Friday, January 9, 2009

அழகர்சாமியும்...குதிரையும் ...!



ஆற்றில் இறங்கியும்
அழகருக்குத்
தெரியவே இல்லை
ஆறு கொலை செய்யப்பட்டகதை
யாரிடம் கேட்பது
யோசித்தவாறே
கரை ஏறியது
அழகர்சாமியின் குதிரை !!!


உலராத பொழுதுகள் :-
கடற்கரையில்
உதிரும்
மணற்துகளாய்
வாழ்வின்
துயரங்களும்
என்றேனும்
உதிர்ந்தே தீரும் !
மண்
உதிர்த்து
அலை நனைக்கும்
கால்களுக்கு
துயரம்
உதிர்த்து
உலர்ந்த மனம் பெற
கடற்கரையின்
உலராத பொழுதுகளில்
நிச்சயம்
தெரிந்தே இருந்திருக்கும் ???

இருளின் வெளிச்சத்தில்...


வெளிச்சத்திற்காகக்
காத்திருந்து ...
காத்திருந்து
இருள் பழகிப் போயிற்று
இருள் சுகமானது தான் !
சுதந்திரமானதும் கூடத் தான் ...
இருளின் இதமான நட்பில்
வெளிச்சம் பகையாகி போய்விடின்
என் செய்வதென்று தான்
இன்னும்
காத்திருக்கிறேன்
வெளிச்சத்திற்காக ...?!

குறிப்பு:- இது கூட மீள் பதிவு தானுங்க,

Thursday, January 8, 2009

பட்...பட்...பட்..பட்...பட்டாம்பூச்சி...சிட்டாகப் பறக்கும் சிறகை தந்தது யாரு?

பொதுவில் நீண்ட நாட்களாக எழுதி வந்தாலும் வலை உலகத்திற்கு நான் புதிதே,யார் என் வலைப் பக்கம் வந்தாலும் என் எழுத்துக்களை வாசித்து பின்னூட்டமிட்டால் போதும் என்றிருந்தநிலையில் அன்புடன் அருணா "பட்டாம்பூச்சி விருதே" கொடுத்து அசத்தி விட்டார்.
மிக்க நன்றி அன்புடன் அருணா .(அருணா உங்களுக்கு தான் என்ன ஒரு அன்பு !)
இப்போது என் டவுட் என்னவென்றால் நான் இந்த விருதை இன்னும் மூன்று பேருக்குத் தர வேண்டுமென்றால் அவர்களை எப்படி பரிந்துரைப்பது? விருது கொடுத்தவர்களே இதையும் சொல்லி விட்டால் தேவலை !
இல்லாவிட்டால் இந்த விருதைப் பெற்ற புண்ணியகோடிகள் யாரேனும் செயல்முறை விளக்கம் தந்து உதவுங்கள் மக்களே!அப்புறம் எனக்குத் தெரிஞ்ச வலைப் பதிவர்கள் எல்லாருமே எனக்கு முந்தியே பட்டாம்பூச்சி ஆயிட்டாங்க போல இருக்கே?யாருக்குத் தான் இனி விருது தரதாம் ?அதையும் கூட யாராச்சும் சொல்லிட்ட நல்லாத்தான் இருக்கும்.
அதோடு இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் ,தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு இந்த இடத்தில் நான் எனது நன்றிகளைச் சொல்லிக் கொண்டே ஆக வேண்டும்.
நட்புடன் ஜமால்,சந்தனமுல்லை,அன்புடன் அருணா,அமித்து அம்மா,டாக்டர். சுரேஷ் ,தேவன்மயம்,குடுப்பை அண்ணாச்சி,அதுசரி,அப்புறம் (ரீஜண்டாஅபிஅப்பா),நம்ம துளசி டீச்சர்,தங்கமணி புகழ் தாமிரா அண்ணன்,பூர்ணிமாசரண், சின்ன அம்மிணி எல்லோருக்கும் எனது நன்றிகள் பல .
.


சிட்டுக்குருவி

கீற்று இணைய இதழில் வெளிவந்த எனது சிறுகதை இது.
இங்கே மீள்பதிவு செய்துள்ளேன் .படிப்பவர்கள் தங்கள் கருத்துக்களைச் சொன்னால் நல்லாத்தான் இருக்கும்.
திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது ; கதை பேச மாமா இல்லை , கேலி செய்யஅத்தை இல்லை , கொஞ்சிக் கொண்டே உருட்டி உருட்டி உள்ளங்கையில் சாதம்வைக்க அம்மா இல்லை .சித்தி கூட எங்கேயோ தூரத்தில் இருந்து கொண்டுஎப்போதோ தொலை பேசுகிறாள் , சித்தப்பா வீடு தங்குவது அரிதாகிப் போய்நெடுநாளகிறது,

பாட்டிக்கு இந்த பட்டணம் பிடிக்காமல் ஊரோடு போய் விட்டாள்,தாத்தாவோ ரேஷன் கடை ,மளிகைக் கடை ,மார்கெட் என்று ஓய்ந்து பின்மாலையில்அவர் வயது மனிதர்களைத் தேடி கோயில் , பார்க் என்று போய் விடுகிறார் , என்னையாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை !!! .

வேப்பமரமும் , புளியமரமும் இல்லாத இந்த ஒன்டிக்குடித்தன நகரத்து நரக வீடுகொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லபோவதை போல தினமும் கெட்ட கெட்டகனவுகளில் தூங்கவே முடியாத சோகத்தில் தான் இன்று இந்த பின் மத்தியானநேரத்தில் கால் காசு பெறாத இந்த "சிட்டுகுருவியுடன்" விருதாவாய் பேசிக்கொண்டுஇருக்கிறேன் .

சிட்டு குருவி "விசுக் விசுக்கென்று " பறந்து கொண்டிருந்தது முன் புற பொதுதாழ்வாரத்தில் , யாரோ காய வைத்த வடகத்தை கொத்தி கொத்தி குட்டி மண்டையை'விலுக் விலுக்கென்று' ஆட்டியவாறு சிறிது வாயிலும் சிறிது வாசல் படியிலுமாக சிந்திசிதறி விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒரு நொடியில் அதன் பார்வையில்நான் பட்டிருக்க வேண்டும் ,அதுவாகத் தான் என்னிடம் பேச ஆரம்பித்தது ;

முதலில் பேச்சு எப்படி தொடங்கியதுஎன்று யோசித்தேன் நான் !. அதற்கு என் பெயரெல்லாம் தெரிய சாத்தியமே இல்லை ,ஒருமையில் தான் பேசிகொண்டிருந்தது . இனுக்கி இனுக்கியாய் பிய்த்த வடகத்தைஅலகில் சிக்க வைக்க முயன்று தோற்று போன வெறுப்போ என்னவோ ? சும்மா ஏன்என்னையே பார்கிராய் ? என்று காட்டமாய் கேட்டு விட்டு வெளிப்புற கேட் வரைபறந்து காட்டி விட்டு திரும்ப வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு " பதிலைசொல்லி தொலை என்பதை போல "என்னையே இலக்கு மாற்றி மாற்றிபார்த்துக்கொண்டே இருந்தது .

ஒரு சிட்டுக்குருவி பேசுமா ? என்பதையே நம்ப முடியாமலிருந்த நான் அதன்கேள்வியில் திடுக்கிட்டு போனேன் . பேசும் குருவியா இது ? என்ற உற்சாகத்தில்சந்தோசம் பீறிட்டுக் கொண்டு வர என்ன கேட்டாய் குருவி ? என்றேன் நான் ;குருவி இளக்காரமாய் சிரித்துக்கொண்டது , மறுபடி பேச முயலவேயில்லை ;பார்த்துக் கொண்டிருக்கும் போதே குருவி ஜன்னலில் இருந்து எம்பி பறக்கபோவதை போல போக்கு காட்டியது,பிறகு மறுபடி என்னை நீயும் வருகிறாயாஎன்னோடு ? என்பதை போல சும்மா பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்டது, அடுத்துஎன்ன செய்யப் போகிறாய் நீ ? என்று நானும் விடாமல் அதையே கவனிக்கதொடங்கினேன்.

குருவி கொஞ்ச நேரம் பார்த்த பின் "எனக்கு ஒரு தோசை தாயேன்"என்றது . இல்லை...கெஞ்சுதலாய் எல்லாம் இல்லை . சட்டமாய் கேட்டது ; நீ எனக்கு கொடுத்து தான்ஆகவேண்டும் என்று தொனியில் கேட்டதோடு "விருட்டென்று " சமையல்கட்டுக்குள்ளும் பறந்துபோய் விட்டது . என்ன திமிர் இந்த குஞ்சு குருவிக்கு என்றுசெல்ல கோபத்தோடு நானும் பின்தொடாந்தேன். வேறு என்ன செய்ய வீட்டில்அப்போது யாரும் இல்லை !

அம்மா குவைத்திற்கு வீட்டு நர்சாக காண்டிராக்டில் போய்மாதம் ஆறு ஆகிறது . ஊரிலிருந்தால் கடன்கொடுத்தவர்களின் தொல்லை கழுத்தைநெரிக்கும் என்று தான் சென்னைக்கு வந்து ஒரு மில் முதலாளிக்கு கார் டிரைவர்ஆகிவிட்டார் அப்பா

பாட்டி தான் ஊருக்குள் எதையோ சொல்லி சமாளித்து கொண்டுவீட்டோடு இருக்கிறாள் , ஊரை விட மனமில்லை என்பதெல்லாம் வெறும் நகாசுப்பேச்சு , அவளும் வந்து விட்டால் வீட்டை பண்ணை வீட்டு ராமசாமி அடிமாட்டுவிலைக்கு எடுத்துக் கொண்டு வாங்கிய கடனுக்கு நெடுநாளாய் கட்டாமலிருந்தவட்டிக்கு கழித்து விடுவாரோ என்ற அதீத பயம் தான் காரணம் !

