பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது,எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்...ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக விமர்சித்து படிப்பவர்களை குழப்புவது எந்த விதத்தில் நியாயமான செயலோ?
ராமன் கடவுள் அல்ல...ராமாயணம் கற்பனை,சொல்லப் போனால் ஆரியர்களின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கு வடிகாலாய் தோற்றுவிக்கப் பட்ட புனைவு,சீதை பதி விரதா பத்தினி இல்லை...சரி இதெல்லாம் ஒரு சாராரின் ஆணித்தரமான கருத்து ...வாதம் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இப்படி மேலோட்டமாகச் சொல்லி நம் மக்களை நம்பிக்கை மாற்றம் செய்ய முடியாது என்பதாலோ என்னவோ பெரியாரின் ஆதாரப் பூர்வமான எதிர் கருத்துக்கள் இப்புத்தகம் முழுதுமே கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன.
ஒரு விடயத்தைப் பற்றி நமது எதிர் கருத்தை தெரிவிப்பது என்பதற்கும்...திணிப்பது என்பதற்கும் நிச்சயம் நிறைய வேறுபாடுகள் உண்டு தானே?!எனக்கென்னவோ இப்புத்தகத்தில் பெரியாரின் எழுத்துக்களில் தெரியும் கடுமை திணித்தல் ரகமாகவே தோன்றுகிறது.
சமூகம் என்ற ஒரு கட்டமைப்பில் வாழும் போது சில நியாயமான பயங்களும் அவசியம் தான். அழுக்கை உருட்டி உருவம் செய்த பொம்மை தான் விநாயகர்...பிள்ளையார் என்றும் வாதிக்கிறார்கள். சரி ;ஓரினச் சேர்க்கை பற்றி வாதிக்கையில் அய்யப்பனை எள்ளுகிறார்கள் ...சரி இருக்கட்டும் .இந்துக் கடவுள்கள் கற்பனை உருவங்கள்...அதுவும் சரியே .
இவையெல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டுமே இவற்றால் பலரது மண்டைகள் உடையாமல் இருக்கும் வரை. இவற்றால் பலரது ரத்தம் தெறிக்காமல் இருக்கும் வரை...வெறும் கற்பனை உருவங்கள் ...ஆரியர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப் பட்ட மாயத் தோற்றங்கள் .எல்லாம் சரி தான். அப்படி இருக்கையில் வெறும் கற்பனைக்காக ஏன் மதம் சார்ந்த சண்டைகள் இட்டுக் கொள்ள வேண்டும்? வடை தானே முக்கியம் வடை சுற்றித் தரும் காகிதம் முக்கியமென்று ஏன் மோதிக் கொள்கிறார்கள்?
மதங்கள் வெறும் சட்டைகள் தான் என்று எங்கோ படித்தேன். சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம் ...அட துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு ...முடை நாற்றம் ...என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?
நான் இந்துக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்...முகமதியனாகப் பிறக்க வேண்டும்...கிருத்தவனாகப் பிறந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் யாரும் தீர்மானம் செய்து கொண்டு பிறத்தல் சாத்தியம் இல்லையே?!மதங்கள் மனங்களைப் பண்படுத்த அல்லவோ பிறப்பிக்கப் பட்டன.
ஆற்றில் சென்று கொண்டிருக்கிறோம் ...நீரின் துர்நாற்றம் சகிக்கவில்லை என்றால் ஆற்றை அல்லவா தூர்வார வேண்டும் ,நீரை அல்லவா சுத்தப் படுத்த வேண்டும். ஒட்டு மொத்தமாக ஆற்றை ஒதுக்கி வைக்க முடியுமா ? புழுக்கள் நெளியும் மெட்ரோ வாட்டர் அதை காய்ச்சி வடிகட்டிக் குடிக்கும் புண்ணியவான்கள் அல்லவா நாம்? சென்னையில் வாழ்ந்து கொண்டு மெட்ரோ வாட்டர் வேண்டவே வேண்டாம் என தைரியமாக வெறுக்க முடியுமா?
அப்படி இருக்கிறது சீதையை பஜாரி என சாடுவது. ராமனும் சீதையும் கடவுள்கள் அல்ல ...இது சரியான வாதம். ராமாயண காலம் பொய்யானது ...இது முற்றிலும் சரியே ,ஆதாரங்களும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.இதையும் ஏற்றுக் கொள்ளலாம். எல்லாம் சரி ஆனால் இப்படி ஆதாரப் பூர்வமாக சான்றுகள் கொடுத்து விளக்கிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று சடுதியில் பக்திமான்களின் மனதைப் புண்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கற்பனைக் கதைக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்து சேற்றை வாரி இறைக்க வேண்டுமா?
கதையை கதை என்று மட்டுமே வாசிக்கலாம் தானே? இதில் தவறேதும் உண்டோ?
நீ இறை பக்தியோடு இரு ,ராமனை வணங்கு ...சீதையை அன்னையாய் பாவித்தே தீர வேண்டும் இல்லையேல் உயிர் சேதம் எனும் கட்டாயம் இங்கே யாருக்கும் இல்லையே? பிறகேன் இத்தனை காட்டமான விமர்சனம்?! மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் குழப்பமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எந்த விதத்தில் சமுதாய நற்பணியாம் ?
நீ சாமி கும்பிடுவாயா? சரி செய்துகொள் அது உனது உரிமை...எனக்கதில் நம்பிக்கை இல்லை... இது எனது உரிமை. இப்படி முடிப்பது நல்லதா? இல்லை சான்றுகளுடன் விளக்குகிறேன் சகலமும் என சகதியில் காலை விட்டுக் கொண்டு சிரிப்பது நல்லதா?
"அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில் "--------------------------
இந்தக் குறளை ஏனோ சொல்லத் தோன்றியது இப்போது !!!
அஞ்ச வேண்டிய விசயங்களுக்கு அஞ்சி அஞ்சத் தகாதவற்றுக்கு அஞ்சாது தெளிந்து குறைந்த பட்சம் பிறருக்கு நன்மை செய்யா விடினும் தீமையோ ..குழப்பமோ செய்வதில்லை எனத் தீர்மானித்து வாழ பல நல்ல கொள்கைகளையும் கொண்டது தான் இந்து மதம். இந்துக் கடவுள்களின் உருவத்துக்கும் அவற்றின் தோற்றத்தின் பின்னுள்ள புனைவுகளுக்கும் கூட சில நல்ல விளக்கங்கள் இருக்கலாம். வெறுமே வாதத்துக்காக நாம் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது.
சின்ன வயதில் என் தாத்தா சொன்ன விடயங்கள் சிலவற்றை இங்கே தருகிறேன்.
1.பிள்ளையார் ஏன் இடுப்புல பாம்பு ஒட்டியாணம் போட்டு இருக்கார்?,
2. சிவன் ஏன் கழுத்துல பாம்பு நெக்லஸ் போட்டு இருக்கார் ?
3.எல்லா சாமிகளுக்கும் ஏன் நிறைய கைகள் இருக்கு...அவ்ளோ கை இருந்தா ரொம்ப பசிச்ச உடனே அத்தனை கைகளையும் சீக்ரமா எப்படி கழுவிகிட்டு சாப்பிட முடியும்? ரொம்ப லேட் ஆகாதா?
4.துர்கை ஏன் சிங்கத்துல உட்கார்ந்திருக்கா ?
5. காளி ஏன் இவ்ளோ அகோரமா பயமுறுத்தற மாதிரி இருக்கா?
6.பயமில்லாம கும்பிட எந்த சாமியும் இல்லையா நமக்கு ?!
இப்படியெல்லாம் எங்கள் வீட்டில் பல வாண்டுக் கேள்விகள் எழுந்ததுண்டு .
இதற்க்கெல்லாம் ;
அச்சச்சோ ...இப்படியெல்லாம் கேள்வி கேட்டா சாமி கண்ணைக் குத்திடும் " என்றெல்லாம் யாரும் எங்களை மூட நம்பிக்கையில் மூழ்கடிக்கவில்லை .
என்ன பதில் சொன்னார்கள் தாத்தாவும் பாட்டியும்???
நாளை சொல்கிறேன் .
46 comments:
காத்திருக்கின்றோம் உங்கள் பதிலுக்காக்
மதங்கள் வெறும் சட்டைகள் தான் என்று எங்கோ படித்தேன். சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம் ...அட துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு ...முடை நாற்றம் ...என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?]]
வழி மொழிகிறேன்.
-------------
மேலும் அடுத்த பகுதிக்காகவும் வெயிட்டிங்ஸ்
//பெரியாரின் ஆதாரப் பூர்வமான எதிர் கருத்துக்கள் இப்புத்தகம் முழுதுமே கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன.//
ஏன் அதிர்ச்சி?
//ஒரு விடயத்தைப் பற்றி நமது எதிர் கருத்தை தெரிவிப்பது என்பதற்கும்...திணிப்பது என்பதற்கும் நிச்சயம் நிறைய வேறுபாடுகள் உண்டு தானே?!எனக்கென்னவோ இப்புத்தகத்தில் பெரியாரின் எழுத்துக்களில் தெரியும் கடுமை திணித்தல் ரகமாகவே தோன்றுகிறது.//
உங்களை யாரும் அவர் கருத்துகளைப் படிக்க கேட்க கட்டாயப்படுத்தினார்களா? ‘திணித்தல்’ என ஏன் தோன்றுகிறது?
//அப்படி இருக்கையில் வெறும் கற்பனைக்காக ஏன் மதம் சார்ந்த சண்டைகள் இட்டுக் கொள்ள வேண்டும்? வடை தானே முக்கியம் வடை சுற்றித் தரும் காகிதம் முக்கியமென்று ஏன் மோதிக் கொள்கிறார்கள்?//
மதம் சார்ந்த சண்டைகள், மதவாதிகளுக்கிடையேதான் நடக்கிறது.
ஒவ்வொருவனும் தன் மதத்தை உண்மையென் நினைக்க சகிப்புத்தன்மையை யிழந்து சண்டை போட்டுக்கொள்கிறான்.
இதைப்பார்த்து, தட்டிக்கேட்பவரக்கண்டால் அவனுக்கு நாத்திகன் பட்டம் சூட்டு வலைபதிவில் அர்ச்சனை நடக்கிறது.
//ஆற்றில் சென்று கொண்டிருக்கிறோம் ...நீரின் துர்நாற்றம் சகிக்கவில்லை என்றால் ஆற்றை அல்லவா தூர்வார வேண்டும் ,நீரை அல்லவா சுத்தப் படுத்த வேண்டும். ஒட்டு மொத்தமாக ஆற்றை ஒதுக்கி வைக்க முடியுமா ? //
தூர்வாறிய் ஆற்றில் குளிக்கச்சொல்கிறீர்கள். இல்லயா?
ஆற்றில் வரும் நீரே விசமாகியிருந்தால்? ஒட்டுமொத்தமாக் அதை விட்டுவிட்டு வேறிடத்துக்குப் போகவேண்டியதுதான்.
//மதங்கள் வெறும் சட்டைகள் தான் என்று எங்கோ படித்தேன். சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம் ...அட துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு ...முடை நாற்றம் ...என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?//
இதை நீஙக்ள் மதவாதிகளிடம் சொல்லுங்கள். கேட்கிறார்களா என்று பார்ப்போம்.
இன்று பிள்ளையார் ஊர்வலமே சண்டையுண்டாக்குகிறது.
சட்டை என்று எவர் பார்க்கிறார்கள்?
மதத்தை நன்குணர்ந்தபின் எழுதுங்கள். நீஙக்ள் நினைப்பது போல் அது சட்டையல்ல்.
//மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் குழப்பமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எந்த விதத்தில் சமுதாய நற்பணியாம் ?//
உங்களுக்கு குழப்பம் என்றால் எல்லோருக்குமா?
பெண்ணைககட்டி வைத்து அடிக்கிறான் பேய் விரட்டுகிறானாம்.
இப்படி அனியாய்மாக கட்வுள் பெயரால் மக்களை ஏமாற்றுகிறான். இதைகேட்டால், ச்மூகத்துரோகமா?
அல்ல், சமூகப்பணியா?
அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பான். பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா?
நாளை உங்கள் பிள்ளையையோ, பெண்ணையோ, ஒரு சாமியார் ஏமாற்றுவான். விட்டுக்கொண்டிருப்பீர்களா? அப்போது நான் வந்து, உஙக்ளை, இது சமுதாயப்பணியாம்1 என்று பகடி பண்ணினால் உங்களாள் தாங்க முடியுமா?
யாருக்கோத்தானே என்ற நினைப்பு உங்களை மூடநம்பிக்கைகளைச் சாடுவொரை பகடி பண்ணவைக்கிறது.
