Tuesday, March 2, 2010

புல்...




பாயிலிருந்து உருவி நழுவிய கோரைப்புல்
நழுவாத மற்றொன்றிடம் சொல்லிக் கொண்டது
எனக்கு விடுதலை !
புல்லின் பாஷை அறியாமல்
கட்டிக் கொண்டு துயில்கின்றனர்
தம்பதிகள்.
"கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்"
மடையர்கள்
புல் சரி...கல் எப்படி ?!
கோபித்துக் கொண்டு
சுளித்த முகத்துடன்
தரையில்
தனியாய் புல் !

நோட்:
படம் கூகுளில் தேடுகையில் உயிர்மையில் கிடைத்தது.

Sunday, February 28, 2010

பா.ராஜாராமின் கருவேல நிழல் ...


என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கவிதை எழுதத் தெரியாது ,தெரிந்திருந்தால் ஒரு வேலை ராஜாராமின் கவிதைகளை ஒத்த கவிதைகளை அவர்களும் எழுதி முடித்திருப்பார்கள்,அத்தனை வாஞ்சையானவை இவரது கவிதைகள்.நேசமித்திரனின் அழகான முன்னுரை இக்கவிதை தொகுப்பிற்கு உன்னத அங்கீகாரம்.

"ஏதாவது ஒன்றை இழந்தே
மற்றொன்றைப் பெற முடியும் '
என்று கற்றுணர்த்திய அப்பாவிற்கு "

இவைகளை சமர்பித்ததின் மூலம் இன்னும் சிநேகம் மிகுந்த உணர்வுகள் மேலோங்குகின்றன. காரணம் கவிதைகள் பலவற்றில் பேசப்பட்ட பொருட்கள் ஒரு தந்தையின் தார்மீக வலிகள்.

விடுமுறைகளில் சொந்த பூமிக்கு வந்து மீண்டும் அந்நிய பூமிக்கான பயணத்திற்கு நிர்பந்திக்கப் பட்ட ஒரு மனிதன் தன் வீட்டு முற்றத்து தாழ்வாரத்தில் மத்தியான சாப்பாட்டின் பின் வேப்ப மரக் காற்றுக்கு கண்ணசருகையில் உறக்கமும் இன்றி விழிப்பும் இன்றி ஒரு மயக்க நிலையில் வாழ்வின் சம்பவங்களை மீட்டிப் பார்க்கையில் சந்தோசமும் அற்ற வெறுப்பும் அற்ற ஒரு நிராதரவான பரபரப்பில் மனம் ஊசலாடும்.அந்த மனநிலையை இவரது கவிதைகள் ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது.

வேரோடு பிடுங்கி நடப்பட்டதான உணர்வு தான்.ஆனாலும் வேர்தூவிகளோடு ஒட்டிக் கொள்ளும் ஈர மண்ணைப் போல சொந்த ஊரின் ஞாபகங்கள் எங்கு போனாலும் அலைகளாய் தாலாட்டி மனதின் அடி ஆழத்து மண்ணை ஈரமாகவே நீடிக்க வைக்கின்றன.

தொகுப்பில் முதல் வாசிப்பிலேயே எனக்குப் பிடித்த சில கவிதைகளை இங்கு பகிர்கிறேன்.

சொல்லிட்டேன் ஆமா ...

"ஓட நடக்க
பேசிச் சிரிக்க
குழந்தைகளை
குளிப்பாட்ட
சோறூட்ட
உனக்குப் போலவே
எனக்கும் வாய்த்தது அப்பா
................................................
கீரை
வாங்கியாந்து
கிணற்றடியில் வைத்து
சிரித்துக் கொண்டே
செத்துப் போக...
உனக்கு போலவே
எனக்கும் வாய்க்கனும் அப்பா."


அப்பாவைப்பற்றியதான மகனின் நெகிழ்வு ,ஆளரவமற்ற ஊர் எல்லை மாமரத்தினடியில் வெயிலுக்கு
ஒதுங்கினால் விட்டு விட்டுக் கேட்கும் கிளிகளின் கீச்சொலிகள் போல நீங்காத நினைவுகளை எழுப்பும் கவிதை.

"ஆற்றங்கரையில் எடுத்த கல்
மினு மினுப்பற்ற வழுவழுப்பு
வீடு வரையில் சேர்க்க இயலாத
ஞாபகக் குறைவு
அங்கேயே கூட கிடந்திருக்கலாம்
ஆளோட பேரோட இருந்திருக்கும்..."

வேலைக்கென்று அயல்நாடுகளில் தஞ்சமடைந்து எனது மண்,எனது மக்கள் எனும் சுய அடையாளங்களை இழக்க நேரும் மனதின் வலி மிகுந்த தேம்பலாக இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாமா?

விதித்தது எனும் தலைப்பில் :-

"எல்லா கொலுசொலிகளுக்கும்
உசும்பி விழிக்க
பாத்தியதைப் பட்ட
செவி ஒன்று
இருக்கு தானே."

ஞாபகப்பொதி எனும் தலைப்பில் :-

"குருவிக் கூடுகளையும்
கீச்சொலிகளையும்
மரம் இழைக்கிற போதெல்லாம்
உணர்கிறான்
மனசுள்ள தச்சன் ."

இந்த இரண்டு கவிதை வரிகளும் வாசிக்கையில் உள்ளுக்குள் பலத்த அர்த்தங்களை விரித்துக் கொண்டே செல்கின்றன ,ஒவ்வொருவருக்கும் ஒவொரு விதமாய் தோன்றலாம் அது வாசிப்பவரின் மனநிலை சார்ந்தது,எனக்கு மிகப் பிடித்த வரிகள் இவை.

இலையுதிர் காலம் எனும் தலைப்பில் :-

முதுகிற்குப் பின்புறம் மறைகிற
குழந்தைகளை முன்னிழுத்து
"சித்தப்பாடா " என்று
கண்ணீருடன் சிரிக்கிறார்கள் காதலிகள்

அவ்வளவையும் காரணமாக்கி
சாராயத்தில் குளிக்கிறோம்
சவுதியிலிருந்து திரும்பும் நாங்கள்."

பாவப்பட்ட காதலிகளும் அன்னியப்பட்ட காதலர்களும் இக்கவிதைக்கு நேர்மை செய்கிறார்கள்,வேறென்ன சொல்ல!"ஆட்டோகிராப் "படத்தின் மல்லிகாவை ஞாபகப்படுத்தும் காதலிகள் நிறைந்தது இவ்வுலகம்.

வலி எனும் தலைப்பில் ஒரு கவிதை :-

அம்மாவை நேற்று
வீதியில் பார்த்தேன்...
கருத்து சிறுத்து விட்டாள்
ஏன் இப்படிப் போனாள்
என்று கேட்க விருப்பம் எனக்கு

ஏன் இப்படிப் போனாள்
என்று தெரியும் எனக்கு
எனக்குத் தெரியும் என்று
அம்மாவிற்குத் தெரியும்
பிறகெதற்கு தூசிப் புயல்
.............................................

பேசாமல்
பெண் குழந்தையாய்
பிறந்திருக்கலாம் நானும்

அவளின் சொல்லை விட
அவரின் சொல்
கௌரவமாய் இருந்திருக்கும்
அம்மாவிற்கும் எனக்கும்.

மாமியார் மருமகள் போராட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுப் போன ஒரு மகனின் காயமிக்க ஊமை நினைவுகள்.என்ன நினைத்து என்ன? மனைவிகள் அம்மாக்களை விடவும் முக்கியப் பட்டவர்களாய் போய் விடுவது வாழ்வின் கண்ணாமூச்சு ஆட்டம்.இன்றைய மனைவிகள் நாளைய அம்மாக்கள்!

"தனலச்சுமி சின்னம்மை "

நான் தான்
"அப்பா உங்களை ரொம்ப
கேட்டுக் கொண்டே இருந்தார் சித்தி" என்றேன்
"ஆகட்டும்" என்றாள்
மென் சிரிப்பின் ஊடே
சரி தானே...
தனலச்சுமி சின்னம்மைக்கு மேலா
அப்பாவை எனக்கு தெரிந்து விடப் போகிறது?


புன்னகையோடு கடந்து விட்டாலும்,புன்னகைக்கும் போதெலாம் உதடுகளில் உறைந்து விடும் மென் சிரிப்பாய் உள்ளார்ந்த உறவுகளைப் பேசும் மென்மையான கவிதை.

காரணப்பெயர் :-

அப்பாவிடம் ஒரு நிலம் இருந்தது
"பெரியனஞ்சை "என்று பெயர்
பெரியனஞ்சைக்குப் பிறகே
அம்மாவை பிடிக்கும் அப்பாவிற்கு
.........................................................
கொண்டு செல்லும் காஞ்சி ஊறுகாயின்
மண்டி நீரையும் வயலில் உமிழ்வார்
ப்ரியம் பொங்க
.............................................................
காலத்தின் தேய்மானத்தில்
பெரியனஞ்சையை தோற்றார்
அப்பா ஒரு நாள்

பிறகு அப்பா சாராயம் குடித்தார்
வெங்காய கடை வைத்தார்
திரையரங்கில் வேலை பார்த்தார்
யார் அழைத்தாலும் போய் உழைத்தார்
அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக் கொண்டே இருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவுக்கு

எங்கள் ஊரில் நிலங்களுக்குப் பெயர்
இருந்தது போல்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது

அது...
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா .

எல்லாக் கவிதைகளிலும் ஊடாக ஒரு பச்சை நெருஞ்சி முள்ளை வைத்து எழுதி இருக்கிறார் பா.ரா.

அந்த முள் தைக்க வேண்டிய இதயங்களில் தாராளமாய் தைக்கிறது.

இந்தக் கவிதைகள் இயற்கையைப் பற்றிப் பேசவில்லை ,அரசியல் கிடையாது,காதல் இருக்கிறது ஆனால் இவை காதல் கவிதைகள் அல்ல,சோகம் இழையோடுகிறது சோகக் கவிதைகள் அல்ல ,கஷ்ட நஷ்டங்களைக் கலந்து கண்ட அனுபவமிக்க பக்குவப் பட்ட ஒரு குடும்பத் தலைவனின் தகப்பனின்,மகனின்,ஒரு கணவனின்,காதலனின்...தூரத்து துயரங்கள் படர்ந்த நிராதரவான உள் மனச்சமாதானங்களே இங்கே கவிதைகள் ஆக்கப் பட்டிருப்பதால் கவிதைகளை உணர்ந்து வாசிக்க இயல்கிறது.

1988 முதல் கவிதைகள் எழுதி வருகிறாராம்,கணையாழி,சுபமங்களா,தினமணி,ஆனந்த விகடன் ,கல்கி எனப் பிரபல பத்திரிகைகள் பலவற்றிலும் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கின்றனவாம்.
இங்கே வலைக்குப் பின் அகநாழிகை தொகுப்பில் தான் முதல் முறையாக இவரது கவிதைகளை வாசிக்க நேர்ந்தது.மிக நல்ல கவிதைகள்.

ஆசிரியர் :பா.ராஜாராம்
நூல் : கருவேலநிழல்
வெளியீடு :அகநாழிகை
விலை : ரூ ௪0

Saturday, February 27, 2010

சிவகாசி பஸ்சும் இரட்டை இலைப்பச்சை குத்திய மனிதரும்...

பாட்டிக்கு கணையப் புற்றுநோய்...அக்காவின் மாமியாரை சம்பிரதாயமாகப் பார்த்து விட்டுப் போக ஊரிலிருந்து சித்தி வந்திருந்தார்.

அந்த அக்கா என் அம்மா.

ஒரு கிலோ ஆப்பிளும்..ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும் பாட்டி வீட்டு செல்பில் தற்காலிகமாய் குடியேறின. அரை மணி நலம் விசாரிப்பு ,அரைமணி தன் மன விசாரம்,அரைமணி ஊர்ப் புறணிகள்,அரைமணி மதியச் சாப்பாடு பிறகு புறப்பட்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பாட்டியையும் அத்தையையும் பற்றி அம்மாவிடம் வீட்டுப் புறணி...எல்லாம் முடிந்ததும் பஸ் வந்தது.

"தேனி வரை போய் சித்திய சிவகாசி பஸ் ஏத்தி விட்டுட்டு வா "

அம்மா சொல்ல சித்தியுடன் பஸ்ஸில் ஏறி நின்று கொண்டேன்.

அந்நேரம் வி.சி புரம் ஹையர் செகண்டரி ஸ்கூல் (வெங்கடாசலபுரம்) விடும் நேரம்,பஸ்ஸில் திணித்துக் கொண்டு தான் ஏற முடியும்.எங்கள் ஊரில் மிடில் ஸ்கூல் தான்.ஸ்ரீ ரங்கபுரத்தில் அன்றைக்கு ஹை ஸ்கூல் தான்,சுற்றுப் பட்டு ஊர்ப் பிள்ளைகள் எல்லோருமே வி.சி புரத்தை தான் நம்பி இருந்தனர் மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு.வசதி இருப்பவர்கள் தேனி நாடார் கேர்ள்ஸ் ஸ்கூலில் அல்லது பாய்ஸ் ஸ்கூலில் சேர்ந்து படித்தனர்.

இங்கேயே இவ்வளவு கூட்டம் இனி பஸ் ஸ்டாண்டில் சிவகாசி பஸ்ஸில் உட்கார இடம் கிடைக்கிறதோ இல்லையோ! சித்தியின் அடுத்த கவலை ஆரம்பித்தது.காலை 10 மணிக்கு ஒரு பஸ் மாலை 6 .50 க்கு ஒரு பஸ் என இரண்டே பஸ்கள் தான் சிவகாசிக்கு.ஒரு கால்மணி பிந்தி விட்டால் நின்று கொண்டே தான் போக வேண்டும்.பேரையூரிலோ ...கிருஷ்ணன் கோவிலிலோ ஆட்கள் இறங்கினால் தான் உண்டு.பெரும்பாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை யாரும் இறங்குவதே இல்லை.அவ்வளவு தூரம் நின்று கொண்டே போவதெல்லாம் கொடுமை தான்.

தேனி டூ சிவகாசி பஸ் பயணம் எனக்கு எப்போதுமே பெரும் அலுப்பு தரும் விஷயம்.

தேனியில் பஸ் ஏறினால் உசிலம்பட்டி கணவாய் தாண்டும் வரை சிலு சிலுப்பாய் காற்று கண்ணைக் கிறக்கும்.உசிலம்பட்டி கொண்டை ஊசி வளைவு தாண்டும் போது அவ்விடத்து பசுமையில் மனசு ரெக்கை கட்டிப் பறக்காதது தான் குறை...கொஞ்ச நேரம் தான்...உசிலம்பட்டி தாண்டியதும் நிறைய கணக்கிலடங்கா குட்டி குட்டி கிராமங்கள் கிராம எல்லைகள் தோறும் அய்யனார்களும் குதிரைகளும் கலர் கலர் பெயிண்ட்களில் வெயில் மின்ன ஜொலிப்பார்கள் ;ஜாதிக்கலவரங்களுக்குப் பிரசித்தி பெற்ற பூமி இது.வாலகுருநாத சுவாமிகள் ஆலயம் என்றொரு கோயில் எப்போதும் அடைக்கப் பட்டே இருக்கும் ரோட்டோரமாய்.அங்கு இருப்பது என்ன சாமியாய் இருக்கும்!? கடக்கும் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வேன் நான்.

இந்த கிராமங்கள் கடந்ததும் கல்லுப்பட்டியும் பேரையூரும் வரும் கந்தக பூமியின் ஆரம்பம் ,பிஞ்சு பிஞ்சாய் வெள்ளரிக்காய் விற்பனை சக்கைப் போடு போடும்.ஒரு தட்டு வெள்ளரிக்காய் நம்பி வாங்கலாம்,நல்ல தாக நிவாரணி.சின்ன சின்ன மூங்கில் தட்டுகள் தட்டு ஒன்று விலை ஐந்தோ...பத்தோ ரூபாய்கள் ,காய் முற்றாமல் வாங்கத் தெரிந்திருந்தால் ருசியாகவும் இருக்கும்.

அதென்னவோ உசிலம்பட்டி தாண்டியதும் பசுமை மறைந்து கண்கள் வறண்டு போகும்.வெக்கை வீசிக் கொண்டு இந்த ஊர்களே சுடுவதைப் போலொரு பிரமை.பேரையூரில் பஸ் கால்மணி நிற்கும்.இறங்கி போண்டா சாப்பிடலாம் (இங்கே போண்டா சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் நளனால் வஞ்சிக்கப் பட்டவர்கள்!!! :))).கட்டணக் கழிப்பறைக்குப் போகலாம்(பேசாமல் வீட்டிலேயே முடித்துக் கொண்டு வராமல் போனோமே!என்று என்னவும் நேரலாம் சிலசமயம்),ஏதோவொன்றை செய்து முடித்தோமானால் பஸ் கிளம்பி விடும்.

அங்கிருந்து அடுத்து கிருஷ்ணன் கோவில் ,இங்கே கொய்யாப் பழங்கள் நன்றாய் இருக்குமாம்.ரெண்டு நிமிச பஸ் நிறுத்தலில் கொய்யா பழத்தட்டுகள் முளைத்திருக்கும் பஸ்சின் ஜன்னல்கள் தோறும்,யாராவது பழம் வாங்கி விட்டு காசு கொடுக்கும் முன்பே பஸ் நகர்ந்து விட்டால் அந்த வியாபாரிகள் என்ன செய்வார்களோ என்று சில சமயம் மனம் பரித்தவித்ததுண்டு.அத்தனை குறுகிய நிமிடங்களே பஸ் அங்கே நிற்கும்.இங்குள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆடி மாதம் நடக்கும் ஆண்டாள் பிரம்மோத்சவத் திருநாட்களில் ஒரு நாள் கிருஷ்ணன் ஆண்டாளின் மடியில் தலை வைத்து சயனம் கொள்வாராம்.கண்கொள்ளாக் காட்சியென சன் டி.வியில் சென்ற வார ஆலய தரிசன நிகழ்ச்சியில் அம்மு சொன்னார்.

அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் பஸ் நிற்கும் முன்னே ஜன்னல்கள் தோறும் இப்போது பால்கோவா பாக்கெட்டுகள் முளைக்கும்,ஒரிஜினலோ இல்லை சீனிக் கரைசல்களோ பார்க்க அசல் பால்கோவா போலவே இருக்கும்.10
௦ ரூபாயிலிருந்து விலை ஆரம்பம்,அந்த ஊர் வெயிலுக்கு அதை வாங்கித் தின்னாமல் போவதே நல்லது.பிரசித்தி பெற்ற ஆண்டாள் ஜனன பூமி இவ்வூர் .ஆண்டாள் துளசிச் செடியின் கீழ் அவதரித்த பெருமை மிக்க தலம்.கோயிலுக்காக மட்டுமே இவ்வூர் எனக்கு மிகப் பிடித்தம்.ஆண்டாளும் ரங்கமன்னாரும் மரகதப் பசுமையில் துளசி மாலை சூடிக் கொண்டு தரிசனம் தருகையில் தெய்வ நம்பிக்கை இல்லாதோரும் சந்துஷ்டி அடையலாம்.தம்பதி சமேதராய் அப்படி ஒரு அழகு கொஞ்சும் ,ஆண்டாள் கை கிளி போல!

அங்கிருந்து அடுத்து திருத்தங்கல்..இங்கேயும் ஒரு பழமையான பெருமாள் கோயில் உண்டு.பிறகு சிவகாசி பஸ் ஸ்டாண்ட் தான்.


சிவகாசியில் பஸ் விட்டு இறங்கும் போது கையில் கர்சீப் இருப்பது அவசியம்.வியர்வையின் உப்புக் கசகசப்பில் உள்ளங்கை கூட நனைந்திருக்கும்.

ஏப்ரல் மே மாத விடுமுறை நாட்களில் இப்படி ஒரு பயணம் வருடம் தோறும் வாய்க்கப் பெற்றவர்கள் நாங்கள்.

அடடா...எதையோ சொல்ல வந்து விட்டு தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகாசி வரை உங்களை அழைத்து வந்து விட்டேன் பாருங்கள்! ச்சே ..நான் எப்போதுமே இப்படித் தானோ!நினைப்பது ஒன்று செய்வது மற்றொன்று! சரி வாருங்கள் மறுபடி தேனி பஸ் ஸ்டாண்டுக்கே போவோம்.முன்னைப் போல அல்ல மனசின் ரீவைன்டு பட்டனை அழுத்துங்கள் போதும் தேனி பஸ் ஸ்டாண்ட் வந்து விடும்.

வந்தாச்சா...!?

ம்...சித்தியும் நானும் கோவிந்தநகரத்திலிருந்து (தேனிப்பக்கம் ஒரு சிறு கிராமம்) தேனி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டோம்.

பஸ்ஸில் உட்கார இடமிருக்குமோ இல்லையோ பதட்டமாய் சிவகாசி அரசு பஸ் தேடி ஓடினோம்,அடப்பாவமே...
ஒரு சீட்டும் காலியாய் இல்லை.

டிரைவர் பக்கமிருக்கும் ஒற்றை சீட் கண்டக்டருக்கு உரியது,ஆனாலும் இடமில்லாத பயணிகளை உட்கார வைத்து விட்டு பெரும்பாலும் எஞ்சின் மேலே உட்கார்ந்து கொள்வார்கள் சிவகாசி பஸ் கண்டக்டர்கள்.அந்த ஷீட்டில் ஒரு கடா மீசைக் காரர் உட்கார்ந்திருந்தார். பார்த்த முகமாய்த் தெரிந்தது, சட்டென்று ஞாபகம் வரவில்லை எனக்கு.

"நாராயணா...நின்னுக்கிட்டே தான் போகனுமா இன்னைக்கு"என்ன வேண்டுதலையோ ! சித்தி புலம்பிக் கொண்டே பஸ்ஸில் ஏறி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு சோகமாய் நிற்க.அந்த கடா மீசை ஷீட்டில் துண்டைப் போட்டு வைத்து விட்டு எழுந்து எங்களருகில் வந்தார்.

"என்ன இங்க நிக்கிறிங்க? எடம் போட்டு வச்சிருக்கேன்ல போய் உட்கார்ந்துக்கோங்க.ஊர்ல இருந்து நானும் உங்க கூடத் தான் பஸ்ல வந்தேன்.சிவகாசிக்குத் தான போவிங்க பஸ்ல எடமிருக்குமோ என்னவோன்னு பறந்துகிட்டு ஓடி வந்து எடம் போட்டு வச்சா எனக்கென்னான்னு கம்பியப் பிடிச்சிக்கிட்டு நின்னா எப்பிடி!? "குரலதிரச் சிரித்துக் கொண்டு அந்த மனிதர் கேட்க.

