Monday, December 14, 2009
சிவசங்கரியின் "தகப்பன்சாமி " குறுநாவல் ஒரு பார்வை
சதானந்தம் ஏன் இறக்க வேண்டும்?
மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நேசமும் ...பரிவுமான ஒரு கணவன் ,ஒரு தகப்பன் ஏன் சாலை விபத்தில் சடாரென்று இடைவழியில் சாக வேண்டும்?!
"பசித்து பாலருந்தும் ஒரு குழந்தையின் வாயிலிருந்து பால் பாட்டிலை எதிர் பாராமல் வெடுக்கென்று பறிப்பதைப் போல் ஆகாதா இந்த இழப்பு !!!"
"பிள்ளையை பள்ளியில் கொண்டு விட்டான் ,பக்கத்தில் உட்கார்ந்து பொறுமையுடன் பாடம் சொல்லிக் கொடுத்தான்,அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் பெண்ணை மடியில் வைத்துக் கொஞ்சினான் ,நாள் தப்பாமல் மனைவிக்குப் பூவும் குழந்தைகளுக்கு தின்பண்டமும் வாங்கிவந்தான் .
ஒருநாள் கொதிக்க கொதிக்க மங்களூர் போண்டா '
அடுத்தநாள் லாலா கடை அல்வா
இன்னும் ஒருநாள் அய்யர் ஓட்டல் தூள் பக்கவடாம்
ஆப்பிள் மலிவா வித்துக்கிட்டு இருந்தான் பசங்களுக்கு வாங்கினேன் '
ரஸ்தாளி இருந்துச்சு குழந்தைகளுக்கு கொடு
மிட்டாய் கடைல சூடா மிக்சர் போட்டுக்கிட்டு இருந்தான் ,சிவாக்கு தயிர் சாதத்துக்கு தொட்டுக்கிடப் பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்,பாட்டில்ல கொட்டி வைச்சுகிட்டு தினம் கொஞ்சமா போடு..."
இப்படிப் பட்ட தகப்பனின் பாசத்தில் வளரும் சிவா தகப்பனை இழந்ததும் பெரியப்பா வீட்டில் அனுபவிப்பது ரணம்.வாழ்வின் சில முடிச்சுகளில் சிக்கிக் கொண்டு கனகமும் அவளது சின்னஞ்சிறு குழந்தைகளும் படும் பாடு சாந்தமூர்த்தி மற்றும் தெய்வ நாயகியின் மீது கடும் துவேஷத்தை நாவலைப் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும் .
கொண்டவன் துணையற்ற ஒரு பெண்ணை "அடிமையாக்கி "தங்களுக்கொரு சம்பளமில்லாத வேலைக்காரி ஆக்கிக் கொள்ளவே பெரும்பாலும் உறவுகள் முயலும் என்பதற்கு கனகமும் அவளது பிள்ளைகளுமே உதாரணம்.இத்தனைக்கும் கனகம் பலகாரம் செய்வதிலும் தையல் கலையிலும் தேர்ந்தவள் ,அப்படி இருந்தும் மூத்தார் குடும்பம் படுத்தி வைக்கும் பாடுகளுக்கு அவள் வாய் மூடி கண்ணீருடன் கரைவது உள்ளதும் போய் விடக் கூடாதே எனும் உள்ளார்ந்த பயத்தினால் தான்.
பெண்கள் தைரியசாலிகளாக முடிவெடுக்க வேண்டுமெனில் அதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் முக்கியமே. துள்ளத் துடிக்க இறந்து போன தம்பிக்காக வருந்தாத சாந்த மூர்த்தியா தனக்கொரு நன்மை செய்து விடப் போகிறார்? என கனகத்தால் உணர முடியாமல் போனது அவளது துரதிர்ஷ்டமே!
தாய் தகப்பனை இழந்து அண்ணனின் பரிவில் வளர்ந்து பிறகு அண்ணி வந்ததும் அந்தப் பரிவிற்கும் பங்கம் வர மனைவிக்கு தன் தங்கை வேலைக்காரி ஆவதிலிருந்து அவளை மீட்கவே "பார்வைக்கு அத்தனை லட்சணமாக இல்லாவிட்டாலும்" பரவாயில்லை மாதச் சம்பளம் வாங்கும் மணமகன் பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் என்று தான் அழகும் பாந்தமுமான தன் தங்கையை மாதவன் சதனந்ததுக்கு திருமணம் செய்து வைக்கிறான். அதற்கும் இப்படி ஒரு பங்கம் வரக்கூடும் என அவன் கண்டானா?
எளியோருக்கு வலியோர் இரங்குதல் என்பதெல்லாம் சினிமாவில் காணலாம் என்பதைப் போல இங்கே கனகத்தை அநியாயமாக ஏமாற்றுகிறார்கள் தெய்வ நாயகியும் சாந்தமூர்த்தியும்.கணவனின் மரணத்திற்கு பின் அவனுக்கு கிடைத்த இன்சூரன்ஸ் இழப்பீட்டுப் பணம் முழுவதையும் சாந்த மூர்த்தி ஏதேதோ கணக்குகள் காட்டி கழித்துக் கொள்ளும் போது கனகத்தின் கேள்விகளற்ற பரிதவிப்பு அவள் மீதே"முதுகெலும்பில்லாத கோழைப் பெண்ணே "எனும் கோபமாகவே வெடிக்கக் கூடும் வாசகர்களுக்கு.