//இந்துக் கடவுள்களின் உருவத்துக்கும் அவற்றின் தோற்றத்தின் பின்னுள்ள புனைவுகளுக்கும் கூட சில நல்ல விளக்கங்கள் இருக்கலாம். வெறுமே வாதத்துக்காக நாம் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது.//
இது சரி.
இபபடி நல்ல கருத்துகளை எடுத்து தம் வாழ்க்கையும், பிறர் வாழ்க்கையையும் செம்மைப்ப்டுத்துவோரால் பிர்ச்சனையில்லை. அவர்களை எவரும் வெறுப்ப்தில்லை.
மாறாக், மதத்தை வைத்து ஒரு இனமே வாழலாம் என நினக்கிறது. மதத்தை வைத்து போலிச்சாமியார்கள் கோடிகோடியாக உழைப்பவன் பணத்தைச்சுரண்டி வாழ்கிறார்கள்.
அவர்களைப்பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?
அப்படி போடுங்க அறுவாள...
: )
கதையோ, காப்பியமோ, நம்பிக்கையோ, மூடத்தனமோ.... ஆனால், அதில் ஒழுக்கத்தைப் போதித்தார்கள்....
இன்றைய ஆக்கங்களில் பாலியல் வக்கிரங்களும், மாந்த இழுக்களும் மேலோங்கி இருப்பதற்கு, கட்டுடைப்பு என்ற ஆயுதம் எளிதாய்க் கையில எடுத்துக் கொண்டமையே காரணம்....
அதைக் கேட்டால், பெரியார் வாங்கித் தந்த விடுதலை என்பார்கள். பெரியார் இன்று இருப்பாராயின், அவரே நொந்து கொண்டிருந்திருப்பார்....
பெரியாரின் அன்றைய கடவுள் எதிர்ப்பு ஒரு ஈர்ப்பு சக்தி. அன்றைய தேவை அது
பெரியார் செய்த கலகத்தின் நன்மைகள் உலகம் அறிந்தது. கடவுள் உட்பட அனைத்தும் விமர்சனத்துக்கு உரியதே. இந்த கருத்தியல் போர் நம் சந்ததியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
//
பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது,எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்...ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக விமர்சித்து படிப்பவர்களை குழப்புவது எந்த விதத்தில் நியாயமான செயலோ?
//
திறக்கக் கூடாத கதவை திறந்திருக்கிறீர்கள்....அந்த துணிச்சலுக்காகவே பாராட்டுக்கள்!!
விரிவான பதில் விளம்பர இடைவேளைக்கு பிறகு :0))
//
பழமைபேசி said...
கதையோ, காப்பியமோ, நம்பிக்கையோ, மூடத்தனமோ.... ஆனால், அதில் ஒழுக்கத்தைப் போதித்தார்கள்....
இன்றைய ஆக்கங்களில் பாலியல் வக்கிரங்களும், மாந்த இழுக்களும் மேலோங்கி இருப்பதற்கு, கட்டுடைப்பு என்ற ஆயுதம் எளிதாய்க் கையில எடுத்துக் கொண்டமையே காரணம்....
அதைக் கேட்டால், பெரியார் வாங்கித் தந்த விடுதலை என்பார்கள். பெரியார் இன்று இருப்பாராயின், அவரே நொந்து கொண்டிருந்திருப்பார்....
August 29, 2009 5:24 AM
//
ஒழுக்கம் அவசியமே....ஆனால், தனிமனித ஒழுக்கத்தை பற்றி எவரும் போதிக்க வேண்டிய அவசியமில்லை...அது மதமாக இருந்தாலும் சரி, இருப்பதாக சொல்லப்படும் கடவுளாக இருந்தாலும் சரி...மஹா விஷ்ணுவே வந்தாலும் Mind your own business..... என்பது தான் பதில்...
கட்டுடைப்பு ஆயுதத்திற்கும் பெரியாருக்கும் சம்பந்தமில்லை....கட்டுகளின் வயது பெரியாரை விட பல ஆயிரம் வருடங்கள் அதிகம்...கட்டு என்று வந்த வினாடியிலேயே கட்டுடைப்பும் பிறந்து விட்டது...
வருகைக்கு நன்றி
நாளை எழுதுகிறேன் சக்தி
வாங்க ஜமால் ...காத்திருங்கள் எழுதுவேன்
// சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
//பெரியாரின் ஆதாரப் பூர்வமான எதிர் கருத்துக்கள் இப்புத்தகம் முழுதுமே கடும் அதிர்ச்சியை அளிக்கின்றன.//
ஏன் அதிர்ச்சி?//
வருகைக்கும் பதிவு செய்த தங்களது கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே " சிந்திக்க விரும்பும் சிலருக்காக...!"
அதிர்ச்சி ஆதாரங்களைக் குறித்து அல்ல ...ஆதாரங்கள் நிஜமாக இருக்கட்டும் ஆனாலும் அதை கடுமையாகப் பதிவு செய்த விதம் தான் ஒரு இந்து என்ற வகையில் எனக்கு அதிர்ச்சி அளித்தது. தினம் வணக்கத்துடன் பூஜிக்கும் கடவுள்களைப் பற்றி வேறு விதமாக அறிந்து கொண்ட அதிர்ச்சி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்.
சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
//உங்களை யாரும் அவர் கருத்துகளைப் படிக்க கேட்க கட்டாயப்படுத்தினார்களா? ‘திணித்தல்’ என ஏன் தோன்றுகிறது?//
புத்தகங்களைப் படிக்க யாரும் யாரையும் கட்டாயப் படுத்த அவசியமில்லை,
திணித்தல் என்று தோன்றக் காரணம் சான்றுகளை எடுத்துக் காட்டும் போது கட்டுடைப்பு எனக் கருதி சிலருக்குப் புனிதம் என்று தோன்றும் பிம்பங்களை சிதைப்பதைப் போல கூறப் பட்ட வரிகளைத் தான்.
//தூர்வாறிய் ஆற்றில் குளிக்கச்சொல்கிறீர்கள். இல்லயா?
ஆற்றில் வரும் நீரே விசமாகியிருந்தால்? ஒட்டுமொத்தமாக் அதை விட்டுவிட்டு வேறிடத்துக்குப் போகவேண்டியதுதான்.//
ஆம் ...ஆனால் வேறிடம் செல்லலாம் ஆறு விஷம் என்று
நம்பினால் மட்டுமே.//
//
பெரியாரின் ராமாயணக் குறிப்புகள் வாசிக்க வாய்த்தது,எந்த ஒரு விசயத்தையும் பகுத்தறியலாம் தான்...ஆனால் அதற்காக சொல்ல வந்த விசயத்தின் வீரியத்துக்காக ஏற்கனவே புனிதம் என நம்பும் ஒரு செயலை படு கேவலமாக விமர்சித்து படிப்பவர்களை குழப்புவது எந்த விதத்தில் நியாயமான செயலோ?