நானும் சித்தியும் "ங்கே" :)))

யாரிவர்?

இடது கையில் பெரிதாய் இரட்டை இலைப் பச்சை குத்தி இருந்தார்.

பச்சையைப் பார்த்த மாத்திரத்தில் சித்தியும் நாணிக்கொண்டு அவரைப் பார்த்து சிரித்து வைத்தார்.

"சரி...போய் உட்கார்ந்துக்கோங்க பஸ் எடுத்துருவான் இப்ப! " அந்த மனிதர் சிரித்துக் கொண்டே கை ஆட்டி விட்டு பஸ்ஸில் இருந்து இறங்கி நகர்ந்து போனார்.

அவர் போன பின்னும் கூட சித்தியின் முகத்தில் உறைந்த சிரிப்பில் கண்ணோரமாய் வெட்கம் கூத்தாடியது .

"யாரு சித்தி இது?!"

"ம்...இவரா ...எல்லாம் உங்க சொந்தக்காரரு தான் "

"எங்க சொந்தக்காரரா? யாரு?! பார்த்த மூஞ்சியா இருக்கு ,யார்னு தான் தெரியல"

உங்கப்பாக்கு சொந்தம் ...நீ ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதுனால தெரிஞ்சிருக்காது! உங்கப்பாக்கு அண்ணன் முறை ,இவருக்கு தான் மொதல்ல என்ன பொண்ணு கேட்டாக,ரொம்ப வயசு வித்யாசம்னு பாட்டியும் தாத்தாவும் இவருக்கு என்னை கொடுக்கலை."

ஏன் சித்தி ஒனக்கு கல்யாணமாகி இருபது வருசமிருக்குமே! இப்பக் கூட இவர எப்பிடி அடையாளம் தெரியுது ஒனக்கு!

"கைல இருக்கற ரெட்டலைப் பச்சை வச்சு தான்.அப்பவே சொல்லிக்கிட்டாங்க இல்ல மாப்ள கைல ரெட்டலை பச்சை குத்திருப்பார்னு,இவருக்கு என்னை கல்யாணம் பண்ணித் தரலன்னாலும் இந்த ரெட்டலைப் பச்சை அப்படியே மனசுல பதிஞ்சு போச்சு ..நல்ல மனுஷன் பொண்ணு தரலன்னாலும் என்னை மறக்காம பஸ்ல சீட்லாம் போட்டு வச்சிருக்கார் பார்"

எனக்கென்னவோ சிரிப்பு சிரிப்பாய் அள்ளிக் கொண்டு போனது சித்தியின் நடுத்தர வயது வெட்கப்புன்னகை கண்டு.

பாவம் சித்தி...ம்ம்...அந்த மனிதரும் பாவம் தான்...!!!

Friday, February 26, 2010

பாட்டிகளும்...அத்தைகளும் மற்றும் அந்நியப்பட்டுப் போன குழந்தைகளும்

பாகப் பிரிவினைக்குப் பின் பாட்டி வீடு மாமா வசமானது.வீட்டுக்குள் நான் சுயமாய் ஓடித் திரிந்து எனக்கே எனக்கென்று ஆண்டு கொண்டிருந்த இடங்களுள்ள அறைகளெல்லாம் அத்தைகளைப் போலவே அன்னியப் பட்டுப் போயின.

வெகு முக்கியமாய் அந்த படுக்கை அறை கதவு மூலை...அங்கமர்ந்து தான் நான் பல ஆண்டுகள் பரீட்சைக்குப் படித்தேன் ,கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு முன்புற டெலிபோன் ஸ்டாண்ட் தாங்கி நுனியை காலால் இடறிக் கொண்டே எத்தனை மணி நேரங்கள் படித்தாலும் அலுக்கவே அலுக்காது.அங்கு இப்போது இத்தனை காலியாய் இடத்தை விட்டு வைப்பானேன் என்று பித்தளை அண்டாவில் இண்டோர் பிளான்ட் வைத்திருக்கிறாள் அத்தை.