அதனால் தானோ என்னவோ அவள் பெற்ற மகனே அம்மாவையும் தங்கையையும் விட்டு விட்டு பெரியப்பா குடும்பத்தின் அடாவடியைப் பொறுக்க முடியாமல் அடிவாங்கிச் சாக வலுவின்றி வீட்டை விட்டு ஓடிப் போகிறான்.
பஸ்ஸில் காப்பி டீ விற்கும் சிறுவர்களில் ஒருவனாகிறான்.
சாந்தமூர்த்திக்கும் தெய்வ நாயகிக்கும் பத்தோடு பதினொன்றாய் கூட ஒரு காரணம் கிடைத்தது கனகத்தையும் சிவாவையும் ஊசியால் குத்துவதைப் போல வார்த்தைகளால் குத்திக் கிழிக்க,கனகத்தின் மௌனமான கதறலையும் ஆற்றாமையையும் சொல்லில் விளக்கி விட முடியாது தான்...
ஆனாலும் அவள் எங்கெங்கோ விசாரித்து யார் யாரிடமோ தகவல் சொல்லி கடைசியில் மகன் இருக்கும் இடம் தெரிந்து மூத்தாரை நம்பிப் பயனில்லை என இவளே நேரில் போய் அழைத்தும் அவன் திரும்பி வர மறுக்கிறான்.
தன் பிள்ளையை மூத்தார் மகன் வீணில் பலி சுமத்தி அடிவாங்க வைக்கும் போதும் சரி ...அவனை அந்த மனிதர் ஈவு இரக்கமே இன்றி பெல்ட்டால் விளாசும் போது பேச வகையின்றி கண்ணீரில் உருகும் போதும் சரி கனகத்தின் சிவாவுக்கு இருந்த நம்பிக்கை தகர்ந்து போகிறது.தன் அம்மாவை நம்பினால் இனியெப்போதும் அடிமை வாழ்க்கை தான் என அந்த பிஞ்சு மனம் நினைத்திருக்கக் கூடும் !
கனகத்தின் அழைப்பை மறுத்து அவன் சொல்லும் பதில் குழந்தை அப்பாவையோ ..அம்மாவையோ செல்லமாக பெல்ட்டால் அடித்து விளையாடுமே அப்படி ஒரு சாட்டையடி.சிவா தகப்பன்சாமி தான் இங்கே .
"தைரியமா நாம இருக்க முயற்சிக்கலாம்மா ,இந்த உலகத்துல நிமிர்ந்து வாழ நமக்கு உரிமை இருக்கு,யாருக்கும் காரணம் இல்லாம நாம அடங்கி வாழத் தேவை இல்லை,பெரியப்பா கிட்ட தயங்காம உண்மையைச் சொல்லுங்க மீறிக்கிட்டு குடும்பம் மானம்னு கத்தினார்னா சும்மா கேட்டுக்கிட்டு இருக்காதிங்க,நம்ம வாழ்க்கையை நாம தான் வாழனும் எனக்கொரு பெரியவர் இங்க வந்த புதுசுல சொல்லிக் கொடுத்தார் ,நீங்களும் அதை நினைவுல வச்சிக்கோங்க"
இரண்டும்கெட்டான் வயதில் அந்தப் பையனால் எடுக்க முடிந்த ஸ்திரமான திடமான முடிவை இத்தனை வயதில் கனகத்தால் எடுக்க முடியாமல் போனதை விளக்கத் தான் இந்த குறுநாவலுக்கு இப்படி ஒரு தலைப்பு என்றால் அது மிகையில்லை.
சிவசங்கரியின் இந்தக் குறுநாவல் முன்பு தூர்தர்சனில் "செவ்வாய் தோறும் இரவு ஒளிபரப்பப் படும்" ஒருமணி நேர நாடகங்களில் ஒன்றாக மாஸ்டர் கணேஷ் நடிப்பில் பார்த்த ஞாபகம் .மாஸ்டர்
கணேஷ் தான் சிவா.
இதுமட்டுமா பாலகுமாரனின் "தாயுமானவன்" கூட தொடராக வந்து கொண்டிருந்தது அப்போது .
இப்போது மெகா சீரியல்கள் பல வந்து குழப்பக் கும்மி அடித்தாலும் வெகு சொற்பமானவை தவிர நெஞ்சில் நிற்கவில்லை எதுவும். ஏன் கதைகளுக்கா பஞ்சம்? ஏதாவது ஒரு
வெற்றி பெற்ற நாவலை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே!!! என்ன ஒரு கஷ்டம் எனில் கதையின் கருப்பொருளை சிதைத்து தோரணம் கட்டி விடுவார்கள் டி.ஆர்.பி ரேட்டிங் என்ற பெயரில் அப்படி நல்ல நாவல்கள் சிதைந்து திரிந்து போய் மக்கள் மனதில் பதிவதை விட நாவலாகவே வாசிப்பதே உசிதம்.
பாலிமர் டி.வி யில் ஆர்.கே.நாராயணின் "சுவாமி அண்ட் பிரெண்ட்ஸ் " மால்குடி டேஸ் ஆக தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது.மதியத்திற்கு மேல் என்று ஞாபகம்,சுவாமியின் அப்பாவாக கிரீஸ் கர்னாட் நடிப்பில் சுவாமியாக நடிக்கும் சிறுவன் பெயர் தெரியவில்லை .பார்க்கலாம் ஆனால் புத்தகமே அபாரமானது நம் கற்பனைகள் சிறகடிக்க. காட்சி ஊடகம் திறக்க முடியாத பலப் பல கதவுகளை திறக்க வல்லது நாவல்கள் என்பதை "தில்லான மோகனாம்பாளையும்" மலைக்கள்ளனையும் " வாசித்தல் தெள்ளத் தெளிய ஒப்புக் கொள்வீர்கள்.