//
சொல்ல வந்த விஷயத்தின் வீரியத்திற்காக மட்டுமல்ல, ஆனால் புனித பிம்பங்களை யார் உடைத்தாலும் எப்பொழுது உடைத்தாலும் அதிர்ச்சியாகவும், அந்த பிம்பங்களை நம்புபவர்களுக்கு கேவலமாகவும், குழப்பமாகவும் தான் இருக்கும்....உதாரணம் சாய்பாபா....இன்றைக்கு இந்த புனித பிம்பத்தின் சுய உருவம் வெளி வந்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கும்...
புனிதங்கள் உடைக்கப்பட வேண்டும் என்பது தான் அடிப்படை....அப்படி உடைக்கப்படும் போது புனிதத்தின் மறு உருவம் பற்றியும் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது!
//அது சரி said...
//
ஒழுக்கம் அவசியமே....ஆனால், தனிமனித ஒழுக்கத்தை பற்றி எவரும் போதிக்க வேண்டிய அவசியமில்லை...அது மதமாக இருந்தாலும் சரி, இருப்பதாக சொல்லப்படும் கடவுளாக இருந்தாலும் சரி...மஹா விஷ்ணுவே வந்தாலும் Mind your own business..... என்பது தான் பதில்...//
சுத்தம்.... அண்ணாச்சி வந்துட்டாருபா....
ஆத்திச்சூடி, திருக்குறள் இதெல்லாம் நாங்க மாஞ்சி மாஞ்சி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்...போதனை வேண்டாம், அப்படி இப்படின்னுட்டு...
போதனை வேற, திணிப்பு வேற... நீங்க வேற?!
இந்த அண்ணாச்சி இப்பவுமே, போதனைங்ற சொல்லைக் கேட்டாப் போதும்... வந்திடுவாரு... இஃகிஃகி...
போதனை pōtaṉai
, n. < bōdhanā. 1. Teaching, instruction, advice, inculcation; கற்பிக்கை
அண்ணாச்சி நெம்பப் பேசுனா, நான் உங்களுக்கு போதிக்கிற அம்மணிகிட்ட பேச வேண்டி வரும்...
//என்ன பதில் சொன்னார்கள் தாத்தாவும் பாட்டியும்???//
எதிர்பார்த்து காத்திருக்கிறோம் தாத்தா, பாட்டி பதில்களை....
//அது சரி said...
திறக்கக் கூடாத கதவை திறந்திருக்கிறீர்கள்....//
மிரட்டுதலுக்கு ஒப்புதல் வாக்குமூலமளித்த அண்ணாச்சிக்கு நன்றி!
சிந்திக்க விரும்பும் சிலருக்காக...!
//அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பான். பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா?
நாளை உங்கள் பிள்ளையையோ, பெண்ணையோ, ஒரு சாமியார் ஏமாற்றுவான். விட்டுக்கொண்டிருப்பீர்களா? அப்போது நான் வந்து, உஙக்ளை, இது சமுதாயப்பணியாம்1 என்று பகடி பண்ணினால் உங்களாள் தாங்க முடியுமா?
யாருக்கோத்தானே என்ற நினைப்பு உங்களை மூடநம்பிக்கைகளைச் சாடுவொரை பகடி பண்ணவைக்கிறது.//
இது பகடி என்று எப்படிச் சொல்ல முடிந்தது உங்களால்?
புத்தகம் வாசித்ததும் அதன் பின் தோன்றிய எண்ணங்களை எனது கருத்துக்களாகப் பதிவு செய்திருக்கிறேன் ,இதன் பின்னணியில் ஆதங்கம் இருக்கலாம் ..வருத்தம் இருக்கலாம்,வெற்றுப் பகடி என்று மட்டும் எண்ணி விட வேண்டாம் ,
இன்று யாருக்கோ நேர்ந்தது நாளை நமக்கும் நேரலாம் என்பதை உணர முடியாத அளவுக்கு மூடனம்பிக்கைவாதி இல்லை நான். பொதுவில் சொன்ன கருத்தை பொதுவாகவே பாவித்து விவாதியுங்கள்,உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப் படுகின்றன.
நீங்களோ...நானோ யாராயினும் தேவை தெளிதல் மட்டுமே.
சிந்திக்க விரும்பும் சிலருக்காக...! said...
//இந்துக் கடவுள்களின் உருவத்துக்கும் அவற்றின் தோற்றத்தின் பின்னுள்ள புனைவுகளுக்கும் கூட சில நல்ல விளக்கங்கள் இருக்கலாம். வெறுமே வாதத்துக்காக நாம் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது.//
இது சரி.
இபபடி நல்ல கருத்துகளை எடுத்து தம் வாழ்க்கையும், பிறர் வாழ்க்கையையும் செம்மைப்ப்டுத்துவோரால் பிர்ச்சனையில்லை. அவர்களை எவரும் வெறுப்ப்தில்லை.
கடைசியில் நான் சொல்ல வந்த விசயத்தைப் புரிந்து கொண்டு சொன்ன இந்தக் கருத்துக்கு நன்றி .
கபிலன் said...
அப்படி போடுங்க அறுவாள...
: )
இது அரிவாள் அல்ல ...அறுவை சிகிச்சை கத்தி,பெரும்பாலும் முடிவு வெற்றியாகவே இருத்தல் நலம்
//
பழமைபேசி said...
சுத்தம்.... அண்ணாச்சி வந்துட்டாருபா....
//
You got me laughing mate ;0))))
//
ஆத்திச்சூடி, திருக்குறள் இதெல்லாம் நாங்க மாஞ்சி மாஞ்சி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்...போதனை வேண்டாம், அப்படி இப்படின்னுட்டு...
போதனை வேற, திணிப்பு வேற... நீங்க வேற?!
இந்த அண்ணாச்சி இப்பவுமே, போதனைங்ற சொல்லைக் கேட்டாப் போதும்... வந்திடுவாரு... இஃகிஃகி...