குருவிசாவதானமாய் சமையல் உள்ளில் புகுந்து தோசை மூடி வைத்த தட்டத்தை அலகால்இடறித் தள்ளி விட்டு "சீனி போடு கொஞ்சம் என்றது" , என்னால் சிரிப்பை அடக்கவேமுடியவில்லை . சிரிக்கும் என்னை ஒரு தூசி போல பார்த்து விட்டு , அதுவே பறந்துபோய் நல்லெண்ணெய் இருந்த வால்கின்னத்தை தூக்க முடியாமல் தூக்க முயன்றுஎண்ணையை கொட்டி கவிழ்த்து கொண்டது தோசை இருந்த தட்டில்ஐயோ ! ஏய் குருவி என்னிடம் கேட்டால் நான் எடுத்து தந்திருக்க மாட்டேனா ? இப்படிஎண்ணெய் முழுசும் கொட்டி தீர்த்து விட்டாயே !
மறுபடி எண்ணெய் வாங்க காசுக்குநின்றால் அப்பா ஆயிரம் கேள்வி கேட்பாரே! உன்னால் எனக்கு நேரம் சரியில்லைஇன்று என்றேன் நான் எண்ணெய் இழந்துவிட்ட ஆற்றாமையில் ...
குருவிஅதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை , அது பாட்டுக்கு ஒருதோசையை அறையும் குறையுமாய் சிந்தி சிதறி குதறிப் போட்டுவிட்டு ... அப்புறம்என்ன ? என்று தண்ணி தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்தது .
தொட்டி தளும்பநீர் பிடித்து ஊற்றி வைத்திருந்தேன் நான் ; விழுந்து விடாதே .... பார்த்து உட்காரேன் ;நான் தான் பதறினேனே தவிர அது என்னவோ தேர்ந்த நீச்சல் வீராங்கனை போலவிளிம்பில் இதன் அசைவில் தளும்பி மேலெழுந்த சின்ன தண்ணீர் துள்ளலில்தலையை விட்டு ஆட்டிப் புரட்டி ஒரு மினி தலைகுளியல் செய்து கொண்டது , பார்க்கபார்க்க அதிசயமாய் இருந்தது ;
அதோடு முடியவில்லை கதை ,குளிர்ந்த தண்ணீர் பட்டதும் ஒட்டிக்கொண்டசிறகுகளை சடசடவென அடித்து தூசிபடலம் போல நீர்படலத்தை தெறிக்க விட்டுபுகை போக்கி ஓட்டை வழியே அடுப்படி மேல் விழுந்த வட்ட சூரிய ஒளியில் போய்நின்று கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பி வெப்பம் வாங்கி கதகதப்பாகிக்கொண்டது , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு " அது
குருவியாய்தெரியவில்லை ஏதோ விருந்துக்கு வந்த அத்தை மகளை கூட நின்று பார்ப்பதைபோல ஒரு தோழமை உணர்வு சட்டென மேலெழுந்து அந்த அறை முழுதும் நிரம்பிவழிந்து கசிந்தது .
நான் இங்கே இப்படிக் குருவியோடு குருவியாய் லயித்து நிற்பது பால்காரஅண்ணாமலைக்கு தெரியுமா என்ன?
எப்போதும் நேரம் தப்பி பால் கொண்டு வந்துவசவுகளை அழுக்கு வெள்ளை வேஸ்டி நிறைய வாங்கி கட்டிக்கொண்டு போகும்அவர் அன்று சரியான நேரத்துக்கு பாலுக்கு மணியடித்தார். போய் வாங்கி வைத்துவிட்டு திரும்ப வரும் முன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத சென்னை நகரத்துவானிலை மிக மோசமாகி மழை தூரலிட்டது.
"ஐயோ அப்பாவின் யூனிபார்ம் சட்டை....!!!" காலையில் துவைத்து போட்டது ஞாபகம்வர வேக வேகமாய் மூச்சு வாங்க மொட்டை மாடிக்கு ஓடினேன் . நல்ல வேலைரொம்பவும் நனையத் தொடங்கும் முன் கொடியிலிருந்து பிடுங்கி கொண்டு வந்து விட்ட திருப்தியில் உட்புறகொடிகயிற்றில் காயப்போட்டு விட்டு குருவியை தேடிக்கொண்டு மீண்டும் உள்ளேபோனேன் . காணோம் ....!
குருவி அங்கே இல்லை ஏய் குருவி அதற்குள்ளே எங்கேபோய் விட்டாய் ? மழை வேறு பலமாய் வரும் போல தெரிகிறது... நனைந்து விட்டால்என்ன செய்வாய் குட்டி பறவையே ? நான் எனக்குள் பேசிக்கொண்டே குருவியைவீட்டுக்கு உள்ளே ... வெளியே என்று கொஞ்ச நேரம் தேடினேன் . காணோம் ...!
எங்கும்குருவி இல்லை .
ஐந்து மணிக்கு அப்பா வந்து விட்டார் . ஆறு மணிக்கு தாத்தாவந்தார் . குருவி மட்டும் வரவேயில்லை . நான் குருவியை நினைத்துக் கொண்டேஇருவருக்கும் காப்பி போட்டுக் கொடுத்தேன் , வாசல் தெளித்து கோலம் போட்டேன். இரவுக்கு மாவு பிசைந்து கோதுமை சப்பாத்தி போட்டு , தேங்காய் சட்னி வைத்துஇருவருக்கும் கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்தேன் .
எங்கே போயிருக்கும்இந்த மழையில் குருவி !!! என்று யோசித்துக் கொண்டே சமைத்து சாப்பிட்டபாத்திரங்களை கழுவி கவிழ்த்தேன் . குருவியை காணவே காணோம் ...! இனிமேலாவரபோகிறது.... மணி ஒன்பது ஆகி விட்டது . அப்பா நைட் சிப்டுக்கு புறப்பட்டுவிட்டார் , தாத்தா வெளித்திண்ணையில் ரேஷன் கடை சேலை விரித்துப் படுத்துவிட்டார் .
மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது . இரவு வானத்தை மழைமுகமூடிக் கொள்ளைக் காரன் போல கருப்பு துணி போர்த்தி கண்ணுக்குத் தெரியாமல்மறைத்து சாகசம் செய்து விட்ட திருப்தியில் ஆர்பாட்டமின்றி சிறு ஓசையுடன்இறங்கி பூமியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது . கல்யாணமாகி வருடம் சில கடந்துநிதானமாகி விட்ட தம்பதியர் போல பூமிக்கும் மழைக்குமான சங்கமம் சிறு ரகசியசம்பாசனையுடன் விடியும் வரை தொடர்ந்...தது....!!!
குருவி எங்கே போயிருக்குமோ ?
மழைக்கு எங்கே ஒதுங்கியிருக்குமோ ?
அதன் கூடு எந்த மரத்தில் , எவ்வளவு தூரத்தில்இருக்குமோ ?
இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்குமோ குருவி?
குருவி...குருவி...குருவி !!!
ஏய் ! குருவி ... சிட்டுக் குருவி...... சிட்டுக்......குருவி ...
எங்கேபோய்விட்டாய் என் செல்லக் குருவி ?
குருவியை நினைத்துக் கொண்டே தூங்கினாலும் கனவில் என்னவோ குருவி எல்லாம்வரவில்லை ,ஒரு வேளை கனவே வரவில்லையோ என்னவோ ?! காலை டிபன்தயாரிக்கும் அவசரத்திலும் அதென்னவோ அந்த காணமல் போன குருவியை மட்டும்மறக்கவே முடியவில்லை ....
இன்றைக்கு மறுபடி வருமோ ? என்ற எதிர்பார்போடு தான்சாதம் வைத்து , சாம்பார் வைத்து ...உருளைக் கிழங்கு வறுவல் செய்து , அப்பளம்பொரித்தேன்.குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா ? என்ற யோசனையோடு தான்ஒவ்வொன்றையும் செய்து மூடி வைத்தேன் .
மழை நின்று போன விடிகாலையும்வழக்கம் போலத்தான் விடிந்திருந்தது , ஆனாலும் காற்றில் ஒரு ஈரவாடை பரவிமொட்டைமாடியில் துணி காயபோட்டு விட்டு , கட்டைசுவற்றில் கைவைத்து கீழேவிரையும் வாகனங்களைப் பார்த்தவாறு ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்துமெதுவாய் வெளியேபரவ விடும் போது ஈரத்தோடு ஈரமாய் ஒரு குளிரான சந்தோசம்தேகமெங்கும் சந்தனம் போல அப்பிக்கொள்ளத்தான் செய்கிறது ஒவ்வொருமுறையும் !
குருவிக்கு குளிறாதா ?
பார்த்தால் கேட்க வேண்டும் ...."
வருமா? வந்தால்கேட்க வேண்டும் !!!" என்று கேள்வியை ஓரமாய் மனதில் போட்டு வைத்தேன் .
நேற்றுபோல இல்லாமல் பால்கார அண்ணாமலை இன்று பழக்க தோசமாய் லேட்டாகத்தான்வந்தார் ... ஒன்றும் சொல்வதற்கின்றி பேசாமல் பாலை வாங்கி மூடி வைத்தேன் .அம்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது; மாதம் ஒருமுறை அரைமணிநேரம் பேசுவாள் அம்மா , ஏதோ திருவிழா போல துள்ளிக்கொண்டு பேசுவதற்குஓடுவேன் நான் .
இன்று அப்படி இல்லை , வெகு நிதானமாய் போய் விட்டு திரும்பியஎன்னை தாத்தா அதிசயம் போல பார்த்துவிட்டு குனிந்து மறுபடி பேப்பர் படிக்கஆரம்பித்தார். அப்பா வந்தார் மறுபடி காபி போட்டேன் , இரவு சமைத்தேன் ,எல்லோரும் சாப்பிட்டோம். இரவு ஷிப்ட் வந்தது .அப்பா கிளம்பி போய் விட்டார் . தாத்தா திண்ணையில் யாரோ நண்பரோடு பேசிகொண்டிருந்தார் , அவர் அப்படியே தூங்கி விடுவார் , இனி உள்ளே வரமாட்டார் ,தண்ணீர் முதலிலேயே சொம்பில் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வார் .
சின்னஞ்சிறிய வீடு தான் ....
ஆனாலும் தனிமை ...ருஷியானதா ?...
எப்போதும்தனிமை ....ருஷியானதா...?!
பெரிய பங்களா வீடெல்லாம் கழுத்து வரை கடனோடு ஊரில் இருக்கிறது .... கோயில்கோபுரத்தில் அரக்கி போன்ற தோற்றத்துடன் கத்தி பிடித்து நிற்கும் காவற்காரிபொம்மை போல பாட்டி அங்கே இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு தான்இருப்பாள் என நினைக்கையில் நெஞ்சுக்குள் பிசைகிறது ,
தாத்தா .... பாவம் ?
அப்பா .... பாவம் தான் ?
அம்மா ...அவளும் கூட பாவம் தானே ? !
அப்படியானால் நான் ???!!!
அந்த குருவி... ?!
தூரத்தில் எங்கேயோ பாட்டு சத்தம் ...
"சிட்டுக்குருவி ....சிட்டுக்குருவி ...சேதிதெரியுமா ?
என்னை விட்டு பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ...
"ஏய் குருவி...சிட்டுக் குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிகிட்டுநீ
இங்கே வந்து கூடு கட்டு ...
இன்றைக்கு சிட்டுக் குருவி ஸ்பெஷல் போல ரேடியோவில்
கடைசியில்...எப்போதும் போல் ... ஒற்றையாய் தெளிவான சிந்தனைகள் ஏதுமின்றி தூங்கத்தொடங்கினேன் நா....னு...ம் .

