Wednesday, February 25, 2009

நீங்க இந்தக் குழந்தைக்கு ப்ளான் பண்ணீங்களா இல்ல தற்செயலா?!


  • செவிக்கு இனிய நல்ல சங்கீதத்தைப் போல...

  • நல்ல ருசியான சாப்பாட்டைப் போல ...

  • முதலில் இருந்து முடிவு வரை சுவாரஸ்யம் சற்றும் குறையா சிறுகதையைப் போல...

  • அழகான அர்த்தமுள்ள கவிதையைப் போல...

  • அன்பான கணவன் மனைவியின் இனிமையான தாம்பத்தியத்தைப் போல...

  • அனுசரணையான பெற்றோர்களின் அனுபவம் வாய்ந்த வழிகாட்டலைப் போல ...

  • அழகான ...புத்திசாலிக் குழந்தைகள் அமையப் பெறுவதும் ஆஷிர்வதிக்கப் பட்ட ஒரு கொடுப்பினையே!

குழந்தை வளர்ப்பு என்பது ஏனோ தானோவென்று இன்றைய சூழலில் அமைந்து விட முடியாது.முதலில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கே இப்போதெல்லாம் திட்டமிட்டே ஆகவேண்டிய சூழலில் இன்றைய இளம் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதே நிஜம்.

மகப் பேரு மருத்துவர்கள் கேட்கும் முதல் கேள்வியே ...

"நீங்க இந்தக் குழந்தைக்காக ப்ளான் பண்ணினிங்களா ...இல்ல தற்செயலா ?"

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கேள்வி சங்கோஜத்தைத் தரலாம்...ஆனால் சற்று யோசித்தால் அதிலுள்ள அர்த்தம் பிடிபடும் .வாழ்க்கையில் எல்லாவற்றையுமே திட்டமிட்டு நிகழ்த்துதல் என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாமல் போகலாம் .ஆனால் ஒரு சில காரியங்களை மட்டுமேனும் நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் இன்றைக்கு நிலவுகிறது.


  1. பொருளாதார நசிவுத் தன்மை...

  2. விலைவாசி உயர்வு ...

  3. கூட்டுக் குடும்பங்கள் நலிந்து தனிக் குடித்தனங்கள் மலிந்து விட்ட நிலை,

  4. ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் பெரும்பாலும் ஒரே ஒரு குழந்தை என மாறி விட்ட சூழல் .

இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஆராய்ந்தால் இன்றைய குழந்தைகளை சமூகத்தில் புத்திசாலிகளாக வெளிக் கொணர்வதில் பெற்றோர்களின் பங்கு மிக மிக அவசியமாகி விட்டது .கல்வி என்பது அறிவை மட்டுமே பட்டை தீட்டக் கூடும்.தனக்கான நன்மை தீமைகளை ஆராய்ந்து அறியக் கற்றுத் தருவது பெற்றவர்களின் தலையாய கடமை .


சென்ற வாரத்தில் ஒருநாள் டி.வி செய்திகளில் ..."நொய்டாவில் விவரமறியா சிறுமிகளிடம் பாலியல் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளது." என்ற வரிகள் காதுகளில் விழுந்தது.வளர் இளம்பருவத்தில் குழந்தைகளைப் பெற்ற எல்லாப் பெற்றவர்களையும் மிகுந்த பயத்தில் ஆழச் செய்த ஒரு சம்பவம் (கொடூரம் என்பதே சாலப் பொருந்தும்!)அல்லவா அது?!குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று சிலர் யோசிக்கலாம்.நிச்சயம் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.


சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஆய்வுச் செய்திகள் ஒன்றில் இன்னும் இருபது வருடங்களில் உலகின் பெரும்பான்மையான மக்கள் ஒரு கொடிய நோயால் பாதிக்கப் பட்டு அழிவைத் தேடிக் கொள்ளப் போகிறார்கள் .அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயலா விட்டால் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் அபாயமே " என்று கூறப் பட்டிருந்தது.அந்த நோய் ...