போதனை pōtaṉai
, n. < bōdhanā. 1. Teaching, instruction, advice, inculcation; கற்பிக்கை
//
பழமைபேசி அண்ணாச்சி,
அந்த பின்னூட்டம் உங்களுக்கு எதிரானதல்ல, பொதுவானது...தவிர, போதனை, திணிப்பு எனக்கும் ஓரளவு புரிகிறது....ஆனால், பல நேரங்களில் போதனை எல்லை மீறி திணிப்பாக போய்விடுகிறது...பல மத போதனைகளை பொறுத்தவரை அர்த்தமற்ற திணிப்பாகத் தான் இருக்கிறது!
//
அண்ணாச்சி நெம்பப் பேசுனா, நான் உங்களுக்கு போதிக்கிற அம்மணிகிட்ட பேச வேண்டி வரும்...
//
ம்ம்ம்ம்....ஏன் இந்த கொல வெறி?? ஒரு மனுஷன் நல்லா இருக்கது பிடிக்காதே :0))
பழமைபேசி said...
//கட்டுடைப்பு என்ற ஆயுதம் எளிதாய்க் கையில எடுத்துக் கொண்டமையே காரணம்....//
கட்டுடைக்கிறோம் என்று கட்டுக் கோப்பை இழந்து விட்டு வருந்திப் பயனில்லை. கட்டை ஏன் உடைக்க வேண்டும் ? அது அடிமைத் தளையாக இல்லாத பட்சத்தில்?! இதை சரியாக எவரேனும் புரிந்து கொண்டு பதில் சொல்வார்களா? பார்க்கலாம்!
ஒழுக்கத்தை மட்டுமே காப்பியங்கள் போதித்தன என்று சொல்வதற்க்கில்லை, உலகம் ஒரு சிறந்த அங்காடி அங்கு நமக்குத் தேவையான சிறந்த விசயங்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை நம்மிடமே இருக்கிறது என நம்புபவர்களும் சிலர் இருக்கலாம் .தேவைக்குத் தக்க பயன்பாடு .
//
ஒரு விடயத்தைப் பற்றி நமது எதிர் கருத்தை தெரிவிப்பது என்பதற்கும்...திணிப்பது என்பதற்கும் நிச்சயம் நிறைய வேறுபாடுகள் உண்டு தானே?!எனக்கென்னவோ இப்புத்தகத்தில் பெரியாரின் எழுத்துக்களில் தெரியும் கடுமை திணித்தல் ரகமாகவே தோன்றுகிறது.
//
திணித்தலாகவே இருக்கக் கூடும்....ஆனால், பெரியாரின் இந்த கருத்துக்களுக்கான கால கட்டத்தையும் நீங்கள் இணைத்துப் பார்ப்பது நல்லது....நூற்றுக்கணக்கான வருடங்களாக ஒரு சமுதாயத்தை, ரத்தமும் சதையும், வீரமும், துக்கமும், காதலும், சோர்வும் உடைய மனிதர்களை நீ தீண்டத்தகாதவன், கோயிலுக்குள் வரக் கூட உனக்கு உரிமையில்லை, நீ பார்த்ததால் சாமிக்கு தீட்டு (ஆமாம், சாமிக்கே தீட்டு) என்று ஒதுக்கி வைக்கப்பட்ட போது, அந்த சாமியின் மறுபக்கத்தை பற்றி பேசியே ஆக வேண்டியிருக்கிறது...
பெரியாரின் குரல் கலகக் குரல்...ஆயிரக்கணக்கான வருடங்களாக ஊறிப் போன அமைப்பை எதிர்த்து தனியொருவனாக குரல் கொடுக்கும் போது உரக்க தான் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது....அது ஒரு விதமான ஷாக் ட்ரீட்மென்ட்!
//
சமூகம் என்ற ஒரு கட்டமைப்பில் வாழும் போது சில நியாயமான பயங்களும் அவசியம் தான். அழுக்கை உருட்டி உருவம் செய்த பொம்மை தான் விநாயகர்...பிள்ளையார் என்றும் வாதிக்கிறார்கள். சரி ;ஓரினச் சேர்க்கை பற்றி வாதிக்கையில் அய்யப்பனை எள்ளுகிறார்கள் ...சரி இருக்கட்டும் .இந்துக் கடவுள்கள் கற்பனை உருவங்கள்...அதுவும் சரியே .
//
ஒத்துக் கொண்டதற்கு நன்றி :0))
சிறு திருத்தம்...இந்து கடவுள்கள் மட்டுமல்ல, எல்லாக் கடவுள்களும் கற்பனையே...All are just a fantasy!
இது ஒரு கருத்தியல் விவாதம் மட்டுமே...இப்போது நான் விடை பெறுகிறேன். மறுமொழிகள் நாளை தொடரும்
//
இவையெல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டுமே இவற்றால் பலரது மண்டைகள் உடையாமல் இருக்கும் வரை. இவற்றால் பலரது ரத்தம் தெறிக்காமல் இருக்கும் வரை...வெறும் கற்பனை உருவங்கள் ...ஆரியர்களின் சுயநலத்துக்காக உருவாக்கப் பட்ட மாயத் தோற்றங்கள் .எல்லாம் சரி தான். அப்படி இருக்கையில் வெறும் கற்பனைக்காக ஏன் மதம் சார்ந்த சண்டைகள் இட்டுக் கொள்ள வேண்டும்? வடை தானே முக்கியம் வடை சுற்றித் தரும் காகிதம் முக்கியமென்று ஏன் மோதிக் கொள்கிறார்கள்?
//
பெரியாரின் நோக்கம் அவை வெறும் கற்பனை என்று நிறுவுவது அல்ல...அவர் மத அறிஞரோ, வரலாற்று வல்லுநரோ இல்லை....அவரது அடிப்படை நோக்கம் ஒரு குறிப்பிட்ட சமூகம் தங்களை உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் கீழானவர்கள் என்றும் நடத்தி வந்ததின் அடிப்படையை தகர்ப்பது...
ஆக, மத நம்பிக்கை வெறும் காகிதம் அல்ல...வடை கூட அல்ல, அஸ்திவாரமே அது தான்.....எதை ஆதாரமாக வைத்து அந்த சமூக கட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த ஆதாரத்தை அடித்து உடைப்பது தான் நோக்கம்!
கடவுள் மறுப்பு என்பதும், புனித பிம்பங்கள் உடைப்பும் வெறும் கருத்தியல் வாதம் அல்ல...அது வாளேந்தாமல் நடத்தப்பட்ட போர்.
//
மதங்கள் வெறும் சட்டைகள் தான் என்று எங்கோ படித்தேன். சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொள்ள வேண்டாம் ...அட துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு ...முடை நாற்றம் ...என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?
