நாஞ்சில் நாடனின் " சூடிய பூ சூடற்க " தொகுப்பிலிருந்து "தன்ராம் சிங் " (2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனில் வெளியிடப் பட்ட கதை"
தனது அலுவலகத்தில் பணி புரிந்த ஒரு கூர்க்காவைப் பற்றி நினைவு கூர்தலாய் புரளும் பக்கங்கள் ; யதார்த்தத்தில் ஒரு கூர்க்கா வேறு திபெத்தியர்கள் வேறு வேறா! நேபாளிகள் மட்டும் தான் கூர்க்காக்கள் என வழங்கப் படுவார்களா? அப்படிப் பார்க்கின் தன்ராம் கூர்க்கா அல்லாத ஒரு கூர்க்கா .தன்ராம் சிங்கில் வாசிக்கும் போது கண் கலங்க வைத்த சில இடங்களை மட்டும் இங்கே தருகிறேன்.
//தன்ராம் சிங் மாத்திரமல்ல ,எந்த கூர்க்காவையும் கடுகடுத்த முகத்துடன் நான் கண்டதில்லை ,முகம் ஏறிட்டுப் பார்த்த உடன் மலரும் சிரிப்பு . ' உன் ஆதரவில் என் வாழ்க்கை என்பது போல்'//
//அவனது ஊருக்குப் பக்கத்தில் பாயும் ஆறொன்று உண்டென்றும் அதன் பெயர் இன்னதென்றும் பலமுறை சொல்லி இருக்கிறான்,எத்தனை யோடஇத்தும் எனக்கதன் பெயர் நினைவுக்கு வரவில்லை,ஆறும் குளங்களும் ,நெல்-கோதுமை வயல்களும் அவன் கனவுகளில் வந்து போகுமாக இருக்கும் .பெடையின் நினைவில் இந்திரியம் சேறாகச் சிந்துமாக இருக்கும்.//
ஒருவேளை தன்ராம் சிங் தென்னாட்டுத் தெருக்களில் இரவுகளில் கோல் தட்டி ,விசில் ஊதித் திரிந்து கொண்டிருக்கக் கூடும்.மாதத்தின் முதல் வாரத்தில் உங்கள் வீட்டின் முன் வந்து சிரித்தபடி நின்றால் அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள் கனவான்களே!
இப்போது முதல் மாடிக்கு இடம் பெயர்ந்து விட்டாலும் முதலில் கீழ் தளத்தின் முதல் வீட்டில் குடி இருக்கையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் "ஷாப் " என்று கதவைத் தட்டும் கூர்க்காவுக்கு தவறாது ஐந்து ரூபாய் அளித்து புண்யம் கட்டிக் கொண்டமை மட்டுமே என்னாலான சிறு நற்பணி .
வெறும் ஐந்து ருபாய் நாணயம் அதை கையில் வாங்கிக் கொண்ட ஒவ்வொரு முறையும் கை உயர்த்தி சலாமிட்டு முகம் பார்த்து வெள்ளந்தியாய் சிரிக்கும் கூர்க்காவின் முகம் இன்னும் அப்படியே ஞாபகத்தில்.எந்த ஊர் கூர்க்காவும் ஒருவரே போலிருக்கக் கடவது அவர் தம் முகம் நோக்கிய வெள்ளைச் சிரிப்பாலாமோ! ம்ம்... வெள்ளந்தியான அந்தப் புன்னகையை எதிர்கொள்ள நேர்ந்த ஒவ்வொரு முறையும் நினைத்திருக்கிறேன் பதிலுக்கு ஒரு முறை ஒரே ஒரு முறை நாமும் தான் புன்னகைத்தால் என்னவென்று? சாத்தியப் படவே இல்லை கடைசி வரை .சும்மாவேனும் புன்னகைத்த சுவடாய் கன்னத்து தசைகளை விரித்துச் சுருக்குதல் அத்தனை கடிதோ?!
பல்லாயிரம் மைல்கல் தாண்டி வந்து சொற்ப சம்பளத்திற்கு இந்த ஊர் தெருக்களில் இரவுகளில் அலையும் தோழமை தேடும் கூர்க்காக்களுக்கென்று நலன் நாடும் சங்கங்கள் உண்டோ! அவர்களும் மனிதர்களன்றோ!
குங்குமம் இதழில் எஸ்ரா முன்பொரு முறை கூர்க்காக்களைப் பற்றி அவரது அனுபவங்களை சுவை படப் பகிர்ந்திருந்தார்.
இன்னும் யாரெல்லாம் கூர்க்காக்களைப் பற்றி எழுதினாலும் குறிப்பிட மறவாத ஒற்றை வரியை இதைக் கொள்ளலாம் .
"உன் ஆதரவில் என் வாழ்க்கை என்பது போல்"
3 comments:
//முதல் வாரத்தில் உங்கள் வீட்டின் முன் வந்து சிரித்தபடி நின்றால் அருள் கூர்ந்து அவனுக்கு ஐந்து ரூபாய் தாருங்கள் கனவான்களே!//
நாஞ்சில் நாடனின் தன் ராம் சிங் கதை அருமை. பகிர்வுக்கு நன்றி.
94 ம் வருடம் வரை வந்து கொண்டு இருந்தார்கள் ஐந்து ரூபாய் கொடுப்போம்.
இப்போது வருவது இல்லை.
அவர்கள் எல்லாம் நேபாளத்திலிருந்து குடும்பத்தை விட்டு வந்து இங்கு எல்லா கூர்க்காவும் சேர்ந்து சமைத்து சாப்பிடுவார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன்.
படிக்க வேண்டும் போலிருக்கிறது!
@ கோமதி அரசு
நாஞ்சிலின் தன்ராம் கதையிலும் கூர்க்காக்கள் எப்படி விலை மலிவாக அல்லது அவர்கள் போக்கில் சொல்லப் போனால் சிக்கனமாக
எப்படி சமைத்து உண்கிறார்கள் என்ற விவரணை இருக்கிறது . வார இறுதி நாட்களில் கறி என்றால் ஆட்டுத் தலை,அதற்கும் கையில் காசு நிற்காவிட்டால் ஆட்டின் காதுகளை வாங்கி வந்து சமைத்து உண்பார்களாம். குடல் கறி எடுத்துச் சாப்பிட வாய்த்தால் அது அவர்களுக்கு விருந்தாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை. எல்லாம் வாழ்வியல் நிர்பந்தங்களின் பின்னே செலப் பணிக்கப் பட்ட ஆட்டுக் குட்டிகள் .
@ அன்புடன் அருணா
நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க " தொகுப்பில் தன்ராம் கதை இருக்கிறது அருணா. இந்த வருடம் சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்ட படைப்பு இது .அறிந்திருப்பீர்கள்.
Post a Comment