  • AIDS அல்ல(ACQUIRED IMMUNO DIFICIANCY ச்ய்ன்றோம்)

  • கேன்சர் அல்ல...

  • காச நோய் அல்ல

வேறென்னவாக இருக்கும் என்கிறீர்களா? சுருங்கச் சொன்னால் ;

மனச்சிதைவு நோயாம்.

அதென்ன மனச் சிதைவு நோய் ?எதனால் இந்த நோய் வரக் கூடும்?குழந்தை வளர்ப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?நிறைய சம்பந்தம் இருக்கிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள் .மனச் சிதைவுக்கான ஆரம்ப விதையே குழந்தைப் பருவம் முதற்க் கொண்டு நடக்கும் சம்பவங்களின் தாக்கங்களே என்கிறார்கள் .ஏதோ பெற்றோம் ...வளர்த்தோம் என்றெல்லாம் இப்போது இருந்து விட முடியாது என்பதையும் தாண்டி பல விஷயங்கள் குழந்தை வளர்ப்பில் .

பெரிதாய் எதையேனும் சொல்லப் போவானேன்.

சென்ற வாரம் நிகழ்ந்த ஒரு சின்ன சம்பவம் ...எப்போதுமே "சுட்டி டி.வி யில் பாப்பு செட்ரிக் பார்ப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாகவே இருக்கும் ."எட்டு வயதுப் பையன் உடன் படிக்கும் எட்டு வயது மாணவியை நேசிப்பதைப் போல அந்த தொடரில் காட்டப் படுவது எனக்கு அத்தனை விருப்பமில்லை.

ஆனால் பாப்பு சென்ற வருட விடுமுறையில் பாட்டி வீட்டிற்குப் போனதிலிருந்து அங்கிருந்த மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து அந்த தொடரைப் பார்க்க ஆரம்பித்து விட்டிருந்ததால் இப்போதும் ஆர்வத்துடன் கண்டினியு செய்து கொண்டிருந்தாள்.வேண்டாம் வேறு ஏதானும் சேனல் பார் என்று மாற்றினால் அவளுக்கு கோபம் வந்தது.அதையே வை என்று அதிகாரமாக சொன்னாள்.

சில நாட்கள் பார்க் ...நண்பர்கள் வீடு என்று விளையாடப் போய்விட்டால் மறந்து விடுவாள்.ஆனால் மீண்டும் வீட்டில் இருக்கும் பொது அத்தொடரைப் பார்ப்பது நிற்கவே இல்லை.எனக்கோ சுத்தமாக விருப்பமே இல்லை .ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக சொன்னாள் பின்விளைவுகள் வேறு விதமாக இருக்குமோ என்று சங்கடமாக இருந்தது.

இது இப்படியே சில மாதங்கள் தொடர்ந்தது.நானும் ஒவ்வொரு முறையும் அவள் செட்ரிக் பார்க்கும் பொது மட்டும் அப்படி யோசித்து விட்டு பிறகு மறந்து போனவளானேன்.ரொம்பவும் வேண்டாம் ...பார்க்கவே கூடாது என்று வலியுறுத்திச் சொல்லவும் தயக்கம்.எதை நாம் வேண்டாம் என்கிறோமோ அதை தானே குழந்தைகள் பிடிவாதமாக வேண்டும் என்பார்கள்.(இது எழுதப் படாத விதி ஆயிற்றே!)

இப்படியோ போய்க் கொண்டிருந்த இந்த விஷயம் கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அந்த தொடரில் வரும்"குட்டிப் பையன்(ஹீரோ) செட்ரிக் தன் உடன் படிக்கும் மாணவி ஜேனை நினைத்து" நான் உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன் ஜேன்" என்று சொல்வதாக ஒரு வசனம் வரவே ...

பாப்பு என்னிடம் "புருவங்களை ஆச்சர்யம் போல உயர்த்தி "மம்மி லவ் பண்றானாம் ...பாரேன் என்றாள். நான் திடுக்கிட்டு சட்டென்று ...கண்ணம்மா அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா என்றேன் புத்தி சொல்வதைப் போல...