//
நம் சட்டை என்று நீங்கள் உரிமையோடு சொல்கிறீர்கள்...ஏனெனில் பெரியாரின் காலகட்ட பிரச்சினை இன்று (பல இடங்களில்) இல்லை...
ஆனால், இந்துக்களையே ஜாதி காரணம் காட்டி பல கோயில்களில் அனுமதிக்காத காலம் இருந்தது....இது உண்மையா இல்லையா?? சட்டையே இல்லாத அவனிடம், இது நம் சட்டை என்று எப்படி சொல்ல முடியும்??
//
நான் இந்துக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்...முகமதியனாகப் பிறக்க வேண்டும்...கிருத்தவனாகப் பிறந்தே ஆக வேண்டும் என்றெல்லாம் யாரும் தீர்மானம் செய்து கொண்டு பிறத்தல் சாத்தியம் இல்லையே?!மதங்கள் மனங்களைப் பண்படுத்த அல்லவோ பிறப்பிக்கப் பட்டன.
//
இப்படித்தான் எல்லாரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்....இல்லை, மதங்கள் உண்மையிலேயே மனங்களை பண்படுத்த பிறக்கவில்லை...அன்றைக்கிருந்த அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, அறியாமை, பொழுது போக்கு சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே மதங்கள் தோன்றின என்பது என் எண்ணம்...
கடவுள் என்று ஒரு உருவம் இருக்கிறது என்று சொல்லி சொல்லி மதங்கள் மிகப்பெரும் தீமையையே செய்திருக்கின்றன...
//
அப்படி இருக்கிறது சீதையை பஜாரி என சாடுவது. ராமனும் சீதையும் கடவுள்கள் அல்ல ...இது சரியான வாதம். ராமாயண காலம் பொய்யானது ...இது முற்றிலும் சரியே ,ஆதாரங்களும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.இதையும் ஏற்றுக் கொள்ளலாம். எல்லாம் சரி ஆனால் இப்படி ஆதாரப் பூர்வமாக சான்றுகள் கொடுத்து விளக்கிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று சடுதியில் பக்திமான்களின் மனதைப் புண்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கற்பனைக் கதைக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்து சேற்றை வாரி இறைக்க வேண்டுமா?
//
முன்பே சொன்னது போல், அது ஒரு அதிரடி என்ட்ரி :)))
பல சீர்கேடுகளின் அடிப்படை அந்த கற்பனைக் கதை என்னும் போது, மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லிய ஒரு குழுவின் அடிப்படை அஸ்திவாரம் இந்த கற்பனைக் கதைகளே எனும் போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது...
ஆனால், பெரியார் இந்த அதிரடிகளை குறைத்து, கருத்தியல் வாதமாக கொண்டு சென்றிருந்தால் அவரது கருத்துக்களை மேலும் பலர் ஏற்றுக் கொண்டிருப்பார்களோ என்ற எண்ணமும் எனக்கிருக்கிறது...
//
கதையை கதை என்று மட்டுமே வாசிக்கலாம் தானே? இதில் தவறேதும் உண்டோ?
நீ இறை பக்தியோடு இரு ,ராமனை வணங்கு ...சீதையை அன்னையாய் பாவித்தே தீர வேண்டும் இல்லையேல் உயிர் சேதம் எனும் கட்டாயம் இங்கே யாருக்கும் இல்லையே? பிறகேன் இத்தனை காட்டமான விமர்சனம்?! மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் குழப்பமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எந்த விதத்தில் சமுதாய நற்பணியாம் ?
//
அவரது கருத்துகளில் எதிர்ப்பு இருக்கலாம்...ஆனால், என்ன குழப்பம் என்று எனக்கு புரியவில்லை...
//
நீ சாமி கும்பிடுவாயா? சரி செய்துகொள் அது உனது உரிமை...எனக்கதில் நம்பிக்கை இல்லை... இது எனது உரிமை. இப்படி முடிப்பது நல்லதா? இல்லை சான்றுகளுடன் விளக்குகிறேன் சகலமும் என சகதியில் காலை விட்டுக் கொண்டு சிரிப்பது நல்லதா?
//
கும்பிடுவதும், கும்பிடாததும் தனி மனித உரிமை....இதை எவரும் தடுக்க முடியாது...அது பெரியாராக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி....
ஆனால் கும்பிட வந்தவர்கள் தடுக்கப்பட்டார்கள்....தூரத்தில் நிறுத்தப்பட்டார்கள் என்பது தான் வரலாறு....அவர்களை எதிர்த்து தான் பெரியார் குரல் கொடுத்தார் என்பதும் வரலாறு....
தனி மனித உரிமை எங்கே முடிகிறது, துஷ்பிரயோகம் எங்கே ஆரம்பிக்கிறது??? என் உரிமை என்று சொல்லி அடுத்தவனின் உரிமையை தட்டி பறிக்க ஆரம்பித்தால் அது எப்படி சரியாகும்??
பெரியாரின் கருத்துக்கள் மதத்தை பற்றி மட்டுமே அல்ல, அந்த மதத்தை அடிப்படையாக வைத்து மற்றவர்களை இழிவுபடுத்தியவர்களின் அடிப்படையை உடைக்க!
//
.குழப்பமோ செய்வதில்லை எனத் தீர்மானித்து வாழ பல நல்ல கொள்கைகளையும் கொண்டது தான் இந்து மதம். இந்துக் கடவுள்களின் உருவத்துக்கும் அவற்றின் தோற்றத்தின் பின்னுள்ள புனைவுகளுக்கும் கூட சில நல்ல விளக்கங்கள் இருக்கலாம். வெறுமே வாதத்துக்காக நாம் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது.
//
நீங்கள் ராமாயணத்தையும் மற்ற பல கதைகளையும் வெறுமனே மதக் கருத்துக்கள் என்று பார்க்கிறீர்கள்....ஆனால் அந்த கதைகள் ஒரு வியாபார நிறுவனம் என்ற தளத்தில் பார்த்தால் அதன் விளைவுகள் விளங்கலாம்...
//
3.எல்லா சாமிகளுக்கும் ஏன் நிறைய கைகள் இருக்கு...அவ்ளோ கை இருந்தா ரொம்ப பசிச்ச உடனே அத்தனை கைகளையும் சீக்ரமா எப்படி கழுவிகிட்டு சாப்பிட முடியும்? ரொம்ப லேட் ஆகாதா?
//
நிறைய கை இருந்தா நிறைய சாப்பிடலாமே :0))
//
மிஸஸ்.தேவ் said...