கொத்தமங்கலம் சுப்புவின் தில்லான மோகனாம்பாள் திரையில் ஒரு வகை விருந்து எனில் நாவலாக வாசித்தவர்களை கேளுங்கள் இதை விட அதன் சுவை அளப்பரியது ,அதே தான் நாமக்கல் கவிஞரின் "மலைக்கள்ளன் " நாவலுக்கும். அப்பப்பா அதை படமாக எம்.ஜி.ஆர்...பானுமதி நடிப்பில் காண்பதை விட நாவலாக வாசித்துப் பாருங்கள் .புரியும் எப்பேர்ப்பட்ட புனைவு!
வாசகர்களின் பக்தியை சோதிக்க ஒரு எளிதான கேள்வி
தகப்பன் சாமி யார்?
அ) சிவன் ஆ)திருமால் இ) விநாயகர் ஈ) முருகன்
சரியான விடை சொல்பவர்களுக்கு அந்தக் கடவுளின் பிரசாதம் அனுப்பி வைக்கப் படும் :))))
Sunday, December 13, 2009
சிலேட்டுக் குச்சியும் ...கோபால் பல்பொடியும்...
இந்தப் பழக்கம் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என்பதைப் பற்றி அப்போது சிந்தனை ஏதும் இல்லை.ஒரு வேலை அப்பா வழிப் பாட்டி செங்கல் பொடி கொண்டு பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! இல்லையேல் இட்லிக் கடை அன்னம்மா பாட்டி இட்லி அவித்து முடித்ததும் மூன்று கல் கொண்ட விறகடுப்புச் சாம்பலை நீர் தெளித்து அவித்தபின் அதிலுள்ள சாம்பலை இளஞ்சூடாக எடுத்து பல் விளக்குவதைக் கண்டு வந்திருக்கலாமோ ! அடுத்தவரைக் கண்டு பழகுவதென்றால்... தாத்தா வேப்பங்குச்சியால் பல் விளக்குவதைக் கண்டு அதையல்லவா நான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்?!முதல் காரணம் அது மகா கசப்பு ,எந்தப் பிள்ளைகள் தான் கசப்பை விரும்பக் கூடும்?!
திருநீறும் ...சாம்பலும் ஏன் சிலேட்டுக் குச்சியும் கூட வாயிலிட்டதும் நடு நாக்கில் சில்லென்று ஒரு விறு விறுப்பைத் தரும் பாருங்கள் கரைவதற்கு முன்பு அதற்க்கு ஈடாகுமோ கசப்பு!அம்மா வழிப் பாட்டி "பயோரியா பல்பொடி வைத்து பல் விளக்குவார் அன்றைய நாட்களில்..." நாட்டு மருந்து போல அந்தப் பல்பொடியும் பிடிக்காது அதன் லேசான கசப்பும் பிடிக்காது ,சுறு சுறுவென எரியும் நாக்கு ,அதே ரோஸும் வெள்ளையும் கலந்த நிறத்தில் "கோபால் பல்பொடி" சின்னப் பிள்ளைகள் எல்லோருக்கும் பிடித்த ஒன்று ,ஏனெனில் அதைக் கொண்டு பல்விலக்குவதா முக்கியம் ? அதன் இனிப்புச் சுவைக்காக அதை தின்று விடும் பல நல்ல பால்ய நண்பர்களை நானறிவேன்.நான் கூட தின்றிருக்கக் கூடும் ..இப்போது ஞாபகமில்லை.
சிலேட்டுக் குச்சியில் இருந்து பிறகு சிலர் சாக்பீசுக்கு மாறி விட்டார்கள் ,என்ன இருந்தாலும் குச்சி போல வராது தான்,குச்சியில் கூட இரண்டு வெரைட்டி உண்டு அப்போது. கல் குச்சி ,இது ஒல்லியாக நீண்டு கருப்பாக இருக்கும் ,இரண்டாவது மாவுக் குச்சி இது நல்ல வெள்ளை நிறத்தில் கொஞ்சம் தடிமனாக இருக்கும் ,இதில் மாவுக் குச்சி தான் பள்ளிப் பிள்ளைகள் எல்லோராலும் விரும்பப் பட்டது. என்ன தான் சொல்லுங்கள் மாவுக் குச்சிக்கு சாக்பீசெல்லாம் ஈடாகவே ஆகாது என்று தான் சொல்வேன் நான்.சப்பென்று இருக்கும் சாக்பீஸ் தூள்.
மண் வெறும் மண் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது ...தெள்ளு மண் என்பார்கள் கிராமப் புறங்களில் அப்படிப் பட்ட நுண்ணிய மண்ணை தின்னும் பழக்கம் கூட சிலருக்கு அப்போது இருந்தது.
