Friday, November 20, 2009

வாங்க...வாங்க சைக்கிள் விடலாம்.

இப்படி யோசித்து பார்த்தேன் நன்றாகவே இருக்கிறது ...கூடவே சுவாரஸ்யமும் கூட...அப்புறம் ஒரு சின்ன திருப்தி கூட உண்டு .

வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்,எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது ,பாட்டி அதை அமைதியாக சின்னச் சிரிப்புடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.

அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளப் போவதைப் போல நிற்பதாக கற்பனை செய்யலாம் தான்...ஏன் பாட்டிகள் சும்மா...அட சும்மா விளையாட்டுக்கு கால் பந்து விளையாடக் கூடாதென்று ஒன்றும் சட்டமில்லையே!!!

நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர் ...ஏதோ ஒரு கணத்தில் அத்தையோ ...அம்மாவோ முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடி பேச அமர்ந்தால் அதை நம்மால் ரசிக்க முடியாமலா போய் விடும்?!

பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ஒட்டு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா ...அதை ரசிப்பதோடு கூட ஆடும் பாட்டி.

மழை வந்ததும் ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள் ...அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள் .

வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் அதை வலிந்து மறந்து விட்டு செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு ஏதோ ஒரு நாளேனும் விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்...மாமாக்களும் ...

கண்ணா மூச்சோ ...கொலை கொலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள் ஒரே ஒரு நாள் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு ...பிரியம் சமைக்கிற கூடு.

வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.

நம்புங்கள் ...

நம்பலாம் .

சில திரைப்பட உதாரணங்கள் :

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் குடும்பத்தோடு எல்லோரும் கொலை கொலையாம் (குலை குலையாம்..)முந்திரிக்காய் விளையாட்டை ஒரு பாடலில் ஆடுவதைப் போல காட்சி இருக்கும்.

மீரா ஜாஸ்மின் தோன்றும் ஒரு டீ விளம்பரத்தில் தாத்தா எம்.ஜி.ஆர் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்.

ரெயின் டான்ஸ் பல படங்களில் குழந்தைகளோடு பெரியவர்களும் ஆடுவதைப் போல பல படங்களிலும் பார்க்கிறோம் தானே?!(ரிதம்...)

எல்லாவற்றையும் விட எனக்கு மிகப் பிடித்த விஷயம் ஒன்றே ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.

வேகம் கூட...கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது.அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.

வீட்டில் நீளமான பலகை ஊஞ்சல் வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள் ... டென்சன் குறையும்.

அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம் ...அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்...சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ நிரடல் இல்லா தார்ச் சாலை ,எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்...எல்லாம் கிடைத்தால் எண்பது (80)வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் தான்!!!

இன்னும் நிறைய சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை தான்.

இப்போதைக்கு இது போதும்.

அடிக்கடி ...எந்நேரமும் ...அட...சதா எல்லா நேரமும் இல்லா விட்டாலும் கூட எப்போதேனும் ஒரு நாள்..ஒரே ஒரு நாள் மட்டுமேனும் வயதை மறக்கலாம் தவறில்லை.

3 comments:

நட்புடன் ஜமால் said...

வயதை ஞாபகம் வைத்து கொள்ளவெ வேண்டாம்

முதிர்ச்சியோடு இருத்தல் போதும்.

-----------------

நல்ல சுவாரஸ்யமுங்க.

இப்படியா இன்னும் பல இருக்கு

சிறு வயதில் விளையாட வாய்ப்பு கிட்டாதவை, வசதியின்மையால் கிடைக்காமல் போனவை ...

இப்படியாக இன்னும் இன்னும்

நல்ல தொரு பதிவு.

மாதேவி said...

உற்சாகத்துடன் கூடிய பதிவு.

நீங்கள் கூறியது போல ஒவ்வொருவரும் தனக்கு விரும்பிய விளையாட்டுக்கள் அல்லது உடல்பயிற்சிகளில் ஈடுபடும் போது மகிழ்ச்சியுடன் உடல் ஆரோக்கியமும் கிடைக்குமே.

R.Gopi said...

சிறு குழந்தைகளோடு இணைந்து விளையாடினால், நம் வயது நமக்கே மறந்து போகும்....

நீங்கள் சொல்வது போன்ற பல நிகழ்வுகளை 1/2 நிமிட விளம்பர படங்களில் பார்க்கலாம்... மிகவும் ரசிக்க தக்கதாக இருக்கும்...

நல்ல சுவாரசியமான பதிவு...