Wednesday, November 19, 2008

இம்பார்டன்ட் டவுட் எது ஈசி ? சேர்ந்து வாழ்தலா அல்லது விவாகரத்தா?

கடந்த இரண்டு தினங்களாக என் குடியிருப்புபு வளாகத்தில் நான் கேள்விப்பட்ட இரு செய்திகள் என்னை ஒரு சேர மிகவும் வருத்தமடையும்,சிந்திக்கவும் வைத்தன,எல்லாம் இந்த விவாகரத்து கூத்துக்கள் தான் ,கூத்து என்று சொல்வது தவறு தான் ...ஆனாலும் அது இன்று கூத்துப் போலத்தானே ஆகி விட்டது .பக்கத்து வீட்டுப் பெண் மிஞ்சிப் போனால் இருபத்தியொரு வயசு தான் ...இன்னும் பைனல் செமஸ்டர் முடியாமல் இருக்கும் போதே சென்ற வருடம் திருமணம் செய்து வைத்து விட்டார்கள் அவளுக்கு ,இப்போது திடீரென்று கணவன் வீட்டில் நிறையக் கட்டுப்பாடு சுதந்திரமேஇல்லை என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அம்மா வீட்டுக்கு வந்தாயிற்று .பிறகொரு பெண் என் பாப்புவின் கிளாஸ் மேட் நிம்மியின் அம்மா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஐந்து வயதில் பெண் குழந்தை இருந்தும் இன்னமும் அந்தக் குழந்தையை அவளது அப்பா வந்து பார்க்கவே இல்லையாம் ,விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிற்கிறதாம் .மிஞ்சிப் போனால் அந்தப் பெண்ணிற்கு இருபத்தி எழு அல்லது இருபத்து எட்டு வயதே ஆகக் கூடும் .

ஒரு வேலை விவாகரத்து ஆனால் மறுமணம் செய்து கொள்வாரா எனப் புரியவில்லை ,எத்தனை காலத்தை தனிமையில் தள்ள முடியும் ஒரு இளம் பெண்ணால்,அம்மா ...அப்பா காலத்திற்குப் பிறகு? தனிமை போலொரு கொடிய சாத்தானை ஈரேழு உலகிலும் காண முடியாது (தனிமையில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்) இன்னொரு பெண் கல்யாணமான மறுநாளே தன் கணவரால் "மனநிலை சரி இல்லாதவள் என்று முத்திரை குத்தப் பட்டு அம்மா வீட்டில் இருக்கிறாள்,பார்க்க லட்சனமாகப் பதவிசாக இருக்கும் அந்தப் பெண் கொஞ்சம் வெகுளி என்பது தான் நிஜம்,மற்றபடி பைத்தியமேல்லாம் இல்லை,ஆனாலும் இன்று அம்மா வீட்டில் வீட்டை விட்டு எங்கே செல்லவும் பயந்து கொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் கதவடைத்துக் கொண்டு உள்ளேயே கிடப்பார்கள் தாயும் மகளும்,அண்ணன் ஒருவன் வடமாநிலத்தில் பணியிளிருக்கிறான் ,அவன் வரும் விடுமுறை காலங்கள் தவிர மாற்ற நாட்களெல்லாம் அவர்களது வீட்டு ஜன்னல் கதவு கூட சாத்தப்பட்டே இருக்கும்(தனிமை தந்த பயம் அந்த பெண்ணை இன்னும் கொஞ்ச நாளில் பைத்தியமாகவே ஆக்கினாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை ,

இந்த மூன்று பெண்களின் வாயிலாக நான் அறிந்து கொண்ட உண்மை பெண்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது மட்டும் முக்கியமில்லை...அதற்குப் பின்னான வாழக்கை எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம் அதையும் சாமர்த்தியமாக அணுகி இடையில் வரும் கஷ்ட நஷ்டங்களையும் புத்திசாலித் தனமாகக் கையாள வேண்டியதின் அவசியத்தையும் வளரும் இளம் பெண்களுக்கு அவரவர் அம்மாக்கள் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் .இல்லாவிட்டால் பெருகும் விவாகரத்துகளை தவிர்க்கவே முடியாது போகும் .இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் பெண்களும்(மனைவிகள்) குழந்தைகளும் தான் ,

கல்யாண வயதில் பெண்களை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களே நீங்கள் மாப்பிள்ளையின் படிப்பையும்...சொத்துக் கணக்கையும் மட்டும் பார்த்தால் இப்போதெல்லாம் போதவே போதாது ,

அந்த அழகான ..வசதியான ...படித்த(படிக்காத மாப்பிள்ளை என்றாலும் கூட இது பொருந்தும் ) மாப்பிள்ளைகள் எப்படி இருந்தாலும் அவர்களை கொஞ்சம் அதாவது அவர்கள் மிகவும் மோசமானவர்கள் இல்லை எனும் பட்சத்தில் அனுசரித்துப் போக கற்றுக் கொடுக்கலாம் . வெறும் வாய் சண்டைகள் ...வேற்று ஊடல்கள் இதற்காகவெல்லாம் விவாகரத்தைப் பற்றி யோசிக்கும் படியான அபிப்ராயங்களை உங்கள் மகள்களின் மனதில் புக விடாமல் தயவு செய்து தடுத்து விடலாமே!!!

இன்னும் சொல்லப் போனால் கணவன் மனைவி என்று ஆனா பிறகு எதற்கு நீ பெரியவன் ...நான் பெரியவள் என்ற ஈகோ ?

ஒரு முறை கணவன் விட்டுக் கொடுத்தால் மறுமுறை மனைவி விட்டுக் கொடுத்துப் போய்விட வேண்டும்(ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் தான் ...பழகப் பழக கை வந்து விடும் கலை அது)

முயற்சித்து தான் பாருங்களேன்!

கணவனோ,மனைவியோ

முதலில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்

பிறகு ஒருவருக்கொருவர் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளுங்கள் .

கடைசியாக அவர் அப்படித்தான்...அவள் அப்படித்தான் என்று ஒருவருக்கொருவர் தெளிவு அடையுங்கள் .இதைத்தான் புரிதல் என்பார்கள்

சுலபமாகச் சொன்னால்

"அறிதல்

தெரிதல்

புரிதல் "

மலையேறும் கரடிகளும் எல்.கே.ஜி ரைம்ஸ்ஸும்


இந்த ரைம்ஸ் எல்லாம் நீங்க பாடி இருக்கீங்களா உங்க கே.ஜி கிளாஸ்ல ?நேற்று ஒரு ரைம்ஸ் பாடிக் கொண்டிருந்தாள் என் செல்ல மாமியார்(என் ஐந்து வயது மகளே இப்போது என் அருமை மாமியாராகவும் சில நேரங்களில் MAARI VIDUVATHU உண்டு) அவளை நாங்கள் வீட்டில் பாப்பு(பப்பு இல்லை இது பாப்பு) என்று அழைப்போம் .


பாப்பு ரைம்ஸ் பாடிக் கொண்டிருந்தாள் ,The bear went over the mountainThe bear went over the mountainThe bear went over the mountainTo see what he could see?To see what he could see?To see what he could see?...The otherside of the mountainThe otherside of the mountainஇதில் (To see what he could see?) இந்த இடத்தில் அவள் யோசித்த விதம் என்னை யோசிக்க வைத்தது ...


எல்.கே.ஜி தான் ஆனாலும் பெரும்பாலும் அவர்களுக்கு வார்த்தைகளை அவற்றின் ஓசையை வைத்தே பழக்குவதால் "டு" Toஎன்பதைTWO "டூ" என்று புரிந்து கொண்டு மம்மி டூ ஐஸ்ல பார்க்கரோம்ல அதான் மிஸ் "டு சி வாட் ஹி குட் ஸீ" அப்படின்னு சொல்றாங்க ,இப்போ ஒரே ஒரு ஐ மட்டும் பார்க்கறதா இருந்தா "எ ஸீ வாட் ஹி குட் ஸீ" (எ என்பது ஒற்றைப் படை அல்லவா?அதைத்தான் சொல்லவருகிறாள்).