எறும்பு சாப்பிட்டால் கண் நன்றாகத் தெரியும் என்று ஒரு பழம் நம்பிக்கை...யார் சொல்லக் கேள்வியென்று இப்போது நினைவில்லை,அப்படி எறும்புத் தின்னி பிள்ளைகளும் சிலர் இருக்கத் தான் செய்தார்கள்.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் நிஜமாகவே எறும்பைப் பிடித்து தின்றால் கண் பளிச்சென்று தெரியுமா என்ன?!( சுரீர்னு கடிக்கிற எறும்பை சும்மா விட முடியுமா? )
மேலே சொன்ன பழக்கங்களைக் காட்டிலும் "அரிசி " சமைக்காமல் அப்படியே வெறும் அரிசியை வாயிலிட்டு சதா மெல்லும் அபாரப் பழக்கம் அன்றைக்குப் பலரிடமும் இருந்தது.பெண் குழந்தைகள் அப்படி எந்நேரமும் அரிசி மென்றால் அத்தைமார்கள் சொல்வார்கள் "ரொம்ப அரிசி திங்காத உன் கல்யாணத்தன்னைக்கு விடாம மழை வரும் பார் " என்று ,இதென்ன நம்பிக்கையோ?!
சிலருக்கு புளியை சதா நேரமும் வாயிலிட்டு சப்பிக் கொண்டே இருக்கப் பிடிக்கும்,இல்லையேல் புகையிலை போல கன்னங்களுக்கிடையில் அதக்கிக் கொள்வார்கள் ,உமிழ் நீரில் லேசான இனிப்பும் மிகையான புளிப்புமாய் புளி மெல்ல மெல்லக் கரைந்து வர அதை முழுங்கும் ஒவ்வொரு முறையும் அலாதி ஆனந்தமாய் இருக்கும். என்ன ஒரு பொல்லாத பிரச்சினை என்றால் இப்படி புளி தின்றால் நாக்கின் ஓரங்கள் நாளடைவில் கொதித்துப் போய் கொப்புளித்து புண் வரும்.இதற்க்கெல்லாம் அஞ்சினால் எப்படி?!
சொல்ல மறந்து விட்டேன் ...இப்போது தான் ஸ்கூல் பேக் வித விதமாய் வருகிறதே தவிர இருபது இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலும் நகைக் கடை ,துணிக் கடைகளில் இலவசமாகத் தரும் மஞ்சள் பை தான் ஸ்கூல் பெக் ,சவாலாகவே சொல்கிறேன் ..அதன் காதுகளையோ அல்லது ஓரங்களையோ அல்லது அடி நுனிகளையோ பற்களால் கடித்து மேல்லாத குழந்தைகள் சொற்பமே.அது ஒரு விநோதப் பழக்கம் ...லேசான உப்புச் சுவையோடு அப்படி மென்று விழுங்குவதை இப்போது நினைத்தால் குமட்டக் கூடும்,அன்றென்னவோ அது பிடித்தமானதாகவே இருந்தது எல்லாக் குழந்தைகளுக்கும்.
இப்பத்திய குழந்தைகள் மட்டும் இளப்பமா என்ன? டூத் பேஸ்ட் திங்காத குழந்தைகள் அரிது. நல்ல வேலை இப்போது சிலேட்டுகள் இல்லை நேரடியாக பென்சிலுக்குப் போய் விடுகிறார்கள் எல்.கே.ஜி யிலேயே.மேஜிக் சிலேடு வந்து விட்டது. அதனால் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் குச்சி தின்று விடக் கூடுமோ என்ற அபாயம் குறைவே.
மண் தரை இருந்தால் அல்லவா இப்போதைய குழந்தைகள் அதெல்லாம் முயன்று பார்க்க ! எங்கெங்கு காணினும் சிமெண்டுக் காடுகள் தான். அப்படியாக அந்தப் பழக்கமும் இருக்க வாய்ப்பில்லை.திருநீர் கூட அப்படி ஒன்றும் இந்தக் கால குழந்தைகள் சாப்பிட முயல்வதில்லை என்றே நினைக்கிறேன். சாம்பல் சொல்லவே தேவையில்லை ... விறகு அடுப்பு உபயோகித்தால் அல்லவா சாம்பலை குழந்தைகள் கண்ணால் பார்க்க முடியும்?!
இப்படி எல்லாம் பெற்றோர்கள் நிம்மதிப் பட்டுக் கொள்ள முடியாது.இதெல்லாம் என்ன பெரிய சாதனைகள்?!
பிரீசரைத் திறந்து அதில் உறைந்திருக்கும் ஐஸ் துகள்களை சுரண்டித் தின்பது ;
கோரைப் பாயோ ...பிளாஸ்டிக் பாயோ அதன் ஓரங்களை உருவி மென்று துப்புவது .
பென்சில் கரையும் வரை அதை விட்டேனா பார் என துருவோ துருவென்று துருவுவது.
முன்னமே சொன்னபடி டூத் பேஸ்ட் தின்பது.
இப்படி சில மாறாத பழக்கங்கள் இருக்கின்றன தான்.
ஆனாலும் அன்றைய குழந்தைகளை விடவும் இன்றைய குழந்தைகளுக்கு கவனிப்பு கூடுதல் என்பதால் பல விநோதப் பழக்கங்கள் இன்றைக்கு மட்டுப் படுத்தப் பட்டு விட்டன குழந்தைகளிடையே என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளாய் வளர்வதால் எந்நேரமும் பெற்றோரின் கவனிப்பு வளையத்திலே தான் இருக்க நேர்கிறது.அதனால் தேவையற்ற பல பழக்கங்கள் தடுக்கப் பட்டு விட்டன என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும்.
Thursday, December 10, 2009
ஹரிணி(பாப்பு) கலெக்சன்ஸ் ...

கணேஷ ஸ்துதி இல்லாமலா ?! முதல் வணக்கம் அவருக்கு தானே...ஜூனியர் சந்தமாமா பாப்புவுக்கு மிகவும் பிடித்த புத்தகம்.நேற்று அதைப் பார்த்து இரண்டே நிமிடத்தில் இந்த பென்சில் டிராயிங் ...பிள்ளையார் கூட என் பொண்ணு கைபட்டு எப்படி ஜொலிக்கிறார் பாருங்க!(தற்பெருமை கொஞ்சம் ஓவராத் தான் போச்சு இல்ல!!!)