Wednesday, January 7, 2009

ஹே பாட்டி நீ இன்னும் பியூட்டி!

பாட்டிக்கு வயது எழுபத்தி ஐந்து ஆகி விட்டதாம் ! இப்படி எல்லோரையும் போல என் பாட்டிக்கும் வருஷா..வருஷம் வயது ஏறிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை.பாட்டியின் வயது அருபதிலேயே அப்படியே நிலைத்து நின்று விட்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் இன்னும் எனக்குண்டு,"

என்றும் பதினாறைப் போல

என் செல்லப்பாட்டி ஏன் ...

என்றும் அறுபதாய் நீடிக்கக் கூடாது?"

கடந்த ஒரு வாரம் முழுக்க நானும் பாப்புவும் பாட்டியுடன் இருந்த போது முன்னெப்போதையும் விட மனம் வெகு கவனமாக அந்த நிமிடங்களை எல்லாம் பத்திரமாகப் பதிவு செய்து கொண்டது.ஒவ்வொரு நிகழ்வையும் பாட்டியின் நினைவுகள் அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டே செல்லும் அற்புதம் சமீப காலாமாகத்தான் தொடங்கியது.

எழுபது கடந்தும் பம்பரமாக வீட்டு வேலைகளில் சுற்றிச் சுழலும் பாட்டியின் வேகமும் சிரத்தையும் கண்டு என் சோம்பேறித்தனத்தின் மீது எனக்கே மிகக் கோபம் வந்தது.இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பாகி விட்டேன்.(அது தனிக் கதை)

பாட்டி மிகச் சிறந்த உழைப்பாளி ;தாத்தாவின் தோட்டமெனும் அட்சய பாத்திரம் பாட்டியின் தங்க விரல்கள் பட்டுப் பட்டு நவரத்தினங்களைப் போல பல வண்ணங்களில் ஜிலு...ஜிலுப்பாய் ஜில்லென்று வருடம் முழுக்க காய்த்துக் குலுங்கி ஓய்ந்ததெல்லாம் ஒரு காலம் ! இன்று அது ஒரு கனாக் காலம் !இப்போது நினைத்துப் பார்த்தாலும்

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நீருக்கும் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறுது வானிலை " தான்

(சிச்சுவேசன் சாங் இல்லை போலத்தான் தோன்றும் ! எனக்கு இது சிச்சுவேசன் சாங் தான் அந்த நாளைப் பற்றி நினைத்தால் அந்த நாளுக்கே அழைத்துச் சென்று விடும் மாயம் பாட்டியின் ஞாபகங்களுக்கு மட்டுமே உண்டு

அதான் "சட்டென்று மாறுது வானிலை " !!!இந்த இடத்துக்கும் பொருந்தும்) இதனாலெல்லாம் தான் ;

கடவுளே என் பாட்டி இன்னும் நிறைய நாட்கள் ஜீவித்து இருக்கட்டும்...குடும்பத்தின் எல்லோருடைய ஆயுளிலும் குறைந்தது இரண்டு வருடங்களை பங்கிட்டுத் தந்து விட்டால் என்ன? பாட்டி எங்களுக்கு என்றென்றைக்குமே வேண்டும்...வேண்டும்...வேண்டும் என்றெல்லாம் அர்த்தமில்லாமல் யோசிக்க வைக்கிறது பாட்டியின் நேசம்!!!

