Friday, December 19, 2008

"மத்தகம்"...ஒரு யானையின் கொம்புகளின் ஊடே கிட்டிய பயண அனுபவம்

ஜெயமோகனின் "மத்தகம்" குறுநாவல் வாசித்தேன் இன்று.

நல்ல ஆழமான அழகான நடை,வாசிக்க...வாசிக்க கதை நீண்டு கொண்டே போவதைப் போல ஒரு பிரமிப்பு எனக்கு."கேசவன்" எனும் யானையை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு கதை நகர்கிறது.யானை இருந்தால் அதற்கு பாகனும் இருந்தாக வேணுமே?கேரளம் திருவட்டாரில் நடைபெறும் இந்தக் கதையில் ;கேசவனைப் பராமரிக்க ஒரு தலைமைப் பாகன் (சீதரன் நாயர்) அவருக்குத் துணையாக இரு துணைப் பாகன்கள்(அருணாச்சலம்,பரமன்) , இவர்கள் மூவருக்கும் எடுபிடியாக சுப்புக்கண்ணு.

இவர்களோடு இன்னும் சில ரசனையான கதாபாத்திரங்களைக் கொண்டு மிக அடர்த்தியாக நகர்கிறது நாவல் .இந்த குறுநாவலை வாசித்து முடித்த பின் அதன் தாக்கம் இன்னும் நீடிக்கிறது.இதே போன்றதோர் உணர்வு ;

நாஞ்சில் நாடனின் "எட்டுத் திக்கும் மத யானை" நாவலை வாசிக்கும் போதும் எழுந்தது .

பொன்னீலனின் "கரிசல் " நாவலை வாசிக்கும் போதும் இதே உணர்வு .

சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழி சிவா சங்கரன் பிள்ளையின் "செம்மீன்" நாவல் முதல் முறை வாசிக்கும் போதும் இதே உணர்வு தான் மேலெழுந்தது .

சொல்லப் போனால் தி.ஜானகிராமனின் "அம்மா வந்தாள் " கூட இந்த அளவு பாதிப்பை ஏற்ப்படுத்தியிருக்கவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் ...வருத்தம்...வாழ்வின் நிதர்சனம் பற்றிய பயம் இப்படி எந்த வார்த்தை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் சில நாவல்களை வாசிக்கும் போது அவற்றின் செறிவைத் தாங்காமல் ,அவை சொல்ல வரும் விஷயங்களின் கணம் பொறுக்காமல் மனம் அதைப் பற்றியே சில தினங்களாவது எண்ணிக் கொண்டு இருக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டு விடுகிறது...அது மட்டும் நிஜம்.

இயல்பில் இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை.அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து முடிக்கிறோம்.ஒருவர் வாழ்வை இன்னொருவர் வாழ முடியாது,"சிறைச்சாலையில் அச்சடித்த சோற்றைப் போல விதிக்கப் பட்ட வாழ்வையே நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்".அப்படிப் பட்ட வாழ்க்கையில் தான் எத்தனை இன்பங்கள்..துன்பங்கள்...சுவாரஷ்யங்கள்...அசுவாரஷ்யங்கள் ?!

சில பகிர்ந்து கொள்ளக் கூடியவை .பல விஷயங்கள் யாரோடும் பகிர முடியாத தன்மையுடனும் கடைசி வரை இருந்து விடுவதும் உண்டு. உதாரணம் அடுத்தவர் நமக்குச் செய்யும் துரோகங்களை...ஏமாற்றங்களை நாம் எளிதாக இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வோம் .அதே சமயம் நாம் யாருக்காவது செய்த துரோகத்தையோ...ஏமாற்றத்தையோ யாரிடம் இதுவரை பகிந்து கொள்ள முடிந்தது?அதை நம் மனசாட்சி மட்டுமே அறியும்.

"மத்தகம்" யானைக் கதை தான்;ஆனால் யானையைப் பற்றிய கதை மட்டும் அல்ல ! யானை என்பது ஒரு அடையாளம் தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தினர் பசு ,காளை,எருமை மாடுகளை வளர்ப்பதைப் போல கேரளத்தில் வீட்டுக்கு ஒரு யானை வளர்க்கும் பழக்கம் முன்பு உண்டு என்று எங்கோ படித்தேன்,யானை கட்டி தீனி போடுவதைக் காட்டிலும் யானை மேய்ப்பது அதை விடக் கடினம் தான் என்று இதை வாசித்தால் புரியும்.

