Saturday, November 20, 2010

இராமாயண மகாபாரத காவியங்கள் வெறும் கப்ஸா மட்டுமே அல்ல அல்ல...



ராமாயணமும் மகாபாரதமும் முற்றிலுமாய் புனையப் பட்ட கற்பனைகள் அல்லவே அல்ல. கடலில் கரைந்த உப்பாய் அன்றியும் உப்பைக் கரைத்த கடலாய் நடந்த நிஜங்களின் மீது அதீத கற்பனைகளை ஏற்றி புனையப் பட்ட காவியங்கள் ,பாரத ஆதி அந்தம் காண இவற்றை விட்டால் வேறு உகந்த வழிகள் இல.

பார்க்கலாம் ...மகத ராஜ்யங்கள் சீர்ப்படும்முன்பாக இந்துஸ்தானத்தில் மிகுந்த பெருமையோடிருந்தது கோசலமே. கோசல ராமனுக்காய் பாபர் மசூதி இடித்தார்கள் ,தீர்ப்பு சில வாரங்களுக்கு முன் கண்டோமே. நீதிபதிகள் ஒப்புக் கொண்டார்கள் ராமன் பிறந்த இடம் அதுவென்று. சீதையின் சமையலறை இதுவென்று t.v யில் காட்டினார்கள். இது கற்பனை அல்ல . சிந்து சமவெளி நாகரிக காலத்து ஹரப்பா ,மொஹஞ்சதாரோ .டோலவிரா நகரங்களையே அகழ்ந்தெடுக்கும் போது அதற்கும் பிற்பட்ட காலத்து ராமன் வாழ்ந்த இடமாக அயோத்தி ஏன் இருக்க முடியாது ?!

வேத காலத்துக்கு சற்றே பிந்தைய கோசல ஆர்யப் பழங்குடி வம்சங்களில் ஒன்றே கோசலம். கோசலம் வெற்றிக் கோலோச்சிய நாட்களில் மகதம் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தது,மகதர்கள் தாழ்ந்த குடிகளாகக் கருதப் பட்டனர். மகத மன்னன் அஜாத சத்ரு காலத்துக்குப் பின்பே கோசலம் வீழ்ந்தது ,வீழ்த்தப்பட்டது. கோசல மன்னன் பேசேனாதியும் மகத பிம்பி சாரரும் புத்தரின் சமகாலத்தவர் என சரித்திரம் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் சைவம் ,வைணவம் பிரபலமடைவதற்கு முன்பே பௌத்தம் இருந்தது ,அதற்கும் முற்பட்ட வரலாறுடையதாக ஜைனமும் இருந்தது . வேத காலப் பழங்குடி வம்சங்களில் ஒன்றான லிச்சாவி குலத்தில் பிறந்த மகாவீரர் ஜைன மதத்தின் தீர்த்தாங்கரராக இருந்தாலும் அவருக்கும் முன்பே பல தீர்த்தாங்கரர்கள் இருந்தனர் என வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது.
இதே போல இந்தோ ஆரியப் பழங்குடி வம்சமான சாக்கிய குலத்தில் தோன்றியவர் கௌதமர் .புத்தர். அதனால் தான் அவர் சாக்கிய முனி.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு மேலான விஷயம் புத்தர் பிறப்பதற்கு முன்பு அவரது அன்னை மாயா தேவி புத்தர் பிறந்த இடமான லும்பினியில் உள்ள புனித புஷ்கரணியில் நீராடி அங்கிருந்த ரும்மினி தேவி எனும் தாய் தெய்வத்திற்கு அந்தக் காலப் பழங்குடி மகளிர் வழி வழியாகக் கடைப்பிடித்து வந்த சடங்குகளைச் செய்து முடித்து விட்டு அப்படியே கௌதமரைப் பெற்றார் என்று புத்தரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

இதிலிருந்து நாம அறிய நேர்வது பௌத்தம் தோன்றுவதற்கு முன்பே இந்துஸ்தானத்தில் நிலை பெற்றிருந்தது தாய் தெய்வ வழிபாடுகள். இதை சாக்தம் என்று சொன்னால் (சக்தி வழிபாடு ) மறுக்கப் படக் கூடுமா என தெரியவில்லை. ஆனால் பாரத்தத்தின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழவாராய்ச்சிகளின் பின் நாம் அறிந்து கொள்ள முடிவது,எருமை புராதன இந்தியப் பழங்குடி மக்களுக்கு பெரும் சவாலாய் இருந்திருக்க கூடும்.

எருமைகளை அடக்கி பழக்கத்திற்கு கொண்டு வருவது மிகப் பெரும் சவாலாய் இருந்திருக்கலாம்.

குகைச் சித்திரங்களில் பெரும்பாலும் காணப் படும் சித்திரங்கள் பசுபதி உருவங்களும் (காளை கடவுள் -சிவன்) மகிஷாசுர மர்த்தினி சித்திரங்கலுமே ,இதில் நாம் சிந்திக்க உகந்த ஒரு விஷயம் காளை உருவ சித்திரங்களில் காளை மாடுகள் கொல்லப்படவில்லை காளை வீரன் அவற்றை வெற்றி கொண்டு பழக்கப் படுத்திக் கொள்வதாகவே சித்திரங்கள் காட்டுகின்றன. ஆனால் மகிஷம் ஒரு பெண் தெய்வத்தால் கொல்லப் படுவதாக சித்திரங்கள் காட்டுகின்றன. மேலும் சில வீரர்களை எருமைகள் தம் கொம்புகளால் கொத்தி எறிவதாகக் கூட சில சித்திரங்கள் காணக் கிடைப்பதால். அடக்குவதற்கும் பழக்குவதற்கும் அதிக சிரமம் கொடுத்த எருமைகள் தீய சக்திகளாக சித்தரிக்க பட்டிருக்கலாம். அவற்றை அடக்கிய பழங்குடி பெண் மகிஷாசுர மர்த்தினி எனும் தெய்வமாக்கப் பட்டிருக்கலாம்.


தொடரும் ...

No comments: