Monday, January 4, 2010

ஓடிப்போனவளின் மலரும் நினைவுகள்




வெட்டி எறியப்பட்ட நகத்துணுக்காய்

வீம்பு விளிம்புகளற்று

எனக்கு நானே சமாதானம் கொண்டவள் போல்

சாவதானமாகவே இருந்தேன்

ஓடிப் போனவள் எனும்

குசுகுசுப்புகளைப் புறம் தள்ளி

கொக்குக்கு இரையே மதி

கொண்டவனுக்கு நானே கதி

என்றொரு காலம்

இருந்தவரை எல்லாமே சரியெனும்

பாவனையில் மூழ்கிப்போய்

சங்கடங்கள் தவிர்க்கப்பழகி

அயர்ந்து உறங்கிப்பின்

விழித்தெழுகையில்

என் மகள் எனைப் போலானாள்...;

மெல்லாது முழுங்காது
தொண்டைக்குள் உருளும் பம்பரமாய்
நான் என் அன்னைக்குச் செய்தது
இன்றெனக்கு !?
உரத்துச் சொல்ல வெட்கி

மச்சு வீட்டில் மூச்சு விடாமல் தேம்பியழுவது

நானாய் இருக்கக்கூடுமோ !!!

18 comments:

நட்புடன் ஜமால் said...

தொண்டைக்குள் உருளும் பம்பரமாய்
நான் என் அன்னைக்குச் செய்தது
இன்றெனக்கு !?]]

காலம் கடந்து ...

அண்ணாமலையான் said...

நிகழ் காலம் ..

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))) க்ளாஸ்

KarthigaVasudevan said...

//நட்புடன் ஜமால் said...
தொண்டைக்குள் உருளும் பம்பரமாய்
நான் என் அன்னைக்குச் செய்தது
இன்றெனக்கு !?]]

காலம் கடந்து ...

//

காலம் கடந்த பின் தான் எல்லாமே உணரப்படுகிறது போலும்!!!

நன்றி ஜமால் ...

பக்கா பட்டிக்காட்டில் நானறிய நேர்ந்த இன்னொருத்தியின் கதை இது.

ம்...மனதில் பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் நாசூக்காய் சொல்லிட முனைந்ததில் விளைந்த கத்தரிக்காய் இந்தக் கவிதை. :)))

KarthigaVasudevan said...

// அண்ணாமலையான் said...

நிகழ் காலம் ...//

நன்றி அண்ணாமலையான் ...

இறந்தகாலத்தில் விதைக்கப் பட்டதை நிகழ்காலத்தில் அறுவடை செய்வது தானே முறை.நிகழ் காலத்துக்கு ஒரு எதிர் காலமுண்டு .சகடம் உருளும் அதனிஷ்டத்துக்கு

KarthigaVasudevan said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

:))) க்ளாஸ்//


நன்றி சாரதா.

நான் எட்டாங்கிளாஸ் பி செக்சனாக்கும் அப்போ நீங்க?!(grrrr....அமித்துகிட்ட மட்டும் தான் பல்பு வாங்குவீங்களாக்கும் !!! அதென்ன வஞ்சனை !நாங்களும் கொடுப்போம்ல )

:)))

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு கவிதை...ஆனா,கஷ்டமாவும் இருக்கு...

குடுகுடுப்பை said...

என்னைக்கேட்டா ரெண்டுமே சரியா தவறான்னு தீர்மானிக்கிறது காலம் மட்டுமே.

ஓடிப்போறதுங்கிற கான்செப்ட் இன்றைக்கு அசிங்கமாக சொல்லும் கலாச்சாரம் நாளை மாறலாம்.அவரவர் நிம்மதி மட்டுமே முக்கியம்.

Unknown said...

ஓடிப் போறது தப்புன்னு சொல்ற மாதிரி இருக்கு..

அப்பாம்மா சேத்து வச்சா எதுக்கு ஓடிப் போகணும்? அப்பிடி அவ தேர்ந்தெடுத்த ஆள் சரியில்லைன்னா அத சரியான முறையில புரிய வைக்காதது அம்மா அப்பாவோட தப்பு தானே?

மன்னிச்சுக்குங்க, எனக்கு இந்தக் கவிதையின் கருத்துல உடன்பாடு இல்லை...

கலகலப்ரியா said...

//குடுகுடுப்பை said...

என்னைக்கேட்டா ரெண்டுமே சரியா தவறான்னு தீர்மானிக்கிறது காலம் மட்டுமே.

ஓடிப்போறதுங்கிற கான்செப்ட் இன்றைக்கு அசிங்கமாக சொல்லும் கலாச்சாரம் நாளை மாறலாம்.அவரவர் நிம்மதி மட்டுமே முக்கியம்.//

அதே.. அதே.. அதே...!!! இன்றைக்கே நிறைய இடத்ல மாறிடுத்து... சில நேரங்கள்ல காலம் மாறும்னு வெயிட் பண்ணாம... இடம் மாற்றம் நல்லதோ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவித நல்லாருக்கு ஆனா கருத்துதான் பயம்மா இருக்கு... கலகலபிரியா குடுகுடுப்பை, முகிலன் சொல்றதெல்லாம் ..எனக்கும் தோணுது..

( பழக்கம் அப்படி முதல்ல எதபடிக்கிறமோ அது சரியா இருக்காப்ல இருக்கும். பின்ன அதுக்கு நேர்மாறா ஒன்னு படிச்சா அதும் சரியா இருகாப்லயெ தோணும்..) :))

\\இறந்தகாலத்தில் விதைக்கப் பட்டதை நிகழ்காலத்தில் அறுவடை செய்வது தானே முறை.நிகழ் காலத்துக்கு ஒரு எதிர் காலமுண்டு .சகடம் உருளும் அதனிஷ்டத்துக்கு//

கலக்கல் சொல்லலாம்ன்னு பாத்தேன்.. அமித்து அம்மாக்கு சொன்னமாத்ரி எதாச்சும் சொல்லிடுவீங்களோன்னு வேற திகிலா இருக்கே :)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு நபர் கவிதை உணர்வு,,, பொதுக் கருத்தாக சொல்லமுடியுமா தெரியவில்லை..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு நபர் கவிதை உணர்வு,,, பொதுக் கருத்தாக சொல்லமுடியுமா தெரியவில்லை..

KarthigaVasudevan said...

//யாத்ரா said...
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க//

நன்றி யாத்ரா...

நன்றி சந்தனமுல்லை...(பயம் ...யதார்த்தம் இது தான்)

@ குடுகுடுப்பை

சரி,தவறு என்ற விவாதத்துக்கேஇடமில்லை,கவிதையில் வெளிப்படுத்த விரும்பியது ஒரு அம்மாவின் சஞ்சலத்தை மட்டுமே, தவறுகளும் ,சாரிகளும் சூழ்நிலைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பொறுத்தே பல வேளைகளில் நிர்ணயம் செய்யப் படுகின்றன,இல்லை என்று மறுக்கமுடியாது குடுகுடுப்பை அண்ணாச்சி :) .

KarthigaVasudevan said...

@ முகிலன்

ஓடிப்போறது தப்புன்னு எந்த வரியிலயும் சொல்லவே இல்லையே நான்,தவறான புரிதல் .

ஒரு நிமிடமேனும் அப்படிப் பட்ட நிலை அமைந்து விட்ட அம்மா இப்படி நினைத்துப் பார்க்கக் கூடும்,இதான் நான் எழுதினது.முழுக்க முழுக்க அப்பா அம்மா மேல தப்பை சுமத்திட முடியாது,எப்போதுமே குறை,நிறை எதுவானாலும் சரி சமமா பங்கிருக்கக் கூடும் ரெண்டு தரப்பிலயுமே.இது என் கருத்து,என் கருத்தில் உடன்பாடு இருந்தாலும் இல்லனாலும் உங்க கருத்துரைக்கு நன்றி முகிலன் .

KarthigaVasudevan said...

@ கலகலப்ரியா

இடம் மாறலாம்,அதுவும் சரி தான் ,நன்றி கலகலப்ரியா

@ முத்துலெட்சுமி/muthuletchumi

எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான கோணங்கள்,எல்லாமே சரின்னு தோணும் சில நேரம்,எதுவுமே சரி இல்லைன்னும் தோணும் சில நேரம்.

பழக்கம் அப்படி முதல்ல எதபடிக்கிறமோ அது சரியா இருக்காப்ல இருக்கும். பின்ன அதுக்கு நேர்மாறா ஒன்னு படிச்சா அதும் சரியா இருகாப்லயெ தோணும்..) :))

வாஸ்தவமான பேச்சுங்க இது,சரியா சொல்லிட்டிங்க. :)))

KarthigaVasudevan said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஒரு நபர் கவிதை உணர்வு,,, பொதுக் கருத்தாக சொல்லமுடியுமா தெரியவில்லை//


இது எப்படி சுரேஷ் பொதுக் கருத்தாக முடியும்?! இது ஒரு அம்மாவோட நினைவு மட்டுமே,வேணும்னா அம்மாக்கள்னும் சொல்லிக்கலாம்,இப்படிப் பட்ட சஞ்சலங்கள் இல்லாத அம்மா இல்லைன்னு என்னால ஒத்துக்க முடியலை,வெளிய சொல்லிக்கலைனாலும் வளர்ந்த இளம் மகள்களின் அம்மாக்களுக்கு ஏதோ ஒரு சமயம் இப்படித் தோணக்கூடும். :)