அவள் புரிந்து கொண்டது கொஞ்சம் தவறு என்றாலும் அவள் அதை தொடர்பு படுத்திப் பாடிப் பழகிய விதம் என்னை ஈர்த்தது ,அப்புறம் நான் டு வுக்கும் டூ வுக்கும் உள்ள வித்யாசத்தை விளக்கோ விளக்கென்று விளக்கி ஒரு வழியாய் புரிய வைத்தாலும் சந்தோசமாக இருந்தது இப்போதுள்ள குழந்தைகளின் ஒப்புமைப் படுத்தி படிக்கும் பழக்கம்.

Tuesday, November 18, 2008

ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன கதையும் ...நாங்க போட்ட சூப்பர் திட்டமும்(திட்டம் தீட்டுற வயசா அது?இது இந்த வார டைட்டில் டவுட்

நாங்கள் போட்ட திட்டம் :-இந்த திட்டம் தீட்டிய போது சர்வ நிச்சயமாக நான் ரெண்டாப்பு(இரண்டாம் வகுப்பு) தான் படித்துக் கொண்டிருந்தேன்,மிஞ்சிப் போனால் என்ன ஒரு ஒரு ஆறு வயசு இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம்!திட்டம் தீட்டும் வயசா அது ?ஆனால் நான் இல்லை ...இல்லை நாங்கள் ஒரு குரூப் ஐந்தாறு குழந்தைகள்(அட என்னப்பா ஆறு வயசுனா அது குழந்தைப் பருவம் தான்!) ஒன்று சேர்ந்து நாக ரத்தினத்தை நாகப் பாம்பிற்க்குத் தெரியாமல் காட்டுக்குள் போய் எப்பாடு பட்டாவது கவர்ந்து கொண்டு வந்தே தீருவது என்று ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத் தட்ட ஒரு வார காலமாகப் பெருசாகத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தோம் .எல்லாவற்றிற்கும் காரணமே இந்த ஒன்னாப்பு (ஒன்றாம் வகுப்பு) வாத்தியார் தான் ,அவரை நாங்கள் மட்டும் அல்ல ஊரே கதை வாத்தியார் என்று தான் அழைத்தது,அவர் பாடம் எதுவும் எடுத்ததாக எனக்கு ஞாபகமே இல்லை,எப்போதும் கதை தான் சொல்வார்.நிறைய....நிறையக் கதைகள் சொல்வார்(தன் கற்பனையையும் சேர்த்து ...தான்)அப்படி அவர் அறிமுகப் படுத்தி வைத்தவை தான் பாட்டி விக்ரமாதித்தன் கதைநல்லதங்காள் கதைகண்ணகி கோவலன் கதைபோஜ ராஜன் கதை(இது இப்போது மறந்து விட்டது தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் தேவலை ...)கண்ணப்பர் கதை வள்ளி கல்யாணம் அப்புறம் ஒரு கீரிப்பிள்ளை கதையைக் கூட அடிக்கடி சொல்வார் இது கண்ணகி கோவலன் கதையில் வரும் ஒரு கிளைக்கதை ,ஆனாலும் ரொம்ப நல்ல கதை .இவ்வளவு நாட்களின் பின்னும் மறக்கவே இல்லை எனக்கு ,தெருவில் என்றாவது மோடி வித்தைக் காரன் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை என்று சொல்லி மேளம் அடித்தால் உடனே எனக்கு ஞாபகம் வருவது ஒன்னாப்பு வாத்தியாரும் அவர் சொன்ன கீரிப்பிள்ளை கதையும் தான்.