவாகரின் மிதக்கும் வெளியில் "கவித்துவ மொழிதலுக்கு" தமிழ்நதி என்றொரு வாசகம் தென்பட்டது. அழகுத்தமிழில் படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்த முடியுமெனில் அந்த வாசகம் எத்தனை நிஜமானது! அபாரமான கூடவே மனதுக்கு மிக நெருக்கமான எழுத்து நடை,வியக்க வைக்கிறீர்கள் தமிழ்நதி.

விமர்சனம் அல்ல...இந்தப் புத்தகத்தை அப்படி விமர்சனம் என்ற பெயரில் எதுவும் செய்யத்தகுமென தோன்றவில்லை எனக்கு,என் போன்றவர்கள் புத்தகம் குறித்து ஒரு அனுபவப் பகிர்வாக வேண்டுமானால் எழுதலாம் .

"எசமாடன் கேட்கட்டும் " ஒரே சிரிப்பாணியாய் இருந்தாலும் பலதையும் யோசிக்க வைக்கிறது .

"பெண் எனும் ஞாபகம் " "கவரிமான்கள்",நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது" கதைகள் எல்லாம் எப்படிப்பா இப்படி எழுத நினைக்கறதை கச்சிதமா வார்த்தைல வடிக்க முடியுது ?! கேட்க வைக்க வல்லவை. அந்தத் தொகுப்பின் உள்ளே "வீடு" வாசிக்கையில் மணி இரவு 1.30 ,வாசித்து முடித்த பின் அடுத்து வேறேதும் தொடரத் தோன்றவில்லை .

//துருவத்தின் குளிர் தாங்கி தனிமையின் துயர் பொறுத்து இரவும் பகலும் வேலையின் சக்கரத்தில் தன்னைப் பொருத்தி அவர் சுற்றியதன் பயனே இந்த வீடு,கூட்டத்திற்குள்ளே அவரை என் விழிகள் தேடி அணைத்தணைத்து மீள்கின்றன. //

பேசாமல் காரண காரியங்களே அற்றுப் போய் ஒரு பாட்டம் அழுது தீர்த்தால் தேவலாம் எனும் உணர்வு மேலெழுந்த வாசிப்பு அனுபவம் , தனிமையில் வாசிக்கையில் இன்னும் அழுத்தமான சிநேகிதத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட எழுத்து.

அயல் நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களாய் வாழ விதிக்கப்பட்டவர்களின் "இருப்பு" இருப்பில் ஊடாடும் வலி இரும்பை விடக் கனக்கிறது.

என் பெயர் அகதி எனும் கதையில் வரும் வரி இது...

ராணுவம் சோதனை என்றபெயரில் தேடலைக் காட்டிலும் இளம் பெண்களை மானபங்கம் செய்வதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்ட பயங்கரம் ,இதனை அமானுஷ்ய பயமளிக்கும் நினைவு கொளல் எனக் கூறலாம்

" வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சப்பாத்துத் தடங்கல் பதிந்தன,சாமிகளெல்லாம் சட்டங்களுக்குள் உறைந்திருந்தன"

குழந்தைகள் பொம்மைகளைப் பிய்த்தெறிந்து விளையாடுவதைப் போல ராணுவம் இளம்பெண்களை தங்களது பாலியல் வக்கிராங்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை விளையாட்டைப் போல கைக்கொண்ட ஒரு நாட்டில் பிறந்து அகதிகளென பெயர் சூட்டிக் கொண்ட பாவத்தை என்னவென்று சொல்வது?!

போரினால் தன் பிள்ளைகள் அனைவரும் புலம் பெயர தனிமையில் தவிக்கும் ஒரு முதியவரின் "காத்திருப்பு"மரணத்தில் முடிந்த பின் சுற்றம் சூழ நடக்கும் இறுதிச் சடங்கு,எதற்கு காத்திருந்தார் அவர்?! இதற்கா!

குளிர் நாடுகளில் தஞ்சமடைந்து திசையறியாப் பறவைகளாய் திகைத்துப் போன ஞாபகச் சுவடுகள் "கப்பற்பறவைகளாய்"

கரை தேடிச் சிறகடித்து நடுக்கடலில் திசையறியாது திகைத்தபடி மீண்டும் மீண்டும் கப்பலுக்கே திரும்பும் பறவைகலானோம், கப்பலிலும் தங்கவியலாது ,கரைக்கும் திரும்பவியலாது,அங்குமிங்கும் அலைக்கழிந்ததில் உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு"

எத்தனை நிஜமான வலிகள் இவை !?