யானைப் பாகன் பரமன் தான் இதில் கதை சொல்லி .அவன் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல ,தன் மனசாட்சியிடம் தன் வாழ்வைப் பற்றி பகிர்வதைப் போல கதை நெடுகிலும் அவன் பேசிக் கொண்டே போகிறான் .கதை நிகழ்வது அவிட்டம் திருநாள் உதயமார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் காலம் .அவரது ஆத்மார்த்தமான அன்பைப் பெற்றதே கேசவன் எனும் யானை,மகாராஜாவின் மீது கேசவன் கொண்ட அன்பும் அத்தகையதேபொதுவில் நாவல் யானைகளைப் பற்றிய நுண்ணிய விவரணைகளோடு நகர்ந்தாலும் கூட ;

அதை ஒட்டியே அன்றைக்கு இருந்த ராஜ குடும்பத்தின் அரசியல் சூழல் ...பாகன்களின் நடைமுறைக் கஷ்டங்கள்,இவற்றோடு அந்தக் காலத்தில் பெண்களின் நிலை,கூடவே கல்கி "பொன்னியின் செல்வனில்" விவரித்ததைப் போலவே வெள்ளம் வந்தால் அந்நாளைய மக்கள் அடைந்த துன்பங்கள் குறித்து இதிலும் சற்று விளக்கமாகவே செய்தி உண்டு.கேசவன் மட்டும் அல்ல அப்போது பட்டத்து யானையாக இருந்த மற்றொரு யானையைப் (நாராயணன்) பற்றியும் சுவாரஷ்யமாக விளக்கும் பகுதி ஒன்று நாவலில் உண்டு .

மொத்தத்தில் யானைகளும் மனிதர்களைப் போலவே தாம் மனதில் நினைத்ததை குறிப்பால் உணர்த்தக் கூடியவை என்று ஐயம் வந்து விடிகிறது சில இடங்களில்.கேசவனின் யானைக் கோபம் பல இடங்களில் பயத்தை ஏற்படுத்தினாலும் அவன் மீது ஒரு மரியாதையும் இழையோடவே செய்கிறது.

//"”ஒம்மாணை அண்ணா, ஒருநாள் இல்லெங்கி ஒருநாள் இந்தச் சவத்தை¨யும் வெஷம் வச்சு கொன்னுட்டு நானும் சாவேன். பாத்துக்கிட்டே இரும்…” என்றான் சுப்புக்கண். "//இந்த இடம் போதும் பாகன்கள் யானைகளைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல் பற்றி உணர்ந்து கொள்ள .

//நான் அதன் கண்களைப் பார்த்தேன். ஒரு சிறிய சிரிப்பு, மோதிரக் கல்லுக்குள் வெளிச்சம் தெரிவதுபோல, தெரிந்தது போல் உணர்ந்தேன்.//

சின்ன வயதில் ஊர்ப்பக்கம் பேசிக் கொள்வார்கள் "வில்லிக் கண்ணு சொளகுக் காது " என்று யானையின் காது பட சொல்லவே கூடாது அப்படி சொல்லி விட்டால் போச்சு யானை அப்படிச் சொன்னவர்களை விடவே விடாது விரட்டி...விரட்டி அடிக்கும் என்று.உள்ளூர பயம் இருந்தாலும் ...இதெல்லாம் சும்மா சுத்த ஹம்பக் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் !!!இதுநாள்வரை.இப்போது என் எண்ணம் மாறி விட்டது இந்த கதை படித்ததில் இருந்து ,

மோப்ப சக்தியும்,ஞாபக சக்தியும் யானைக்கு அதிகம் தான் போல !இல்லாவிட்டால் தன்னை ஆதரித்த தன் ஆப்த நண்பரான மஹாராஜா இறந்து விட்டதை ஊருக்கு முன்னாள் ஒரு யானையால் ஊகிக்க இயலுமா?மஹாராஜாவின் அன்பைப் பெற்று விட்டோம் என்று கேசவன் அறிந்ததால் தான் அதன் அட்டகாசம் அதிகளவில் இருந்ததோ என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் கேசவன் தானும் தன்னை ஒரு மகாராஜாவாகப் பாவிப்பதைப் போல பல இடங்களில் அதன் செயல்பாடுகள் இதில் சித்தரிக்கப் பட்டுள்ளன.