கட்டுடைக்கிறோம் என்று கட்டுக் கோப்பை இழந்து விட்டு வருந்திப் பயனில்லை. கட்டை ஏன் உடைக்க வேண்டும் ? அது அடிமைத் தளையாக இல்லாத பட்சத்தில்?! இதை சரியாக எவரேனும் புரிந்து கொண்டு பதில் சொல்வார்களா? பார்க்கலாம்!
//
ஆக, அடிமை சாசனமாக இருக்கும் பட்சத்தில் அதை உடைக்கத்தான் வேண்டும் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்...அதைத் தான் பெரியார் செய்தார் :0))
கடைசியாக...
நான் பெரியார் பக்தனல்ல(!)....அவரது பல்வேறு கருத்துக்களுடன் எனக்கு முரண்பாடு உண்டு....ஆனால், அவரது கடவுள் மறுப்பு கொளகையை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன்...
இன்றைக்கும் பெரியாரின் கடவுள்/மத எதிர்ப்பு கருத்துக்கள் மிக அவசியமானவையாக இருக்கின்றன....ஆனால் சில மாறுபாடுகளுடன்!
குறிப்பாக ஜாதி அபிமானம்....பார்ப்பனர்கள் மட்டுமே இதை செய்வதில்லை...இந்த நோய் இன்றைக்கு எல்லா ஜாதியிலும் உண்டு...பார்ப்பனர்களை மட்டுமே குறை சொல்வது மோசடி...
அடுத்து மூடநம்பிக்கைகள்....இது இந்து மதத்தில் மட்டுமல்ல....எல்லா மதங்களிலும் இருக்கிறது...
இனி உங்கள் இரு கருத்துகள் பற்றி எதிர்மறை
1. மதம் சட்டைகள்
2. பிள்ள்யார் இடுப்பு பாம்பு
ஒவ்வொன்றாக:
1. கட்வுள் ஒருவரே. அவரை எப்படித்தொழுதாளென்ன? என்றும் சொல்லலலாம். அப்படியே வாழலாம். ஆனால் ஒரு பிடிப்பு அதில் இராது. மேலும், அப்படி வாழ்பவன், எப்படியும் வாழலாம் எனக் கொள்கையுடையவனாதலால், அவன், கெட்டது, அதாவ்து, உலகம் பழித்தொன்றை, இறைவன் சொன்னதாகச் சொல்லி வாழ்வான். இதற்கு ஒரு எ.டு. நரபலி.
இறைவன் குணங்கள் இவைகள் என தாறுமாறாக இறைவனைப் பழிக்கும் குணங்க்ளை அவனுக்கு இட்டு வாழ்வான்.
எ-டு. ஜாதிகள். இறைவன், ஒரு இனத்தை தன்னிடம் சேர்த்துக்கொள்ள்வைல்லை; என்வே அதை அடிமையாக் நட்த்தலாம் என இந்துப்பார்ப்பனர்கள் மதத்தின்பெயரால் செய்த கொடுமை.
இப்படிப்பட்ட ஒழுக்கக்கேட்டை சீர்செய்ய வந்தவையே மதங்கள் ஆகும். அதையும் தவறாகப் பயன்படுத்தினால், தவறு மனிதனிடமே, மதத்தை படைத்தோரிடம் இல்லை.
சீக்கியர்கள், இந்துகள், கிருத்தவர்கள், இசுலாமியர்கள் போன்று அனைவருக்கும் மதங்கள் மதமறைநூல்கள் உள. அவற்றுள் அவர்கள் எப்படி தம்மதத்தை வாழ்க்கையில் கடைபிடித்து நல்வாழ்க்கை வாழவேண்டுமென போதிக்கின்றன.
இவற்றைச் சட்டைகள் எனச் சொல்லி வேண்டும் போது அணிந்து, வேண்டாதபோது கழற்றி வீசியெறிந்து விட்லாம் என்கிறீர்களா?
சட்டைகள் அழுக்கா? அப்படியென்றால் துவைத்த்ப்போடலாமா? இந்துமதத்தில் முடியும். ஆனால், இசுலாம் போன்ற மதங்களில் முடியாது. எழுதியது எழுதியதே என ஜமாலுக்குத் தெரியாதா?
2. நாளை சொல்வேன் என நீங்கள் சொன்னது:
பிள்ளையாரின் இடுப்பு பாம்பு. சிவனின் கழுத்துப்பாம்பு போன்றவற்றுக்கு உட்பொருள்கள்.
என் கேள்வி:
இவற்றால் யாருக்கு என்ன இலாபம்.? என நினத்தீர்களா?
அதே வேளையில், மூடநம்பிக்கைகளைச் சாடுப்வர்கள் தாக்கலுக்குள்ளாகிறார்கள்.
இங்கு, இன்றைய செய்தியொன்றைச் சுட்ட விழைகிறேன்.
தொலைக்காட்சியில் இன்று வந்தது:
ஒரு கிராமத்தில், ஒராண்டு காலமாக குழந்தைகள் விட்டுவிட்டு செத்துமடிந்தன.
ஊர்பூசாரி, சாமிக்குத்தம் என்றான். மக்கள் நம்பி பூசை புனஸ்காரம் என்று இனியாவது சாவு நேராமல் இருக்கவேண்டும் என படையல் வைத்து வேண்டினார்கள்.
மூடநம்பிக்கைகளைச் சாடி மக்களைத் திருத்துவோர் அங்கு சென்று விசாரித்தார்கள். மக்களுக்குச் சொன்னார்கள். குழந்தைகள் சாவுகளுக்கு ஏதொ ஒரு துர்சக்தி கரணியமன்று. இதற்கு ஒரு மனிதனோ மனிதர்களோ கரணியமாக இருக்கலாம். அவனைத் தேடுங்கள். பூசார்கள் அவர்களை அடித்து விரட்டினர். ஆனால், அக்கழகத்தர்ர், போலீசாரிடம் சென்று விசாரியுங்கள் என முடுக்கிவிட்டபடியே இருந்தார்கள்.
விளைவை இன்று சன் டி.வி ஒலி, ஒளி பரப்பியது!
என்ன் அது:
ஒரு குறி சொல்லும் அவ்வூர்ப்பெண்ணொருத்தி, தன்குறி சொல்வது தப்பாமல் இருக்கவேண்டும் என செய்யும் பிரார்ததனையாக, 7 குழந்தைகளை, எலிமருந்து கலந்த உணவை அக்குழந்தைகளுக்கு ஊட்டி கொன்றாள். அவள் கணவனும் உடந்தை. ஊர் மக்களிடம் அவள் இது ஒரு ஊர்மக்கள் செய்த தெய்வக்குற்றம் என சொல்லி, பரிகார பூசைகள் செய்யசொல்ல அவர்கள் அனைவரும் நம்பினர்.
