திருமணமாகி கடந்த ஐந்து வருடங்களில் சென்ற வருடம் தான் குல தெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்புகிட்டியது,எல்லாக் குல தெய்வக் கோயில்களைப் போலவே எங்களது கோயிலும் பஸ் அடிக்கடி வராத...விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பஸ்சே வராத ஒரு புராதன கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் தான் இருந்தது...;
ஒரு வழியாக காரில் போய் இறங்கினோம் .
குல தெய்வங்களுக்கென்றே ஓரு ஸ்பெஷல் கதை இருக்குமே!
அது நிஜமா இல்லை கற்பனையா?
கேட்டால் தெய்வ குத்தமாகி விடுமே?அதனால் கேட்கவில்லை.
ஆனால் கதையைக் கேட்கலாம் தானே?!
கிச்சம்மா :-
இது தான் எங்கள் குல தெய்வத்தின் பெயர். சரி இனி கதைக்கு வருகிறேன்.
ஓரு ஊரில் ஐந்து அண்ணன் தம்பிகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தனர்,அவர்களுக்கு ஒரே ஓரு தங்கை அவள் தான் கிச்சம்மா.அண்ணன்களின் செல்லத் தங்கையாக வளர்ந்து அந்த ஊரில் செல்வாக்கான குடும்பத்தின் ஒரே பெண் வாரிசாக இருந்த கிச்சம்மாளுக்கும் வழக்கம் போல அண்ணிகள் கெடு மதி கொண்டவர்களாகவே அமைந்து அவளது வீட்டிற்கு வாழ வருகின்றனர்.
முதலில் சின்ன சின்ன உரசல்கள் மட்டும் தான் .வந்த அன்னிகளில் ஒருத்திக்காவது நாத்தனாரின் மேல் துளி பிரியம் கிடையாது.எப்போதடா இவளை எவன் தலையிலாவது கட்டி வீட்டை விட்டுத் துரத்துவோம் என்று இருந்திருப்பார்கள் போல?!
அண்ணன்கள் மட்டும் தான் ஆதரவு...மற்றபடி பெற்றவர்களும் கிச்சம்மல் பிறந்த சில வருடங்களில் கடமை முடிந்ததென இறந்து விட ,இப்போதைக்கு அண்ணன்கள் வேலைக்கு என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டால் கிச்சம்மாவை சாப்பிடச் சொல்லவோ ...நலம் பேணவோ...சிரித்துப் பேசி கொண்டாடவோ வீட்டில் ஓரு நாதியுமில்லை.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் தனிமையும்...தனக்கு யார் இருக்கிறார்கள் என்ற கழிவிரக்கமும் அவளை வாட்டத் தொடங்கியது .அப்போது அவர்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஓரு நாடார் குடி இருந்தார்...அவருக்கும் குடும்பம் உண்டு .கை ராட்டையில் நூல் நூற்று அதை விற்று அன்றாடம் பாடு பார்த்துக் கொண்டு அந்த ஊரில் அவர்களும் கொஞ்ச காலமாக வாழ்ந்து வந்தனர்.
அவரது வீட்டுப் பெண்கள் கிச்சம்மாவுடன் சிறிது அன்பாகப் பழகுவார்கள்.இவளும் எப்போதாவது அங்கே போய் கை ராட்டை சுற்றுவதுண்டு.முன்பு எப்போதாவது என்றிருந்த பழக்கம் பிற்பாடு அண்ணிகள் வந்ததும் அவர்களது உதாசீனத்தை தாங்க முடியாமல்...அதை அண்ணன்களிடமும் சொல்ல முடியாமல் ...மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ரெண்டும் கெட்டான் நிலையில் இருந்த அந்த அறியாப் பெண் கிச்சம்மா அன்பு கண்ட இடம் இதம் என்று எண்ணி அந்த நாடார் வீட்டுப் பெண்களுடனேயே பகல் பொழுது பெரும்பான்மையும் கழிக்கத் தொடங்கினாள்.
ராட்டையில் பேசிக் கொண்டே நூல் நூற்ப்பது...
ஒருவருக்கொருவர் விடுகதை போட்டு அதை அழிப்பது....
தாயம் ஆடுவது...
பல்லாங்குழி அடுவது...
ஆற்றுக்குத் தண்ணீர் எடுத்து வர ஒன்றாகப் போவது..வருவது
என்று ஓரு தாய் மக்களாகப் பழக ஆரம்பித்து விட்டாள்.இவளோ தெலுங்கு நாயக்கர் குடும்பத்துப் பெண் .அவர்களோ நாடார் குடும்பத்தார் .இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த அன்னிகளுக்கு சகிக்கவில்லை.நாம் அவளை நோகடித்து விரட்டலாம் என்று பார்த்தால் அவள் இப்படி சந்தோசமாக இனியும் இருப்பதா என்று நினைத்தார்களோ என்னவோ?
அண்ணன்கள் வீடு திரும்பியதும் தங்கையைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் ...;சாடை மாடையாக அவளது நடத்தை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்ல ஆரம்பித்தனர்.முதலில் தங்கள் தங்கை அப்படி இல்லை என்று மனைவிகளிடம் சண்டையிட்ட அண்ணன்மார்கள் நாளாக ...நாளாக தங்களது சண்டையில் வலுவிழந்தனர்.
காரணம் இந்த அறியாப் பெண் சில நாட்கள் அண்ணன்கள் வீடு திரும்பிய பிறகும் கூட வெகு நேரம் கழித்து வீடு திரும்பியது தான்.தூங்கவும் ...குளிக்கவும் மட்டுமே அவள் வீட்டில் இருப்பது என்று நிலைமை மாறி விட்டது.பாவம் அந்த அபலைப் பெண் தன்னை ஓரு மனுஷியாக மதித்து நடத்தும் இடத்தை நாடி அவள் ஓடிக் கொண்டிருப்பது வயல் வேலைகளில் அலுத்து சலித்து வீடு திரும்பும் அண்ணன்களுக்குப் புரிந்து விடும் என்று நம்பினாலோ என்னவோ?அவளும் அண்ணிகளின் உதாசீனம் பற்றி அவர்களிடம் எதுவும் இதுநாள் வரை சொன்னாலில்லை.
எங்கே குடும்ப ஒற்றுமை கெட்டு விடுமோ என்று கூட அவள் எண்ணினாலோ என்னவோ?சில நாட்கள் கழிந்ததும் மூத்த அண்ணன் வந்து கிச்சம்மாவிடம் ஒருநாள்;
நீ இனிமேல் அந்த நாடார் வீட்டுக்குப் போகதே ...என்று மட்டும் சொல்லி விட்டுப் போய்விட்டார்.காரணம் புரியாமல் மருகினாலும் அறியாத சின்னப் பெண் தானே ,அண்ணன்கள் வெளியேறியதும் அவள் பாட்டுக்கு நாடார் வீட்டுக்கு எப்போதும் போல் போய்வர இருந்திருக்கிறாள்.
அப்புறம் இளைய அண்ணன் வந்து ஒருநாள் தங்கையிடம்,ஏனம்மா பெரிய அண்ணன் தடுத்தும் கூட நீ அங்கே போய் வந்து கொண்டிருக்கிறாய்?போதும் இனி போகாதே ,என்றிருக்கிறான்.கிச்சம்மாவுக்கு இப்போதும் காரணம் தெரியாவிட்டாலும் எதிர்த்துக் கேள்வி கேட்டுப் பழக்கமில்லாத காரணத்தால் ...ஏதோ ஜாதிக்காகச் சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று அமைதியாகி விட்டாள்.
அதோடு அன்றைக்கு பெரிய அண்ணன் தங்கைக்கு நல்ல வரன் அமைந்திருப்பதாகவும் கூடிய சீக்கிரம் கல்யாணம் வைத்து விட வேண்டியது தான் என்றும் பேச்சு அடிபடவே;கிச்சம்மா சந்தோசமானாள் ...கூடவே கல்யாணமான பிறகு தான் எந்த ஊரில் வாழப் போகிறோமோ ?
கடைசி கடைச்யாக இன்று ஓரு நாள் மட்டும் அந்த நாடர் வீட்டுக்கு போய் கல்யாண சேதியைச் சொல்லி விட்டு வந்து விடலாம் என்று அண்ணாக்கள் வெளியேறியதும் இவள் அங்கே ஓடி இருக்கிறாள்.
சும்மாவே வாயை மென்று கொண்டிருந்த அண்ணிகளுக்கு அவள் கிடைத்தால் விடுவார்களா என்ன?அவளைப் பற்றி வாயில் வராத வார்த்தைகள் பல சொல்லி தங்களுக்குள் புறம் பேசிக் கொண்டு இருந்தனர்.
அந்நேரம் எதையோ மறந்து போய் வயலுக்குப் போன அண்ணன்களில் ஒருவர் மறந்த பொருளை எடுக்க வீடு வரவும் ஆவறது காதுகளில் மனைவிகளின் நாராசப் பேச்சு விழுகிறது .இப்படியா கல்யாணம் பேசி முடித்த ஓரு வயசு வந்த கௌரவமான குடும்பத்துப் பெண் வெட்கம் கேட்டுப் போய் அந்த வீட்டுக்கு இப்படி ஓடுவாள் .?
இத்தனைக்கும் அவளது அண்ணாக்கள் இத்தனை தூரம் கண்டித்தும் அவள் இப்படி செய்தாளானால் அண்ணன்களின் கௌரவம் என்ன ஆவது?ஊர் என்ன பேசும்?
நாளை பெண் பார்த்து நிச்சயிக்க வருபவர்கள் எப்படிக் குத்திக்காட்டி மட்டம் தட்டுவார்கள்?
இத்தனை திமிரும் ஆணவமும் இன்னொரு குடும்பத்தில் வாழப் போகும் பெண்ணுக்கு தேவையா?
அவளுக்கென்ன ஊரெல்லாம் அவளை வளர்த்த அண்ணன்களைத் தானே குறை சொல்லி நாக்கை பிடுங்கிக் கொள்ளும் படி கேள்வி கேட்கும்?இவளை எல்லாம் நகை நட்டு செலவு செய்து இனொரு இடத்துக்கு வாழ அனுப்பினால் அங்கே போயும் இப்படி நடந்து கொள்ள மாட்டாள் என்று என்ன நிச்சயம்?
இவளால் அவளது அண்ணன்களுக்கு மட்டுமா கெட்ட பெயர்...மொத்தக் குடும்பமும் அல்லவா மானம் கெட்டு நிற்க வேண்டும் ஊரார் முன்பு.இப்படியெல்லாம் ஏதேதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்,இதை கேட்ட அண்ணன் என்ன செய்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
அதை அடுத்த பதிவில் தொடர்கிறேன்...;
No comments:
Post a Comment