நிலம் மற்றுமோர் நிலா எனும் பகிர்வில் 'போராளியாய் இருந்த பெண்ணொருத்தி பின்னாட்களில் இயல்பு வாழ்க்கை வாழ்வதைக் காணுகையில்...சொல்லத் தெரியாத விருப்பமற்ற திகைப்பாய் உள்ளோடும் வார்த்தைகளாய் இவை,

"தேவதைகளின் பாதங்கள் மண்ணைத் தொடுவதை சாதாரணர்கள் சகிப்பதில்லை"

அந்தப் பெண் மறுபடி போராளியாக்கப்படவும் கூடும்,நிச்சயமற்ற தன்மை நிலவும் ஒரு நாட்டில் தேவதைகள் செத்துப் பிழைக்கின்றன.

ஊர் எனும் சிறுகதையில் ...

அந்த கிராமத்தில் நடமாடித் திரிந்த மனிதர்கள் அயல் கிராமங்களுக்கு அடித்து விரட்டப் பட்டனர்,உலக வரை படத்தில் விரல்களால் உணரப் பட்ட தேசங்களெங்கும் சிதறினார்கள்.நட்ட மரம்,வெட்டிய கிணறு,வளர்த்த பிராணிகள்,வயல்கள்,தண்ணீரும்..வியர்வையும் ஊற்றிப் பாடுபட்ட தோட்டங்கள்,தேடிய தேட்டங்கள் எல்லாம் விட்டுப் பெருமூச்செறிந்து பிரிந்தது அக்கிராமத்தின் உயிர் .

உயிர் பிரிந்தாலும் ஊரின் ஆன்மா அங்கே வாழ்ந்து எங்கெங்கோ சிதறியவர்களை அமைதிப் பேச்சுவார்த்தை அறிவிக்கப் படும் காலம் தோறும் எல்லா...மற்றெல்லா அச்சங்களையும் மீறி மேவி அழைத்துக் கொண்டே இருக்கின்றது .

ஊரின் உயிர் அங்கிருந்து வலிந்து பிரிக்கப் பட்டவர்களின் கண்ணில் திரையிடும் நீரில் கோடென வழிந்து துடைக்கப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறது போலும் . எத்தனை துடைத்தாலும் அழியாக் கோடுகள் .

கதை சொன்ன கதை யில் இப்படி ஒரு வாக்கியம்...

"வாசிக்க வாசிக்க தெளிவுங்கறாங்க..எனக்கு வாசிக்க வாசிக்கத் தான் குழப்பமே உண்டாகுது"சிரிக்கத் தோன்றினாலும் நிஜமென்னவோ இது தான்.


கதைத்தொகுப்பினைக் குறித்த நிறைகளைப் பாராட்ட வேண்டுமானால் முழுப் புத்தகத்தையுமே மேற்கோள் காட்ட வேண்டி வரும்,நடந்த துயரமான சம்பவங்களை நேர்த்தியாய் ஈர சிமென்ட்டில் பதித்த கைத் தடம் போல மனம் ஒட்டச் செய்தமை துன்பியல் அழகு .

இதை கதைத்தொகுப்பாக எண்ணிக்கொள்ள இயலாது,பட்ட ரணங்களின் மிச்சமான வடுக்கள்,புலி தன் காயங்களை மிக்க ஆதூரத்துடன் நாவால் வருடுவதைப் போலத்தான்...கையெட்டும் தூரத்தில் காலம் காலமாய் நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கும் இனப்படுகொலைகளின் அகோரங்களை வலிக்க வலிக்க படிக்கக் கிடைத்த அனுபவத் தொகுப்பு எனலாம்.


தொகுப்பில் அனைத்துப் பகிர்வுகளுமே அருமையாக இருந்தாலும் ஜென்ம ஜென்மாந்திர தொடர்புகள் போல நினைவை விட்டு அகலாத தன்மையுடன் ;

வீடு
ஊர்
இருப்பு
காத்திருப்பு

இந்த நான்கினையும் கூறலாம் ,நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தி அழ வைக்கத்தக்கன.எனக்குப் பிடித்திருக்கிறது,வாசித்த...இனி வாசிக்கப் போகும் அனைவரும் விரும்பத்தக்க நுட்பமான அழகு தமிழ்நதியின் படைப்புகள் .

இவரது பிற படைப்புகள் ;

கானல் வரி குறுநாவல் -உயிர்மை வெளியீடு
இரவுகளில் பொழியும் துயரப்பனி -ஆழிபதிப்பக வெளியீடு

தொகுப்பில் ஓரிடத்தில் "இது கதையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறீர்களா?" என்றொரு கேள்வி வருகிறது.

எனது பதில் ...நிச்சயம் இது கதையல்ல...கதையாக இருக்க வாய்ப்பில்லை.

புத்தகம் -நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது
ஆசிரியர் -தமிழ்நதி
விலை -ரூ/90
வெளியீடு -காதை பதிப்பகம்
நோட்:
புத்தகத்தின் புகைப்படம் கிடைக்கவில்லை,தமிழ்நதியின் புகைப்படம் மட்டுமே கிடைத்தது அதையே பதிவிலிட்டு விட்டேன்.