இதனாலெல்லாம் நிஜம் என்ற ஒன்று இல்லையென்று ஆகி விடுமா என்ன ?பாட்டிக்கு வயதாகி விட்டது உண்மை தான் .

முகம்...கை...கால்கள்...தூங்கும் போது நான் ஒரு புறம் ,என் தங்கை ஒரு புறம் என கைகளைப் போட்டு இறுக்கிக் கட்டிக் கொள்ளும் பாட்டியின் இடுப்பு ,எல்லா இடங்களிலும் வளமை போய் பழுத்து நெடு நாட்கள் ஆன நிறை இலையின் ஒரு வித சோர்வு அப்பட்டமாய்த் தெரிந்த போது ஏனோ சொல்லிக் கொள்ளாமல் கண்ணோரம் கசிந்து நின்றது .

மொட்டை மாடியில் பாட்டியும் நானும் நின்று பேசிக் கொண்டு இருந்தோம்,சிறிது நேரத்தில் அலைபேசி அழைக்க நான் பேசி முடித்து விட்டு வரும் போது பாட்டி வீட்டின் மறுபுறம் பெரிதாய் வியாபித்து நின்ற மலைகளைப் பார்த்துக் கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.

மனதில் இனம் புரியாமல் ஏதோ ஊர் உணர்வு அழுத்த ;

அலைபேசியின் வீடியோவை ஆன் செய்து விட்டு பக்கத்தில் போய் "பாட்டி" என்று அழைத்து

"ஏமிரா ...என்று திரும்பிய பாட்டியின் குரலையும் அந்த நிமிடத்தையும் அப்படியே பதிவு செய்து கொண்டேன்.என்னால் அது மட்டும் தானே முடியும்!காற்றில் எங்கிருந்தோ கரைந்து வந்து காதோடு மனதையும் நிறைத்தது இந்த வரிகள்

"இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்

மனிதற்கு மொழியே தேவை இல்லை

காற்றின் மொழி ஒலியா இசையா ?"அந்த நிமிடத்தில் மட்டுமல்ல இனி எங்கே இந்த வரிகளைக் கேட்டாலும் எனக்கு என் பாட்டி " ஏமிரா" என்று சொன்னது மட்டும் எப்போதும் மறக்காது,என்னைப் பொறுத்தவரை இது தான் இதயத்தின் மொழி !பத்திரமாய் பாதுகாப்பேன் மொழியை !

முக்கியக் குறிப்பு:- (தெலுங்கில் ஏமிரா என்றால் என்னடா என்று அர்த்தம் தாமிரா என்று வாசித்து விடாதீர்கள் !!!)

வால்பாறை...வட்டப்பாறை...மயிலாடும் பாறை...மஞ்சள் பாறை...பாறை!!!

மலை ஏற

ஆசை ...!

வால் பாறை

வட்டப்பாறை

வழுக்குப்பாறை

நொடியில் தாண்டி

இலைப்பச்சை

தளிர்பச்சை

கரும் பச்சை

மரச்செடிகள்

கண் காணாப் புறந்தள்ளி

ஓடோடி சிகரம் தொட்டேன் ;

என் வீட்டு மொட்டை மாடி காண...

மலை ஏறிய பின் தான்

பின் தான் ...

பின் தான் ...

தெரிந்தது !

மாடியிலிருந்த

பிரம்மாண்டமிங்கே

மலையிலிருந்த

எலிப் புழுக்கை முன்

செத்துச் சுண்ணாம்பாக

ஏமாற்றத்தில் துவண்டு

மேலிருந்து கீழ் நோக்க

உச்சி மீது வானிடிந்து வீழ்ந்ததடா...

வந்த வழி தான் மறந்து போனதடா ...

இதோ

காத்திருக்கிறேன்

ஆடு மேய்க்கும்

சிறுவர்களுக்காய்...?!

Thursday, December 25, 2008

டியர் தேவ் ...!

டியர் தேவ் ...

இன்றோடு நீங்கள் ஊருக்குக் கிளம்பிப் போய் ஐந்து முழு நாட்கள் முடிந்தே விட்டன,இது வழக்கம் தான் ! ஆனாலும்...என்ன எப்போதுமே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் திரும்பி விடுவீர்கள்,இந்த முறை என்னவோ பத்து நாட்கள் என சற்று நீண்ட பிரயாணமாகி விட்டது?!

கம்பெனி செலவில் டூர் என்ற பெயரில் நீங்கள் "டர்"(காஸ் டிரபிள் தான் வேறென்ன??) ஆகி வருவதை இன்றைக்கு நேற்றா நான் பார்க்கிறேன்?எனக்கு அது ஐந்தரை வருடப் பழங்கதை ஆயிற்றே?!