இது வரை நேரில் நான் கீரியும் பாம்பும் சண்டை இட்டு பார்த்ததே இல்லை ஆனாலும் ரெண்டாப்பு படிக்கும் போது எப்போதெல்லாம் எங்கள் கிளாஸ் வாத்தியார் லீவோ ..! எப்போதெல்லாம் ஒன்னாப்பு வாத்தியார் எங்களைப் பார்த்துக் கொள்ள ஹெட்-மாஸ்டரால் அனுப்பப் படுகிறாரோ அப்போதெல்லாம் நாங்கள் அவரிடம் வேண்டி விரும்பி முதலில் கேட்பது இந்தக் கீரிப்பிள்ளை கதையைத்தான்.சொல்லப் போனால் நாங்கள் அப்போதெல்லாம் வாரம் ஒரு தடவையாச்சும் பாம்பு-கீரிப்பிள்ளை சண்டையை நேரில் பார்த்தோம் ஒன்னாப்பு வாத்தியாரின் வாய் வழியே ...!அவ்வளவு தத்ரூபமாக கதை சொல்ல அடித்துச் சொல்கிறேன் இன்றைக்கு யாருமே இல்லை என்று .(அந்தக் கீரிப்பிள்ளை கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்)இப்போது எங்கள் திட்டத்தைப் பார்ப்போம்.எதையுமே நேரில் கண்பது போலவே விவரிக்கத் தெரிந்த அந்த ஒன்னாப்பு வாத்தியார் எல்லாக் கதையையும் போலவே நாகரத்தினக் கதையையும் எங்களுக்கு ஒரு பின் மத்தியான வகுப்பில் சொன்னார்,அதாகப் பட்டது நாகரத்தினம் என்பது வைர...வைடூரியங்களைக் காட்டிலும் மிக விலை உயர்ந்ததாம் (அப்படியா ...மக்களே !!!)இங்கே ஒரு டவுட் நோட் செய்து கொள்ளுங்கள் நாகரத்தினம் என்று ஒன்று நிஜமாகவே இருக்கிறதா என்ன?அப்போதெல்லாம் ஆறு வயதில் இந்த டவுட் வரவில்லை.அந்த நாகரத்தினத்தை வைத்து தான் அந்தப் பாம்பு இரை தேடுமாம் .பாம்புக்கு ராத்திரியில் பொதுவாக கண் தெரியாதுடவுட் நம்பர் டூ :-(யாருக்குத் தான் ராத்திரியில் விளக்கில்லாமல் கண் தெரியக் கூடும்?)அதனால் அது தனது தொண்டையில் இருக்கும் நாகரத்தினத்தை இரை தேடும் இடத்தில் கக்கி விட்டு அந்த வெளிச்சத்தில் இரை ஏதாவது சிக்குமா என்று தேடுமாம் (எல்லாம் வாத்தியார் சொன்னது தான் )அந்த நேரம் யாராவது (நோட் திஸ் பாயிண்ட் நண்பர்களே)நாகரத்தினத்தை பாம்பிடமிருந்து அபகரிக்க வேண்டுமென நினைத்தால் அவர்கள் மகா புத்திசாலிகளாக இருக்க வேண்டுமாம் . முதலில் தைரியம் ரொம்பத் தேவை .நாடு இரவில் தான் பாம்பு காட்டில் இரை தேடுமாம் .(இங்கே ஒரு டவுட்)டவுட் நம்பர் த்ரீ:-மத்த நேரமெல்லாம் பாம்புக்குப் பசிக்காதா?தப்பித் தவறி இந்த டவுட் ஐ கேட்ட சில புத்திசாலி குழந்தைகளுக்கு(ஹி..ஹி...ஹி...அப்போ நாங்கலாம் குழந்தைங்க தான...!!!) வாத்தியார் சொன்ன கலப்படமில்லாத காமெடி பதில் என்ன தெரியுமா?"கதைக்கு காலுண்டா ...உங்க அப்பனுக்கு வாலுண்டா?" எனக்கு தெரியாது சார் என்று சொன்னால் போதும் ...இதுக்கே உனக்கு பதில் தெரியலை ...