மேலே ஹெலி ஹாப்டர் பறக்கிறதாம்..கீழே சாலையில் ஸ்கூல் வேன்..ஆட்டோ ...பஸ் இப்படி சில ட்ரான்ஸ்போர்ட் வரைந்திருக்கிறாள். பாப்பு ட்ரான்ஸ்போர்ட் லெசன் படிப்பதால் விளைந்த படம் இது. நல்லா தான் இருக்கு இல்ல?!
Friday, December 4, 2009
உச்சிக்குடுமி முட்டாசுக் கடை

உச்சிக்குடுமி கடையில் இன்னும் சில பலகாரங்கள் கூட செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள்,ஆனாலும் இந்தக் கருப்பட்டி முட்டாசுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை ,
அதுவும் மாலை சரியாக ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு பெரிய நார் தட்டின் மீது பழைய (பெரும்பாலும் எண்ணெய்க் கரை படிந்த ஒரே அழுக்குத் துண்டு தான்) துண்டை விரித்து அதன் மேல் பழைய தினசரிப் பேப்பரைப் போட்டு அதற்கும் மேல் பொன்னிறமான கருப்பட்டி முட்டாசுகளை அடுக்கி அதற்கும் மேலே இன்னொரு தினசரியை வைத்து மூடி உச்சிகுடுமியின் மகள் பாண்டீஸ்வரி இடுக்கில் இடுக்கிக் கொண்டு வருவாள்,கூட ஒரு பொடியன் காசு வாங்கிப் போடா சுருக்குப் பையுடன் வருவான்.
அவர்கள் தலையை கண்டாலே போதும் தெருவில் மொய்த்துக் கொண்டு கூட்டம் கூடும்.தினம் தினம் வருவதால் எல்லோரும் நூறு கிராம்,இருநூறு கிராம் என்று வாங்கி அங்கேயே தின்றும் விடுவார்கள் ,மாலையானால் தான் கிராமப் புறங்களில் அப்போதெல்லாம் ஒவ்வொரு திண்ணையிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதை பேசுவது வாடிக்கை ஆயிற்றே.முட்டாசோடு ஊர்க் கதைகளை உலக விசயங்களை(!!!) மெல்வதும் கூட சுகம் தான் போலும்.
என்னவோ தெரியவில்லை சென்ற விடுமுறையில் அம்மா வீடு...மாமியார் வீடு ,சித்தி வீடு அத்தை வீடு என்று சுற்றி விட்டு பாட்டி வீட்டில் எட்டிப் பார்க்கும் போது சேர்ந்தார் போல இரண்டு நாட்கள் தங்கினால் தான் என்ன? என்று தோன்றி விட ...தங்கினோம். வழக்கம் போல உறவுகள் ...நட்புகள் ...தெரிந்தவர் தெரியாதவர் என்று திண்ணையில் ஜமா சேர்ந்ததில் மெல்ல மெல்லப் பேச்சு கருப்பட்டி முட்டாசுக்குப் போய் விட்டது.
மொறு மொறுன்னு பங்காரம் போல (பங்காரம்னா தெலுங்குல தங்கம்) என்னமா இருக்கும் உச்சிக் குடுமி கடை முட்டாசு !
இப்ப ஒருத்தன் முட்டாசு போட்டு விக்கறான் மதினி ,வாயில போட்டா என்னமோ இனிப்பாத்தான் இருக்கு,ஆனாங்காட்டி ஒரு மொறு மொறுப்பு இல்ல ஒண்ணுமில்ல,சும்மா சவ சவன்னு என்னமோ பச்சைப் புல்லைக் காய்ச்சி சீனி போட்டு மென்டாப்புல(மெல்லுதல்) இருக்கு ,அம்புட்டுக்கு ஒன்னும் நல்லா இல்லை. ஹூம்... ஓட்டு வீட்டு தனக்கா சொல்லி அங்கலாய்க்க ,
பாட்டி உச்சிக்குடுமி பெருமையை கொஞ்ச நேரம் சிலாகித்தார்.
எனக்கோ இந்த முட்டாசெல்லாம் சென்னையில் எங்கே கிடைக்கப் போகிறது ,இப்போது யாராவது விற்று வந்தால் சூடாக வாங்கி ஒரு விள்ளல் வாயில் போட்டால் தேவலாம் என்று இருந்தது அந்த மாலை நேரக் கூதல் காற்றுக்கும் கிராமங்களுக்கே உரிய ஒரு வித இதமான வாசனைக்கும் .
அதென்னவோ அன்றைக்கெல்லாம் எதிர்பார்த்தும் முட்டாசு விற்பவனைக் காணோம்.
சிவகாசியில் வேலாயுத நாடார் கடையில் சீனி..கருப்பட்டி முட்டாசு ரெண்டுமே பேமஸ் என்று ஊருக்கு கிளம்பும் போது சித்தியும் பாட்டியும் ஆளுக்கு ஒரு கிலோ வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள்,அங்கே பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள் கேட்டால். அது ஒரு பாரம்பரிய சுவை என்றால் மிக்கி இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப் படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை எனக்கு.