பாப்பு என்னை ஒரு பார்வை பார்த்தாள்.

(அந்தப் பார்வை நான் என்னவோ அவளது குழந்தை போலவும்...அவளென்னவோ எனது அம்மா போலவும் எனக்கு உணர்த்தியது )

பிறகு பாப்பு தொடர்ந்து சொன்னாள்.

என்னம்மா நீ?

இது சும்மா டி.வி.ப்ரோக்ராம்னு எனக்கு தெரியாதா?

its only for seerial

என் கிட்ட யாராச்சும் boys அண்ட் girls இப்படி சொன்ன

" no friend dont say லைக் திஸ் ? its bad ...it is a prograam .not real ...go and sit ur place னு சொல்வேன் .என்றாள்.

கொஞ்ச நேரம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை .

பாப்புவும் ..நானும் சேர்ந்து சிரித்துக் கொண்டோம் .

என்னை விட பாப்பு தெளிவாகவே வளர்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன் நான். குழந்தை வளர்ப்பில் அன்றொரு பாடம் கற்ற நிறைவு வந்தது.

குழந்தைகளிடம் எந்த ஒரு விசயத்திலும் ஆக்ரோசமாக எதிர்ப்புக் காட்டாமல் மென்மையாகச் சொல்லியோ அல்லது நமது கவலையை சுருக்கமாகப் புரிய வைத்தாலோ பல பிரச்சினைகள் தீரும்.

Monday, February 23, 2009

அழகான நாட்களில் இன்றொரு நாள்/


குளு குளு வென இருந்தது பாப்புவின் பள்ளிக்குள் நுழைந்ததும் ; பள்ளியில் எல்லா வகுப்பறையும் எ.சி என்று நினைத்து விட வேண்டாம்.திங்களும் அதுவுமாய் கண் பார்த்த இடமெல்லாம் வெள்ளுடை குட்டித் தேவதைகள்.
கண்ணுக்கு குளிர்ச்சியாய்...மனதிற்குள்

சிலு சிலுவென்று பனியடித்தது. ரகம் ரகமாய் பூச்சரங்களைப் போல வளைய வரும் உற்சாகம் குறையாத வண்ணத்துப் பூச்சிகள்.

"ஆப்பிள் பெண்ணே நீ தானோ ...

ஐஸ் கிரீம் கனவே நீ தானோ "

என்று பாட்டுப் பாடாத குறை தான்!

குழந்தைகள் அவர்கள் ஆண் குழந்தைகளோ...பெண் குழந்தைகளோ பாரபட்சமே இன்றி எல்லாக் குழந்தைகளும் கொள்ளை அழகு .விதம் விதமான குண்டு...குண்டு கண்களோடு ...பன் போன்ற மெத்து...மெத்தென்ற கன்னங்களோடு ,தளிர் பிஞ்சு உடலசைத்து நிற்பதுவும்...நடப்பதுவும்...பேசுவதும் கூட அத்தனை அழகு .ஓடும் போது கூட ரொம்பவும் அழகு தான் .

சிலரது குட்டித் தலைகளில் செடிகள் முளைக்க வைத்து அதில் வண்ண வண்ண பாண்டுகள் சுற்றியிருந்தனர்.செடிகளைச் வளைத்து பூக்களைச் சுற்ற இப்போதெல்லாம் அனுமதி இல்லையாம்.

எடுத்து வாயில் போட்டு மென்று விடக் கூடாது என்றோ என்னவோ?! இந்த அழகான சுட்டி ராட்சசிகள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்று நம்புவதற்கில்லை!!!

பளீர் வெண்மையில் காலையில் அணிவித்த வெள்ளை ஷூக்கள் எல்லாம் மதிய நேரத்தில் நல்ல சந்தன அழுக்காய் மாறி கண்ணை உறுத்தாமல் சிரித்துக் குசலம் விசாரித்தன.