பேசாம உட்கார் கதையக் கேளு....கதையக் கேளு என்றே ஒவ்வொரு வகுப்பையும் ஓட்டோ ..ஒட்டென்று ஓட்டியே விடுவார் .இப்படியாப் பட்ட ஒன்னாப்பு வாத்தியார் சொன்ன மீதிகதையைக் கேட்டு தான் நாங்கள் அம்மாம் பெரிய திட்டத்தை தீட்டிக் கொண்டு காத்திருந்தோம் .நாங்கள் என்றால் நாங்க நாலு பேர் (அழகேசன்,ரங்கா,கார்த்தி,ருக்கு)வாத்தியார் சில டெக்னிக்குகள் சொல்லி இருந்தார் இல்லையா நாகரத்தினத்தை ஹீரோ எப்படி எல்லாம் அதனிடம் இருந்து திருடிக் கொண்டு போனார் என்று (அதிக பட்சம் வாத்தியாருக்கு கதை ஹீரோவாக கோவலனோ...விக்ரமாதித்தனோ,போஜராஜனோ தான் கிடைப்பார்கள்)மூன்று போரையும் மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டு புதுசு புதுசாகக் கதை சொல்வதில அவர் தான் கில்லாடி நம்பர் ஒன் ஆச்சே? அப்படி அவர் சொன்ன ஒரு கதையில் ஹீரோ விக்ரமாதித்தன் (எங்களுக்கு) உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ அவர்களை கற்பனை செய்து கொள்ளலாம்(ரஜினி,விஜய்,அஜீத்,சூர்யா...!!!)நாகத்தை(அதான் பாம்பை ஏமாற்றி நாகரத்தினத்தை எடுக்க(திருட) ஒரு பையில் சாணி(கெட்டிச் சாணி) எடுத்துக் கொள்கிறார் முதல் வேலையாக,பிறகு ஒரு டார்ச் லைட் இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம் ? பாம்புக்கு ராத்திரியில் கண் தெரியாது ...அதுவே நாகரத்தினத்தை கக்கி அது தரும் ஒளி வெளிச்சத்தில் தான் இரை தேடிக் கொண்டு இருக்கும் ,அப்படியானால் பாம்பை ஏமாற்ற முதலில் நாகரத்தினத்தின் ஒளியைத் தடுத்தே ஆக வேண்டும்.ஆனால் பாம்புக்குப் பக்கத்தில் போக முடியுமா? அதான் தூர இருந்தே குறி பார்த்து கெட்டிச் சாணியை சரியாக வீசி எறிந்து நாகரத்தினத்தை சாணி மூடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் ,இல்லாவிட்டால் கதை கந்தல் பாம்பு ஹீரோவைப் பார்த்து விடக் கூடும்.அதற்குத் தான் கெட்டிச் சாணி...அப்புறம் டார்ச் லைட் எதற்கு என்று கேள்வி வரும்? அதற்கும் பதில் இருக்கிறது , அதாகப் பட்டது வெளிச்சம் வர வைக்கும் நாக ரத்தினத்தை சாணி மூடி விட்டால் ஹீரோ (எங்கள் திட்டப் படி நாங்கள்) கண் தெரியாமல் எப்படி அதைப் போய் பாம்புக்கு அகப் படமால் நைசாக நழுவி எடுத்துக் கொண்டு ஓட முடியும் ?அதான் டார்ச் லைட் ...அதை எரிய விட்டு ரத்தினத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட வேண்டும் .பாம்புக்கு கண் வேண்டுமானால் தெரியாது ஆனால் காது கேட்கக் கூடுமே(விஞ்ஞானிகள் கூற்றுப் படி பாப்புக்கு காது கேட்காதாம் ஆனால் அப்போது எங்களுக்கு இதெல்லாம் தெரியாதே ...