இதே போல வாழை இலையில் வைத்து சூடாகக் கட்டித் தரும் சாத்தூர் லாலாக் கடை ஹல்வாவையும் சொல்லாம் .பால்யத்துடன் கலந்து விட்ட இனிமையான நினைவுகள் அவை.இங்கே இனிப்பானவை முட்டசும் ...ஹல்வாவுமா இல்லை பால்ய நினைவுகளா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் பகுத்துப் பார்த்து விட முடியாது போலும்.
ம்...என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்...ஆமாம் வேலாயுத நாடார் கடை முட்டாசும் கூட எனக்கென்னவோ உச்சிக்குடுமி கடை கருப்பட்டி முட்டாசுக்கு ஈடாகத் தோன்றவில்லை என்பது தான்.
உச்சிக்குடுமியோடு போய் விட்டது அவரது மொறு மொறுப்பான முட்டாசுகளும் .
அவர் இறந்து விட்டார்.
Thursday, December 3, 2009
கல்கி வெறும் கவர்ச்சி
கசப்பான உணர்வைத் தந்த செய்தி இதுவாகத் தான் இருக்க வேண்டும் .
தந்தையின் "ஒன்னெஸ் " அமைப்பு மூலம் திரட்டிய மக்கள் நிதி பற்றாக் குறை ஆகி விட்டதா என்ன ?என்ற ஆயாசமே மிகுதியானது. விஸ்வநாத் என்பவர் கல்கியின் (விஜயகுமார்) நண்பர் இவர் இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே கல்கி மீது குற்றச் சாட்டை எழுப்பியே வருகிறார்,ஆனால் நமது மீடியாக்கள் பரபரப்பிற்காக ஓரிரு நாட்கள் செய்திகளைப் பிரசுரிப்பதோடு ஓய்ந்து விடுகின்றன. காரணம் கல்கியை நம்பும் மிகுதியான வி.ஐ.பி பக்தர்களாகக் கூட இருக்கலாம். சந்திர பாபு நாயுடு ஆந்திராவில் கல்கியை ஆதரித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் உலவுகின்றன.
குங்குமம் மற்றும் அவள் விகடனில் கல்கி பகவானின் அற்புதங்கள் குறித்து விளம்பரம் கூட வெளியாகிறது ,யோசியாமல் நம்புவதற்கு தான் ஏராளம் பேர் இருக்கிறார்களே. அனுபவ ரீதியாக எனக்குத் தெரிந்த சில விசயங்களை இங்கே பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியதால் தான் இப்பதிவை வெளியிடுகிறேன்.
மனிதர்களுக்குப் பட்டால் தான் புத்தி வரும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் ?! ஐந்தாயிரம் ரூபாய்கள் செலவழித்து கல்கி பகவன் மற்றும் அவரது மனைவியான அம்மா பகவான் தரிசனம் செய்து வந்தவர்களில் நாங்களும் உண்டு என்பதால் அனுபவ சான்றுகளுடன் தெரிய வந்த விஷயம் .
அங்கே பணமே பிரதானம்.
வரயக்யம் என்று ஒரு பூஜை
மகா வரயக்யம்
முக்தி யக்யம்
யூத் வரயக்யம்
கலச பூஜை
அம்மா பகவான் திருக்கல்யாணம்
நானறிந்த வரையில் இப்படிப் பல பூஜைகள் நடத்துவார்கள் .இதற்க்கு தேவைப் படும் நிதி எல்லாம் அங்கே "கல்கி டிவோட்டிகள் "(கல்கி பக்தர்கள்) தலையில் சுமத்தப் படும். பூஜைக்குத் தேவையான அழைப்பிதழ்கள் அச்சிடுவது வாகனச் செலவுகள்,பூக்கள்,பழங்கள் முதற்கொண்டு இன்ன பிற எல்லா செலவுகளையும் இன்னின்னவர் என்று ஸ்பான்சர் பிடித்து சாதிக்க வேண்டும்,இந்த பூஜைகளை நடத்துவதற்கென்று "தாசா ஜிக்கள் "(கல்கி அடியார்கள்) இருப்பார்கள் ,அவர்கள் இப்படி இப்படி செய்யுங்கள் என்று ஆணை இடுவதோன் சரி பணம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே பக்தர்கள் தான் திரட்டித் தந்தாக வேண்டும்.
சத்சங்கம் செய்வது ...எனக்கு இன்ன குறை என்று மனம் விட்டுப் பேச விரும்பும் பக்தர்களுக்கு தனக்குத் தெரிந்த வகையில் சில தத்துவங்களைக் கூறி அவர்களது மனம் சமாதானம் அடைய வைப்பது ,திரட்டிய நிதிகளை பகவானிடம் கொண்டு சேர்ப்பது இது மட்டுமே கல்கி தாசாக்களின் வேலை.
இப்படி தமிழகம் முழுக்கவே இவர்கள் பரவி இருந்தனர் 2000 ஆம் ஆண்டு வாக்கில் ,இப்படி திரட்டிய நிதிகளை இவர்கள் எப்படிப் பயன் படுத்தினார்கள் என்பதற்கு கல்கிக்கே வெளிச்சம்.அவரது மகனின் நிர்வாகத்தில் கட்டுமான நிறுவனம் ஒன்றும் ,காஸ்மிக் எனும் ஆடியோ நிறுவனம் ஒன்றும் இருப்பது பக்தர்களுக்கு தெரியும் .