ஆரம்பத்தில் செல்ல அழுகையில் பிரிவுத் துயரை கண்ணீரில் கரைத்து காணமல் போகவைக்க முயன்றேன் ,அதற்கடுத்த வருடம் பாப்பு பிறந்ததும் அழுகை நின்றது மாறாக நீங்கள் டூர் கிளம்பும் ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன ஊடல்கள் வந்து வந்து மறைந்தன.மூன்றாம் வருடம் பாப்பு பேச ஆரம்பித்ததும் யாராவது "உங்க அப்பா எங்க பாப்பு என்று கேட்டால் "ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று பதில் சொல்லத் தொடங்கினாள்.அவள் சொல்வதைக் கேட்டு விட்டு சிரித்தாலும் சின்னக் குரலில் நீங்கள் கிளம்புவதைப் பற்றி ஆட்சேபித்து முணுமுணுப்பதை அந்த வருடம் முழுக்க தொடர்ந்தேன் என்றே நினைக்கிறேன்.

இப்போது நினைத்தால் "சிறுபிள்ளைத்தனமாக" தோன்றினாலும் , அன்றைக்கு அதெல்லாம் தேவையாய் இருந்ததை நீங்களும் நானும் மட்டுமே உணர முடியும் தேவ்.இன்றைய நமது அந்நியோன்யத்தை நிர்ணயித்ததில் அன்றைய அந்தப்பொழுதுகளை நாம் மறந்ததில்லை என்றுமே !

இப்போது அந்த செல்ல அழுகைகளோ...நீளும் முனுமுணுப்புகளோ இல்லாமல் போய் நெடு நாட்களாகின்றன.நானே பெட்டி அடுக்கித் தரும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.வேறென்ன தான் செய்வதாம் ? "பழகிப் போச்சு " என்று ஒற்றை வார்த்தையில் முடிக்கத் தெரிந்து விட்டது மனதுக்கு.எல்லாம் நம் பாப்புவின் "எதிர்காலத்துக்காக " என்ற சமாதானங்கள் மட்டுமே வியாபித்து நிற்கின்றன இப்போதெல்லாம்;

நான் என்னவோ இயல்புக்கு வந்து விட்டேன் தான் ...;

ஆனால் பாப்பு ...

பாப்பு பற்றி நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது . முன்பு மழலையில் சொல்ல முடிந்ததைப் போல இப்போது அவளால் "அப்பா ஊர் சுத்தப் போயிருக்கார்" என்று சொல்ல முடியவில்லை போல ?!வளர்ந்து கொண்டிருக்கிறாள் அல்லவா? முதல் நாளில் இருந்தே கடந்த நான்கு நாட்களாய் விடிந்ததும் படுக்கையில் நீங்கள் இல்லாத வெற்றிடத்தை பார்த்து...பார்த்து முகம் சுணங்குகிறாள்.

அப்பா வேண்டும் என எப்போதும் போல ஒரு பாட்டம் அழுது முடிப்பாள் என்று தான் எப்போதும் போல இன்றைக்கும் அதற்குத் தேவையான கொஞ்சல் கெஞ்சல் சமரசங்களுடன் காத்திருந்தேன் நான் ! என்ன நினைத்தாலோ பாப்பு ?!அப்பாவின் வாசம் (அப்பாவி வாசம் ...என்று வாசித்து விடாதீர்கள்!!!) இன்றி அம்மாவுக்கும் தான் கஷ்டம் என்று விட்டாளோ ? சென்ற நாட்களைப் போல "அப்பா எப்போவருவார்...இன்னைக்கு...இப்போவே...பின்ன எப்போ தான் ? " என்று நச்சரிக்காமல் ;இந்த முறை என் கழுத்தைக் கட்டிக் கொண்டு " சரி வா மம்மி ...ம்ம்...என் டாடி வரும்போது வரட்டும் ...ஒரு ஒன் வீக் நாம போய் உன் டாடியைப் பார்த்துட்டு வரலாம் " என்று குளுகுளு ஆச்சர்யம் தருகிறாள்.

அதெப்படி அத்தனை சீக்கிரத்தில் கண்டு பிடித்தாள் ? என் முகத்தில் இருந்து என் மனதை அறியும் பக்குவம் அதற்குள் அவளுக்கு வந்து விடுமா என்ன ?எப்படிக் கண்டுபிடித்தாள்?அவளைப் போலவே நானும் என் அப்பாவைப் பார்க்க வேண்டும் என நினைத்திருக்கக் கூடும் என்பதை எப்படித்தான் அவள் அறிந்து கொண்டாளோ?

நான்கு வயதுக் குழந்தை இப்படி எல்லாம் சிந்திக்குமா என்ன?(கொஞ்சம் ஓவர் தற்ப்புகழ்ச்சியா இருக்கு இல்ல!!! அது அப்படித்தான் போங்கப்பா ... ) அதென்னவோ அந்தக் கணத்தில் எனக்கு என்னென்னவோ ஞாபகங்கள் வர ஆரம்பித்து விட்டன,

அட நம் மகளா...நம் பாப்புவா...நம் சிட்டுக்குட்டியா...நம் செல்ல புஜ்ஜியா...பட்டுப்பூனைக்குட்டியா இது? இத்தனூண்டு குட்டிப் பஞ்சுப் பொதியலாய் அவளை முதல் முறை உங்களிடம் நான் நீட்டியபோது (அப்போதும் நீங்கள் ஒரு டூரில் இருந்து தான் திரும்பி வந்திருந்தீர்கள் ...ஞாபகமிருக்கிறது தானே...தேவ் ?) ஏதோ ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வென்ற சக்ரவர்த்தியைப் போல எத்தனை பரவசமாய் அவளை பட்டுப் போல ஏந்திக் கொண்டு கொஞ்சினீர்கள்.

இடை இடையே நான் ஏதோ சாதனை மங்கை போல என்னைப் பார்த்தும் பெருமிதம் கலந்த புன்னகை வேறு .நான் உங்கள் சாயலை அவளிடத்தில் தேடித் தேடி சொல்ல நீங்களோ என் சாயலை தேடித் தேடி சொல்லிக் கொண்டிருந்தீர்கள் .அத்தனை சந்தோசங்களுக்கும் காரணமான அந்த குட்டிப் பாப்புவா இவள்...கொஞ்சம் வளர்ந்து விட்டாள் ...இன்னும் நிறைய வளருவாள் தான்.

எனக்கென்ன ஆச்சர்யம் என்றால் ? அப்படி அன்றைக்கு நம் கையில் சின்ன சத்தம் கேட்டால் கூட குட்டி வாயை அழகாய் கோணிக் கொண்டு சதா அழுது கொண்டிருந்த பாப்புவா இவள்?

"தாங்க்ஸ் பாப்பு ...ஐ லவ் யு டா குட்டிம்மா ..."அந்தப் பஞ்சு மிட்டாயை என்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டபோது என்னை அறியாமல் ஒரு அம்மாவாக ஆனந்தமாய் அழுகை வந்தது .என் கண்கள் பணிப்பதைக் கண்டதும் அவள் "சமாதானப் படுத்துபவல் போல...ஐ லவ் யு மம்மி...டோன்ட் க்ரை "என்றாள் .

பாப்பு இப்படிச் சொன்ன தருணத்தில் தான் நான் உங்கள் மேல் உள்ள அன்பும் காதலும் பல மடங்கு பெருக இப்படி முடிவெடுத்தேன் ....

அதாகப் பட்டது ...;

  1. காலையில் அரக்கப் பரக்க அலுவலகம் கிளம்பும் போது "ஜட்டி...பனியன் தேடி அது கிடைக்காமல் கண்ணாமூச்சு ஆடினாள்...சிவு சிவுக்கும் கோபத்தில் தினம் என்னைத் திட்டுவீர்களே "இதான் நீ வீட்டைப் பார்த்துக்கற லட்சணமா?" இதற்க்கெல்லாம் நான் பதிலுக்கு எகிறியதுண்டு இதுநாள் வரை!!! இனி அப்படி இல்லவே இல்லை தேவ். (கணவனே....கண் கண்ட தெய்வம்)
  2. வெறும் காது குடையும் பட்சுக்கும் ...டைரி மில்க்குக்கும் ...ஏன் அந்த நாசமாய்ப் போன கிங் ஃபிஷருக்காகவும் கூட கூசாமல் ஐந்நூறு ரூபாய் நோட்டை மாற்றுவீர்களே !!!அந்தக் கண்ராவிக்கெல்லாம் முன்பு போல கத்திப் பேசி குத்திக் காட்டாமல் போனால் போகட்டும்(போடா...!!!) என்று தெனாவட்டாக விட்டு விடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.(அதற்காக இனி உங்கள் பர்சில் தினம் வெறும் ஐம்பத்து ரூபாய் மட்டுமே வைத்து அனுப்பப் போவது தனிக்கதை)
  3. மன்த் எண்டு டார்கெட் பிரசரில் நீங்கள் குழம்பிப் போய் ஒரு டவலுக்கு மேல் ஒரு டவலாக நான்கைந்து டவல்களை கட்டிக் கொண்டு வாசிங் மிசினில் குவித்தால் கூட (நோ விவாதம்) இனி நான் ஒன்றும் சொல்லப் போவதே இல்லை. இப்படிப் பல முடிவுகளை எடுத்திருக்கிறேன்.

முக்கிய குறிப்பு:- இந்த முடிவுகளுக்கு ஆயூள் இன்னும் நிர்ணயிக்கவில்லை என்பதையும் தெரிவித்தே ஆக வேண்டும் தேவ் .குறைந்த பட்சம் உங்கள் திருமுகம் காணும் வரை இப்போதைக்கு கட்டாயம் நீடிக்கும் ...அதனால் சீக்கிரம் வாருங்கள்....வந்து விடுங்கள் என்னருமை தேவ்)