நாளை செய்த்திதாள்களில் வரும். படித்துக்கொள்ளுங்கள்.
எது, சமூகத்துரோகம்? இப்படிப்பட்ட மக்களை ஏமாற்றும் ‘கட்வுள் ஆசாமிகள’ இனம்கண்டு மக்களை உசார்படித்தி தங்கள் குழந்தைகளைக் காத்துக்கொள்ளுங்கள் எனசொல்வதா?
நீஙகள், பிள்ளையார் இடுப்புப்பாம்பின் கரணியத்தை அறிந்து அவர்களுக்கு சொல்வது ஒரு சமுகசேவையா? இதுவா தேவை?
//வடை தானே முக்கியம் வடை சுற்றித் தரும் காகிதம் முக்கியமென்று ஏன் மோதிக் கொள்கிறார்கள்?//
//துவைத்துப் போட்டுக் கொள்ள வழி இருக்கையில் அதைச் செய்யலாம் தானே? சட்டை அழுக்கு ...முடை நாற்றம் ...என்று சொல்லிச் சொல்லி நம் சட்டையை நாமே அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன லாபம்?//
//மதங்கள் மனங்களைப் பண்படுத்த அல்லவோ பிறப்பிக்கப் பட்டன.//
//சென்னையில் வாழ்ந்து கொண்டு மெட்ரோ வாட்டர் வேண்டவே வேண்டாம் என தைரியமாக வெறுக்க முடியுமா?//
//பக்திமான்களின் மனதைப் புண்படுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கற்பனைக் கதைக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுத்து சேற்றை வாரி இறைக்க வேண்டுமா?//
//மூட நம்பிக்கைகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் குழப்பமான சிந்தனைகளைத் தோற்றுவிப்பது எந்த விதத்தில் சமுதாய நற்பணியாம் ?//
//இல்லை சான்றுகளுடன் விளக்குகிறேன் சகலமும் என சகதியில் காலை விட்டுக் கொண்டு சிரிப்பது நல்லதா?//
அனல் பறக்கும் விவாதம் மிஸஸ் தேவ்... நல்ல எழுதி இருக்கீங்க...
//என்ன பதில் சொன்னார்கள் தாத்தாவும் பாட்டியும்???
நாளை சொல்கிறேன் . //
ஆவலுடன் காத்திருக்கிறேன்...
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
மூடநம்பிக்கையும் குருட்டு பழக்கமும் சமுகத்தின் முதல் பகைவன்
சட்டையை துவைக்க பயன்படும் ஆற்று நீரே துர்வாசம் வீசும் சாக்கடையாய் அல்லவா இருந்தது இன்னும் இருக்கிறது இதில் எங்கே போய் சட்டையை துவைப்பது அம்மணி ….
இந்த அழுக்கு சட்டைகளை மாற்ற முடியாது “அடித்தே துவைக்க ” வேண்டும் என்றே அதை தந்தை பெரியார் தனது பகுத்தறிவு கொள்கையால் அடித்தார் …
ஓரறிவு இரண்டறிவு மூன்றைவு நான்கறிவு ஐந்தறிவு ஆறறிவு என உயிர்களை வகைப்படுத்தி அதில் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று பீத்தி கொள்ளும் நாம் காலம் காலமாய் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? கடவுள் மனிதனை படைத்தான் என்றார்கள் ஆனால் இன்று மனிதர்களாகிய நாம் தான் நாளுக்கு ஒரு கடவுளை படைத்தது கொண்டு இருக்கிறோம்.
பெரியார் தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைத்தவர் இல்லை தான் சார்ந்துள்ள சமுதாயமும் நாடும் வாழ வேண்டும் என்று நினைத்தார் அதனால் தான் "எனது சீர்திருத்தம் என்பது பகுத்தறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதே ஆகும்" என்றார்.
மேலும் கற்பனை கதை என்று தாங்களே சொல்வதாலும், இன்று பல மொழிகளில் பல நாடுகளில் பல வகையான ராமாயணங்கள் நூற்று கணக்கில் இருப்பதாலும் அதில் பெரியார் சொன்ன கருத்துக்கள் எந்த வகையிலும் தவறில்லை...
தங்களின் அடுத்த பதிவுக்காக காத்து கொண்டிருபவர்களில் நானும் ஒருவனாய்....
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
மூடநம்பிக்கையும் குருட்டு பழக்கமும் சமுகத்தின் முதல் பகைவன்
சட்டையை துவைக்க பயன்படும் ஆற்று நீரே துர்வாசம் வீசும் சாக்கடையாய் அல்லவா இருந்தது இன்னும் இருக்கிறது இதில் எங்கே போய் சட்டையை துவைப்பது அம்மணி ….
இந்த அழுக்கு சட்டைகளை மாற்ற முடியாது “அடித்தே துவைக்க ” வேண்டும் என்றே அதை தந்தை பெரியார் தனது பகுத்தறிவு கொள்கையால் அடித்தார் …
ஓரறிவு இரண்டறிவு மூன்றைவு நான்கறிவு ஐந்தறிவு ஆறறிவு என உயிர்களை வகைப்படுத்தி அதில் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று பீத்தி கொள்ளும் நாம் காலம் காலமாய் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் ? கடவுள் மனிதனை படைத்தான் என்றார்கள் ஆனால் இன்று மனிதர்களாகிய நாம் தான் நாளுக்கு ஒரு கடவுளை படைத்தது கொண்டு இருக்கிறோம்.
பெரியார் தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைத்தவர் இல்லை தான் சார்ந்துள்ள சமுதாயமும் நாடும் வாழ வேண்டும் என்று நினைத்தார் அதனால் தான் "எனது சீர்திருத்தம் என்பது பகுத்தறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதே ஆகும்" என்றார்.
மேலும் கற்பனை கதை என்று தாங்களே சொல்வதாலும், இன்று பல மொழிகளில் பல நாடுகளில் பல வகையான ராமாயணங்கள் நூற்று கணக்கில் இருப்பதாலும் அதில் பெரியார் சொன்ன கருத்துக்கள் எந்த வகையிலும் தவறில்லை.
தங்களின் அடுத்த பதிவுக்காக காத்து கொண்டிருபவர்களில் நானும் ஒருவனாய்....
Post a Comment