கை நகம்...கால் நகங்களில் இருந்த அச்சு ...பிச்சு அழுக்குகளில் எல்லாம் கவனம் களைய விடாதீர்கள் என்று குறும்பாய் எச்சரித்துக் கொண்டு எல்லா முகங்களிலும் மல்லிகைப் பூஞ்சிரிப்பு பரவி விரவி நம்மையும் நிரவித் தழுவியது.

சிரிப்பு கூட ஒரு தொற்று வியாதி தான்.காலையில் வாரத்தில் முதல் நாளே கொஞ்சம் டல் அடித்துக் இருந்த நிலையில் இன்றைக்கு கடைசி மிட் டெர்ம் டெஸ்ட் முடிந்து சனி ஞாயிறு விடுமுறைக்குப் பின் "ஓபன் டே" என பாப்புவின் பள்ளிக்குப் போய் வந்ததில் மூளை சுறுசுறுப்பாகி என் உலகம் என் வரையில் சந்தோசமாகி விட்டது.

அதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் நம் குழந்தையின் சந்தோசங்களைக் கூட நாம் அடையாளம் காண வேண்டுமென்றால் அதை நாம் அவர்கள் பயிலும் பள்ளியில் சென்று காண்பதே நலம் .

காண்பதே நலம் .

காண்பதே நலம் .(சும்மா ஒரு எக்கோ தான் !!!)

Thursday, February 19, 2009

ஒரு குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் (10) பத்துக் கேள்விகள்(!!!)

ஒரு சுட்டிக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்க விரும்பும் பத்துக் கேள்விகள்...
  1. டெய்லி எதுக்கு மூணு வேலையும் சாப்பாடு ஊட்டி விடறேன்...சாப்பாடு ஊட்டி விடறேன்னு என்னைத் தொல்லை பண்ற? பசிச்சா நான் சாப்பிட மாட்டேனா?
  2. ஐஸ் கிரீம் சாப்பிட்ட சளி பிடிக்கும் வேணாம்...வேணாம்னு சொல்றயே ? சளி பிடிக்காம குழந்தைக்கு ஐஸ் கிரீம் எப்படி ஊட்டலாம்னு நீ ஏன் ஒரு வாட்டி கூட யோசிக்க மாட்டேன்ற உன் குழந்தைக்காக?
  3. பூதம் வருது ...பூச்சாண்டி வருது...கோணிக்காரன் வரான்னு சொல்லி எனக்கு விவரம் தெரியுமுன்னா இருந்து பயமுறுத்தறியே இன்னைக்கு வரை ஒருநாளும் அவங்களைக் காணோமே!!!எப்போ தான் பூதமும்...பூச்சாண்டியும்...கோணிக்காரனும் வருவாங்க?
  4. ஏன் எப்போ பார்த்தாலும் சன் டி.வி ...கே.டி.வி...கலைஞர் டி.வி ..விஜய் டி.வி நு பார்த்து கேட்டுப் போற ...ஏன் என்கூட சேர்ந்து சுட்டி டி.வி பார்த்து அறிவை வளர்க்க ட்ரை பண்ணக் கூடாது?
  5. உனக்கு எவ்வளவோ சொந்தக்காரங்க ..பிரெண்ட்ஸ்னு இருக்கலாம் ...இருந்துட்டுப் போகட்டும் ...ஏன் அவங்க வரும்போதெல்லாம் "பா...பா..ப்ளாக்ஷிப் சொல்லு, "ஜானி...ஜானி எஸ் பாப்பா" சொல்லுன்னு உன் பாப்பாவான என் உயிரை எடுக்கற?
  6. உனக்குத் தூக்கம் வரும் போதெல்லாம் லீவு நாள்ல கூட என்னையும் தூங்கு...தூங்கு...தூங்கினா தான் கண்ணுக்கு நல்லதுனு என்னையும் தூங்க சொல்லி டார்ச்சர் பண்றயே இது எப்படி நியாயமாகும்?
  7. அது ஏன் நைட் தூங்கி மார்னிங் எழுந்துக்கச் சொல்லி தினம் என்னை படுத்தற? மார்னிங் தூங்கி நைட் எழுந்தா சாமி வந்து கண்ணைக் குத்துமா என்ன?
  8. எனக்கு எதெல்லாம் சாப்பிடப் பிடிக்கலையோ அதெல்லாம் உலகத்துலேயே ரொம்ப சத்துள்ள உணவுனும் ...எதெல்லாம் சாப்பிட ரொம்ப பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடவே கூடாத உணவுண்ணும் அடம் பிடிக்கிறயே அது ஏன்?
  9. தண்ணில விளையாடாத....மண்ணுல விளையாடாத...காத்தடிக்குது ஓடாத தூசு விழும் கண்ல,மழைல விளையாடாத...இதெல்லாம் இல்லாத ஒரு இடம் எங்க இருக்கு ?அதை ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை நீ ?
  10. ஒரு பங்சனுக்கு கிளம்பினா அந்த டிரஸ் போடு...இந்த டிரஸ் போடுன்னு ட்ரில் வாங்கற ...ஒரு நாளாச்சும் எனக்குப் பிடிச்ச டிரஸ் போட்டுட்டு போக விடறியா நீ? ஏன்மா ...ஏன்...சொல்லும்மா ...ஏன்...ஏன்...ஏன் ???

பிறிதொருநாள் தூசு தட்டலாம் !!!



கனவின் விழிப்பறையில்

காரடர்ந்த இருட்டறையில்

நெடுந்தூர

பயணக் களைப்பில்

நெல் முனையாய்

ஓய்ந்திருந்தால்

சிற்றெறும்புகள் கடித்தன

செவ்வந்திகள் சிணுங்கின

அத்தனையும்

பொதிந்து வைத்தேன்

நினைவின் இழுப்பறையில்

பிறிதொரு நாள் தூசு தட்ட ...!

Wednesday, February 18, 2009

மேகமழை



மேகங்கள்

ஊர் சேர்ந்த

ஒருநாளில்

பெருமழை

பிடித்துக் கொண்டது

கரைந்து

மறைந்தன

கனத்த

மேகங்கள்

நீ யார்?

எந்த ஊர் ?

அறியும்

ஆர்வமிருந்தும்

வழிந்தேன்

மழையாய் !?

இடி போல

பின்னால்

உன் அப்பா!!!

அப்பப்பா !

பூமிக்கு வந்த புத்தர்




ஒரு கடை நாளின்

கடைசி

மணித்துளியில்

மறுபடி ஒருமுறை

பிறக்கும்

ஆசையில்

பூமிக்கு வந்தார்

புத்தர் !

புத்தர்

ஆசைப் படலாமா?

Friday, February 13, 2009

ஐ லவ் யூ டா புருஷா...



கண்ணே மணியே

கொஞ்சல்

காத்திருந்து உண்ணும்

இரவு சாப்பாடு

வாரம் ஒரு சினிமா

மாதம் ஒரு மலைப் பிரதேச

சுற்றுலா

இன்பச் சிற்றுலா ...

இப்படி சாயமிழக்க

யத்தனிக்கும்

கலர் கலர் கனவுகள்

எப்போதும் போல்

ஒவ்வொரு முறையும்

இன்றே நமக்கு மீள்கிறது ....

வெகு சுகமாய்

படு சுகந்தமாய்

இன்றே நமக்கு மீள்கிறது

விழி அசைவில்

என் மனம் அறியும்

விரலசைவில்

என் குணம் அறியும்

காதலா

நீயே என் கணவனுமானாய் !

கல்யாணமான காதலர்கள் நாம் (இருக்கக் கூடாத என்ன?!)

உள்ளங்கை பரிசாயினும்

பரவசமாய்

கண்ணோரம் சிரிப்பில் விரிய

சில்லென்று பூக்கும்

உன் புன்னகைக்கு

என்றும்

ரசிகை

நான் உன் மனைவி

நீ என் கணவன் ...

நாம் காதலர்கள்

என்றென்றும் காதலர்களே !

ஐ லவ் யூ டா புருஷா...