ஏனென்றால் அப்போதெல்லாம் நாங்கள் தான் குழந்தைகள் ஆச்சுதே!!!)அப்படி காது கேட்டு பாம்பு எங்களைத் துரத்தினால் யாரும் மறந்து போய்க் கூட நேராக மட்டும் ஓடி விடக் கூடாது...கூடவே கூடாது ,வளைந்து வளைந்து பாம்பு போலவே ஊட வேண்டும் அப்போது தான் பாம்பால் நம்மை வேகமாகத் துரத்த முடியாமல் போகும்,இது நிரூபிக்கப் பட்ட உண்மையா? என்றெல்லாம் தெரியாது என்னவோ வாத்தியார் சொன்னார் (இப்போது கூட ஒருவேளை... பாம்பு துரத்தினால்(கனவில் தான் ..நம்புங்க ...ப்ளீஸ் ) நாங்கள் வளைந்து வளைந்து தான் ஓடுவோம் .நீங்களும் அப்படியே ட்ரை பண்ணி பாருங்களேன் (பாம்பு துரத்தினால் மட்டும்).டவுட் நம்பர் ஃபோர்:-இதுவரை பாம்பு மனிதர்களை கதைகளைத் தவிர நிஜத்தில் எப்போதாவது துரத்தி இருக்கிறதா?சரி இப்போது சொல்லி முடித்து விடுகிறேன் எங்கள் நால்வர் அணியின் திட்டத்தை ,ஒரு வழியாக முடிவுக்கு வந்தே விட்டோம்,(நான் எங்கள் திட்டத்தை தான் சொல்கிறேன்)அதாவது அழகேசன் அவனது தாத்தா வீட்டு மாட்டுத் தொழுவத்தில் இருந்து கெட்டிச் சாணி எடுத்து வருவதாக ஒப்புக் கொண்டான் (அதற்கான பிளாஸ்டிக் பை கூட அவனே கொண்டு வந்து விடுவதாக பெருந்தன்மையாகச் சொல்லி விட்டான் ,ரங்கா சும்மா பாதுகாப்புக்கு கையில் இருக்காட்டுமே என்று அவள் வீட்டு அரிவாள் மனையை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி நம்பிக்கை ஊட்டி விட்டாள், கார்த்தி தான் டார்ச் லைட் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கட் அண்ட் ரைட் ஆக சொல்லி விட்டோம்(அவன் தான் கொஞ்சம் கேணை எங்கள் குரூப் இல்) வேறு யார் வீட்டில் டார்ச் லைட் எடுத்துப் போக விடுவார்களாம்? அப்புறம் ருக்கு ரொம்பவே பெருந்தன்மையாக எங்களை எல்லாம் வழிநடத்தி அதாகப் பட்டது எங்களை அதட்டி உருட்டிக் சட்டாம் பிள்ளைத் தனம் செய்து எங்களை அதிகாரம் செய்து ஒருவேளை நாகரத்தினம் கிடைத்தல் அதில் பெரும்பங்கு எடுத்துக் கொள்ளும் நல்ல(கெட்ட) நோக்கத்தோடு வர ஒத்துக் கொண்டாள்.இதோ இன்னும் ஒருநாள் இருக்கிறது !!!நாங்கள் பொருளெல்லாம் தயார் செய்து வைத்துக் கொண்டு வீரப் பயணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தோம் (நம்புங்கள் ...இது நிஜம்)இதோ புறப்பட்டு விட்டோம்....இன்னும் ஒரு பகல்....ஒரு இரவு ....!!!அதற்குப் பிறகு ?அஸ்க்கு புஸ்க்கு ...இப்பவே சொல்லிட்ட த்ரில் போயிடும்ல?அடுத்த பதிவு போட மேட்டர் வேணாமா ?
கொஞ்சம் பொறுங்க வில் பி பேக் சூன் ...!