கல்கி என்ன பரம்பரை பணக்காரரா? படி நிலை வளர்ச்சி என்பது அம்பானியில் இருந்து லக்ஷ்மி மிட்டல் வரை கண் கூடாக செய்திகள் மூலம் நமக்குத் தெரிந்தவை,ஒன்னெஸ் மையம் என்ற பெயரில் சகல நவீன வசதிகளுடன் வெளி நாட்டினரை ஈர்க்கும் வகையில் ஒரு பெரிய வழிபாட்டு தியான மண்டபம் கட்டி இருக்கிறார்கள்.
கொசுறு :
அம்மா பகவான் தரிசனம் செய்ய ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 5000 வாங்கினார்கள் ,நேற்று ஜூ.வி யில் 50 ,000 என்று படித்த ஞாபகம் ,அடடா...என்ன ஒரு படி நிலை வளர்ச்சி .
பிரபலங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு இவர்கள் எல்லாம் எங்கள் பக்தர்கள் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்கிறார்கள். உதாரணம்...மனீஷா கொய்ராலா,ஷில்பா ஷெட்டி,எஸ்.ஏ .சந்திர சேகர் தம்பதி,தாமு,எழுத்தாளர் இந்துமதி( இவர் நான் கல்கி பக்தை இல்லை என்று முன்பே பேட்டி கொடுத்து விட்டார்.) இப்படிப் பலர் உண்டு.
சில வருடங்களுக்கு முன் தேனிக்கு அருகில் வீரபாண்டித் திருவிழாவுக்கு வருகை தந்த நகைசுவை நடிகர் தாமு "கல்கி தர்மம் (!!!) பரப்ப என்று போடப் பட்டிருந்த ஒரு ஸ்டாலுக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் அ.தி.மு. கா வுக்கு ஓட்டுப் போடுமாறு ஸ்டாலுக்கு வந்தவர்களிடம் கேட்டுக் கொண்டாராம். அ.தி.மு.கா என்றால் இனி "அம்மா தர்ம முன்னேற்றக் கழகமாம் " அங்கிருந்த பக்தர்கள் சொல்லக் கேள்வி .
இந்த ஸ்டாலும் வீர பாண்டித் திருவிழா காலங்களில் பக்தர்களின் நிதியால் மட்டுமே போடப் படும் ,ஏறத்தாழ எல்லா ஆன்மீக இயக்கங்களும் இப்படித் தான் என்றாலும் இது கொஞ்சம் அதிகப் படி என்று தோன்றக் காரணம் நானும் சில வருடங்கள் நேரில் கண்ட பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் சில உண்டு என்பதால் மட்டுமே .
கல்கி பகவான் ரூரல் சர்வீஸ் என்ற பெயரில் பக்தர்களே அரிசி பருப்பு எல்லாம் சேகரம் செய்து கொண்டு பின் தங்கிய கிராமங்களுக்குச் சென்று அவர்களே சமையல் செய்து கிராமத்தோரை அன்போடு அழைத்து இலை போட்டு உணவிட்டு அவர்கள் சாப்பிட்டு முடித்த் பின் அந்த எச்சில் இலைகளையும் எடுக்க வேண்டும் அப்போது தான் பகவானின் முழு பலன் கிட்டுமாம். நிஜம் என்றே ஒத்துக் கொள்ளத் தோன்றினாலும் கல்கி அடியார்கள் ஒரு போதும் என்றேனும் ஒருநாள் மட்டும் கூட அப்படி இலை எடுத்து நான் கண்டதில்லை. இதுவல்லவோ பக்திப் பெருக்கு!!!
முக்தி யக்யம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக பணம் கட்டி சென்னைக்கு அருகில் நேமத்தில் நடக்கும் ஒரு பூஜைக்கு பக்தர்களை போகச் சொன்னதை பல முறை நான் கண்டிருக்கிறேன்,மறுக்கும் பக்தர்கள் நாளடைவில் பூஜை நடவடிக்கைகளில் இருந்து ஓரம் கட்டப் படுவார்கள்.ஆனால் அவர்கள் நடத்தும் ..நடத்தப் போகும் பூஜைகளில் பணம் செலுத்தி கலந்து கொள்ள மட்டும் மறக்காமல் அழைப்பு மீண்டும் மீண்டும் அனுப்பப் படும்.
இதை விட பக்தர்களின் வாரிசுகளை தாசாஜிக்கலாக அனுப்பச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?! எனும் கேள்வி அடியார்களால் கேட்கப் பட்டதும் அங்கே உண்டு.அதில் மிரண்டு வெளியேறிய பல பக்தர்களை நான் அறிவேன்.
எதற்கு நீட்டி முழக்குவானேன். "கல்கி வெறும் கவர்ச்சி மட்டுமே " அவர் தெய்வம் கடவுள் விஷ்ணுவின் பத்தாது அவதாரம் என்பதெல்லாம் வெறும் கப்ஸா என் போன்றவர்களுக்கு,இன்னும் கல்கியை நம்பக் கூடியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்த பாடில்லை .
ஆன்மீகம் வியாபாரம் தான் என்பதை யாராவது தெள்ளத் தெளிவாக அறிய விரும்பினால் கல்கி பூஜைகளில் தொடர்ந்து பங்கெடுத்துப் பாருங்கள்.பிறகே உங்களுக்கே தெரியும் எல்லாம்.
Monday, November 30, 2009
மையல்
சமையல் இந்த வார்த்தையை இந்தக் கட்டுரைக்குத் தோதாக என் வசதிக்கு பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முயற்சித்ததில் ;
சமையல்= ச+மையல் - என்று ஆனது .