இன்னும் ஓரிடம் மச்சு அறை .அங்கமர்ந்து தான் செவ்வாய்க் கிழமை விரத நாட்களில் கொழுக்கட்டை சாப்பிடுவதெல்லாம் நடக்கும்.காலங்காலையில் பல்லைக் கூட தேய்த்துக் கொள்ளாமல் நானும் தங்கையும் உட்கார்ந்து உப்பில்லாத கொழுக்கட்டையும் தேங்காய் சில்லும் கடித்து ருசித்த இடம் இன்று மாமாவின் மகள் ஜெயந்தியின் டிரெஸ்ஸிங் டேபிள் வைத்த இடமாயிற்று.

திண்ணைகள் இல்லை இடித்து மேடாக்கி போர்டிகோ என்றாக்கி உள்ளிருப்பவர்கள் தெருவில் போவோருக்குத் தெரியா வண்ணம் ஆளுயர கேட் போட்டு மூடி விட்டார்கள்.பாட்டி இருக்கையில் தெரு பாட்டிகள் எல்லோருமே சாயந்திர ஜமாக் கூடும் இரு புறத்திண்ணைகள் பழங்கனவாயின.நின்று கொண்டே ஆட்டும் வகையில் இருந்த பெரிய ஒற்றைக் கல் ஆட்டுரல் இப்போது பாவம் மாமா வீட்டு வேலைக்காரப் பெண்ணுக்கு துவைக்கும் கல் மேடை ஆயிற்று.

"வேறென்ன தான் செய்வதாம் அதை வைத்துக் கொண்டு ...?!"

கிரகப்பிரவேசத்துக்கு போயிருக்கையில் அத்தை அம்மாவிடம் அலுத்துக் கொண்டாளாம்.

பூஜை அறையில் எல்லா சாமிப்படங்களும் இருந்தன.தாத்தா தீவிர வைஷ்ணவர்,திருநீறு பூசினவர்களைக் கண்டால் பேச்சின்றி கண் சிமிட்டிக் கொண்டு எள்ளலாய் சிரிப்பார்.அவரது பெரிய சைஸ் புகைப்படம் சிவபெருமானுக்கும் ஏழுமலையானுக்கும் நடுவில் மாட்டப் பட்டிருந்தது.தாத்தா இப்போதும் சிரித்துக் கொண்டு தான் இருந்தார் வரையப்பட்ட படத்தில் இருந்தவாறு!

ஓவியம் படித்துக் கொண்டிருந்த சின்ன மாமாவின் ஓவியப் புத்தகம் பார்த்து பாட்டி வீட்டு கூடத்து சுவற்றில் நான் வெறும் வண்ண சாக்பீசால் வரைந்து வைத்திருந்த விளக்கேந்திய காரிகை ஏழெட்டு வருடங்களுக்குப் பின் இப்போது காணாமல் போயிருந்தாள்.இத்தனைக்கும் பாட்டி இறந்து மூன்று மாதங்கள் கடக்கவில்லை.பாவம் விளக்கேற்றிய பெண் பாட்டியைக் காணாமல் தவிக்கக் கூடாதென எண்ணி அவள் மேல் டிஸ்டம்பர் பூசி மறைத்து விட்டார்கள் போலும்!

தலைமுறை தலைமுறையாய் திருவிழாக் காலங்களில் முறுக்கு சுட்டு அடுக்கி வைத்த ஒரு வெண்கலப் பானை கல்யாணமாகிப் போகையில் உனக்கு கொடுத்து விட வேண்டும் என்று பாட்டி அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருந்த அதே வெண்கலப் பானை இன்று இரண்டு எவர் சில்வர் அண்டாக்களாகவும் ஒரு பெரிய சில்வர் சம்புடமாகவும் அத்தையின் சமையலறை பரணில்.

ஆயிரம் மனஸ்தாபங்கள் வரினும் இணைக்கவென்று இருந்த ஒரு நூற்கண்டு அறுந்ததில் பாட்டி வீடெனும் பட்டுச் சேலையின் எல்லா நூல்களும் திசைக்கொன்றாய் முகம் திருப்பிக் கொள்ள போலிச் சிரிப்புகளாலும் மூடி வைக்கத் தெரிந்த பொறாமைகளாலும் சிக்குண்டு வலுவிழந்த நூலிணைப்புகள் ஒவ்வொன்றாய் பிடி நழுவின...

இந்த வீடு மட்டுமல்ல ...

இந்த ஊர் மட்டுமல்ல ...

இன்னும் சிலவும் ...இன்னும்...சிலவும் கூட அந்நியப்பட்டுக் கொண்டே இருக்கின்றனவாம் எங்கெங்கோ எவ்வெப்போதோ!

Thursday, February 25, 2010

தசையினை தீ சுடினும் ...