Monday, November 17, 2008

டவுட்:- உங்க குழந்தை உருப்படியாக காலையில் என்ன சாப்பிட்டு விட்டுப் போகும் ஸ்கூலுக்கு?



இந்த அட்வைஸ் கலந்த டவுட் ஐந்து வயதுக் குழந்தைகளை வேனில் பள்ளிகளுக்கு அனுப்பும் அம்மாக்களுக்கு (அப்பாக்களுக்கும் தான்...!)சென்னை போன்ற பெருநகரங்களில் விடிந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பெரியவர்கள் விழித்து எழுகிறார்களோ இல்லையோ ஐந்து வயதுக் குழந்தைகளில் பெரும்பாலோர் (குறிப்பாக வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் பள்ளி அமைந்த குழந்தைகள்) கட்டாயமாக காலை ஆறிலிருந்து ஆறரைக்குள் எழுந்தே ஆக வேண்டும் ...இல்லாவிட்டால் வேன் போய்விடக்கூடும்,பொதுவாக சென்னையில் பெரியவர்களுக்கே ஏழு மணிக்கு தான் விடியும்.எனக்கு இதில் என்ன பெரிய டவுட் என்றால் ...!

டவுட் நம்பர் ஒன் :-

அப்படி ஆறு மணிக்கு (வேறு வழியே இல்லாமல் )எழுந்து வேக வேகமாய் பள்ளிக்கு கிளம்பும் அந்தக் குழந்தைகள் என்ன தான் அந்த நேரத்தில் சாப்பிட்டு விட்டுப் போவார்கள் ? ,வெறும் பால் சிலர் குடித்து விட்டுப் போகிறார்கள் (சிலர் என்னவோ போன்-விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் எல்லாம் குடித்து விட்டுத் தான் போவதாக சொல்லிக் கொள்கிறார்கள் ,ஆனாலும் காலை வேளைகளில் பெரும்பாலும் காக்கைகள் தான் அதெல்லாம் குடித்துக் கொண்டிருப்பதாக காற்று வாக்கில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன் ,குழந்தைகள் சாப்பிட்டு சத்து வைக்கிறார்களோ என்னவோ இந்தக் காக்கைகள் தான் அந்தக் குழந்தைகள் மிச்சம் வைத்ததைத் தின்று தின்றே அதி தொந்திரவு தந்து கொண்டு இருக்கின்றன, காலை வேளையில் பார்க்கில் வாக்கிங் போகக் கூட பயம் ...அவ்வளவு காக்கைகள் ...!!!இப்போது டவுட் நம்பர் டூ என்னவென்றால் ?

உண்மையில் வெறும் பால்,போன்விட்டா,ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்,பூஸ்ட் ,இதெல்லாம் உண்மையில் குடிப்பது குழந்தைகளா காக்கைகளா ?

அதோடு டவுட் நம்பர் த்ரீ என்னவென்றால் ?

சரி இதெல்லாம் வெறும் நீர் ஆகாரங்கள் தானே ?இது எந்த அளவுக்குப் போஷாக்காக இருக்க முடியும்?திட உணவாக அந்த நேரம் என்ன சாப்பிடுகிறார்கள் அந்தக் குழந்தைகள் ?இட்லி,தோசை,கார்ன்-பிளாக்ஸ்,சாக்கோஸ்...!!! நிச்சயமாக எந்தக் குழந்தையுமே அந்த நேரம் அரிசி சோறு சாப்பிடும் என்று நம்புவதற்கு கஷ்டமாயிருப்பதால் தான் மேற்கூறிய திட ஆகாரங்கள் தான் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடலாம் என நம்புகிறேன் , இதில் எதை எத்தனை சதவிகிதம் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் ,வீணடிக்காமல் சாப்பிட்டு விட்டுப் போகக் கூடும் என்பதில் இந்த பதிவைப் படிக்கும் (ஏதோ ஒரு சிலர் படிப்பீர்கள் தானே...!) நண்பர்கள் உரிய பதில்களைத் தருவீர்கள் என நம்புகிறேன் .இன்றைக்கு டவுட் இவ்ளோ தான் .இதைக் கிளியர் பண்ணுங்கோப்பா பஸ்ட்டு !!!

Saturday, November 8, 2008

எந்திரனுக்கு ஆப்போசிட் எந்திரியா ?

அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா அப்போ அம்மாவுக்கு மீசை முளைச்சா மாமாவா?வெற்றிலை போட்டா மாடு முட்டும் சரி அப்போ புகையிலை போட்ட பூனை முட்டாதா ?கோழி முட்டை தான் போடுமா ...அப்போ கூமுட்டை யார் போடறது ?எந்திரனுக்குஆப்போசிட் எந்திரியாங்க ?இப்படித்தான் டவுட் கேட்டுக்கிட்டே இருக்கணும் எப்பவும் ,எந்நேரமும்?!