ச என்ற ஒற்றை எழுத்துக்கு "சகி" என்றி நாமாக அர்த்தப் படுத்திக் கொள்வோம்
மையல் -இதற்க்கு பொருள் தெரியாதோர் தமிழ் கூறும் நல்லுலகில் எவரேனும் உண்டோ ?
இப்போது பாருங்கள் சமையல் என்ற சொல்லுக்கு "சகியின் மீது மையல்" என்று அழகான பொருளை நாமாகக் கற்பனை செய்து கொள்ளலாம் தானே.
சகி யார் "சகித்துக் கொள்பவர்களை சகிஎன்று விளிக்கலாம் ,சகி என்ற சொல்லுக்கு "மனைவி" என்றும் அர்த்தப் படுத்திக் கொள்ளலாம் ,பிரிய சகி- பிரியமான மனைவி .
சரி இனி சமையலுக்கு வருவோம் ...
சகியான மனைவியின் மீது அன்பான பண்பான கணவருக்கு (நோட் திஸ் பாயிண்ட் )மையலை ஏற்படுத்தும் வண்ணம் உதவும் ஒரு காரியம் சமையல் என்று பொருள் படுத்திக் கொள்ளலாம் இல்லையா?
சமையல் அருமையாக அமைந்து விட்டால் அந்தத் தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகளின் வீரியம் பெருமளவு குறையக் கூடும். கூடவே "சமைத்த கைக்கு தங்கக் காப்பு" எனும் வார்த்தை ஜாலம் மூலம் மையலின் சதவிகிதமும் கூடும் .ஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் தாம்பத்யம் சிறக்க "மையல்" எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் சமையலும் தான்.
கற்பனை வளம் குறைஞ்சு காணாம போயிடக் கூடாதில்லையா ?!
அதான் அப்பப்போ இப்படி ஏதாச்சும் எழுதிப் போட்டுடறது .
Thursday, November 26, 2009
பாப்பு செய்த மணிமாலை

பாப்புவுக்கு பள்ளி நேரம் மாலை மூன்று மணியுடன் முடிந்து விடும் ,வீட்டிற்கு வந்த பின் உடனே யூனி பார்ம் கூட மாற்றிக் கொள்ளாமல் அவள் செய்யும் முதல் வேலை டி .வியை ஆன் செய்வது தான்...பிறகு அவள் இரவு தூங்கச் செல்லும் வரை அது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் , அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறாளோ இல்லையோ டி.வி அது பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் ,இப்படி ஒரு கட்டாய மனநிலை,ஒற்றைக் குழந்தையாய் வளரும் பல குழந்தைகளுக்கும் இருக்கக் கூடும் என்றே தோன்றினாலும் ,இந்தப் பழக்கத்தை மாற்றியே ஆக வேண்டும் என முயன்றதில் நல்ல பலன் .
நேற்று இந்த செயற்கை மாலையும் ,இயர் ஹேங்கிங்கும் பாப்புவே தன் கையால் செய்து காட்டினாள் எனக்கும் அவளது அப்பாவுக்கும்.இன்றைக்கு பள்ளிக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள் அவளது அனிதா மிஸ்ஸிடம் காண்பிக்க வேண்டுமாம்.
தேவையான பொருட்கள்:
மீடியம் சைஸ் பீட்ஸ் - 40 (கலர் கலராக கலந்து வாங்கிக் கொள்ளவும் )
மாலை முகப்பு(டாலர் போல) செய்ய - 3 சிறு மணிகள் பிணைத்த தொங்கல்கள்
நரம்பு (கோர்க்க) - 3௦0 சென்டி மீட்டர் (அல்லது) தேவையான அளவு
திருகு அல்லது கூக் - 1 ஒன்று (ரெடிமேட் ஆகவே கடைகளில் கிடைக்கும்)
நரம்பில் விரும்பும் வண்ணங்களில் மணிகளைக் கோர்த்து இரண்டு முனைகளையும் பிணைக்கும் போது ஏற்க்கனவே வாங்கி வைத்த ரெடி மேட் ஹூக்கின் பின்புற முனைகளையும் மணிகளின் கடைசியில் உள்ளே கோர்த்து உட்புறமாக முடிச்சிடவும்
இயர் ஹேங்கிங் செய்யத் தேவையானவை :
மாலை முகப்பு செய்யப் பயன்படுத்திய சிறுமணிகள் பிணைத்த தொங்கல்கள் - 2
கேங்கிங் கூக் - 2
இது மாலை செய்வதைக் காட்டிலும் எளிதானது வாங்கி வைத்த ரெடிமேட் ஹேங்கிங் ஹூக்கில் சிறுமணிகள் பிணைத்த தொங்கல்களை பிணைத்தால் இயர் ஹேங்கிங் ரெடி .
இப்படியாக நேற்று பாப்பு அதிகம் டி.வி பார்க்கவில்லை ,மேஜிக் வொண்டர் லேன்ட் மட்டுமே பார்த்து விட்டு ஹோம் வொர்க் செய்தாள்,பிறகென்ன தூக்கம் வரவே சரியான நேரத்திற்கு தூங்கப் போய் இன்றைய பொழுது அவசரமின்றி அழகாக விடிந்தது.
எனக்கும் ஐயோ டி.வி எந்நேரமும் பார்க்கிறாளே என்ற பயம் குறைந்தது, ஆனாலும் கதை இன்னும் முடியவில்லை தான் ;அடுத்தென்ன செய்யலாம் அவளது கவனம் டி.விக்குச் செல்லாமல் தடுக்க என்று யோசிப்பதில் காலம் கரைகிறது எனக்கு .