தன்னை ஏசியதால் தலைமைப் பாகன் சீதரன் நாயரை தும்பிக்கையால் சுழற்றி வீசி காலால் மிதித்து ஒரு காலை செயல் பட விடாமல் அடித்து விட்டுப் போகும் இடமாகட்டும்...அதே சீதரன் நாயரை வழிப் பயணத்தின் போது யாரோ ஒரு வண்டிக் காவலன் இழிவாகப் பேசியதைக் கேட்டதும் அக்கணமே அவனை துதிக்கையால் பிய்த்து எறிந்து கொல்லும் போதாகட்டும் கேசவனைப் பார்த்தால் பயம் தான் வருகிறது.

கதையில் நிறைய மலையாள வாடை வீசினாலும் அதன் போக்கில் நம்மை அறியாமல் நாம் ஒன்றித்தான் போய்விட வேண்டும் .ஏதோ ஒரு நல்ல திரைப் படம் பார்த்த எபெக்ட் தான் வருகிறது,அஸ்டமங்கலம்...பற்றிய விளக்கம்...யானையை அலங்கரிக்கும் விதம்...வர்ணனைகள்...யானையைப் பற்றிய உருவ வர்ணனைகள்,எல்லாம் அருமை.

பெண்களின் நிலை தான் அந்நாளில் சகிக்க முடியவில்லை ,பெண்கள் காமத்திற்கு மட்டுமே என்ற எண்ணம் அப்போது இருந்திருக்க வேண்டும்?! நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் சாமர்த்தியமானவர்களாக காட்டப் பட்டாலும்,போகத்திற்கு மட்டுமே அப்போது பெண் பயன்பட்டால் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது .அம்பிளி எனும் பெண் "பத்துப் பொன் கொண்டு வந்தால் போதும் அவளிடம் ஒரு இரவைக் களிக்கலாம்" எனும் வரிகள் அவள் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது . மோகத்தில் தன்னை மறிக்கும் கேசவனின் துணைப் பாகன் பரமனிடம் அவள் சொல்வதாக வரும் வரிகள் "கட்டணுமா?....கெடக்கனுமா? " இதில் அவளின் சாமர்த்தியம் தெரிந்தாலும் ஒரு திடுக்கிடலையும் ஏற்படுத்துகிறது .

தன் உடனிருக்கும் பாகன் அருணாச்சலத்தை மிரட்டி அவனது ஆசைநாயகியை பரமன் அடைவது அவன் மீது பெருத்த கோபத்தை தருகிறது .முடிவில் எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? பெண்ணை காரணமாக வைத்தே பிரச்சினைகள் எழுகின்றன .அதற்கு அவள் எப்படியாவது காரணப் படுத்தப் படுகிறாள் என்ற நிஜம் முகத்தில் அறைகிறது.காமம் கண்ணை மறைக்கையில் நட்பு...சொந்தம்...ஆசான்...அணுக்கன்...என்ற உறவுகளெல்லாம் மரியாதை இழக்கின்றன இதை அருணாச்சலத்தை தந்திரமாக கொன்று விட்டு பரமன் அந்தப் பழியை கேசவன் மீது போடும் போது உணரலாம்.

நாவல் முழுமையிலும் கேசவனே ஆட்சி செய்கிறான் கூடவே பரமனின் வரையறுக்கப் படாத...திட்டமிடப் படாத தன் போக்கில் நடத்தப் படும் துரோகங்களும் காணக் கிடைக்கின்றன .அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒவ்வொரு கட்டமும் கூடவே "இதைத் தவிர வேறு என்ன செய்வது? " என்ற உணர்வையும் ஏற்படுத்தாமல் இல்லை.

கடைசியில் மஹாராஜா இறந்ததும் கேசவன் தன்னைத் தானே ஒடுக்கிக் கொண்டு முந்தைய துணைப் பாகனும் சீதரன் நாயர் படுக்கையில் வீழ்ந்ததும்...அருணாச்சலமும் கொள்ளப் பட்ட பின் தற்ப்போதைய தலைமைப் பாகனான பரமன் முன்னிலையில் ஒரு அறியாக் குழந்தை போல பயந்து சொல் பேச்சு கேட்டு கூனி குறுகி நிற்கும் காட்சியில் நாவலை வாசிப்பவர் நெஞ்சில் துக்கமே மிஞ்சுகிறது .

"மத்தகத்தில் ஏறி அமர்கிறான் பரமன்"

கதையில் ஓரிடத்தில் மஹாராஜா சொல்வதாக ஒரு வரி வரும்.

//”இனி என் கேசவனுடெ மீதெ ஆதிகேசவனும் ஞானும் மாத்ரமே கேறுக பாடுள்ளு. வேறெ ஆரு கேறியாலும் கேறியவனுடைய தல வெட்டான் ஞான் இதா கல்பிக்குந்நு…” //

எப்பேர்ப் பட்ட ராஜகட்டளை ?!!

//இரு கைகளும் மார்புகளை மூடி வாய்பொத்தி, குனிந்து நின்று ஆசான் மிகமெல்லிய குரலில் ”அடியன். உத்தரவு” என்றார். அதன்பிறகு ஆறாட்டு’ எழுந்தருளல் இரண்டுக்கும் ஆதிகேசவனின் உற்சவத்திடம்புடன் குட்டிப்போத்திகள் மட்டும் கேசவன் மீது ஏறிக்கொள்வார்கள். நினைக்கும் போதெல்லாம் திருவனந்தபுரத்தில் இருந்து கேநசவனைப்பார்க்க வரும் இளையதம்புரான் ஏறிக்கொண்டு ஆற்றுப் படுகையில் அலைவார். வேறு யாரும் அவன்மீது ஏறியதே இல்லை//

அதற்குப் பின் அதன் மீது வேறு யாரும் ஏறும் தைரியமே இல்லாதிருந்த நிலையில் இறுதிக் கட்டத்தில் பரமன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல சொல்லவான்.

//மெல்ல ஒரு அடி எடுத்து வைத்தேன். அவன் தன் துதிக்கையை சுருட்டிக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டான்.
நான் சிலகணங்கள் அசையாமல் நின்றேன். பின்பு புன்னகை புரிந்தேன். என் பிரம்பை வீசியபடி கேசவனை நெருங்கினேன். நான் நெருங்க நெருங்க அவனுடைய காதுகள் நிலைத்தன. அருகே போய் அவனுடைய கொம்புகளின் அருகே நின்றேன். பிரம்பால் அவன் காலை அடித்தபடி ”ஆனே, காலெடு ஆனே” என்றேன். கேசவன் மிக மெல்லத் தன் முன்னங்காலைத் தூக்கி மடித்துக் காட்டினான் அதை நம்ப முடியாதவன் போல அவனுடைய கண்களைப் பார்த்தேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து நீண்ட தடமாக இறங்கியிருந்தது. மடித்த கால்களில் கால் வைத்து எம்பி கழுத்துக் கயிற்றைப் பிடித்து மேலேறி அவனுடைய உயர்ந்த மத்தகத்தின் மீது அமர்ந்து கொண்டேன்.//
முற்றும்.

இந்த நாவல் எல்லோருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் புரிந்து வாசித்தால் அருமையான நாவல்.

4 comments:

Anonymous said...

ஒருத்தருக்கு பிடிச்சது இன்னொருத்தருக்கு பிடிக்கணும்னு கட்டாயம் இல்லை. நீங்க பாட்டுக்கு விமரிசனத்தை போடுங்க. :)

ரவி said...

ஜெயமோகன் சார் எழுதினதை எப்படி "புரிஞ்சு" வாசிக்கறதுன்னு தெரியலை...

இருந்தாலும் நல்லதொரு ரிவ்யூ !!!!

KarthigaVasudevan said...

வாங்க சின்ன அம்மிணி

//ஒருத்தருக்கு பிடிச்சது இன்னொருத்தருக்கு பிடிக்கணும்னு கட்டாயம் இல்லை. நீங்க பாட்டுக்கு விமரிசனத்தை போடுங்க. :)//

அப்படியே செய்திடலாம் மேடம்

வாங்க செந்தழல் ரவி

//ஜெயமோகன் சார் எழுதினதை எப்படி "புரிஞ்சு" வாசிக்கறதுன்னு தெரியலை...

இருந்தாலும் நல்லதொரு ரிவ்யூ !!!!//

நல்ல வேலை இந்த ரிவ்யூ புரிஞ்சதே...அதையும் நீங்க புரியலைனு சொல்லாததுக்கு நன்றி .அடிக்கடி வந்து கருத்துக்களை சொல்லுங்க .

அது சரி(18185106603874041862) said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது...ஆனால் மிக முக்கியமான விஷயத்தை நீங்கள் தொடவில்லை என்று தோன்றுகிறது...(இல்லை, என் புரிதல் தவறா?)

முடிந்தால் நாளை எழுதுகிறேன்.