எதிலோ புதைந்து போனதை எங்கோ தேடி விட்டு
கனவிலிருந்து விழித்தெழுகையில்
தீராத் தேடல்
திகைப்பூண்டாய்
தகை கொள்ளும் நினைவுகள்
தசையினைத் தீ சுடினும்
கண்ணம்மா
நீ தெரிந்து கொள் ;
தேம்பாவணி முற்றத்தில்
கலம்பகம் கை அள்ளி
குறவஞ்சி கொஞ்சியோட
அகமும் புறமும்
பழமொழி பேச
சூளாமணியோடு சிந்தாமணி போல
அந்தாதி பாடும் அபிராமி
ஜன்னல் வழித் தெரியும்
என் அடுத்த வீட்டுப் பெண்;
எங்கோ புதைந்து போனதை எங்கெங்கோ தேடி விட்டு
விழித்தெழும் கனவுகள்.

Thursday, February 18, 2010

பனி நசுங்கும் புல் கசங்கும் ...சுதேசித்தனிமைகள் வேண்டும்...

அது ஒரு நீள் நெடும் பாதை ; தாரெல்லாம் இல்லை வெறும் செம்மண் ரஸ்தா தான்.கப்பி ரோடு என்றும் சொல்லிக் கொள்ளலாம்.மழை பெய்திருக்கவில்லை.டிசம்பர் மாதக் குளிர் உள்ளங்கால் கூசிச் சிலிர்த்தது பனி நசுங்கும் புல் கசங்கும் ஒவ்வொரு எட்டிலும்

விடியற் கருக்கலில் தூரத்து மலை விளிம்பில் மேகப்புடவைகள் மெல்லத் தழுவி மரகதப் பசும் உடல் வழுக்கும் நீலக் குந்தன் கற்களாய் சிமிட்டிக் கொண்டு கண்ணாமூச்சு ஆட.ஆளற்ற சாலையோரம் அசைவின்றி நடக்கையில் தெய்வீகத் தனிமை சுவாசமெல்லாம் நிரம்பி புகையாகிக் கசிந்து மலை நோக்கி முகடேற,வால் நீண்ட கருங்குருவி பெயர் தெரியாப் பறவையுடன் சோளக்காடு தாண்டி சொல்லொணா உவகையோடு எங்கிருந்தோ... எங்கோ பறக்க அதன் சிறகசைப்பில் உயிரசைய உடன் பறந்தது உள்ளிருக்கும் உல்லாசம்.

யாராலும் கண்காணிக்கப் படாத சுதேசித்தனிமைகள் வேண்டும் தவணை முறையில்.

உங்களுக்கும்...

எனக்கும்...

நமக்கும்...

ஏன்...

எல்லோருக்கும் தான்!

இன்றோடு விடுமுறை சில நாட்கள் இந்த தளத்துக்கு ...நாள் ...நேரம் ... நட்சத்திரம் ...பார்த்துக் கொண்டு இன்னொரு நாளில் வருகிறோம்.

நோட்:

இங்கே சுதேசித்தனிமை என்பது இடவாகு பெயர் (ஆகு பெயர்)
சுதேசி - நம் தேசம்
விதேசம்-அயல் தேசம்

சுதேசித் தனிமைன்னா சுயம் சார்ந்த தனிமைன்னு அர்த்தம் பண்ணிக்கலாம்,இந்தப் பதம் சரியா தவறான்னு மொழி வல்லுனர்கள் தான் சொல்லணும்.
:)

Tuesday, February 16, 2010

Drawings ... My Daughter


எலியை விரட்டும் யானை (ரொம்ப டயர்ட் ஆயிருச்சாம் யானை ...!) படம் கொஞ்சம் இருட்டா இருக்கு ,நல்லா உத்துப் பார்த்தா தாங்க யானையும் எலியும் கண்ல படறாங்க.என்ன பண்ண என் பொண்ணு வரைஞ்சதாச்சே ! ஆவணப்படுத்தும் முயற்சி தான்.
இதை எழுதும் போது அடிக்கடி எங்களை கலாய்க்க என் தம்பி சொல்வான் "தன்னை தானே மெச்சிக்குமாம் தவிட்டுக் கோழி " சொலவடை ஞாபகம் வந்தாலும் விட்ருவமா நாங்க?!
பாப்புவுக்காக ஒரு நல்ல டிராயிங் டீச்சர் தேடிட்டு இருக்கேன் ...பல திறமைகள் ... ;) என் பொண்ணுகிட்ட இருந்தாலும் தனித் திறமைகளை கண்டடையற முயற்சி தான். அண்ணாநகர் திருமங்கலம் ..வில்லிவாக்கம் பிரதேசங்களில் திறமையான Drawing டீச்சர்ஸ் யாராச்சும் உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா பரிந்துரையுங்கள் :)))